செக்ஸ் படங்களின் பிதாமகன்!



உலக அரங்கில் பாலியல் சார்ந்த படங்களுக்குத் தனி அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்த இயக்குநர் டின்டோ பிராஸ் (Tinto Brass).

பொதுவாக ‘பிட்டு படம்’, ‘ப்ளூப்லிம்’ என்று சொல்லக்கூடிய பாலியல் உறவை மையப்படுத்திய படங்களைக் கூட கலாபூர்வமாக அணுகமுடியும் என்பதை திரை உலகிற்கு உணர்த்திய ஜாம்பவான் இவர். அறுபதுகளில் முதல்முறையாக இத்தாலிய சினிமாவில் கருப்பின ஆணுக்கும் வெள்ளையின பெண்ணுக்கும் இடையிலான காதலைச் சித்தரித்த புரட்சியாளர். இப்படி இவரது பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், ‘‘வசனமாடா முக்கியம். படத்தைப் பாருடா...’’ என்ற அளவிலேயே இவரது படைப்புகள் வெறுமனே ஆபாசப் படங்களாகத்தான் பார்க்கப்பட்டன; பார்க்கப்படுகின்றன.திரைப்பட ரசிகர்களின் மத்தி யில் பலான படங்களின் இயக்குநராகவே பெரும்பாலும் அறியப்பட்டார். இன்று டின்டோவின் மீதான அடையாளம் மாறி வருகிறது. அவரை வெறுமனே பாலியல் படங்களின் இயக்குநர் என்ற அடையாளத்துக்குள் அடைத்துவிடாமல் இத்தாலிய திரைப்பட மேதை என்று திரைப்பட ஆய்வாளர்கள் கொண்டாடுகின்றனர். அத்துடன் அவரது படங்களை ‘ஏரோடிக்கா (Erotica)’ என்று  வகைமைப்படுத்துகின்றனர்.

இந்த வகைமையைத் தனக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறார் டின்டோ.‘‘ஆபாசப் படங்கள் (Porn) நம் பாலியல் உணர்வுகளை மட்டும்தான் தூண்டும். அதில் நம்மை அசைக்கும் உணர்வுபூர்வமான விஷயங்கள் எதுவும் இருக்காது. ஆனால், ஏரோடிக்கா வகை படங்கள் உணர்வுபூர்வமானவை...’’ என்கிற டின்டோ பிராஸ், இத்தாலியின் மிலன் நகரில் பிறந்தவர். இயற்பெயர் ஜியோவன்னி ஜான். இவரது தாத்தா பிராஸ் புகழ்பெற்ற ஓவியர். ஜியோவன்னி சிறுவயதில் எந்நேரமும் ஓவியம் வரைந்து கொண்டிருப்பார். அதனால் தாத்தா, ‘‘நம் வீட்டிலும் ஒரு  டின்டோ ரெட்டோ இருக்கிறார்...’’ என்று பேரனைக் கலாய்ப்பார்.

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியரின் பெயர் டின்டோ ரெட்டோ. அவரது பெயரையும் தாத்தாவின் பெயரையும் சேர்த்து டின்டோ பிராஸ் என்று வைத்துக் கொண்டார். அதுவே சினிமாவிலும் நிலைத்துவிட்டது.ஃபெலினி, ரோசலினி போன்ற உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களுடன் பணியாற்றிவிட்டு முப்பது வயதில் Chi lavora perduto (In capo al mondo) என்ற படத்தை 1963ல் இயக்கினார்.

இப்படத்தில் வேலையில்லாதவன் மற்றும் சமூகப் போக்குகளுக்கு எதிரான சிந்தனையுள்ள இளைஞன் ஒருவன் எதிர்காலத்தைப் பற்றி காணும் பகல் கனவை தத்ரூபமாக சொல்லியிருப்பார் டின்டோ. இத்தாலியின் 100 முக்கிய படங்களில் ஒன்றாக இது பாதுகாக்கப்படுகிறது.
பிறகு பரிசோதனை முயற்சிக்காக சில கலைப்படங்களையும் வெஸ்டர்ன் மற்றும் அரசியல் படங்களையும் எடுத்தார்.  

இந்தப் படங்கள் விமர்சகர்களாலும் திரை ஆர்வலர்களாலும் கொண்டாடப்பட்டன. ஆனால், டின்டோவினால், தான் சொல்ல நினைத்ததை அதில் முழுமையாக சொல்ல முடியவில்லை. சுதந்திரமாக இயங்க முடியாததால் ஒருவித ஏமாற்றத்தை உணர்ந்தார். அதனால் பாலியல் படங்களின் மீது அவரது ஆர்வம் திரும்பியது. 1969ல் அவரது முதல் பாலியல் படமான ‘Nerosubianco’ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கடும் சமூக கட்டுப்பாடுகள், சென்சார் விதிகளை மீறி டின்டோவின் பாலியல் சித்தரிப்புகள் அதிர்வுகளை உண்டாக்கின.  

ஆனால், விமர்சகர்களும் பெண்ணியவாதி களும் சென்சார் குழுவும் இப்படத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது தனிக்கதை. என்றாலும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் பாலியல் கியரை மாற்றி  மின்னல் வேகத்தில் ஒரு ரவுண்ட் வந்தார். அவரது பெரும்பாலான படங்களுக்கு எடிட்டரும் அவரே. அதனால்தான் நினைத்ததை சமரசம் இல்லாமல் அவரால் சொல்ல முடிந்தது.

உதாரணத்துக்கு, உலக வரலாற்றிலேயே கொடூரமான அரசன், கிறுக்கு மன்னன் என்று பெயரெடுத்த ரோமாபுரி அரசன் கலிகுலாவைப் பற்றி ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், 1979ம் ஆண்டு டின்டோ இயக்கிய ‘கலிகுலா’ இன்றும் தனித்து நிற்கிறது. 20ம் நூற்றாண்டில் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பிய படம் இதுதான்.

கலிகுலாவின் கொடூரங்களை மட்டுமல்லாமல் அவனது முறை தவறிய பாலுறவையும் வெளிச்சம் போட்டுக்காட்டி சென்சாரை அதிர வைத்திருப்பார்.
இன்று உலகமெங்கும் பாலியல் சார்ந்த படங்கள் சுதந்திரமாக எடுக்கப்படுவதற்கு முதன்மைக் காரணம் டின்டோவின் படங்கள்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

‘‘என்னைப் பொறுத்தவரை சினிமா ஒரு கனவு. அதுவும் நிஜமாகும் ஒரு கனவு. நிஜத்தில் என்னால் நிகழ்த்திக்காட்ட முடியாத எல்லாவற்றையும் சினிமாவில் நிகழ்த்திக் காட்ட முடியும். அதனால்தான் என் படத்தில் லாஜிக்கை நீங்கள் பார்க்கவே முடியாது.

சினிமா துறை மற்றும் சமூகத்தின் நிபந்தனைகள் ஏதுமில்லாமல் சுதந்திரமாக படம் எடுக்க விரும்புகிறேன்...’’ என்கிற டின்டோ, சென்சார், மதம், அதிகாரம் என மனிதனை சுதந்திரமாக சிந்திக்கவிடாத அத்தனை சிஸ்டத்துக்கும் எதிரானவர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அவர் பாலியல் (erotic) படங்களை எடுக்கிறார். அவரைப் பொறுத்தவரை ‘erotic’ என்ற சொல்லுக்கு அர்த்தம் சுதந்திரத்துக்கான போராட்டம்.

‘‘நீங்கள் பாலியல் உட்பட அனைத்து வகையிலும் சுதந்திரமாக இருந்தால் மட்டுமே சமூகத்தில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆண்களைவிட பெண்களால் சுலபமாக தங்களின் பாலியல் உணர்வுகளை ஆய்வுக்கு உட்படுத்த முடியும். இதில் ஆண்களைவிட பெண்களே நேர்மையுடன் நடந்துகொள்கிறார்கள்.

பெண்கள் தங்களின் பொறுப்பில் உலகை கையில் எடுத்துக்கொண்டால் ஏதாவது மாற்றம் நிகழும் என்று நம்புகிறேன்...’’ என்கிற டின்டோ பிராஸின் படங்களில் பெண் கதாபாத்திரங்கள் மகிழ்ச்சியாகவும் சுயமான போக்கு உடையவர்களாகவும் இருப்பார்கள். ஒருபோதும் அடிமையான ஒரு பெண்ணை அவர் படத்தில் பார்க்க முடியாது.

அதே நேரத்தில் சமூகக் கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை  உடைத்து தங்களின் மகிழ்ச்சிக்காக தங்களை அர்ப்பணிப்பவர்களாகவும் அவரது பெண்கள் இருப்பார்கள். இதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.அவரது பெண் கதாபாத்திரங்களைப் போலவே சுதந்திரமானவர் டின்டோ. ஆம்; 84 வயதில் தன்னைவிட 30 வயது குறைவான பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். இப்போது அவருக்கு வயது 87.  

த.சக்திவேல்