எடப்பாடி அரசின் டாப் ஊழல்கள்!



கொரோனா தொற்றால் இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலிலும் தமிழக அரசு ஊழலில் திளைப்பதாக எதிர்க்கட்சியினர் ஆதாரங்களுடன் பட்டியலிடுகின்றனர். மட்டுமல்ல. கொரோனாவிற்கு முன்பும் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடந்த சில ஊழல்களும் கொரோனா காலத்தில் நடந்த முறைகேடுகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. அதாவது சில மட்டும். எனவே இவை முழுமையான பட்டியல் அல்ல. முழுமையான பட்டியலை 9 பக்கங்களில் சுருக்க முடியாது. அதற்கு 900 பக்கங்கள் தேவை என கண்சிமிட்டுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

நெடுஞ்சாலைத் துறை ஊழல்

கடந்த 2018ல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மீதே வைக்கப்பட்ட நெடுஞ்சாலைத் துறை ஊழல் குற்றச்சாட்டு இது. திமுக அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி, முதல்வர் வசமுள்ள நெடுஞ்சாலைத் துறையில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

அதில், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவிநாசிபாளையம் நான்கு வழிச்சாலை; திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச்சாலை; மதுரை ரிங் ரோடு நான்கு வழிச்சாலை; வண்டலூர் - வாலாஜாபாத் ஆறு வழிச்சாலை; ராமநாதபுரம், விருதுநகர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் நெடுஞ்சாலை பராமரிப்புப் பணி... ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களை முதல்வர் தன்னுடைய உறவினர்களுக்கே அளித்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். முதலில் லஞ்ச ஒழிப்புத் துறையே இந்த வழக்கை விசாரித்தது. பிறகு, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாக்கி டாக்கி ஊழல்

ஊழல்களையும், முறைகேடுகளையும் விசாரணை செய்யும் காவல்துறையிலேயே நடந்த ஊழல் இது. 2017 - 18ம் ஆண்டு பட்ஜெட்டில் காவல்துறைக்கென ரூ.47 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்க காவல்துறையிலுள்ள தொழில்நுட்பப்பிரிவு முடிவெடுத்தது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மாறாக 83 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், 10 ஆயிரம் வாக்கி டாக்கிகளுக்குப் பதிலாக 4 ஆயிரமே வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தவிர, ஒரு வாக்கி டாக்கி ரூ.47 ஆயிரத்து 560க்குப் பதிலாக ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்போதைய உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதினார். அதில், ‘இவ்வளவு பெரிய ெதாகையை ஒரே நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்தது ஏன்... தொலைத்தொடர்பு உரிமம் பெறாத நிறுவனத்திடம் வாக்கி டாக்கிக்கான டெண்டர் ஏன் கொடுக்கப்பட்டது...’ எனப் பல்வேறு கேள்விகள் எழுப்பினார். இதன்பிறகே இந்த முறைகேடு வெளியே தெரிய வந்தது. இப்போது இதை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது.

குட்கா ஊழல்

கடந்த 2013ல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்களைத் தமிழ்நாட்டில் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்கவும் தடைவிதித்து சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார். இருந்தும் இந்தப் பொருட்கள் தமிழகத்தில் ரகசியமாக புழங்கி வந்தன. இந்நிலையில் 2016ல் வருமான வரித்துறையினர் குட்கா வியாபாரி மாதவராவின் வீடு மற்றும் குடோனில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கே சில ஆதாரங்கள் சிக்கின. அதில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சம்பந்தம் இருப்பதும், அவர்களுக்கு சுமார் 40 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல்களும் கிடைத்தன. இதுபற்றி வருமான வரித்துறை தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் டி.கே.ராேஜந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோருக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களின் வீடுகளிலும் சோதனை கள் மேற்கொள்ளப்பட்டன.

தவிர, கலால் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருந்தனர். பின்னர் இந்த முறைகேடு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மாதவராவ் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு அமலாக்கத்துறை, குட்கா விற்பனையின் வழியே 639 கோடி ரூபாய்க்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரணையைத் துவக்க... மீண்டும் குட்கா விவகாரம் சூடுபிடித்துள்ளது.

காற்றாலை மின்சார ஊழல்

உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாகக் கணக்குக் காட்டி 9.17 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த ஊழல் இது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின், திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள மின்வாரியத்தின் ஆடிட் பிரிவு, காற்றாலை மின்சாரம் குறித்து நடத்திய ஆய்வில் இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது.

கடந்த 2018ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ‘‘பெறாத மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டதாக, தூத்துக்குடி மேற்பார்வைப் பொறியாளரே 29.11.2016 அன்று கடிதம் அனுப்பி, அதனடிப்படையில் அரசுப் பணம் சூறையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக நவம்பர் 2016 மற்றும் டிசம்பர் 2016 ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் ஒரு கோடியே 35 லட்சம் யூனிட்டுகளுக்கு மேற்பட்ட காற்றாலை மின்சாரத்துக்கு இப்படி ‘போலியான - பொய்யான கணக்கு’ தயார் செய்யப்பட்டு 9.17 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது.

தூத்துக்குடியில் போலி கணக்கு மூலம், மின்சாரம் சப்ளை செய்யாத நிறுவனத்துக்கு ரூ.9 கோடி ஏன் வழங்கப்பட்டது? ‘மின்துறையில் என்ன தவறு நடந்தாலும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என்று பேட்டியளிக்கும் மின்துறை அமைச்சர் தங்கமணி, இந்தக் காற்றாலை மின்சார ஊழல் பற்றி இதுவரை வாய்மூடி இருப்பது ஏன்?’’ - எனக் கேள்வி எழுப்பிய திமுக தலைவர் ஸ்டாலின், இந்த ஊழல் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரினார்.

பிரதமரின் கிசான் சம்மான் திட்ட முறைகேடு

சிறு, குறு விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த 2018ல் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது.
இதன்படி ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
இந்தக் கொரோனா காலத்தில், போலி ஆவணங்கள் மூலம் போலி விவசாயிகளைச் சேர்த்து கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் 110 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளனர்.

இதற்கு அதிகாரிகளும், அரசியல்கட்சி பிரமுகர்களும் துணை போயுள்ளனர். இதில் தொடர்புடைய எண்பது பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். இப்போது இந்த முறைகேட்டை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொரோனா மருத்துவ உபகரணங்களில் முறைகேடு

இந்தக் கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
முதலில் ரேபிட் டெஸ்ட் கிட் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 400 ரூபாய் பெறுமானமுள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டை ரூ.600க்கு தமிழக அரசு ஏன் வாங்கியது என்ற கேள்வி எழுந்தது. பிறகு, தெர்மல் ஸ்கேனர், பிளீச்சிங் பவுடர், சானிடைசர் ஆகியவை வாங்கப்பட்டதிலும் முறைகேடுகள் நடந்ததாகச் சொல்லப்பட்டது.

பிரதமர் தொகுப்பு வீடு கட்டியதில் மோசடி

திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் பகுதிகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது.
திருவாரூரில் போலி ஆவணங்கள் மூலம் ேபாலிப் பயனாளிகள் பெயரில் வீடுகளும், கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஊராட்சி செயலர்களின் துணையுடன் ஆளுங்கட்சியினர் இந்த மோசடியில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

கொரோனா செலவில் முறைகேடு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைத் தனிமைப்படுத்தப் பயன்படுத்தப்படும் தகர ஷீட், ஃப்ளக்ஸ், நோட்டீஸ் ஆகியவற்றிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு வழங்குவதிலும் கான்ட்ராக்ட் எடுத்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் கமிஷன் பெறுவதாகவும், இதில் மிகப்பெரிய ஊழல் நடப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.  

தகர ஷீட் வைக்க 15 நாட்களுக்கு வாடகைக்கு 20 ஆயிரம் ரூபாய் என அரசு நிர்ணயித்திருப்பதாகவும், டெண்டர் இல்லாமல் காண்ட்ராக்ட் விடுவதால் நிறைய முறைகேடு நடந்ததாகவும் சட்டப்பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ.இளங்கோ சொல்கிறார்.

இதேபோல் உணவுக்கு ஒருநபருக்கு 1500 ரூபாய் ஒதுக்குவதாகவும், இதிலும் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதில் முறையான விசாரணை தேவையென எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.     

குங்குமம் டீம்