மனைவிக்காகவும் கணவனுக்காகவும்



தீயவனை
தேடித் திரிந்தேன்
யாரும் எனக்கு
கிடைக்கவில்லை
என் மனதில்
எட்டிப் பார்த்தேன்
என்னை விட
கெட்டவன் யாருமில்லை…
- கபீர்

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே இருக்கும் புறநகர் ரயில் நிலையம். அரக்கோணம் செல்லும் ரயில் வந்ததும், அதில் ஏறிய அனுஷ்கா ஜன்னலோர சீட்டை பிடித்துக் கொண்டாள். எதிரே இருந்த பெரியவரிடம் சொன்னாள். ‘‘ஸார்! திருவேலங்காடு ஸ்டேஷன் வந்தா கொஞ்சம் சொல்லுங்க...’’ ‘‘முதல் முறையாக போறீங்களா?’’
‘‘ஆமாம்...’’
‘‘நிலம் வாங்கப் போறீங்களா?’’
‘‘இல்லை...’’‘‘பொதுவாக திருவேலங்காடுக்கு போறவங்க நிலம் வாங்கத்தான் போவாங்க. அங்கே கம்மி விலை. ஸ்டேஷன்வேற பக்கம்...”

அவருடைய தொணதொணப்பு தாங்க முடியாத அனுஷ்கா, ஜன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.
அவள் முதல் முறையாகப் போகும் அந்த புதிய ஊருக்கு எதற்காகப் போகிறாள், யாரை சந்திக்கப் போகிறாள் என்பதை அவள் அந்நியர்களிடம் சொல்ல விரும்பவில்லை.

அவளைப் பொறுத்தவரை, அவள் செல்லும் வேலை முக்கியமானது. அதை சரியாகச் செய்து முடிக்க வேண்டும். அனுஷ்கா அழகாக இருந்தாள். நல்ல உயரம், எடுப்பான நாசி, ரோஜாப்பூ நிறம், சிரித்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.திருவேலங்காடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிக் கொண்டாள். வெளியே வந்ததும் அங்கே அவ்வளவாக ஆண்களைப் பார்க்க முடியவில்லை. பெரும்பாலும் பெண்கள்தான். ஒரு சிறிய குடிசையில் டீக்கடை நடத்திக் கொண்டிருந்த பெண்ணை அணுகினாள். ஒரு டீ சொல்லி விட்டு அங்கே இருந்த உடைந்த பெஞ்சில் உட்கார்ந்தாள். அன்றைய தினசரி இருந்தது. அதை எடுத்து புரட்டினாள். டீ குடித்த படி, அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தாள்.

‘‘இந்த ஊர் ஆண்களுக்கு பெரும்பாலும் கத்தி சாணை பிடிப்பதுதான் தொழில். காலை தொழுது மதராசுக்கு போயிட்டா, ராத்திரிதான் வருவாங்க. சில பேர் சுவரில் ஒட்டற சீனரி படங்கள் வாங்கி புரசைவாக்கம், தி.நகரில் விற்பாங்க. அந்த வருமானம் பத்தாதும்மா… அதுக்காக நாம டீக்கடை, பெட்டிக்கடை, தோசை மாவு கிரைண்டரில் அரைச்சு விற்கறது என்று ஏதோ பொழப்பு செஞ்சு குடும்பத்தை ஓட்டறோம். ஆமா, நீங்க யாருன்னு சொல்லலையே?’’

‘‘என் பெயர் அனுஷ்கா. ‘மலர்ச்செண்டு’ வாரப் பத்திரிகையில் உதவி ஆசிரியை. உங்க ஊரில் இருக்கிற ஒருத்தரை
சந்தித்து பேட்டி எடுக்கணும்!’’
‘‘யார்?’’‘‘அன்வர்!’’அந்தப் பெயரைக் கேட்டதும் டீக் கடைக்காரியின் முகம் மாறிவிட்டது.‘‘அவரைப் பார்க்க முடியுமா ப்ளீஸ்...’’ என்றாள் அனுஷ்கா.‘‘அவர் யாரையும் சந்திக்கிறதும் கிடையாது, பேசுவதும் கிடையாது. நீங்க திரும்பிப் போயிடறதுதான் நல்லது...’’
‘‘தயவுசெய்து எனக்காக... ஒரே ஒரு முறை...’’

‘‘நீங்க என்னங்க புரியாம பேசுறீங்க! எத்தனையோ பேர் எந்தெந்த ஊரிலிருந்தோ வந்து போயிட்டாங்க. டிவிக்காரர்களும் வந்து திரும்பிட்டாங்க. அவர் யாரையும் சந்திக்கலே...’’‘‘அவர் வீடு எங்கேயிருக்கு?’’‘‘இப்ப பூட்டிக் கிடக்கு. எங்கேயிருக்கார் என்று யாருக்கும் தெரியாது. நீங்க உடனே திரும்பிப் போயிடுங்க. ஐமாத் காரங்களுக்குத் தெரிஞ்சா பிரச்னையாயிடும்...’’அவளிடம் திரும்பிச் செல்வதாகச் சொன்ன அனுஷ்கா, ரயில் நிலையத்தில் காத்திருந்தாள். அவளுக்கு, வந்த விஷயத்தை முடிக்காமல் போக விருப்பமில்லை.

அந்த கிராமத்தின் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் அன்வர். அவனுடைய மனைவி ருக்ஸானா, சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து கொண்டிருந்தாள். ஒரு மாதம் முன்பு கொலை செய்யப்பட்டுவிட்டாள். ருக்ஸானாவின் பிணம் கூட இங்கே திரும்பி
வரவில்லை. போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டாள். அவர்களுக்கு குழந்தை இல்லை. ருக்ஸானாவை மறக்கமுடியாத அன்வர், தன் வேலையை விட்டுவிட்டான். அவனைத் தேடி பேட்டி எடுக்க யார் யாரோ வந்தார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலை அன்வருக்கு பிடிக்கவில்லை. தன் வீட்டையும் பூட்டிவிட்டுச் சென்று விட்டான்.

‘இனி இதைப்பற்றி யாரிடமும் பேசி என்ன ஆகப் போகிறது? அதனால் ருக்ஸானா திரும்பி வருவாளா? துயரம்தான் குறையுமா?’ என்று நினைத்தான்.
அவனைப் பொறுத்தவரை மனதில் எப்பொழுதும் ஒரே ஒரு எண்ணம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. ‘எப்படி என் ருக்ஸானா துடிக்கத் துடிக்க செத்தாளோ... அதற்குக் காரணமானவன் கொல்லப்பட வேண்டும். அப்பதான் என் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்...’
கொலையாளி கொல்லப்படும் நாளுக்காக காத்துக் கொண்டிருந்தான் அன்வர்.

ரயில் நிலையத்தில் இருந்த அனுஷ்காவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இந்த ஒரு பேட்டி எடுத்து விட்டால், யாரும் செய்யாததை, தான் செய்து காட்டி விட்டால் அவளுடைய சம்பளமும், கௌரவமும் உயரும். அந்த நேரம் பார்த்து அங்கே மாவா மென்றபடி பாஷா வந்தான். அந்த ஊர்க்காரன். யாரோ அவனை மொபைலில் அழைக்க, தான் கும்பகோணத்தில் இருப்பதாகவும், வர பத்து நாளாகும் என்றும் பொய் சொன்னான். பாஷாவையே நோட்டமிட்டாள் அனுஷ்கா. அவனுக்கு வரும் ஒவ்வொரு மொபைல் அழைப்புக்கும் வெவ்வேறு பதில்கள்.

‘‘திருச்சி, தஞ்சாவூர், நாகர் கோயில், கேரளா, சேலம், பேரணாம்பட்டு, வேலூர் சி.எம்.சி…’’ என்று சரளமாக பொய் சொன்னான்.
இவன்தான் சரியான ஆள் என்று நினைத்த அனுஷ்கா அவனை அணுகி விஷயத்தைச் சொன்னாள்.‘‘ஓகே. முதல்லே பிரியாணி வாங்கிக் கொடுங்க...’’ என்றான் பாஷா.இருவரும் சேர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர். அவள் பணம் தரும்போது பாஷா அவளுடைய பர்ஸையே பார்த்தான்.
அதைப் புரிந்துகொண்ட அனுஷ்கா, அவனுக்கு ஐநூறு ரூபாய் நோட்டு தர, பாஷா முகத்தில் மலர்ச்சி. ‘‘என்னோட வாங்க...’’ என்றவனைப் பின்
தொடர்ந்தாள் அனுஷ்கா.

அவன் ஒரு மசூதிக்கு அவளை அழைத்துச் சென்றான்.‘‘தொழுது முடித்து வெளியே வருபவர்கள் துஆ ஓதுவார்கள். இமாம் ஸாஹெப் வரும்போது உங்க விஷயத்தை சொல்லுங்கள். அவர் நெனச்சா நீங்க அன்வரை சந்திக்கலாம்...’’‘‘எப்படி?’’‘‘அன்வர் மசூதிக்குள்தான் தங்கியிருக்கிறார்...’’அனுஷ்காவால் நம்ப முடியவில்லை. அன்வருக்கு அருகே வந்துவிட்டதை எண்ணி சந்தோஷமும், கை, கால் உதறலும் ஏற்பட்டது. அவன் எப்படி இருப்பான்? கோபப்படுவானா ? பேச மாட்டானா? அவனுடைய துயரத்தை அவள் உணர்ந்திருந்தாள். ஒரு வேளை யாருடனாவது அவன் மனம் விட்டுப் பேசினால், அவன் வலி கொஞ்சம் குறையுமே!‘‘யாரும்மா நீங்க? இந்த ஊருக்கு புதுசா இருக்கீங்க..?’’
இமாம் ஸாஹெபின் குரலைக் கேட்டு சுயநினைவுக்கு வந்தாள் அனுஷ்கா.

இமாம் ஸாஹெபிற்கு ஸலாம் சொன்னாள். அவரும் பதில் சொன்னார். தான், வந்த விஷயத்தைச் சொன்னாள்.
அதே பதில்தான் அவரும் சொன்னார். ‘‘அன்வர் யாரையும் சந்திக்க மாட்டாரும்மா!’’‘‘ஒரு விஷயத்தை மட்டும் அவரிடம் சொல்லுங்கள்... அவருக்கு விருப்பமிருந்தா சந்திக்கலாம்...’’‘‘அப்படி இல்லேன்னா நீங்க திரும்பி போயிடணும்...’’‘‘சரி...’’‘‘விஷயத்தைச் சொல்லுங்க...’’‘‘அன்வருடைய மனைவி ருக்ஸானா இறந்தது உண்மைதான். ஆனால், அவங்க கொலை செய்யப்படலே...’’இமாம் ஸாஹெபிற்கு தலை சுற்றியது.

‘‘எப்படி இவ்வளவு உறுதியாக சொல்றீங்க?’’
‘‘அதை அன்வர் விரும்பினால், அவரிடம் நேரில் சொல்வேன்!’’மசூதிக்குள் சென்ற இமாம் ஸாஹெப், சற்று நேரத்தில் திரும்ப வந்தார். ‘‘வாம்மா... அன்வர் உங்களைச் சந்திக்க சம்மதிச்சுட்டார்...’’அனுஷ்கா முகத்தில் மலர்ச்சி. மசூதிக்குள் நுழைந்தாள். அங்கே இமாம் ஸாஹெபுக்கான தனி அறையில் அன்வர் இருந்தான். நடுத்தர வயது. முடி நரைத்திருந்தது. ரொம்ப அழகு என்று சொல்ல முடியாது. ஆனால், ருக்ஸானாவை இழந்த துயரம், இனி அவளை மீண்டும் பார்க்கவே போவதில்லை என்கிற வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது.

‘‘சொல்லுங்க மேடம்...’’
‘‘அனுஷ்கா...’’‘‘ஓகே. அனுஷ்கா. என் மனைவி கொலை செய்யப்படவில்லை என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? இல்லை... இப்படி ஒரு பொய் சொல்லி என்னைச் சந்திக்க நாடகமா?’’‘‘அன்வர்… நான் சொன்னது உண்மைதான். மசூதியில் இருந்து சொல்கிறேன். இது இறைவனின் இல்லம். நான் பொய் சொல்லவில்லை. உங்க மனைவி ருக்ஸானா மாடிப் படிகளில் தவறி விழுந்துதான் இறந்து போனாங்க...’’
‘‘கிடையாது, ருக்ஸானாவை அவன் தள்ளிவிட்டான்...’’

‘‘இல்லை, ஏதோ ஒரு விஷயத்துக்காக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் தவறி ருக்ஸானா மாடிப் படிகளில் இருந்து விழுந்துதான் இறந்தாள்...’’‘‘இவ்வளவு உறுதியாக சொல்றீங்களே... நீங்க நேரில் அதைப் பார்த்தீங்களா?’’
‘‘கொலைனு சொல்றீங்களே அன்வர்... நீங்க அதை உங்க கண்ணால் பார்த்தீங்களா?’’அன்வர் மௌனமாக இருந்தான்.‘‘ருக்ஸானாவை ரவி கொலை செய்தான் என்றோ, மாடிப் படிகளில் தள்ளி விட்டான் என்றோ சாட்சி இருக்கா? ஆனால், அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்ததை அங்கே நிறையப் பேர் பார்த்திருக்கிறார்கள். ரவியும் அந்த ஆஸ்பத்திரியின் மருந்துக் கடையில் பணிபுரிந்திருக்கிறான்...’’

‘‘என்னைப் பொறுத்தவரை என் ருக்ஸானா இறந்து போயிட்டா. அதுக்குக் காரணமான ரவியும் சாகணும்...’’
‘‘ஒருவேளை நீங்க சொல்றது உண்மையாக இருந்தா, ரவிக்கும், உங்களுக்கும் என்ன வித்தி
யாசம்? கண்ணாடியில் உங்க முகத்தைப் பாருங்க அன்வர். அங்கே ரவிதான் தெரிவார்...’’‘‘நான் என் மனைவியை இழந்திருக்கிறேன் அனுஷ்கா. அந்த இழப்பின் வலியை உங்களால் உணர முடியாது...’’‘‘என் புருஷனை நான் இழந்துவிடக் கூடாது என்றுதான் அன்வர் உங்களிடம் உயிர்ப் பிச்சை கேட்க
வந்திருக்கேன்!’’

கொஞ்ச நேரத்திற்கு குழம்பிப் போனார்கள். ‘‘யாரைச் சொல்றீங்க?’’
‘‘உங்க மனைவியைக் கொன்னதாக பழியைச் சுமந்து கொண்டிருக்கும் ரவி, என் கணவர். நீங்க மனசு வெச்சா அவரை மரண தண்டனையிலிருந்து
காப்பாத்தலாம்...’’‘‘மீடியான்னு எதற்காக பொய் சொல்லிட்டு வந்திருக்கீங்க?’’ என்றார் இமாம் ஸாஹெப்.
அனுஷ்கா தலைகுனிந்தாள்.

‘‘ஸாரி அனுஷ்கா. நீங்க போகலாம். உங்க புருஷனை மன்னிக்கிற அளவுக்கு மனசு எனக்கு இல்லை. நான் படற வேதனையை நீங்களும் உணரணும்...’’
‘‘அன்வர், தில்லிக்குச் சென்று சவூதி அரேபியா தூதரகத்திலிருந்து இந்த விண்ணப்பத்தை வாங்கி வந்திருக்கேன். இதில் கையெழுத்து போட்டா என் கணவருடைய உயிர் பிழைக்கும்...’’ என்ற அனுஷ்கா, அதை அப்படியே வைத்து விட்டு திரும்பினாள்.

‘‘என் கணவர் என்னிடம் போன் மூலம் சொன்னதைத்தான் உங்களிடம் சொன்னேன். அவரைக் காப்பாற்ற பொய் சொல்லவில்லை. ஓர் அப்பாவி யைக் கொல்வது, ஒட்டுமொத்த மானுடத்தைக் கொல்வதற்கு சமம் என்கிறது இஸ்லாம். ஒருவேளை நான் சொன்னது உண்மை என்று உங்களுக்கு ஒரு நாள் தெரியலாம் அன்வர். அதற்குள் தாமதமாகிவிடக்கூடாது...’’அன்வர்  பதில் சொல்லவில்லை.

‘‘ருக்ஸானாவை நீங்க இழந்து வாடற கஷ்டத்தை நான் புரிஞ்சுக்கிட்டேன். நீங்கதான் சரியா புரிஞ்சுக்கல. அதை உணர்ந்துட்டா, என் புருஷன் எனக்கு கிடைச்சுருவார்...’’ என்று சொன்ன அனுஷ்கா அங்கேயிருந்து புறப்பட்டாள்.ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் ரயிலுக்காகக் காத்திருந்தாள். அருகே பாஷா.

‘‘இனி என்ன?’’
‘‘திரும்பிப் போகப் போறேன்...’’
‘‘அதற்காகவா இவ்வளவு தூரம் வந்தீங்க?’’ என்றான் பாஷா.மசூதியின் அறையில் சூழ்ந்திருந்த இறுக்கத்தை இமாம் ஸாஹெப் கலைத்தார். ‘‘என்ன செய்யப் போறே அன்வர்?’’‘‘புரியலே ஹஸ்ரத்...’’ அன்வரின் கண்கள் கலங்கியிருந்தன.‘‘ஒவ்வொரு மனிதனும் மாமனிதனாக வாழ்க்கை ஒரு வாய்ப்பு கொடுக்கும். அப்படி ஒரு வாய்ப்பு உனக்கு கிடைத்திருக்கிறது. எல்லாரையும் போல சாதாரண மனிதனாக வாழ்ந்து சாகப் போகிறாயா... இல்லை, செத்தபிறகும் எல்லார் மனதிலும் மாமனிதனாக வாழப் போகிறாயா?’’ கேட்டார் இமாம் ஸாஹெப்.
‘‘என்ன முடிவு செய்யிறதுன்னு தெரியலே...’’

‘‘உண்மையில் கொலை செய்கிறவர்களுக்கே, பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கொடுத்தால் விடுதலை கிடைக்கிறது. இது சவூதி அரேபியா சட்டம். இதுவோ விபத்து என்று அந்தப்பெண் சொல்கிறாள்...’’
‘‘அவள் சொன்னது உண் மையா?’’‘‘பொய் கிடையாது என்று தோன்றுகிறது. பழிவாங்குவதை விட மன்னிப்பதே நற்பண்பு என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லி யிருக்கிறார். ஒரு மனுஷனோட வாழ்க்கையில் அவன் பிறந்த நாளைவிட, எதற்காக அவன் பிறந்தான் என்று உணர்கிற நாள்தான் உன்னதமான நாள்...’’

சென்னைக்குச் செல்லும் ரயில் வந்து விட்டது. பாஷா விடை கொடுத்தான். ரயிலில் ஏறச் செல்லும் சமயம், ‘‘அனுஷ்கா...’’ என்ற குரல் கேட்டு நின்றாள்.
அன்வர் ஓடிவந்து அவள் கைகளில் அந்த பேப்பர்களைக் கொடுத்தான். ‘‘கையெழுத்து போட்டுவிட்டேன்...’’‘‘தேங்க்ஸ்...’’ அனுஷ்காவின் கண்கள் கலங்கின.‘‘ரயில் புறப்படப் போகுது, ஏறுங்க...’’ மெதுவாகப் புறப்பட்டு வேகமெடுத்த ரயிலில் இருந்து அனுஷ்கா எட்டிப் பார்த்தாள்.அன்வர் கையசைத்தான். அவன் அழுகிறானா, சிரிக்கிறானா என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள் அழுதாள்.

சிபாரிசு ப்ளீஸ்!

கார்த்தியின் ‘சுல்தான்’ ஹீரோயின் ரஷ்மிகா மந்தனா, சமீபத்தில் படித்த புத்தகத்தின் பெயர் ‘When breath becomes air’.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான டாக்டர் பால் கலாநிதி, தான் நுரையீரல் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த வாழ்க்கைப் போராட்டத்தைக் குறித்து எழுதிய புத்தகம் அது. ‘‘ஒரே மூச்சுல படிச்சு முடிச்சுட் டேன்’’ என சிலிர்த்த ராஷ்மி, இன்ஸ்டாவில் ‘இதுபோன்ற புத்தகங்களை சிபாரிசு பண்ணுங்க’ என வேண்டுகோளும் வைத்துள்ளார்.

லைட்ஸ், கேமரா, மாஸ்க் ஆன்.. ஆக்‌ஷன்!

பாலிவுட்டிலும் ஷூட்டிங் களைகட்டி விட்டது. அக்‌ஷய்குமார் நடிக்கும் ‘பெல்பாட்டம்’ பீரியட் ஃபிலிமின் ஷூட் ஸ்காட்லாந்தில் பரபரக்கிறது.
அக்‌ஷயின் ஜோடியாக லாரா தத்தா, ‘காலா’ ஹூமா குரேஷி, வாணி கபூர் நடிக்கிறார்கள். ‘‘பல்வேறு டெஸ்ட்களுக்குப் பின், ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு. மறுபடியும் ஷூட் என்பது புது நார்மல் லைஃப் ஆரம்பிச்ச மாதிரி ஆனந்தமா இருக்கு. ‘லைட்ஸ், கேமரா, மாஸ்க் ஆன்.. ஆக்‌ஷன்’னு அக்‌ஷய் க்ளாப் போர்டு அடிச்சு, ஷூட்டிங்கை துவக்கி வச்சிருக்கார்...’’ என குஷியாகிறார் குரேஷி.

விவசாயி சமந்தா!

ஆன்லைனில் பொட்டிக் ஒன்றை ஆரம்பித்திருக்கும் சமந்தா, அப்படியே தன் வீட்டில் காய்கறித் தோட்டமும் போட்டிருக்கிறார். ‘‘கார்டனிங் ரொம்ப பிடிக்கும். அதுவும் ஆர்கானிக் ஆரோக்கியமானது. கிடைக்கற இடங்கள்ல வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் பயிரிட்டோம். அழகுக்கு அழகு. பயனுக்கு பயன். இதோ இப்ப கொத்து கொத்தா முள்ளங்கி விளைஞ்சிருக்கு...’’ என மகிழ்கிறார்.

தொழிலதிபர்!

காதல் கணவர் நிக் ஜோனஸுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் ப்ரியங்கா, இப்போது பர்ஃப்யூம் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.
அதில் ஒரு பிராண்டுக்கு தன் பெயரையே சூட்டியிருப்பவர், ‘‘வாசனை என்பது வார்த்தை. நறுமணம் என்பது இலக்கியம்...’’ என ஸ்லோகன் போல கவிதையும் உதிர்க்கிறார்.

ஓவியர் நித்யா!

மிஷ்கினின் ‘சைக்கோ’விற்குப் பிறகு வெப் சீரீஸ் ஒன்றிலும், மலையாளத்திலும் சிறகடிக்கிறார் நித்யா மேனன்.  இந்தியாவின் முதல் 3டி படமான ‘மை டியர் குட்டிச்சாத்தானி’ல் உதவியாளராக இருந்த டி.கே.ராஜீவ் குமார் இயக்கி வரும் ‘கொளாம்பி’யில் வெயிட் ரோலாம். அதன் படப்பிடிப்பு இடைவேளை ஒன்றில் நித்யா, தன் இடது கையினால் அழகான பென்சில் ஸ்கெட்ச் ஒன்றை வரைந்து தள்ளியிருக்கிறார். நித்யாவின் லெஃப்ட் ஹேண்ட் சாதனையை யூனிட்டே மெச்சுகிறது!

அப்சல்