Q&A



தெலுங்கில் நீங்க நடிக்கிற படமெல்லாம் ஹிட்... எப்படி இருக்கு இந்த ட்ராவல்?

பூஜா ஹெக்டே

தேங்க்ஸ். நான் கமிட் ஆகுற படத்துல என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கானு பார்ப்பேன். ‘கண்டிப்பா இதை நாம மிஸ் பண்ணிடக்கூடாது’னு எனக்கே தோணணும். அப்படி எக்ஸைட்டட் ஆகி கமிட் ஆன படங்கள்தான் ‘டிஜே’, ‘மஹரிஷி’, ‘அரவிந்த சமேத வீரராகவா’, ‘அலவைகுந்தபுரமுலு’.
ஒவ்வொரு படத்திலுமே வேற வேற கேரக்டர்கள்.

 இந்த லாக் டவுன்ல ஷூட் எதுவும் இல்லாததால நிறைய டைம் கிடைக்குது. ஆனா, போன வருஷம், ஒரே டைம்ல நாலு படங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். சில சமயம், ஒரே நாள்ல மூணு ஷிஃப்ட் போட்டு மூணு படங்களின் ஷூட்டிங் போயிருக்கேன். அவ்வளவு கடினமா உழைப்பைக் கொடுத்திருக்கேன். ஷூட்டிங் இருந்தாதான் எனர்ஜி வரும். ஐ லவ் ஒர்க்கிங் ஹார்ட். இந்த ட்ராவல் உற்சாகமா இருக்கு!

எப்போ சிக்ஸ் பேக் வைக்கப் போறீங்க?

சிவகார்த்திகேயன்

ஆத்தாடி! சிக்ஸ்

பேக்கா? வேண்டாங்க. அதுல நிறைய கஷ்டங்கள் இருக்குனு கேள்விப்பட்டேன். ஒரு மாசத்துல பண்ணிட முடியுமானு கூட விசாரிச்சு பாத்தேன். ‘அப்படி சாத்தியமே இல்லை’னு சொல்லிட்டாங்க. தவிர, மாசக்கணக்கா சாப்பிடாம இருக்க வேண்டியிருக்கும்னு சொன்னாங்க.
என்னால சாப்பிடாம இருக்க முடியாது.

ஸோ, அது வேணவே வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். கொஞ்சம் குண்டா இருந்தாலே நல்லதுதான். இப்ப உள்ள பாடி ஷேப்பே ஃபிட்டா இருக்கற மாதிரிதான் தெரியுது. ஆனா, கதைக்கு கண்டிப்பா சிக்ஸ்பேக் வச்சே ஆகணும்னு கட்டாயம் வந்தா, பண்ணித்தான் ஆகணும். அப்ப யோசிக்கலாம்!

தமிழ்சினிமால நெப்போட்டிசம் கிடையாது... ஆனா, குரூப்பிசம் இருக்குனு ட்விட் பண்ணியிருக்கீங்களே..?

நட்டி நட்ராஜ்

தமிழ்லயும் சரி, இந்திப் படங்கள்லயும் சரி நெப்போட்டிசம் எனக்கு நேர்ந்ததில்ல. நான் டெக்னீஷியனாகவும் இருக்கறதால எந்த பிரச்னையும் நேரலை.
நான் சொன்ன குரூப்பிசமே வேற! அதை தவறா புரிஞ்சுக்கிட்டாங்க. சில இயக்குநர்கள் ஒரே கேமராமேன், ஒரே எடிட்டர்னு ரிப்பீட்டடா படங்கள் பண்றாங்களே... அதைத்தான் குரூப்பிசம்னு சொன்னேன்.

உதாரணமா, நான் அனுராக் காஷ்யப்பின் கேமராமேன். அவர் ஒரு படம் பண்ணும்போது, அந்த ஸ்கிரிப்ட்டை என்கிட்ட காட்டுவார். எனக்கு அந்த படம் பண்ண முடியலைனாதான் அவர் வேற கேமராமேனைத் தேடிப்போவார். நண்பர்கள் டீமா ஒண்ணா இருக்கறதைத்தான் குரூப்பிசம்னு சொன்னேன். சிலர் இதை தவறா புரிஞ்சுக்கிட்டாங்க. தனி குரூப்பா செயல்படறாங்க என்கிற கண்ணோட்டத்துல எல்லாம் நான் சொல்லலை!

விஜய்யின் ‘துப்பாக்கி’யில் அசோசியேட் இயக்குநரா ஒர்க் பண்ணியிருக்கீங்க... இப்ப ‘துப்பாக்கி 2’ வரப்போறதா சொல்றாங்க... ‘துப்பாக்கி’ அனுபவம் ஒண்ணு..?

இயக்குநர் அஜய்ஞானமுத்து

‘துப்பாக்கி 2’ வரப்போகுதா? அப்படி தெரியலை! ஆனா, நான் விஜய் சாரோட பயங்கரமான ரசிகன். அவருக்கு ரசிகர் மன்றம் வச்சிருந்தேன். அவர் படம் ரிலீஸ் ஆனா, கட் அவுட் வைக்கறது, அதுல பால் ஊத்துறதுனு கெத்தா திரிவேன். இதெல்லாம் எங்க டைரக்டர் முருகதாஸ் சாருக்கே தெரியும்.
அவரோட ‘ஏழாம் அறிவு’ல வேலை பார்த்தேன்.

அதை முடிச்சதும் லண்டன்ல ஒரு ஃபிலிம் ஸ்கூல்ல எனக்கு அட்மிஷன் கிடைச்சது. அந்த ஊர் ஒர்க்கிங் ஸ்டைலையும் கத்துக்கலாம்னு விரும்பி, முருகதாஸ் சார்கிட்ட சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன். லண்டனுக்கான விசா, தேர்வுகள்னு எல்லாம் க்ளீயர் பண்ணிட்டு, கிளம்புற ஸ்டேஜ்ல, எங்க டைரக்டர் விஜய் சாரோட ஒர்க் பண்ணப் போறார்னு கேள்விப்பட்டேன். அவ்ளோதான். அந்த ஐடியாவுக்கு அப்படியே முற்றுப்புள்ளி வச்சிட்டேன். ‘துப்பாக்கி’யில் ஒர்க் பண்ணின 96 நாட்களுமே ட்ரீம்ல மிதந்தேன்.

திருமணத்தில் நம்பிக்கையுண்டா?

ஆஷிமா நர்வால்

என்ன இப்படி கேட்டுட்டீங்க. நிறையவே நம்பிக்கையிருக்கு. கல்யாணம்தான் ஒரு மனுஷனோட வாழ்க்கையை முழுமையாக்குது. மேரேஜ் சிலருக்கு சீக்கிரம் நடக்கலாம். சிலருக்கு கொஞ்சம் லேட்டா நடக்கலாம். ஆனா, லைஃப்ல மேரேஜ் கண்டிப்பா வேணும். ஹீரோயின்கள் கல்யாணத்தை தள்ளிப்போடுறது அவங்கவங்க பர்சனல் விஷயம்.

ஆனா, சிம்ரன், ஜோதிகா, சமந்தானு எல்லாருமே மார்க்கெட் உச்சத்துல இருக்கும் போதே, கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். மேரேஜ் ஆன ஹீரோயின்களுக்கு இப்ப மூவி ஆஃபர்ஸும் நிறைய வருது. இது ஆரோக்கியமான மாற்றம். நல்ல விஷயம்!

தொகுப்பு: மை.பாரதிராஜா