லவ் ஸ்டோரி-நகுல் - ஸ்ருதி காதலில் விழுந்தேன்..!



நகுல்:
மும்பையில் இருக்கும்போது எனக்கு ஒண்ணுமே தெரியாது. ரொம்பக் கூச்சப்படுவேன். கேர்ள்ஸ்கூட அவ்வளவாக பரிச்சயமில்லை. சென்னைக்கு வந்து ஸ்கூலில் படிக்கும்போது நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். Passing clouds மாதிரி சில பெண்கள். பெண்களுக்கு பிடிச்ச மாதிரி பழகுறதுஎப்படின்னே தெரியாது.

வெளிப்படையாகச் சொன்னால், காதல்னா அர்த்தம் தெரியாது.  அப்படியிருக்கும்போது என் நண்பன் வீட்டிற்கு ஸ்கூல் முடிச்சதும் போவேன். அவங்க பக்கத்து வீட்டுப் பெண்தான் ஸ்ருதி. அப்ப நான் ‘பாய்ஸ்’ படத்தில் நடிச்சுட்டேன். என் ஃப்ரண்டோட அம்மாவோட பேச்சில் ஸ்ருதியோட பெயர் வந்துகிட்டே இருக்கும். அவங்க வீட்டுல கப் கேக் ஒண்ணு இருந்தது.

அதை எடுத்து சாப்பிடப் போக அவ்வளவு ருசி. ‘பிரமாதமாக இருக்கே’ன்னு சொன்னபோது அவங்க ‘இதையும் செய்தது ஸ்ருதிதான்’னு சொன்னாங்க. ஸ்ருதியோட ஃபேஸ்புக் மெசேஜரில் பாராட்டி செய்தி அனுப்பினேன். அதிலிருந்து ஆரம்பமானது எங்களுக்கான இன்னிசை. என்னை மாதிரியானவர்களுக்கு தேவைப்படுகிற ஆதரவு, பேரன்பு, ஆறுதல், எல்லாமே ஒரே பொண்ணுகிட்டேயிருந்து கிடைச்சால் எவ்வளவு நல்லா
யிருக்கும்! எனக்கு கிடைச்சிடும் போல இருந்தது.

ரொம்ப நல்லா பேசுவாங்க. தெளிவு கண்ணில் தெரியுது. அழகா இருந்தாங்க. திருவிழாவிற்குப் போனால் சாமியைக் கும்பிடுறதை விட அங்கு வந்து நிற்கிற சின்னப் பிள்ளையைக் கொஞ்சுகிற ஆளு நான்! எல்லாத்துக்கும் மேலே ஸ்ருதி நல்ல குடும்பம். உள்ளங்கையில் வைச்சு தாங்கலாம் போல் இருக்கு அந்தப் பொண்ணு!என்னை விடவும் ஸ்ருதி உயரம் கொஞ்சம் அதிகம். நான் அவங்களை நிமிர்ந்து பார்த்து பேசுறதே எனக்குப் பிடிக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து, பேசி, மனசு புரிஞ்சு, குறை தெரிஞ்சு, பழக முடிந்தது. சமயங்களில் என்னை கண்ணாடியில் பார்த்துப் பேசுற மாதிரியிருக்கும்.

இதுக்கு முன்னாடி எனக்கு பெரிய ஹார்ட் பிரேக் இருந்தது. Very badன்னு உணர்ந்த நாட்கள் போய், காதலில் பெரிய நம்பிக்கை வந்தது. ஸ்ருதி மனசுக்கு அருகில் வந்து விட்டாள். இப்போது நான் வார்த்தையை முடிக்கிறதுக்கு முன்னால் பதிலை அவளால்  சொல்ல முடியுது. பார்வையிலே அய்யாவுக்கு இது வேணும்னு அவளுக்குத் தெரியும். காதல் நிறைந்து  கிடக்கும் இடத்தில் வேறெதற்கும் இடம் கிடையாதுன்னு சொல்றது புரியுது.
அச்சம், குழப்பம், தடுமாற்றம் எதற்கும் இடம் கிடையாது. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை. மனம் சும்மா இருந்தாலும் காதல் விடுவதில்லை என்பது புதுமொழி.

ஒரு நாள் அவளுக்கு போன் செய்கிறேன். ‘எனக்கு டீ போட்டு வைக்கிறாயா’ என்கிறேன். ‘ஏன் நீங்க வரவா போறீங்க’ என ஜாலியாக ஸ்ருதி கேட்க,   ‘உன் வாசலில் நிற்கிறேன்’ என பதில் சொன்னேன். ஸ்ருதி பதட்டமாகி விட்டாள். ‘ஏன் திடீரென்று’ என  சொல்லி முடிப்பதற்குள் அவள் வீட்டிற்குள் நுழைகிறேன். அவளின் அப்பா, அம்மாவைப் பார்த்து ‘இவளைப் பிடிக்கிறது, என் வாழ்க்கை இவளை மணந்தால் நன்றாகயிருக்கும், தயவு செய்து இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்’ எனச் சொல்ல, காது கொடுத்து கேட்கிறார்கள்.

என் பிரியத்தை வார்த்தைகள் வழியாகச் சொல்ல முயன்றேன். உண்மையாக இருந்ததால் அது அவர்களைப் போய் அடைந்தது.
நான் இங்கே மருமகன் இல்லை. இன்னொரு மகன். நடிகன், மாப்பிள்ளை என இங்கே ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாது இயல்பாக இருக்க முடிகிறது.எங்கள் கல்யாணம் பார்த்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். அது ரெகுலர் கல்யாணம் இல்லை. வெட்கமின்றி சந்தோஷமாக குதூகலித்து கரம் பற்றி நடந்தது திருமணம். அது அப்படித்தான்.

அவள் பக்கத்தில் இருக்கும்போது தனிமையில்லை. எல்லா சுதந்திரமும் இருக்கிற உறவாக அமைஞ்சது. மொத்தக் குடும்பமும் என்னை சேர்த்து அணைத்துக் கொண்டது. திடீர்னு உலகமே அழகாயிட்டமாதிரி இருக்கு.கல்யாணமாகி நாலைந்து வருஷம் கழிச்சு இப்போ குழந்தையிருந்தா நல்லாயிருக்குமேன்னு எனக்கு எண்ணம் வர, அவளுக்கும் வந்தது. கல்யாணத்திற்காக சுபாவம் மாறாமல், பரஸ்பரம் புரிந்து, நம்பிக்கை வளர்த்து வேவ் லெங்க்த்ல இரண்டு பேரும் இணைந்தே இருந்து இந்த வாழ்க்கை பழகுது.

குழந்தைப்பேற்றின்போது ‘நகுல் இல்லாமல் எப்படி’ என ஆச்சரியப்பட்டாள். ‘அவன் மடியில் இருந்துதானே அவன் பிள்ளையைப் பெற முடியும்’ என கேள்வி கேட்டாள். எல்லாவற்றிலும் உனக்காக நான் இருக்கிறேன் என்பதே எந்த உறவையும் உயிர்ப்பிக்கும்.

இப்பகூட குழந்தை பெத்துக்கணும்னு தீர்மானித்த போது குழந்தைப் பேற்றின்போது அவளோடு நான் இருக்கணும்னு ஆசைப்பட்டாள்.
இங்கே அதுபற்றி விசாரித்தால் எனக்குத் தடையிருந்தது. கூகுளில் தேடினால் ஹைதராபாத்தில் நேச்சுரல் பெர்த் சென்டர் இருந்தது. நாங்களே முடிவு செய்து அங்கே போயிட்டோம்.

எங்கள் கண் முன்னால் குழந்தை அப்படியே புத்தம் புதிதாக இந்த உலகை எட்டிப்பார்த்த தருணம்… Such a lovely moment.
ஸ்ருதி மேல் இன்னும் மரியாதை கூடிவிட்டது. ஒட்டுமொத்த பெண்களின் மீதான பார்வையே மாறிவிட்டது. அது தெய்வீகமான தருணம். கண்ணில் தண்ணி வர சிரிச்சோம். சிரித்துவிட்டு அப்படியே அழுதோம். காதலைவிடவும், தாய்மையைவிடவும் சந்தோஷமான விஷயத்தை கடவுள் இன்னும் இந்த பூமிக்குக் கொடுக்கவில்லை.

ஸ்ருதி:

நகுலிடம் பிடிக்கிற பெரிய விஷயம், அவர் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருப்பார். வீட்டில், வெளியில் நண்பர்களோடு எங்கேயும் நகுலாகவே இருப்பார். அப்படித்தான்  கல்யாண வீட்டிலயும் இருந்தார். அப்படியே சிரிச்சுக்கிட்டு, ஓடியாடிக்கிட்டு, என்னைக் கொண்டாடிக்கிட்டு திரிஞ்சார்.
இரண்டு மூணு வருஷத்திற்கு முன்னாடி அவங்க அம்மாவும், அதற்கு முன்னாடியே அவங்க அப்பாவும் இறந்து போக திருப்பி அவரை சகஜமான நிலைக்குக் கொண்டு வர சிரமமாக இருந்தது.

‘அகிரா’ பிறந்தபிறகு இப்ப அவர் மகள் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கார். அகிரா எப்போ தூங்குவாள், எப்போ எங்களோடு விளையாட ஆரம்பிப்பாள் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவர் கையில், அவர் பார்க்க ரத்தமும் சதையுமாக சின்ன அழுகையோடு, அகிராவைத் தூக்கிக்கொடுத்தபோது அவர் கண்ணில் நிம்மதியைப் பார்த்தேன்.

ஒரே நேரத்தில் என்னை இறுக்கி அணைச்சுக்கொண்டு அவளை ஒரு பூவை கையில் ஏந்துவது மாதிரி இருந்த தருணங்கள் அழகானது.
அன்பு தெரிகிற இடத்தில் மனசு ஆட்டுக்குட்டியாகி அடைக்கலம் தேடும்.

நானும், அகிராவும் அப்படித்தான் நகுல் கிட்டே இருக்கோம். அகிராவே எங்க உலகமா இங்கே இருக்கு. இன்றைக்கும் என்னைப் பார்க்க  உதவுவது நகுலின் வெளிச்சமே!