இறந்தவர்களுக்கு மறுபிறவி கொடுக்கும் சேவை நிறுவன விண்கலம்!



ஹாலிவுட்டிற்கு சவால் விடும் ஓர் இந்திய சினிமா ‘கார்கோ’. இதுவரை சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகைமையில் ஆயிரக்கணக்கான படங்கள் வெளிவந்திருந்தாலும் தனித்து நிற்கிறது இந்த இந்திப்படம். ஆம்; இதன் கதைக்கரு ரொம்பவே புதிது; வித்தியாசமானது.

மனிதன் இறந்த பிறகு எங்கு போகிறான்... நரகத்துக்கா அல்லது சொர்க்கத்திற்கா? இறந்த பிறகு அவனுடைய ஆசைகள், விருப்பங்கள் என்னவாக இருக்கும்? இறந்த ஒருவர் தனக்குச் சொந்தமான அனைத்தையும் விட்டுவிடுவாரா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை ஃபேன்டஸியாக சொல்லியிருக்கிறது இந்தப்படம்.எதிர்காலத்தில் கதை நிகழ்கிறது. இறந்தவர்களுக்கு மறுபிறவி கொடுக்கும் சேவை நிறுவனத்தின் விண்கலத்தில் தனி ஒருவனாகப் பணிபுரிந்து வருகிறார் பிரகாஸ்தா. அமானுஷ்யமான சக்திகளைக் கொண்டவர். மனித உருவில் இருக்கும் பேயாக இருந்தாலும் ஜென்டில்மேனாக நடந்துகொள்பவர்.

நிறுவனத்திலிருந்து தினமும் கார்கோ மூலம் இறந்தவர்கள் விண்கலத்துக்கு அனுப்பப்படுவார்கள். கார்கோவை பெற்றுக்கொண்ட பிரகாஸ்தா, எதனால் அவர்கள் இறந்தார்கள் என்று ஒவ்வொருவரிடமும் உரிய காரணத்தைச் சொல்வார். அவர்கள் தங்களின் கதைகளையும் ஏக்கங்களையும் சொல்வார்கள். பிறகு அவர்களைக் குணப்படுத்தி, பூமியில் வாழ்ந்த ஒட்டுமொத்த நினைவுகளையும் அழித்துவிட்டு, மறுபிறவி கொடுப்பது பிரகாஸ்தாவின் பணி.

சலிப்பில்லாமல் இந்த வேலையைச் செய்கிறார் அவர். தினமும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, பிரகாஸ்தாவின் பணிச்சுமையும் மலை போல உயர்கிறது. தனிமை விரும்பியான அவர் உதவியாளர் தேவையில்லை என்று நிறுவனத்திடம் சொல்லிவிடுகிறார். இருந்தாலும் அவருக்கு உதவியாக அசாதாரணமான சக்திகளைக் கொண்ட யுவிஸ்காவை விண்கலத்துக்கு அனுப்புகிறது நிறுவனம்.

இருவரும் சேர்ந்து, இறந்தவர்களுக்கு மறுபிறவி கொடுக்கிறார்கள். பிரகாஸ்தா மற்றும் யுவிஸ்காவிடம், இறந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள்தான் படத்தின் திரைக்கதை. ‘‘அடுத்த பிறவியிலாவது நான் சல்மான்கானாக பிறக்க வேண்டும்...’’ என்கிறார் இறந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர்.
‘‘நான் எல்லோருக்கும் நல்லதைச் செய்தேன். என் தம்பி ரொம்பவே மோசமானவன். நான் இறந்துட்டேன். அவன் இன்னும் வாழ்ந்துட்டே இருக்கான்...’’ என்கிறார் தம்பியால் கத்திக்குத்துப்பட்டு இறந்துபோன அண்ணன்.

இப்படி ஏராளமான கதைகள் படத்தை வித்தியாசமான அனுபவமாக மாற்றுகின்றன.விண்கலத்துக்குள்ளேயே கதை சுற்றுவதாலும் திரும்பத் திரும்ப இறந்தவர்களின் நினைவை அழிப்பது, காரணத்தைச் சொல்வது, மறுபிறவு எடுக்க வைப்பது என ஒரே மாதிரியான காட்சிகள் வருவதாலும் பல இடங்களில் சலிப்புதட்டுகிறது. பிரகாஸ்தாவாக விக்ராந்த் மாஸேவும், யுவிஸ்காவாக ஸ்வேதா திரிபாதியும் நடித்திருக்கிறார்கள். ‘நெட்பிளிக்ஸி’ல்
காணக்கிடைக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் ஆரத்தி காதவ் என்ற பெண்.