பெண்கள்... சொத்து...சம உரிமை...



சமீபத்தில் உச்சநீதிமன்றம், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை தருவது தொடர்பான ஒரு வழக்கில், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. வினிதா சர்மா மற்றும் ராகேஷ் சர்மா ஆகியோருக்கு இடையிலான சொத்துத் தகராறு தொடர்பான வழக்கில், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தருவதை யாரும் மறுக்க முடியாது என்று கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு இந்தியா முழுதும் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சொத்து தொடர்பான வழக்குகளுக்கு, குறிப்பாக, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்குவது தொடர்பான வழக்குகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் என நம்பலாம்.

மேலும், இந்தத் தீர்ப்பு ‘இந்து வாரிசுரிமைத் திருத்தச் சட்டம் 2005’ ஐ எப்படி நோக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது.
பெண்கள் சொத்துரிமை கடந்து வந்த பாதைஇந்தியாவில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கிடைத்திருப்பது நெடிய சட்டப் போராட்டத்துக்குப் பிறகே சாத்தியமாகியிருக்கிறது.

தமிழகத்தில் இதனை சாத்தியமாக்கிக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதிதான். ஆனால், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது நூற்றாண்டு காலப் போராட்டம். முதன் முதலில் 1863ம் ஆண்டு சிவகங்கை மகாராஜாவுக்கு எதிராக கட்டம்மை நாச்சியார் வழக்கு தொடுத்தார். அதைத் தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து, 1929ம் ஆண்டு அப்போதைய பிரிட்டீஷ் அரசு ‘இந்து குடும்பச் சொத்து’ தொடர்பான முதல் சட்டத்தை இயற்றியது. குடும்பத் தலைவர் எந்த ஆவணமும் எழுதி வைக்காவிட்டால் அவரது மனைவி தவிர மற்ற வாரிசுகள் சமபங்கை அடைவார்கள் என்றது இச்சட்டம்.

விதவை மனைவிக்கு சொத்தில் பங்கில்லை என்பது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியதால், 1937ம் ஆண்டு புதிய சொத்துரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் விநோதமாக குடும்பத் தலைவரின் மனைவி, மகனின் மனைவி, பேரனின் மனைவி ஆகியவர்களுக்கு
பாத்யதை என்று இருந்தது. பின்னர் நாடு விடுதலையடைந்தபிறகு 1956ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘இந்திய வாரிசுரிமைச் சட்டம்’, இறந்துபோன கணவரின் பங்கில் மட்டுமே மனைவி, பெண் வாரிசுகளுக்கு உரிமை என்று சொன்னதால் இதற்கும் சர்ச்சை எழுந்தது.

மாநில அரசுகள் இவ்விவகாரம் தொடர்பாக தனித்தனியே சட்டம் இயற்றிக்கொண்டன. அப்படித்தான் தமிழகமும் கேரளமும் ஆந்திராவும் கர்நாடகாவும் தனித்தனிச் சட்டங்கள் இயற்றிக்கொண்டன. 1986ல் என்.டி.ராமாராவ் ஆந்திராவில் பெண்கள் சொத்துரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். இதில், திருமணம் ஆகாத பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்று இருந்தது. இதைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி 1989ல் திருமணமான பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைக் கொண்டு வந்தார்.

இந்துச் சட்டம், மாநில அரசுகளின் சட்டம் ஆகிய வெவ்வேறு சட்ட நோக்கில் இவ்விவகாரங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இதில் இந்துச் சட்டம் என்பது மிகவும் சிக்கலானது. இந்துச் சட்டம் என்பது மிதாகசாரம் மற்றும் தயபாகம் என்ற இரு பெரும் பண்டைய சொத்துரிமை நூல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

மிதாகசாரம் என்பது மேலும் நான்கு உட்பிரிவான சிந்தனைப் பள்ளிகள் கொண்டது. அதாவது, பனாரஸ், மிதிலை, மஹாராஷ்ட்ரம், மெட்ராஸ். இவை ஒவ்வொன்றும் இந்தியாவின் ஒவ்வொரு நிலப்பகுதியின் பண்பாடுகளோடும் பல்லாயிரம் ஆண்டு பழக்கவழக்கங்களோடும் தொடர்புடையவை.  
இப்படி, பாரம்பரிய நீதிகளும் நவீன சட்டத்தின் அடிப்படையிலான நீதிகளுமாக ஊடாடும் இந்த சொத்து விவகாரங்களில் இந்தியா முழுதும் பல்வேறு நீதிமன்றங்கள், பல்வேறு வகையான தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன.

‘இந்திய வாரிசுரிமைத் திருத்தச் சட்டம்’ 2005ல் வருவதற்கு முன்பு இறந்தவர்களின் பெண் வாரிசுகளுக்கு சொத்தில் சம உரிமை தரவேண்டியதில்லை என்று சில நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கவே, இதற்கான மேல்முறையீடுகள் உச்சநீதிமன்றத்தில் குவிந்தன. இந்த எல்லா வழக்குகளையும் சேர்த்துத்தான் நீதிபதி மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிமன்றம், “வாரிசு என்பது பிறப்பின் அடிப்படையில் வரும் உரிமை. எனவே, புதிய வாரிசுரிமைத் திருத்தச் சட்டம் வருவதற்கு முன்பே ஒருவர் இறந்திருந்தாலும் அவரின் பெண் வாரிசுகளுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது...” என்று தீர்ப்பளித்துள்ளது.

எதார்த்தம் எப்படி உள்ளது?

இது முக்கியமான தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இந்தியாவில் பெண்களுக்கு சொத்துரிமை தருவதில் இன்னமும் பெரிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே நிதர்சனம். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தருவதென்பது அவர்களுக்கு வெறுமனே பொருளாதார விடுதலையை மட்டும் தருவதில்லை. கணவர் வீட்டில் உயர்ந்த மரியாதை, பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றையும் ஏற்படுத்தித் தருவதை மறுக்க இயலாது என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குடும்ப வன்முறை குறைவாக நடப்பது, பெண் கல்விக்கான வாய்ப்பு உருவாவது போன்ற சமூகத்தின் முற்போக்கான விஷயங்களோடு தொடர்புடைய விவகாரம் இது என்பதற்கு கேரளமும் தமிழகமும் ஆந்திராவுமே சாட்சி.கடந்த 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் 2015 - 16ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் நில நிர்வாக மையம் ஆகியவை வெளியிடும் அறிக்கைகளில், பெண்களிடம் உள்ள சொத்துக்கள் மற்றும் சொத்தில் பெண்களுக்கான சம உரிமை ஆகிய விவகாரங்களில் மாநிலங்களுக்கு இடையே கடுமையான வித்தியாசங்கள் இருப்பது குறிப்பிடப்படுகிறது.

இந்திய அளவில் மேகாலயாவில்தான் அதிகபட்சமாக பெண்களுக்கு சொத்துரிமை இருக்கிறது. அதாவது இங்கு 26% சொத்துக்கள் பெண்களிடம் உள்ளன. மிகக் குறைந்த அளவாக, பஞ்சாபில் 0.8% மட்டுமே உள்ளது. ஒரு சதவீதம்கூட கிடையாது என்பதை நோக்க வேண்டும்.இந்த விவகாரங்களில் தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் நிலைமை ஆரோக்கியமாக உள்ளது. இம்மாநிலங்களில் பெண்களுக்கான சொத்தில் சம உரிமைச் சட்டங்கள் சிறப்பான நடைமுறையில் உள்ளன.

பெரும் விவசாய நிலங்கள் கொண்ட பீகார் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மிக மோசமாக உள்ளன. இங்கு, பெண்களுக்கு சொத்தை வழங்குவதில் இன்னமும் தயக்கமும், மறுப்பும் உள்ளது.நிலப் பதிவுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளில் உள்ள கோளாறுகளும் இந்தப் பிரச்னையில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவற்றில் நிலப்பதிவு ஆன்லைன் மூலம் நடைபெறுவதால் இதில் ஊழல்கள், ஏமாற்றுகள் நடப்பது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பல மாநிலங்களில் காகிதங்கள் மூலமே ஆவணப்படுத்தப்படுவதால், பல முறைகேடுகள் நிகழ்கின்றன. பல ஆண்டு களாக நிலம் தன்னுடையது என நம்பி விவசாயம் செய்யும் பெண்கள் தங்கள் சகோதரர்களாலும் பிற உறவினர்களாலும் ஏமாற்றப்படுவது இன்னமும் இருக்கிறது.

இப்படியான விவகாரங்கள் கட்டப்பஞ்சாயத்துகள் மூலம் தீர்க்கப்படுகின்றன என்பதுதான் இன்னமும் கொடூரம். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பது நாம் இன்னமும் சென்று சேரவேண்டிய நெடுந்தூரப் பயணம் என்பதைத்தான் இந்த எதார்த்தங்கள் நமக்குக் காட்டுகின்றன.

இளங்கோ கிருஷ்ணன்