ரத்த மகுடம்-111



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘தவிடுபொடி ஆக்கவே முடியாது...’’ பற்களைக் கடித்தான் விநயாதித்தன். ‘‘ஆம் மன்னா... எங்கள் திட்டத்தை... சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் ராஜ தந்திரத்தை... ஒருபோதும் கரிகாலனால் தகர்க்க முடியாது... என்ன சொன்னீர்கள் மன்னா... அவன் சோழ இளவரசனா..?’’
வாய்விட்டு நகைத்தான் சாளுக்கிய இளவரசன். ‘‘இளவரசன் என்றால் அவனது தந்தை ஏதேனும் ஒரு பிரதேசத்தை ஆளவேண்டும்! அப்படி கரிகாலனின் தந்தை எந்த நிலப்பரப்பை ஆட்சி செய்கிறார்..?

பொறுங்கள் மன்னா... உறையூரையும் அதனைச் சுற்றியிருக்கும் ஊர்களையும்தானே குறிப்பிடுகிறீர்கள்..? அது பல்லவர்கள் இட்ட பிச்சை! பாண்டியர்களான நீங்களும் போனால் போகிறது என விட்டுவைத்த எச்சம்! பெயருக்கு நான்கைந்து ஊர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலேயே அவன் தந்தை மன்னராகி விட மாட்டார்... கரிகாலன் இளவரசனாகி விட மாட்டான்!’’

இடுப்பில் கை வைத்தபடி நிமிர்ந்தான் விநயாதித்தன். ‘‘மன்னர் என்றால் என் தந்தையும் நீங்களும்தான்... வேண்டுமானால் கோழையைப் போல் நாட்டை விட்டுவிட்டு ஓடினானே... மன்னிக்க... ஓடினாரே பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர்... அவரையும் மன்னராக சேர்த்துக் கொள்ளலாம்...’’
பேசியபடியே இரணதீரனின் அருகில் வந்து அவன் தோள்களை அணைத்தான்.

‘‘அந்த வகையில் நானும் ரணதீரனும்... எப்படியும் இழந்த நாட்டை மீட்டு விடுவோம் என்ற அசட்டு நம்பிக்கையில் காட்டில் மறைந்தபடி படைகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறானே... இன்றைய சாளுக்கியர்களின் ஒரு பகுதியாகிவிட்ட பல்லவ நாட்டு மன்னனின் மகனான ராஜசிம்மன்... அவனையும் சேர்த்து நாங்கள் மூவரும்தான் இளவரசர்கள்! அதுவும் உண்மையான இளவரசர்கள்!

நீங்கள் சொன்னீர்களே தமிழகத்தின் பதினைந்து குறுநில மன்னர்கள்... அவர்களின் வாரிசுகளையும் இளவரசர்களாக அழைப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபணையில்லை... பட்டியலில் எங்கள் மூவருக்குக் கீழ் அவர்களும் இடம்பெறட்டும்!

ஆனால், கையளவு நிலம் கூட சொந்தமில்லாத பரதேசியான கரிகாலனை இளவரசன் என்று அழைக்காதீர்கள் மன்னா... அது உங்கள் மைந்தனும் மாபெரும் வீரனுமான ரணதீரனை நீங்கள் குறைத்து மதிப்பிடுவதற்கு சமம்...’’சில கணங்கள் இமைகளை மூடித் திறந்தான் விநயாதித்தன்.

அமைதியாக அவனையே பார்த்தபடி நின்றிருந்தார்கள் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மரும் அவரது மகனும் பாண்டிய இளவரசனுமான கோச்சடையன் இரணதீரனும்.‘‘மன்னிக்க வேண்டும் மன்னா... சற்றே உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்...’’ என்றபடியே அதிர்ந்துபோய் நின்றிருந்த ராமபுண்ய வல்லபரை கணத்துக்கும் குறைவான காலத்தில் ஏறிட்டு விட்டு தலைகுனிந்தான்.

‘‘பெரியவர்களான உங்கள் முன்பு கோபத்தில் ஏதேதோ பேசிவிட்டேன்... தவறுதான்... இந்த சிறியவனின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மன்னிக்க வேண்டுகிறேன்...’’என்றபடியே இரணதீரனின் அருகில் வந்தான் விநயாதித்தன். ‘‘உன்னிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்... நாம் சமவயதுள்ளவர்கள்... தோழர்கள்... எனவே பரஸ்பர உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நம்மிருவருக்குள் பிழையாகாது...’’

‘‘அப்படி நீயே தீர்மானிக்க முடியாது விநயாதித்தா...’’ நேருக்கு நேராக அவனைப் பார்த்தபடி தன் வார்த்தைகளை உச்சரித்தான் இரணதீரன்.
‘‘கோபத்தை எந்த இடத்தில் எப்பொழுது வெளிப்படுத்த வேண்டும் என சற்று முன்னர்தான் பாண்டிய மன்னர் நம்மிடம் எடுத்துச் சொன்னார்... அதற்காகவே உன் தந்தையைப் புகழ்ந்தார்... அவர் சொல்லி முடித்த சொற்களின் ஈரம் கூட காயவில்லை... அதற்குள் தன்னிலை மறந்து வார்த்தைகளைச் சிதறவிட்டிருக்கிறாய்... நாளை சாளுக்கிய தேசத்தை ஆளப் போகும் உனக்கு இது தகுதியில்லை...

நான்தான் இளவரசன் என கம்பீரம் என நினைத்து ஆணவத்துடன் சொன்னாயே... அதற்கான இலக்கணம் இதுவல்ல... யாரை நீ பரதேசி... பிச்சை வாங்கிய நிலத்தை ஆள்பவர்கள் என்று இகழ்ந்தாயோ... அந்த சோழ தேசத்தின் வாரிசான கரிகாலன்தான் இளவரசனுக்குரிய இலக்கணத்துடன் வாழ்பவன்... திட்டங்களைத் தீட்டுபவன்... அதைச் செயல்படுத்துபவன்...’’ இரணதீரனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தபடியே எதையோ சொல்ல விநயாதித்தன் முற்பட்டான்.

‘‘நில் விநயாதித்தா...’’ என்ற பாண்டிய மன்னரின் குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது.நயனங்கள் சிவந்தபோதும் தன்னைக் கட்டுப்படுத்தியபடி அரிகேசரி மாறவர்மரை ஏறிட்டான் சாளுக்கிய இளவரசன்.‘‘என் மகன் சொன்னதில் பிழையேதுமில்லை... அதைக் கேட்டு நீ ஆவேசப்படுவதிலும் அர்த்தமில்லை... பிச்சையாக வழங்கப்பட்ட நிலம்... பாண்டியர்கள் போனால் போகட்டும் என விட்டுவைத்த எச்சம்... என்றெல்லாம் உன்னால் தூற்றப்பட்ட நான்கைந்து ஊர்களை ஆளும் சோழ மன்னரின் ஆதரவை வேண்டி நின்றது நாங்கள் அல்ல... இதோ இங்கே நிற்கிறாரே உனது குருநாதரும் சாளுக்கிய தேசத்து போர் அமைச்சருமான ராமபுண்ய வல்லபர்... அவர்தான்...

உங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காகவே சோழ மன்னரை காஞ்சி சிறையில் அடைத்தார்... கரிகாலனின் பெரியன்னையை மாளிகைக் காவலில் வைத்து கரிகாலனிடம் பேரம் பேச ஏற்பாடு செய்தார்... அதுவும் எப்படி..? சாளுக்கியர்களுக்கு அடங்கிய சிற்றரசாக காஞ்சி மாநகரையும் சேர்த்து சோழர்களே ஆளலாம் என ஆசை காட்டி...

இதற்கு கரிகாலன் மசியவில்லை... அத்துடன் சிறையில் இருந்த தனது தந்தையையும் விடுவித்து உங்கள் கட்டுக்காவலை மீறி காஞ்சியை விட்டு வெளியேறினான்...இதன் பிறகே பாண்டியர்களான எங்களிடம் ஆதரவு கேட்டு நீங்கள் இருவரும் வந்தீர்கள்... ஒருவேளை உங்கள் கோரிக்கைக்கு சோழர்கள் சம்மதித்திருந்தால் மதுரை மண்ணை மிதித்திருக்க மாட்டீர்கள்!’’இடியென அரிகேசரி மாறவர்மர் முழங்கியதும் சில கணங்களுக்கு யாரும் வாயைத் திறக்கவில்லை.

நிலைமையைச் சமாளிக்கும் விதமாக ஸ்ரீராமபுண்ய வல்லபர் பாண்டிய மன்னரின் முன்னால் வந்து தன் கரங்களைக் குவித்தார். ‘‘என் சீடனை தாங்கள் மன்னிக்க வேண்டும்... பேசத் தெரியாமல் பேசி விட்டான்...’’சட்டென அவரது குவிந்த கரங்களை தன் கைகளால் பற்றினார் அரிகேசரி மாறவர்மர். ‘‘என்ன இது... கைகளை கீழே இறக்குங்கள்... என் மகன் தவறு செய்தால் நான் மன்னிக்க மாட்டேனா... விநயாதித்தனும் என் பிள்ளைக்கு சமமானவன்தான்... என்ன... ரணதீரன் ஒருபோதும் இப்படி வார்த்தைகளைச் சிதற விட மாட்டான்...’’
விநயாதித்தனை நோக்கித் திரும்பினார். ‘‘இங்கே வா...’’

தாயிடம் அடைக்கலமாகும் குஞ்சென அவரை நோக்கி சாளுக்கிய இளவரசன் சென்றான்.அவனை அணைத்தார் பாண்டிய மன்னர். ‘‘நேரமில்லை... சூர்யோதயத்துக்கான காலம் நெருங்கிவிட்டது... எப்பொழுது வேண்டுமானாலும் அரண்மனையில் உதயதாரகைகள் முழங்கலாம்... எனவே சொல்ல வேண்டியதை சொல்லி முடித்து விடுகிறேன்....

விநயாதித்தா... ஊர் பெயரற்றவர்களாக இன்று சோழர்கள் இருக்கலாம்... ஆனால், அவர்களின் வேர் தமிழக நிலத்தின் ஆணிவேர்! இப்பிரதேசத்தை வேளிர்களே ஆண்டுகொண்டிருந்தார்கள்... அவர்களை எல்லாம் அடக்கி ஓர் அரசை ஏற்படுத்தி அதைப் பேரரசாக முதன்முதலில் விரிவுபடுத்தியவர் கல்லணையைக் கட்டிய கரிகாலச் சோழர்தான்.

அப்படிப்பட்டவரின் பெயரைத் தாங்கி நிற்கும் இன்றைய கரிகாலன் எப்படி மீண்டும் வேளிர்களைத் தலையெடுக்க விடுவான்..? அதனால்தான் உன் தந்தையால் ரகசியமாக முடிசூட்டப்பட்ட வேளிர்களின் தலைவனான கடிகை பாலகனைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். இதன் வழியாக உன் தந்தையின் திட்டத்தை தவிடுபொடி ஆக்கியிருக்கிறான்...

அத்துடன் நின்றானா..? இல்லை.... சுதந்திர நாட்டைக் கேட்கும் தென்பாண்டியர்களை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு பாண்டிய நாட்டில் உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறான். இதை ஒடுக்காமல் சாளுக்கிய - பல்லவ போரில் நாங்கள் ஈடுபட முடியாது. அப்படிச் செய்தால் மக்களிடம் இருந்து நாங்கள் அந்நியப்பட்டு விடுவோம்!

கரிகாலன் செய்திருக்கும் காரியங்கள் புரிகிறதா..? தமிழகத்தைத் தாங்கி நிற்கும் பதினைந்து வேர்களையும் நடக்கவிருக்கும் போரில் இருந்து விலக்கியிருக்கிறான். உன் தந்தையாலேயே முடிசூட்டப்பட்ட வேளிர்களின் தலைவனான கடிகை பாலகனை வைத்து இதைச் சாதித்திருக்கிறான்.

இதனால் என்ன பலன் என்று நீ கேட்கலாம். அதற்கான பதில் நடக்கவிருக்கும் போரில் சாளுக்கியர்களும் பல்லவர்களும் மட்டுமே நேரடியாக ஈடுபடப் போவதுதான்!

கரிகாலன் எந்தளவுக்கு கெட்டிக்காரன் என்பதற்கு இது ஒரு சோறு பதம். பல்லவப் படைக்கு தலைமை தாங்கப் போவது யார்..? சோழ மன்னர்! அதாவது கரிகாலனின் தந்தை! இந்தப் போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றால் அதற்கான முழுப் பெருமையும் சோழர்களைச் சேரும்! இதுதான் கரிகாலன் போடும் கணக்கு!’’

‘‘இந்தக் கணக்கை என் தந்தை திருத்தி எழுதுவார் மன்னா...’’ உதடுகள் துடிக்க விநயாதித்தன் உச்சரித்தான்.‘‘அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான்...’’ அரிகேசரி மாறவர்மரிடம் இருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. ‘‘நல்லது... பொழுது விடிந்ததும் விருந்துக்கு அழைப்பு வரும். எங்களுடன் உணவருந்திவிட்டு நீங்கள் இருவரும் புறப்படுங்கள்... சாளுக்கிய மன்னரைக் கேட்டதாகச் சொல்லுங்கள்... பாண்டியர்கள் உதவ முடியாமல் இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லுங்கள்...’’‘‘மன்னா...’’ அதுவரை பார்வையாளராக இருந்த ராமபுண்ய வல்லபர் தன் வாயைத் திறந்தார்.
‘‘சொல்லுங்கள் சாளுக்கியர்களின் போர் அமைச்சரே...’’

‘‘சிவகாமி எங்களிடம் கொடுத்ததையும் சேர்த்து பதினாறு ஓலைகள்... ஆனால், நீங்கள் கடிகை பாலகனிடம் இருந்து நாங்கள் கைப்பற்றிய பதினைந்து ஓலைகளுக்கு மட்டுமே விளக்கம் சொன்னீர்கள்... அவை தமிழக குறுநில மன்னர்களைச் சுட்டுவதாகக் குறிப்பிட்டீர்கள்... வந்து...’’‘‘... பதினாறாவது ஓலை கங்க மன்னரைக் குறிப்பிடுகிறது ஸ்ரீராமபுண்ய வல்லபரே!’’‘‘அவர் எங்கள் மன்னரின் நண்பரல்லவா..?’’

‘‘நண்பராக நீடிக்க வேண்டும் என அன்னை மீனாட்சியைப் பிரார்த்திக்கிறேன்!’’‘‘அன்னை மீனாட்சி வேறு... காஞ்சி காமாட்சி வேறா..?’’ கரிகாலன் நகைத்தான்.‘‘ஆம் வேறுதான்... அதற்கு அத்தாட்சி இந்த சிவகாமி...’’ ஊஞ்சலாடியபடியே உதட்டைச் சுழித்தவள் தன் இடது காலை உயர்த்தி அவன் மார்பின் மேல் வைத்தாள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்