நான்... - வேல ராமமூர்த்தி



‘மாடன் ஏகாலியின் ரத்தமும் சிவப்பாய்த்தான் இருந்தது…’ பத்திரிகையில் வெளியான என் முதல் வரி இதுதான். நான் இப்ப இந்த கலிகால மக்களைப் பத்தி எழுதினதே இல்லை. எல்லாமே செவி வழியா பழங்கால மக்கள் சொன்ன உண்மைக் கதைகள், சம்பவங்கள், நிகழ்வுகள்... இதுதான் என் கதைக்களங்கள். இப்ப இருக்கற மக்கள் எல்லாம் கலப்படம் ஆகிட்டாங்க. தூய்மையான வீரமும், பண்பும் இல்லை. சாதி இல்லை, மதம் இல்லைனு சொல்லிட்டு சமூக வலைத்தளத்துல மாடர்னா சாதிச் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.

நான் எழுதினது அக்கால மனிதர்களுடைய சுதந்திரப் போராட்டம், உரிமைப் போர்கள். நிறைய உண்மைச் சம்பவங்களை பதிவு செய்தேன்.
இதுக்குக் காரணம் என் குழந்தைப்பருவம். திரும்பிப் பார்த்தா என்ன ஓர் அருமையான வாழ்க்கைன்னு நினைக்கிற அளவுக்கு என் இளமைக் காலமும், குழந்தைப்பருவமும் இருந்துச்சு. இராமநாதபுரம் பெருநாளிதான் நான் பிறந்த ஊர். மதுரையில இருந்து ஒன்றரை மணி நேரம். இப்போதும் பசுமை மாறாம ஓரளவு இருக்கக் கூடிய  விவசாய பூமியில எங்க ஊரும் ஒண்ணு.

பள்ளி விட்டா போதும்... ‘திடுதிடு’னு ஓடி வந்து சாப்பாட்டு குண்டான்லதான் தலைய விடுவேன். ‘இது ஒவ்வாது, இது வேண்டாம்’னு சாப்பாட்டுல எதையும் தள்ளி வெச்சதே கிடையாது. வயிறார சாப்பிடுவேன். நினைச்ச நேரம் துண்டை விரிச்சு படுத்தாக் கூட தூக்கம் அப்படி வரும்.
எங்க அப்பாகிட்ட இருந்து வந்ததுதான் இந்த கம்பீரமும், உடல் வாகும். அவர் எழுந்து நடந்தா ஊரே வெறிக்கப் பார்க்கும். தேக்கு உடம்பு. அது அப்படியே எனக்கும் வந்திடுச்சுனு எல்லாரும் சொல்லுவாக.

என் அம்மாவுக்கு உணர்வுகள் அதிகம். எதுக்கெடுத்தாலும் அழுதுடும். இளகுன மனசு. எனக்கும் அப்படிதான். கொஞ்சம் சோகம்னாலும் மனசு வலிக்கும். எங்க அம்மா பேச்சே ஒரு கதை சொல்றா போல இருக்கும். பேசும்போதே ஒரு படம் பார்க்கற மாதிரிதான் இருக்கும். ‘அவன் வந்தான் பாரு கைய வீசிக்கிட்டு…’

இந்தக் கதை சொல்லல்தான் எனக்குள்ளயும் சேர்ந்துக்கிச்சு. எங்க ஊர்ல அரசு பொது நூலகம் இருந்துச்சு. அங்க நிறைய கதைகள், நாவல்கள் புத்தகங்கள் இருக்கும். பள்ளி இல்லாத நாட்கள்ல அங்கயே கிடப்போம். என் கூட படிச்ச பயலுக எல்லாம் வார, மாத இதழ்கள், படக்கதைகள் பக்கம் போனாங்க. எனக்கு இலக்கியம், கதைப் புத்தகங்கள் வாசிக்கிறதுல ஆர்வம். ஏழாவது, எட்டாவது படிக்கிறப்ப கைல மார்க்ஸிய சித்தாந்த புத்தகங்கள் வந்துடுச்சு. இதெல்லாம் புரியுதானு சிநேகிதர்கள் கேட்பாங்க. அதையெல்லாம் புரிஞ்சிக்கிற திறன் அப்பவே எனக்கு இருந்துச்சு.
 
ரொம்ப இயல்பான கதைகள், உண்மைச் சம்பவங்கள் மட்டுமே எழுதினேன். அதனாலயே 1000, 500 கதைகள் எழுதினேன்னு என்னால சொல்ல முடியாது. ‘குற்றப் பரம்பரை’, ‘பட்டத்து யானை’, ‘அரியநாச்சியார்’... இப்படி சில புத்தகங்கள்தான்.

எழுதின எண்ணிக்கை குறைவுனாலும் பல உண்மைகளையும், முன்னோர்கள் வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கேன் என்கிற மனநிறைவு இருக்கு.  
எங்க ஊர்ல முளக்கட்டுத் திண்ணைல - மதுரைப்பக்கம் சாவடின்னு சொல்வாங்க; நகர்ப்புறங்கள்ல சத்திரம் - வயசானவங்க உட்கார்ந்து பழங்கதை பேசி பொழுதைக் கழிப்பாங்க- வழிப்போக்கர்கள் எல்லாம் உட்கார்ந்து ஓய்வு எடுப்பாங்க.அங்கதான் நிறைய உண்மைச் சம்பவங்களை கேட்டேன்; எடுத்தேன். புலவர் சண்முகவேலுப் பிள்ளை அங்க உட்கார்ந்து மகாபாரதம், இராமாயணத்தை எல்லாம் பாட்டா பாடுவார்... கதையா சொல்லுவார்.

அவர்கிட்ட நிறைய கேள்விகள் கேட்பேன். சிரிச்சுகிட்டே பதில் சொல்வார்.மலையாள இலக்கியங்கள், ஜெயகாந்தன், மாரிச்சாமி, செக்காவ், லெனின்... எழுதின புத்தகங்களை படிச்சேன். வாசிப்பு நிறைய யோசிக்க வெச்சது. 45 வயசு வரையிலும் நாம உண்மையாவே சித்தாந்தங்களை முழுசா படிச்சோமா... தெரியுமானு உள்ளூர கேள்வி இருந்துகிட்டே இருந்துச்சு. நம்ம மார்க்ஸிய தலைவர்களும் அப்படித்தான். எல்லாம் தெரியும்னு மண்டையா இருந்ததில்ல.

இந்த தலைப்பு வேணும்னா ‘நான்’ அப்படினு இருக்கலாம். ஆனா, இப்ப வரை ‘நான்’ங்கிற எண்ணம் எனக்கு இருந்ததேயில்ல. அதனாலதான் சினிமா வாழ்க்கைலயும் அதன் ஓட்டத்துலயே ஓட முடியுது. என் முதல் கதை ‘செம்மலர்’ பத்திரிகைல வந்தது. பத்திரிகைக்கு எப்படி கதை எழுதணும்னு கூட தெரியாது. ஒரு ரூல்ட் பேப்பர்ல முன் - பின் பக்கமா எழுதி அனுப்பியிருந்தேன்.

இளந்தாரி வயசு. மதுரைல இருந்த சிநேகிதன் ஒருத்தன் பூ வியாபாரி. அவன் கூடவே சுத்துறது. அவன்தான் எதாவது கேட்டு நம்மள கவிதை பாடச் சொல்லுவான். உடனே யோசிக்காம கவிதை சொல்லுவேன். நான் கதை எழுதி அனுப்பினது தெரிஞ்சிக்கிட்டு அவனே என்னைக் கூப்பிட்டான். ‘‘தீக்கதிர்’ ஆபீஸ் இங்கதான் இருக்கு. என்னதான் ஆச்சுனு கேட்போம்... வா’னு கூட்டிட்டு போனான்.

உள்ள நுழைஞ்சா ஒருத்தர் பனியன், வேஷ்டில வழுக்கைத் தலையோட செவப்பா கூர்மையான பார்வையோட உட்கார்ந்திருந்தார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் இருக்கற இடம் அது. அத்தனை பேரையும் புத்தகத்திலே படிச்சதோடு சரி. நுழையும்போதே ‘வாங்க தோழர்... என்ன வேணும் தோழர்... யாரைப் பார்க்கணும்?’னு கேட்டார். ‘ஒரு கதை அனுப்பினேன் ஐயா... என்ன ஆச்சுனு கேட்க வந்தேன்’னு சொன்னேன்.
‘அப்படியா! உங்க கதையை சொல்லுங்க...’னு ஆர்வமானார்.

இன்னைக்கு நான் மேடைப் பேச்சாளன். ஆனா, அன்னைக்கு வேர்த்துக் கொட்டி, உளறினேன். கடைசில, ‘உங்களைப் பார்த்தா பயமா இருக்கு. என்ன
எழுதினேன்னு சொல்லத் தெரியலை’னு சொன்னேன். ‘கதை பிரசுரிக்கத் தகுதியானதா இருந்தா கண்டிப்பா உங்களுக்குத் தகவல் வரும்’னு சொன்னார்.
கூடவே ‘நான் வி.பி.சிந்தன்’ அப்படின்னு அறிமுகப்படுத்திக்கிட்டார்!ஆடிப் போயிட்டேன். புத்தகத்துல படிச்ச மாபெரும் தியாகி. உயிரையே துச்சமா நினைச்சு சுதந்திரப் போராட்டத்துல ஈடுபட்ட தீரர்... அப்படிப்பட்டவரோட இம்புட்டு நேரம் பேசியிருக்கோமானு திகைச்சேன். அழுகையே வந்துடுச்சு.

அடுத்து ஒருத்தர் சாப்பிட்டு கையத் துடைச்சிக்கிட்டே மெதுவா உள்ள வந்தார். ‘இவர் கே.ரமணி... கோவை எம்எல்ஏ’ அப்படீன்னு சொன்னார்!
இந்த எளிமைதான் இயக்கத்து மேல எனக்கு ஈர்ப்பு வரக் காரணம். ஒரு வாரத்துல ‘உங்க கதை பிரசுரம் ஆகுது... ஒரு வரி கூட மாறாம’னு கார்டு வந்தது! உத்வேகத்தோட அடுத்தடுத்து கதைகள் அனுப்பினேன்.

என் கதைகள் எல்லாமே ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுடைய கதைகள்தான். எனக்கு ஆரம்பகாலத்துல அமைஞ்ச வேலையும் அப்படி. ஊர் ஊரா போற அஞ்சல் வேலை. அடுத்து ராணுவத்துல கொஞ்ச காலம். வடக்கே சில வருஷ வாழ்க்கை. அதனால நிறைய கதைகள் எனக்குக் கிடைச்சது. எல்லாமே உண்மை நிகழ்வுகளின் பின்னல்தான்.  

எங்க வீட்டை காவக்காரன் வீடுனு சொல்வாங்க. நான் பட்டாளம். என் தம்பி போலீஸ். இன்னொரு தம்பி கப்பல் படை. இதெல்லாம் விட எங்க அப்பாரு பஞ்சாயத்து தலைவர். பெரிய வக்கீல்கள் எல்லாம் எங்க அப்பா கிட்ட ஆலோசனை கேட்பாங்க. ஊர் தலக்கட்டுனு சொல்வாங்களே... அப்படிதான். அவர் நடையும் தோரணையும் அவ்வளவு கம்பீரமா இருக்கும். முத்துராமலிங்கத் தேவர் கூட சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்கிட்டவர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்.

பெருநாளி பஞ்சாயத்துல ஒரு வழக்கை முடிக்க முடியலைனா வேற எங்கயும் அதைத் தொடமாட்டாங்க. எங்க அப்பா வேலுசாமி தேவரைக் பத்தி பேசணும்னா ஒரு புத்தகம் வேணும். அம்மா லட்சுமியம்மாள். தாய்ல என்ன ஒசத்தி... குறைச்சல்..? தாய்னாலே எப்பவும் ஒசத்திதானே! போற வரவங்க, மலைக்காட்டு மக்கள் எல்லாரும் வழில எங்க வீட்லதான் தங்கிப் போவாங்க. அவுக கூட எங்க அம்மா உட்கார்ந்துகிட்டு வேண்டியதை செஞ்சு கொடுத்துகிட்டே கதை கேட்கும். ரெண்டு மூணு நாள் எல்லாம் தங்கிட்டுப் போவாக.

நாங்க ஏழு பேர். மூத்தவங்க ஜானகி, சௌந்தரம்னு ரெண்டு அக்கா. தன் பிள்ளைகளைக் கூட அப்படி பார்த்திருக்காது... அந்த அளவுக்கு எங்களை மூத்த அக்கா பார்த்துக்கும். மூணாவது நான். எனக்கு அடுத்து கமலம். அடுத்து தம்பிங்க சேது, சேகர், அண்ணாதுரை. சேது சென்னைல அஸிஸ்டெண்ட் கமிஷனரா இருந்தவரு. அவருடைய பெயர்தான் என் கதை நாயகர்களுக்கு அதிகமா இருக்கும்.

எங்க வழக்கத்துல மதினி மகளைக் கட்டுவோம். சொந்த அண்ணன் மகளைக் கட்ட மாட்டோம். அத்தை மகளுடைய மகளை பிறத்தியிலே கட்டியிருந்தா, அவுகளைக் கட்டுவோம். அத்தை மகளைத்தான் விட்டுட்டோம்... அவுக மகளையாவது கட்டுவோம்னு கட்டிக்கிறது.

அப்படித்தான் என் மனைவி காளியம்மாள். சொந்தத்துல வந்த பொண்ணு. நான் இன்னைக்கு ஓரளவாவது சொத்தை அழிக்காம என்னத்தையோ காடு கரைனு வெச்சிருக்கேன்னா அதுக்கு அவுகதான் காரணம். என் கைல காசு நிக்காது. கட்டா தூக்கிட்டு வந்து செலவழிச்சிட்டு திரும்பி பஸ்ஸுக்கு காசு இல்லாம போவேன். அதையெல்லாம் சரி செஞ்சு என்னை ஆளாக்கினவக காளியம்மாள்.

எங்களுக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. முத்தவன் ராஜுமோகன், சிவில் இன்ஜினியர். ரெண்டாவது பொண்ணு ராதிகா. மூணாவது நாகராஜன். பேரன் பேத்திகள் ஆறு பேர் சகிதமா நிறைவான வாழ்க்கை. எங்கயும் வயசைச் சொல்லாதனு என் மனைவி சொல்லியிருக்கா! அதனால அத மட்டும் கேட்காதீங்க.‘நான்’ வெறும் ‘நான்’ இல்ல. என்னை சினிமாவுக்கு கொண்டு வந்த விக்ரம் சுகுமாருக்கு எல்லாம் மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டிருக்கேன்.

சசிகுமார், இயக்குநர் அருண்குமார்...
இப்படி பலரும் என் முன்னேற்றத்துல பெரிய உதவி செய்திருக்காங்க.

என்னதான் எழுத்தாளனா இருந்தாலும் என்னைக்கும் இயக்குநர்கள் கதைக்குள்ள, வசனங்களுக்குள்ள தலையிட்டதே இல்ல. இலக்கியவாதிகளுக்கே உரிய பிரச்னை... எதுலயும் சரினு போகவே மாட்டாக, அந்த எண்ணம் கூடவே கூடாதுனு முடிவெடுத்ததாலதான் என்னால எழுத்து - சினிமானு ரெண்டுலயும் சரியா பயணிக்க முடியுது.

சின்ன வயசுல தெரு நாடகங்கள் இயக்கின, கதை எழுதிய, நடிச்ச அனுபவங்களும் உண்டு. அதனாலயே சினிமாவும் வருது போல.
நான் நல்ல நடிகனானு நீங்கதான் சொல்லணும். நேர்மையா இயல்பா போலித்தனம் இல்லாத வாழ்க்கை. அதனாலயே எனக்கு அமைஞ்ச நண்பர்களும் அப்படியே எதார்த்த மனிதர்களா இருக்காங்க!

ஷாலினி நியூட்டன்