விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய சூர்யா ஹீரோயின்!



ஹோம்லியாக சிறகடிக்கிறார் அபர்ணா பாலமுரளி. சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஹீரோயின். மலையாளத்தில் கொத்து கொத்தாக படங்கள் பண்ணியவர். தமிழில் ‘8 தோட்டாக்கள்’, ‘சர்வம் தாளமயம்’ என ரசனைமிகு படங்களில் மினுமினுத்தவர். இசைக்குடும்ப பின்னணி என்பதால், பாடகியாகவும் ஸ்கோர் செய்கிறார்.

பயோடேட்டா..?

பூர்வீகம் கேரளா. திருச்சூர்ல பிறந்தேன். அப்பா, அம்மாவோட கோவையிலும் இருந்திருக்கேன். அப்பா, பாலமுரளி இசையமைப்பாளர். அம்மா, பின்னணிப் பாடகி. ஆர்க்கிடெக்சர் படிச்சிருந்தாலும், கிளாசிக்கல் டான்ஸ்ல ஆர்வம் அதிகம். பரதம், மோகினியாட்டம், குச்சுப்புடி தெரியும்.
நடிப்புல ஆர்வம் இருந்ததில்ல. பகத் ஃபாசிலோட ‘மகேஷின்டே பிரதிகாரம்’ படத்துல நடிச்சபிறகு, நடிப்பு மேல ஒரு பிடிப்பு ஏற்பட்டுடுச்சு. தொடர்ந்து வினீத் சீனிவாசன் சார் படங்கள் அமைஞ்சது.

தமிழ்ல ‘8 தோட்டாக்கள்’ல அறிமுகமானேன். அதோட முதல் நாள் ஷூட் அனுபவத்தை மறக்கவே முடியாது. அதுக்கு முன்னாடி மலையாளத்துல நிறைய படங்கள்ல நடிச்சிருந்தாலும், தமிழ்ல முதல் படம் இல்லையா... யூனிட்ல அத்தனை பேரும் தமிழ் ஆட்கள். அப்ப எனக்கு தமிழ் ஓரளவு பேசத் தெரியும். ஆனாலும் புது டீம்னால கொஞ்சம் பதட்டம் இருந்துச்சு. பட், அடுத்த அரைமணி நேரத்துல அத்தனை பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க.
அடுத்து தமிழ்ல ராஜீவ்மேனன் சார் படம், ‘சர்வம் தாள மயம்’ பண்ணினேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்! நான் நடிச்ச படத்துக்கா ரஹ்மான் சார் மியூசிக்னு என்னையே கிள்ளிப் பார்த்துக்கிட்டேன்.

அதுல ஸிங் சவுண்ட்ல ஷூட் பண்ணினாங்க. எல்லா டயலாக்ஸையும் லைவ்வா பேசி நடிச்சேன். நிறைய கத்துக்கிட்டேன். தமிழ்ல மூணாவது படமா, சூர்யா சாரோடு ‘சூரரைப் போற்று’ அமைஞ்சது இன்னும் மகிழ்வா இருக்கு.

என்ன சொல்றார் சூர்யா..?

இன்னமும் நம்ப முடியாத ஆச்சரியத்துல இருக்கேன். அவரோட டெடிகேஷன் அண்ட் சின்ஸியாரிட்டி பிடிக்கும். ‘சூரரைப் போற்று’வில் நான் மதுரை ஸ்லாங் தமிழ் பேசி நடிச்சிருக்கேன். இதுக்காகவே நிறைய ஹோம் ஒர்க் பண்ணினேன். கலைராணி மேம்கிட்ட ஒரு ஒர்க் ஷாப்ல பங்கேற்றேன். மதுரையில் ஷூட் தொடங்கறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே போயிட்டேன். அங்க மதுரைத் தமிழ்ல பேசுறதுல எக்ஸ்பர்ட்டான சத்யாக்கா நிறையவே உதவினாங்க. டப்பிங்கையும் அஞ்சு நாள்ல பேசி முடிச்சுட்டேன்.

இத்தனையும் இவ்ளோ ஷார்ட் டைம்ல பண்ண காரணம், இயக்குநர் சுதா மேம்தான். முதல் ஷெட்யூல் முடியற வரை சூர்யா சாரோட சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுக்கல. ஏன்னா, அவர் கேரக்டரை உள்வாங்கி, அதில் கவனமா இருந்தார். அதனால அவரை டிஸ்டர்ப் பண்ணாம, முதல் ஷெட்யூலின் கடைசிநாள் அவர்கிட்ட ‘உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கலாமா’னு கேட்டேன்.

அப்படி எடுத்த போட்டோவைத்தான் இன்ஸ்டால ஷேர் பண்ணினேன். ஸ்பாட்ல மறக்கமுடியாத மொமண்ட்ஸ் நிறைய நடந்தது. ஒருமுறை ஷூட் பார்க்க கார்த்தி சாரும் வந்திருந்தார். நான் ஜோதிகா மேமின் ரசிகை. படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்துட்டு அவங்க ரொம்பவே பாராட்டினாங்க. அதுவும் சந்தோஷமா இருந்துச்சு.

விஜய்யின் பிறந்த நாளை நீங்க கொண்டாடினீங்களாமே?

ஆமா! விஜய் சார், சூர்யா சார் படங்களுக்கு இங்க எப்படி வரவேற்பு கிடைக்குதோ அதேமாதிரி கேரளாவுலயும் கொண்டாடுவாங்க. மோகன்லால் சார், மம்மூட்டி சார் படங்களுக்கு சமமா, இவங்களோட படங்களும் ரிலீஸ் ஆகறப்ப செலிபிரேட் பண்ணுவாங்க. சூர்யா சாரோட ‘சில்லுனு ஒரு காதல்’, ‘காக்க காக்க’ படங்கள் என் ஃபேவரிட். விஜய் சாரின் டான்ஸ் ரொம்பப் பிடிக்கும்.

கேரளாவுல உள்ள விஜய் சாரின் ஃபேன்ஸ் அசோஸியேஷன்ல ஒரு காலத்துல நானும் இருந்திருக்கேன்! அந்த டைம்ல அவர் ரசிகர்களோடு சேர்ந்து ஒருமுறை விஜய் சாரின் பர்த்டேவை ஆதரவற்றோா் அமைப்போடு சேர்ந்து கொண்டாடியிருக்கேன். கேரளாவுல ‘சர்கார்’ ரிலீஸ் ஆன அன்று ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ டிக்கெட் கிடைச்சது! ஸ்வீட் மொமண்ட்ஸ்!

மை.பாரதிராஜா