எங்கே செல்லும் இந்தப் பாதை... OMR இப்போது...



சென்னையில் பரபரப்பாக இருக்கும் ஒரு சாலை ஓஎம்ஆர். தமிழகத்தின் ஒட்டுமொத்த ஐடி நிறுவனங்களும், பிபிஓ கம்பெனிகளும் வீற்றிருக்கும் சாலை என்பதால் பரபரப்புக்கு எப்போதும் குறைவிருக்காது.
அடையாறின் மத்திய கைலாஷ் பகுதியில் தொடங்கி சிறுசேரி வரை சுமார் 22 கிமீ தொலைவிற்கு இந்த ஐடி மற்றும் ஐடி சார்ந்த நிறுவனங்களின் பாதை நீண்டு கிடக்கிறது. அதனாலேயே சென்னை நகரம், ‘ஐடி எக்ஸ்பிரஸ் வே’ என்றழைக்கப்படுகிறது.
ஆனால், கொரோனா தொற்று இந்த ஐடி எக்ஸ்பிரஸ் வே-யினை இன்று களையிழக்கச் செய்துவிட்டது. சுமார் மூன்று லட்சம் ஐடி ஊழியர்கள் இந்தப் பகுதியில் பணியாற்றுகின்றனர்.

இப்போது இவர்கள் அனைவருமே வீட்டிலிருந்து வேலை செய்ய பணிக்கப்பட்டுள்ளதால், ஹோட்டல் நடத்தியவர்களும், கார், வேன், பஸ் டிரைவர்களும், டீக்கடைக்காரர்களும், தூய்மைப் பணியாளர்களும் வருமானமின்றி தவிக்கின்றனர். இதனால், ஐடி நிறுவனங்களைச் சார்ந்து ேநரடியாகவும், மறைமுகமாகவும் தொழில் செய்தவர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாகி இருக்கிறது. இதற்கு வேதனையான ஓர் எடுத்துக்காட்டு ஆல்பர்ட்-அமுதா தம்பதியினர்.

தரமணியிலுள்ள ஒரு ஐடி பூங்கா அருகே கடந்த எட்டாண்டுகளாக ஹோட்டல் நடத்தி வந்தவர்கள், இன்று வண்டியில் துணி வியாபாரம் செய்து பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘‘இங்குள்ள ஐடி கம்பெனிகளை நம்பி சாப்பாட்டுக் கடை நடத்திட்டு வந்தோம்.

வண்டிக்கடைதான். செலவு எல்லாம் போக தினமும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதனால கடந்த ஜனவரியில, மாசம் 30 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு சின்னதா ஒரு கடையை பிடிச்சோம். ரெண்டு மாசம்தான் நடத்தினோம். அதுக்குள்ள கொரோனா வந்து வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுடுச்சு.
கடந்த நாலு மாசமா ஒரு வேலையும் செய்யல. என்னுடைய செயினை அடகு வச்சு குடும்பத்தை ஓட்டினோம். இந்த மாசம் கம்பெனிகள் திறந்திடுவாங்கனு நினைச்சா டிசம்பர் வரை இப்படிதான் இருக்கும்னு சொல்றாங்க.

கடைக்கு வாடகை கொடுக்கணும். குடும்பத்தை நடத்தணும். அதான் ஷார்ட்ஸ், டி-ஷர்ட்ஸ்னு பாரீஸ்ல வாங்கிட்டு வந்து இந்தத் துணிக்கடையை நேத்துல இருந்து போட்டிருக்கேன். ஒருநாளைக்கு இருநூறு ரூபாய் கிடைக்குது. அதவச்சி வாழ்க்கை ஓட்டுறோம்...’’ என வருத்தமாகச் சொல்கின்றனர் இருவரும்.

இன்னொருவர் ஐடி பூங்காவின் எதிரில் டீக்கடை வைத்திருக்கும் ஜெயராஜ், ஒரு டீ மாஸ்டர் அல்ல. நான்கு மாதங்களுக்கு முன்புவரை அவர் ஒரு பிஸியான கார் டிரைவர். கொரோனா அவரை டீ மாஸ்டராக்கி இருக்கிறது.

‘‘என் மாமாவுடன் சேர்ந்து ஓலா, ஊபர் ஆஃபர்களுக்குக் கார் டிரைவரா வேலை பார்த்திட்டு இருந்தேன். நல்லா சம்பாதிச்சேன். மாமா கொரோனாவுக்கு பயந்து ஊருக்குப் போயிட்டார். இன்னும் திரும்பல. அதான் வருமானத்துக்காக இந்த டீக்கடையைப் போட்டேன்.

இது என்னுடைய நண்பரின் ஜூஸ் கடை. அவர்தான் முன்னாடி டீக்கடை வச்சிக்கோனு இடம் கொடுத்தார். இப்ப தினமும் 200 ரூபாய் கிடைக்குது. சமாளிக்கிறேன். இதுக்கு முன்னாடி வீட்டுல எனக்காக டீ போட்டிருக்கேன். ஆனா, கஸ்டமருக்காக டீ போடுவது இதுதான் முதல் தடவை. எப்படி சார் இருக்கு? நல்லா போட்டிருக்கேனா...?’’ வேதனைகளை மறந்து டீ ஆத்தித் தருகிறார் அவர்.  

அவர் கடையின் எதிரில் நின்றிருந்த கார் டிரைவர்கள், ‘‘என்னத்த சார் சொல்றது. இன்னைக்குதான் வேலைக்கு வந்திருக்கோம். இந்தப் பார்க்குல மூணு கம்பெனி திறந்திருக்கிறதா சொன்னாங்க. அதான் வந்தோம். கடந்த அஞ்சு மாசமா வாழ்க்கையே போயிடுச்சு. நான் சொந்தமா கார் வச்சிருக்கேன். மாசம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிச்சிட்டு இருந்தேன். இதுல வண்டிக்கான லோன் போக கைக்கு பனிரெண்டு ஆயிரம் ரூபாய் கிடைச்சது. இப்ப அஞ்சு மாசமா சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுட்டேன். இதுல லோனை எப்படி கட்டமுடியும்?

நிறுவனங்களுக்குக் கீழ கார் டிரைவரா இருக்கிறவங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சம்பளம் கொடுத்ததால தப்பிச்சிட்டாங்க. இல்லைனா, குடும்பத்தை ஓட்ட முடியாம திணறியிருப்பாங்க. இங்குள்ள ஐடி நிறுவனங்கள் திறந்து எல்லோரும் வேலைக்கு வந்தாதான் எங்களுக்கு வாழ்க்கையே...’’ என்றனர் வருத்தமாக.

இவையெல்லாம ஒருசோறு பதம்தான். இவர்களைப் போல ஏராளமானவர்கள் இந்த ஓஎம்ஆர் பகுதியில் வாழ்க்கை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்   இதுகுறித்து ஐடி துறையில் பதினைந்து ஆண்டுகளாகப் பணிபுரியும் நண்பர் ஒருவர் இன்னும் விளக்கமாகப் பேசினார்.
‘‘ஓஎம்ஆர் தடத்துல மட்டும் சின்னதும் பெரிசுமா ஐடி மற்றும் ஐடி சார்ந்த நிறுவனங்கள் குறைஞ்சது 5 ஆயிரம் இருக்கும். சிறுசேரி ஐடி பார்க் ஆசியாவுல பெருசுனு சொல்லப்படுது. இங்க பல முன்னணி நிறுவனங்கள் இருக்குது. இதுல ஒவ்வொரு நிறுவனத்துலயும் 20 ஆயிரத்துக்கும் ேமற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுறாங்க.

இவங்க எல்லோரும் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால இவங்களுக்கு வேலை இருக்கும். ஆனா, இவங்கள சார்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியிலிருந்த பலரின் வாழ்க்கைதான் இன்னைக்கு பரிதாபத்திற்குரியது. முதல்ல டிரைவர்கள். சிறுசேரி பார்க்குல மட்டும் குறைஞ்சது ஆயிரம் வண்டிகளாவது ஓடும். ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கிறதால இவங்களுக்கு வேலையில்ல. ஐடி நிறுவனங்களும், தனியார் பஸ் கம்பெனிகளுக்கு இந்த டைம்ல பணம் கொடுக்காது.

அடுத்து, உள்ள இருக்குற கேண்டீன். ஒவ்வொரு நிறுவனமும் 50 கேண்டீன்கள் வரை வச்சிருக்கு. ஒவ்வொரு கடையிலும் ரெண்டு பேர் வேலை பார்த்திட்டு இருப்பாங்க. அவங்க எல்லாம் பெரும்பாலும் பெண்கள். ஒரு நிறுவனத்துக்குள்ள மட்டும் நூறு பேர். குறைஞ்சது நானூறு பேர் கேண்டீன் வேலையில இருப்பாங்க.  

அடுத்து இந்த நிறுவனத்தை கிளீன் பண்றது, பராமரிக்கிறதுனு 200 பேர் வரை இருப்பாங்க. அதுமாதிரி சிறுசேரி ஏரியாக்குள்ள 1500 பேர் ரூ.6 ஆயிரம், ரூ.7 ஆயிரம்னு மாச சம்பளத்துல வேலை பார்த்திட்டு இருக்காங்க. இவங்க வாழ்க்கையும் கேள்விக்குறியா மாறிடுச்சு.  அப்புறம், ஷேர் ஆட்டோ மட்டும் எஸ்ஆர்பி டூல்ஸ் பஸ் ஸ்டாப்ல இருந்து சிறுசேரி வரை நிறைய ஓடுது. இவங்க ஒருநாளுக்கு 2 ஆயிரம் வரை சம்பாதிச்சிட்டு இருந்தாங்க. அவங்க வாழ்க்கையும் கொரோனாவால போயிடுச்சு.

பிறகு, ஓஎம்ஆர் பகுதியில குறைஞ்சது 200 அபார்ட்மெண்ட்கள் இருக்கும். ஒவ்வொரு அபார்ட்மெண்ட்லயும் நானூறு, ஐநூறு வீடுகள். இதுல குறைஞ்சது 200 பேர் வீட்டு வேலைக்கு வருவாங்க. சமைக்க, துவைக்கனு 5 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிச்சாங்க. எல்லா அபார்ட்மெண்ட்டும் சேர்த்தா ஆயிரக்கணக்குல இருப்பாங்க. கொரோனாவால இவங்கள வீட்டுக்காரங்க வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க. சில வீட்டுக்காரங்க கஷ்டத்தைப் பார்த்து ரெண்டு மாசம் சம்பளம் கொடுத்தாங்க. அப்புறம், அவங்களும் நிறுத்திட்டாங்க.

தவிர, அபார்ட்மெண்ட்ல உள்ள பலரும் ஊருக்குப் போயிட்டாங்க. இவங்க வாழ்க்கையும் ெராம்ப பாதிக்கப்பட்டிருக்கு. அப்புறம், ஐடியில வேலை பார்க்குற நிறைய பேர் பிஜி ஹாஸ்டல்ல தங்குறவங்க. இவங்க எல்லோருமே சொந்த ஊருக்குப் போயிட்டதால ஹாஸ்டல் நடத்தினவங்களுக்கு பெரிய பாதிப்பு.

பிஜி ஹாஸ்டலைப் பொறுத்தவரை ஒரு மாசம் அட்வான்ஸ்தான் வாங்குவாங்க. ஊருக்குப் போனவங்க ஒரு கட்டத்துல காலி பண்றேன்னு அட்வான்ஸை கழிச்சிட்டாங்க. இதனால, ரன் பண்ண முடியாம மூடவேண்டிய நிலை. இந்த ஹாஸ்டல் நடத்தின பலரும் ஹாஸ்டல் கட்ட லோன் எடுத்தவங்க. அல்லது ஒத்திக்கு எடுத்திருப்பாங்க. இப்ப அவங்களும் சிரமப்பட்டுட்டு இருக்காங்க.

ஆனா, ஐடி கம்பெனிகளுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது வரப்பிரசாதம்தான். ஏன்னா, போன வருஷம் பத்திரிகையில வந்த செய்தி இது.
டிசிஎஸ் நிறுவனம் 2025ல் ஊழியர்கள் ஆபீஸுக்கு வராமல் வீட்டுல இருந்து வேலை பார்க்கும் திட்டம் வச்சிருக்கிறதா வந்தது. ஏன்னா, இன்னைக்கு டிசிஎஸ் நிறுவனத்துல இந்தியா முழுவதும் ஐந்து லட்சம் பேர் இருக்காங்க. இவங்க ஆபீஸுக்கு வந்தால் இன்டர்நெட், தண்ணீர், மின்சாரம், போன், போக்குவரத்துனு எல்லாத்தையும் கணக்கிட்டால் ஒரு மாசம் மட்டும் ரூ.500 கோடியில் இருந்து 600 கோடி ரூபாய் வரை மிச்சமாவதாகச் சொல்றாங்க.

இது பல ப்ராெஜக்ட்டுக்கு சமம். அதனால, ஊழியர்களுக்கு லேப்டாப் கொடுத்து வீட்டுல வேலை செய்ற திட்டத்தை வச்சிருந்தாங்க. 25 சதவீதம் பேர் ஆபீஸுக்கு வந்தா போதும். இந்த கொரோனா அதுக்கான முன்னோட்டத்தை அமைச்சிருக்குனு சொல்லலாம்.

இந்தச் செலவுகள் இல்லாததால் இந்த நாலு மாசத்துல ஆயிரம் முதல் 2 ஆயிரம் கோடி லாபம் கிடைச்சிருக்கும். இதுமாதிரி மத்த நிறுவனங்களும் நினைக்கிறாங்க. அதனால, கொரோனாவுக்குப் பிறகான ஐடி சார்ந்த பணிகள் எப்படி இருக்கும்னு இப்ப உறுதியா சொல்ல முடியாது.

ஆனா, ஐடி ஊழியர்கள் தப்பிச்சுடுவாங்க... இவங்களை நம்பி பிசினஸ் ஆரம்பிச்சு வாழ்ந்துகிட்டிருக்கற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களோடநிலைதான் ரொம்பவே பரிதாபம்...’’ என்கிறார் அவர்.  

3 ஆயிரம் வண்டிகள்!

‘‘ஓஎம்ஆர் பகுதியில மட்டும் வேன், கார், பஸ்னு 3 ஆயிரம் வண்டிகள் ஓடுது. ஒரு வண்டிக்குப் பின்னால் குறைஞ்சது 5 பேர் வேலை செய்றாங்க. அந்த அஞ்சு பேருக்குப் பின்னாடி இன்னொரு அஞ்சு ேபர் ரிப்பேர் உள்ளிட்ட வேலைகள செய்றாங்க. ஆக 30 ஆயிரம் பேர் இந்தப் பணிகள்ல இருக்காங்க.
இது தவிர, இதனுடன் சேர்ந்த உப தொழில்கள்ல நிறைய பேர் இருக்காங்க. இவங்க பின்னாடி குடும்பங்கள் இருக்கு. இந்தக் கொரோனா லாக்டவுன் குறைஞ்சது இரண்டரை லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிச்சிருக்கு.

இப்ப வொர்க் ஃப்ரம் ஹோம்னு வந்ததால ஊழியர்கள் யாரும் வேலைக்கு வர்றதில்ல. ஐடி நிறுவனங்களும் Force Majeure Clauseங்கிற ஒரு சட்டப்படி வேலை இல்லனா சம்பளம் இல்லனு முடிச்சிட்டாங்க. ஏப்ரல்ல இருந்து வண்டிகளுக்கு வாடகை எதுவும் கிடையாதுனு சொல்லிட்டாங்க. இந்த ஓஎம்ஆர் ஐடி காரிடார்ல மட்டும் 3 ஆயிரம் வண்டிகளுக்கு மாசத்துக்கு சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் இழப்புனு சொல்லலாம்.

அரசு, ஜிஎஸ்டி மூலம் ரூ.12 கோடி இழந்திருக்கு. எங்க டிராவல்ஸ்ல மட்டும் 250 வண்டிகள் பல்வேறு நிறுவனங்களுக்கு ஓடிட்டு இருந்துச்சு. 250 டிரைவர்கள், நூறு ஸ்பேர் டிரைவர்கள், மெக்கானிக் எல்லாம் சேர்த்து 400 முதல் 500 பேர் வேலை பார்த்திட்டு இருந்தாங்க.

இதுல டிரைவர்களுக்கு சம்பளம் வங்கியில் இருந்து கடன் வாங்கித்தான் கொடுத்திட்டு வர்றோம். அரசுகிட்ட கோரிக்கைகள் வச்சிருக்கோம்.
சீக்கிரம் உதவிகள் கிடைக்கும்னு நம்புறோம்...’’ என்கிறார் ‘பர்வீன் டிராவல்ஸ்’ உரிமையாளரான அப்சல்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்