நிருபரை அலர்ட் செய்த பார்வையாளர்!



அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இயங்கிவந்த ஒரு செய்தி சேனலில் ஓய்வில்லாமல் கொரோனா சார்ந்த செய்திகளை பார்வையாளர்களுக்கு வழங்கிக்கொண்டே இருந்தார் விக்டோரியா ப்ரைஸ்.

அதனால் அந்த சேனலில் பெரும்பாலான நேரங்களில் அவரது முகமே ஆக்ரமித்திருக்கும். அவரது கழுத்துப் பகுதியில் ஒரு கட்டி இருந்ததைக் கவனித்த பார்வையாளர் ஒருவர் ‘‘எனக்கும் இதே மாதிரி கட்டி இருந்தது. அது கேன்சராக மாறிவிட்டது.

மருத்துவரைப் பாருங்கள்...’’ என்று விக்டோரியாவுக்கு இமெயில் அனுப்பியிருந்தார்.உடனே மருத்துவரைப் பார்த்து சோதனை செய்த விக்டோரியாவுக்கு தைராய்டு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.
இந்தச் சம்பவத்தை விக்டோரியா டுவிட்டரில் பதிவிட... வைரலாகிவிட்டது.  

‘‘ஒருவேளை அந்தப் பார்வையாளர் மெயில் அனுப்பவில்லை என்றால் கழுத்தில் இருக்கும் கட்டியைக் கவனித்திருக்கவே மாட்டேன். கேன்சர் என் உடல் முழுவதும் பரவியிருக்கும். எதையும் எதிர்பார்க்காமல் அவர் செய்த உதவிக்கு வெறும் நன்றி மட்டும் போதாது...’’ என்று நெகிழ்ந்திருக்கிறார் விக்டோரியா.  

த.சக்திவேல்