இனி ஆதாரங்கள் இல்லாமல் போலீஸ் கைது செய்யும்..



கைதானவர்கள்தான் தாங்கள் நிரபராதி என நிரூபிக்க வேண்டும்!

கசிந்திருக்கும் தகவல்தான் இந்திய மக்களை உறைய வைத்திருக்கிறது.ஆம். IPC, CrPc ஆகிய கிரிமினல் சட்டங்களில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வருதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது ‘குற்ற விசாரணை நடைமுறை திருத்தச் சட்டம் (Criminal Procedure Amendment Act)’.
இப்போதுள்ள முறையில் கிரிமினல் சட்டங்களை ‘சாதாரண சட்டங்கள்’ (Ordinary laws), ‘சிறப்புச் சட்டங்கள்’ (Extraordinary Laws) என்று இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். அதில் CrPc என்பது சாதாரண சட்டம் என்றும்; UAPA, NSA… மாதிரி யான சட்டங்கள் ‘சிறப்புச் சட்டங்கள்’ (Extraordinary Laws) என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

எளிதில் பிணையில் வெளிவருவது முதலியன ‘சிறப்புச் சட்டங்’களில் சாத்தியமில்லை. இப்படியான இந்தக் கொடிய சட்டக் கூறுகளை (Extraordinary Provisions) சாதாரண சட்டங்களுக்குள்ளேயே கொண்டு வருவது தான் இன்றைய மத்திய அரசின் திட்டம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.  
எடுத்துக்காட்டாக, வழக்கமான நெறிமுறையில் காவல்துறையால் ஒருவர் மேல் சுமத்தப்படும் குற்றத்தை நிரூபிக்க வேண்டி யது, குற்றத்தைச் சுமத்தும் காவல்துறையின் (prosecution) கடமை.

ஒருவேளை மேலே குறிப்பிட்ட திருத்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்தால், உங்கள் மேல் எந்தக் குற்றத்தை வேண்டுமானாலும் prosecution சுமத்தலாம். குற்றம் சுமத்தப்பட்டவர்தான் (accused), தாங்கள் அக்குற்றத்தைச் செய்யவில்லை என நிறுவவேண்டும். தவறினால், தண்டையை அனுபவிக்க வேண்டும். குற்றம் சாட்டியவர்களின் கடமை குற்றம் சாட்டியதுடன் முடிந்தது!

இதுபோக நீதிபதி என்றால் இப்போது அவர் Accusedக்கும் Prosecutionக்கும் இடையில் நடு நிலையாக இருந்து தீர்ப்பு சொல்கிறார் அல்லவா..? புதிய திருத்தத்தின்படி அவரே ஒரு விசாரணையாளரைப் போல, அதாவது போலீசைப்போல செயல்பட (Iinquisitorial Role) வாய்ப்புண்டு என்கிறார்கள்!
இந்தத் தகவல்கள் உண்மையா... சட்டத்தில் இது போன்ற திருத்தங்கள் வந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும்... என்ற கேள்விகளோடு வழக்கறிஞர் கிருபா முனுசாமியை அணுகினோம்.   

‘‘கிரிமினல் சட்டத்தில் நீண்ட காலமாகவே திருத்தங்கள் கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பேச்சு, கருத்து உரிமைகளைத் தடுப்பதற்கு நேரடியாக அரசு அமைப்பில் இடமில்லை. எனவே யாரெல்லாம் மாற்றுக் கருத்துகளை முன்வைக்கிறார்களோ, அதை வரவிடாமல் தடுப்பதற்காக, இந்த மாதிரி யான கிரிமினல் சட்டங்களில் நிறைய குற்றங்களைச் சேர்த்து அதனை வலிமைப்படுத்தி
கருத்துரிமையைப் பறிக்கும் வேலை ஒரு பக்கம் போய்க் கொண்டுதான் இருக்கிறது.

இதில் அவதூறு, சிவில் வழக்குகளையும் கிரிமினலாக மாற்றி ஒன்றாக்கிவிட்டால் தேச பாதுகாப்புச் சட்டமாக வந்து, கடுமையான தண்டனைக் குற்றங்களாக மாறிவிடும். ‘பிணை என்பது விதி. சிறை என்பது விதிவிலக்கு’ என்று கிருஷ்ண ஐயர் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பார். சமீபத்தில் முக
நூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக நிலைத்தகவல் பதித்தார் என்ற புகாரின் பெயரில் கிசோர் கே.சாமி என்பவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஊடகங்கள் அவர் கைது செய்யப்பட்டதாக செய்திகளை வெளியிட்டன.

ஆனால், கைதான அவர் உடனே பிணையில் அனுப்பப்பட்டார்.இவரைப் போலவே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் அனைவரும் கைது செய்யப்பட்டு உடனே விடுவிக்கப்படுகிறார்களா?இல்லை என்பதுதான் பதில். நபர்களின் அரசியல் செல்வாக்குக்கு ஏற்ப சிறையில் அடைக்கப்படுவதும் பிணையில் வெளியே வருவதும் நிகழ்கிறது.

இந்திய சிறைகளில் தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லீம்கள் என்று கிட்டத்தட்ட 58%க்கு மேல் உள்ளனர். இதில் பாதிப் பேர் வழக்கு விசாரணைக்கும் வராமல், பிணையும் கொடுக்கப்படாமல் உள்ளேயே இருப்பவர்கள். விசாரணை செய்து தண்டனை கொடுத்தால்தானே அவர்களுக்கான தண்டனைக் காலம், எதிர்காலம் என்னவென்று தெரியும்?

சட்ட உதவி என்பது அடிப்படை உரிமை. அது யாருக்கு மறுக்கப்படுகிறது என்பதை உன்னிப்பாக கவனித்தால்தான் உண்மை நிலவரம் புரியும். ஒரு சாராருக்கு எதிராக குற்றவியல் அமைப்புகளை மாற்றுவது உட்பட பல சிக்கல்கள் இங்குண்டு...” என்று கூறும் கிருபா, விரைவு நீதி வழங்குதலில் உள்ள சிக்கல்களையும் விளக்கினார்.

“விரைவு நீதி வழங்குதல் என்ற நோக்கில் கிரிமினல் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்தால், வெறும் IPCயோடு மட்டும் நிறுத்த முடியாது. குற்ற
வியல் நடைமுறை, சாட்சிய சட்டங்களிலும் திருத்தம் வரும். அப்படி வரும்போது ‘ஒருவரை கைது செய்கையில் சாட்சியங்கள் தேவையில்லை, காவலர்கள் அறிக்கையே போதும்’ என்று திருத்தம் வரும்.

இப்போது தேசிய பாதுகாப்பு சட்டம் அப்படித்தான் இருக்கிறது. அச்சட்டத்தில் கடுமையாக என்னவெல்லாம் இருக்கிறதோ அதெல்லாம் இனி சின்னச் சின்ன குற்றங்களுக்கும் பொருத்தப்படும்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தரப்பை - விளக்கத்தை - முன்வைப்பதற்குக் கூட வாய்ப்புகள் இல்லாமல் போகும். நிர்பயா வழக்குக்குப் பின் விரைவு நீதி வழங்குதல் முன்னெடுக்கப்படுகிறது. அவ்வாறு வருகையில் 18 வயதிற்குக் கீழ் உள்ளவரை தூக்கிலிட ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இது சர்வதேச அளவில் குழந்தைகளுக்கு எதிரான ஒரு சட்டம்.

அடிப்படையில் பெண் அடிமைத்தனமான, பெண்களுக்கு எதிரான ஒரு கலாசாரத்தை வீட்டுக்கு வீடு வளர்த்துவிட்டு குழந்தைகளை மட்டும் குற்றம் செய்ததாகச் சொல்ல முடியாது. நீதி என்பது, நன்கு விசாரித்து போதுமான வாய்ப்பினை இரு தரப்பிற்கும் கொடுத்து தீர்ப்பு வழங்கக் கூடிய அம்சமாக
நம்மிடம் இருக்கிறது.

அதெல்லாம் இந்த சட்டத் திருத்தத்தில் போய்விடும். ஒரு குற்றவாளி முஸ்லீம் என்று தெரிந்த பின் அவர் தீவிரவாதியாக
சித்தரிக்கப்படும் இந்நாட்டில், அவரது உரிமைகளை நீதிமன்றத்தில் நிலை நாட்ட இருந்த வாய்ப்புகளும் பறிக்கப்படும்.

அரசு அமைப்பு என்பதும், அதில் வழங்கக்கூடிய அடிப்படை உரிமைகளும் அப்படியே இருக்கும். வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா என்பது ஜனநாயக, சமத்துவமான, மதச்சார்பற்ற நாடு என்ற பிம்பத்தைக் கொடுக்கும். ஆனால், இந்தப் பக்கம் UAPA, NSA… போன்ற சட்டங்கள் வந்து கொண்டிருக்கும்.

சாதாரண மக்கள் முதல் மாற்றுக் கருத்து வைக்கக் கூடியவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள்… போன்றோர்களின் வாயை அடைப்பதற்கான ஓர் ஆயுதமாக இது பயன்படுத்தப்படும்...” என்று கூறும் கிருபா, குற்றங்களைக் களைவதற்கான வழிமுறைகளைக் கூறினார்.

‘‘இன்றுள்ள சட்டத்தினையே நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்ற அடிப்படைக் கேள்விக்கு விடையில்லாமல் இருக்கும்போது, புதிய சட்டத் திருத்தங்கள் யாருக்காக? சட்டங்களை எவ்வளவு கடுமையானதாக மாற்றினாலும் அது யாருக்காக இயற்றப்படுகிறது... எந்தத் தரப்புக்கு சாதகமாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இங்கு நடக்கும் குற்றங்கள் எல்லாமே சமூகத்தின் வெளிப்பாடே. சமூகத்தையும், தனி நபர் குற்றங்களையும் பிரித்துப் பார்த்தால் அதற்கு தீர்வு கிடைக்காது.

சட்டத்தில் அடிப்படை சீர்திருத்தங்கள் அவசியம். காவல்துறை மற்றும் சிறைகளில் மறுசீரமைப்பு என்பது இந்தியாவில் பல காலங்களாக நடக்கவே இல்லை. ஒருவரது குற்றம் என்ன... அதை சீர்திருத்த என்ன வழி... என்ற கோணத்தில் யாரும் இப்பிரச்னையை அணுகவில்லை.  

அதேபோல் இங்கு சாதாரண குற்றவாளியையும், உளவியல் சார்ந்த குற்றவாளியையும் ஒன்றாகவே பார்க்கிறோம். அடிப்படையில் நம் குற்றவியல் அமைப்பு தண்டனைக்குரியதாக இல்லாமல், சீர்திருத்த அமைப்பாக மாறும்போது இன்றுள்ள சட்டங்களை நல்ல முறையில் செழுமைப்படுத்தலாம்... செயல்படுத்தலாம்...” அழுத்தமாகச் சொல்கிறார் வழக்கறிஞர் கிருபா முனுசாமி.

அன்னம் அரசு