நாசா அங்கீகரித்த ஈரோடு குட்டி விஞ்ஞானி!



‘‘என் பையன் படிக்காம எப்பவும் மொபைல்ல விளையாடிட்டிருக்கான்...’’‘‘ஆன்லைன் க்ளாஸ்னாலே அழுது வடியறான்...’’- இப்படி எங்கும் பெற்றோர்களின் புலம்பல்கள். ஆனால், ஈரோடு புஞ்சை நகரைச் சேர்ந்த சிவ பிரியன் விண்ணில் இரண்டு புதிய கோள்களைக் கண்டறிந்து நாசாவின் பாராட்டுகளையும், சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறார்.

‘‘விபரம் தெரிஞ்சதுல இருந்தே அஸ்டிரானமி (Astronomy - வானியல்) மேல ஆர்வம் அதிகம். கோள்கள், சூரிய குடும்பம், இப்படி டெலஸ்கோப் வெச்சு ஆராய்ச்சி செய்திட்டே இருப்பேன்...’’ உற்சாகத்துடன் பேச ஆரம்பிக்கிறார் குட்டி விஞ்ஞானியான சிவபிரியன்.‘‘ஏற்கனவே ஸ்பேஸ்போர்ட் (Spaceport India) என்கிற வானியல் ஆய்வு மையத்துல நானும் ஒரு மாணவர். உங்களுக்கும் ஆர்வம் இருந்தா நீங்களும் இதன் தளத்துல போய் பதிவு செய்துக்கலாம். நானும் அப்படி பதிவு செஞ்சு ஒரு வருஷமா ஆஸ்டிரோமெட்ரிக் சாஃப்ட்வேர் மூலமா கிடைக்கற வானியல் போட்டோக்கள், வீடியோ பதிவுகளை வைச்சு ஆராய்ச்சி செய்தேன்.

இந்த ஆஸ்டிரோமெட்ரிக் சாஃப்ட்வேரை ஹவாய் தீவுகள்ல இருக்கற ஹலேகலா (Haleakala Maui Telescope) டெலஸ்கோப் கூட இணைச்சிருப்பாங்க. அந்த டெலஸ்கோப் கொடுக்கற போட்டோக்கள், வீடியோக்கள் மூலமா ஏதாவது துகள்கள் நகருதா, அதன் செயல்பாடுகள் என்ன என்பதை கண்காணிப்பதுதான் எங்க வேலை.

இந்த விண்ணியல் செயல்பாடுகளைக் கண்காணிக்க நிறைய தனியார் ஆஸ்டிரோ நிறுவனங்கள் உலகம் முழுக்க இருக்கு. அதுல ஒண்ணுதான் ஸ்பேஸ்போர்ட் இந்தியா. கடந்த ஒரு வருஷத்துல இந்த சாஃப்ட்வேர் கொடுத்த படத்தை ஆராய்ச்சி செய்து ரிப்போர்ட் கொடுக்கணும். அப்படியான ஆய்வுகள்லதான் நான் வியாழன் கோளுக்கு பக்கத்துல ரெண்டு சின்னகோள்கள் இருக்கறதைக் கண்டுபிடிச்சு அதனுடைய அசைவுகள், நகர்வுகளை ஆராய்ந்து ரிப்போர்ட் கொடுத்தேன்.

ஸ்பேஸ்போர்ட் இந்தியா ஷமீம் சச்தேவ் சார் மூலமா நாசா மையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவங்களும் அங்கீகாரம் கொடுத்தாங்க. நான் கண்டுபிடிச்ச ரெண்டு குறுங்கோள்களுக்கும் ‘2019 SQ 25’, ‘2019 SH 42’னு தற்காலிகமா பெயர் வெச்சிருக்காங்க...’’ என்னும் சிவ பிரியன் ஒன்பதாம் வகுப்பு மாணவர்!  

‘‘8ம் வகுப்பு வரை ஈரோடு ஸ்பிரிங்டேல் ஸ்கூல்ல படிச்சேன். அப்பா ராஜ்குமார், அம்மா சுதா. இப்ப 9ம் வகுப்பு ஈரோடு, புஞ்சை புளியம்பட்டி  நவபாரத் இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கிறேன். இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு நாசா நடத்தின ‘நாசா சைன்டிஸ்ட் ஃபார் தி டே’ கட்டுரைப் போட்டில கலந்துக்கிட்டேன். அதுலயும் ஜெயிச்சு ஸ்பேஸ்போர்ட் இந்தியா மற்றும் ஐஏஎஸ்இ (IASE- International Association of Space Entrepreneurs) சேர்ந்து நடத்துற இன்டெர்ன்ஷிப்ல கலந்துக்கிட்டு டிரெயினி டீச்சருக்கான பயிற்சியும் எடுத்துக்கிட்டேன்.

இப்ப எனக்குக் கீழ இருக்கற சின்னச் சின்ன பசங்களுக்கு வானியல் பத்தின ஆன்லைன் பாடங்கள் எடுக்கறேன்...’’ என சிவபிரியன் முடிக்க சிவபிரியனின் அம்மா சுதா தொடர்ந்தார். ‘‘எங்கேயும் எதிலேயும் நாங்க வற்புறுத்தினதோ தலையிட்டதோ இல்ல. கூட இருந்து அவனுடைய ஆர்வத்துக்கு ஏற்ற வசதிகளை எங்க பொருளாதாரத்துக்கு உட்பட்டு செய்து கொடுத்தோம். அவ்வளவுதான் எங்க பங்கு.

எதைச் செய்யாதேனு சொல்றோமோ அதைத்தான் பிள்ளைங்க செய்வாங்க. அதனால அவங்க போக்குலயே போயி அவங்க ஆர்வத்தையே மேம்படுத்தலாம். இதைத்தான் நாங்க செய்தோம். படிக்கிற நேரம் போக சிவபிரியனுடைய மீதி நேரம் வானியல் ஆய்வுதான்...’’ பெருமையாகச் சொல்கிறார் சுதா.                                    

ஷாலினி நியூட்டன்