தல! sixers story-12



சீக்ரெட் ஆஃப் சிக்சர்ஸ்!

சிறுவயது தோனி அமைதியானவர் மட்டுமல்ல. சற்றே பிடிவாதமானவரும் கூட.பள்ளி அணியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தங்களுக்கு வழங்கப்படும் பேட் சற்றே தரம் குறைந்திருப்பதைக் கண்டார்.ஆனால், ஸ்டிக்கர் எல்லாம் பளபளப்பாக ஒட்டி ஆடம்பரமான பேட் போல காட்சியளிக்கும்.

அந்த பேட்டுகளை பள்ளிக்கு டெண்டர் முறையில் சப்ளை செய்துகொண்டிருந்தவரிடம், “கொஞ்சம் நல்ல பேட்டா தரக் கூடாதாண்ணா?” என்று கேட்டார்.“ஆமாம், இவரு பெரிய ஸ்ரீகாந்து. இம்ரான்கானை எதிர்த்து விளையாடப் போறாரு…” என்று அவர் கிண்டலடித்தார்.

அன்றிலிருந்து பள்ளி கொடுக்கும் பேட்டை வைத்துக் கொண்டு கிரிக்கெட் ஆடுவதில்லை என்று முடிவெடுத்தார்.தோனியின் வீட்டில் ஒரு பழைய பேட் இருந்தது. ஹேண்டில் எல்லாம் ஆடிப்போய் இருக்கும்.அந்த பேட்டை எடுத்து தனக்குத் தெரிந்த கடைக்காரரிடம் கொடுத்து கொஞ்சம் சரி செய்தார். ரப்பர் ஹேண்ட் க்ரிப் வாங்கிப் போட்டார்.

பேட்டின் மத்தியில் குண்டூசி மூலம் குட்டி குட்டியாக நிறைய துளைகள் போடுவார். மட்டையில் படும் பந்து வழுக்கிக் கொண்டு கேட்ச் ஆகாமல், க்ரிப் காரணமாக சிக்சருக்கு பறக்கும்.மேலும் பேட்டுக்கு தினமும் எண்ணெய்க் குளியல். எண்ணெயில் ஊறிய மரம் உறுதியாகும்.

இத்தகைய சிறப்புகள் கொண்ட அந்த பேட்டைப் பார்த்தால் கி.மு.வில் கிரிக்கெட் ஆடியவர்கள் உருவாக்கிய பேட் மாதிரிதான் தெரியும்.ஆனால், அந்த பேட்தான் ராஞ்சியின் கிரிக்கெட் மைதானங்களில் மாயாஜாலம் செய்தது.

பள்ளிகளுக்கு இடையேயான போட்டித் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டியில் தன்னுடைய நண்பன் ஷபிருடன் இணைந்து 378 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை தோனி எடுக்க முடிந்ததும் அதே புராதன பேட்டால்தான்.அப்போது உள்ளூர் மின்னொளி கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்து கொண்டிருந்தது.அந்த அணிகளில் அதிரடியாக ரன் சேகரிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு ஏகத்துக்கும் டிமாண்ட்.

போட்டித் தொடரில் வெல்லும் அணிக்கு கணிசமாக பணம் கிடைக்கும் என்பதால், திறமையான வெளி பேட்ஸ்மேன்களை சம்பளத்துக்கு அழைத்து ஆட வைப்பார்கள்.தோனியின் பாக்கெட் மணிக்கு இந்த மின்னொளி கிரிக்கெட் கணிசமாக வாரி வழங்கியது.இம்மாதிரிப் போட்டிகளில் டென்னிஸ் பந்துதான் பயன்படுத்தப்படும்.

கிரிக்கெட் பாலைவிட அதிகமாக சுழலும். அதே நேரம் பந்து வீசப்படும் வேகத்தையும் பேட்ஸ்மேனால் சரியாக கணிக்க முடியாது.இந்த டென்னிஸ் பால் மேட்ச்சுகள் ஒரு பேட்ஸ்மேனாக தோனிக்கு ஏராளமான நுணுக்கங்களைக் கற்றுத் தந்தன.இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய மணிக்கட்டையும், தோள்களின் ஆற்றலையும் பயன்படுத்தி ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கக் கூட அப்போதுதான் கற்றுக் கொண்டார்.

ஏனெனில், டென்னிஸ் பந்துகள் லேசானவை. அவற்றை எல்லைக் கோட்டை தாண்டி அடிப்பதற்குள் தாவூ தீர்ந்துவிடும்.

டென்னிஸ் பாலை சிக்சருக்கு பறக்கவிடும் வித்தைகளில் ஒன்றாகத்தான் தன் அனுபவத்தில் ஹெலிகாப்டர் ஷாட்டையே அவர் கண்டுபிடித்தார்.
தோனி மட்டுமல்ல. சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலருமே கூட பேட்டிங், பவுலிங்குக்கு டென்னிஸ் பந்து பயிற்சி மேற்கொள்வதுண்டு.
தோனிக்கு டென்னிஸ் பால் டோர்னமெண்டுகள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

அவர் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பணம் பரிசளிக்கத் தொடங்கினார்கள்.கையில் காசில்லாத ஏழை ரசிகர்கள்(!) சிலர், தாம் வளர்க்கும் ஆட்டையோ, கோழியையோ கூட அன்புப் பரிசாக தோனிக்கு அளித்து அனுப்புவதுண்டு.வீட்டுக்கு ஆடு, கோழியோடு போனால் அப்பா தொலைத்துக் கட்டிவிட மாட்டாரா?வேறென்ன செய்வது? பிரியாணிதான்.

மேட்ச்சில் வென்றதுமே மொத்த டீமும் யார் வீட்டிலாவது கூடி சமைத்து சாப்பிடுவார்கள்.தோனிக்கு எதையெடுத்தாலும் வேகம், வேகம், வேகம்தான்.வேகத்தை எதிர்கொள்வதும், வேகத்தைக் கட்டுப்படுத்துவதும் அவருக்கும் பிடித்தமான செயல்பாடு.

அப்பாவுடைய ஸ்கூட்டரை எடுத்து ஒரே உதையில் ஸ்டார்ட் செய்வார்.ஸ்கூட்டரில் அமர்ந்ததுமே, முதல் கீர் போட்டு ஆக்ஸிலேட்டரை உச்சத்துக்கு முறுக்குவார்.கதறிக்கொண்டு வண்டி கிளம்பும். ஏற்கனவே தடதடத்துப்போன அந்தப் பழைய வண்டியின் சைலன்ஸர், தோனியின் வேகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பரிதாபமாக அலறும்.

எப்போதுமே எழுபது, எண்பது கிமீ வேகத்துக்கு குறைவில்லாமல் ஓட்ட மாட்டார்.யமஹா பைக் அவரது வாழ்நாள் கனவாகவே அப்போது இருந்தது.
பள்ளி நண்பர்களுடைய அப்பாக்கள் சிலர் ஹீரோஹோண்டா, யமஹா வைத்திருந்தார்கள்.

நண்பர்களை எப்படியோ தாஜா செய்து, அந்த வண்டிகளை வெள்ளோட்டம் பார்த்துவிடுவார்.கிரிக்கெட்டில் கில்லியான தோனிக்கு பேட்மிண்டன் விளையாடவும் ரொம்பவே பிடிக்கும்.இடியே விழுந்தாலும் சரி, தினமும் ஒரு பேட்மிண்டன் மேட்ச்சாவது விளையாடிவிட்டு வருவார்.

ஒருநாள் இதனால் கிரிக்கெட் பயிற்சிக்கு லேட்டாக வந்தார்.கோபமடைந்த பயிற்சியாளர், “பேசாமே பேட்மிண்டன் விளையாடவே போயிடேன். உனக்கு எதுக்கு கிரிக்கெட்?” என்று கேட்டார்.“சார், அதுவும் கிரிக்கெட் பிராக்டிஸ்தான்!” என்று பதிலளித்தார் தோனி.ஆர்வமடைந்த பயிற்சியாளர், “எப்படி?” என்று ஆவலுடன் கேட்டார்.

“பேட்மிண்டன் ஆடறப்ப இறகுப்பந்து சில சமயங்களில் இருநூறு கிலோ மீட்டருக்கு மேலே ஸ்பீடுலே வரும். வேகமா நாம ரியாக்ட் பண்ணி அதைத் திருப்பி அனுப்புறதுதான் சவால்.அந்த சவாலை தினம் தினம் எதிர்கொண்டு பயிற்சி பெற்றாபோதும்.

நூறு, நூத்தி இருபது கிலோமீட்டர் ஸ்பீடுல வர்ற கிரிக்கெட் பாலை கவனிச்சு ஒரு சாத்து சாத்தி மைதானத்துக்கு வெளியே பறக்கவிடலாம்...”கிரிக்கெட்டின் நுணுக்கங்களை மற்ற விளையாட்டுகளில் இருந்தும் அவர் கற்றுக் கொண்டார். இன்றுமே கூட தோனி கிரிக்கெட் மைதானப் பயிற்சிகளில் ஃபுட்பாலை உருட்டிக் கொண்டிருப்பதை நாம் கவனிக்கலாம்.

வீட்டில் அக்காவோடு அடிக்கடி கேரம் போர்டு ஆடுவார்.எதற்கு?
கேரம் போர்டில் கவனம் ஒருமுகப்படுகிறது.இதே கவனத்தை ஸ்டெம்பு களுக்குப் பின்னால் கிளவுஸ் மாட்டிக்கொண்டு நிற்கும்போது கொண்டுவர முடிந்தால் வெற்றி கரமான விக்கெட் கீப்பர் ஆகலாம்.எல்லாவற்றையும் இப்படி மாற்றி யோசித்ததால்தான் கேப்டன்களுக்கெல்லாம் கேப்டன் என்று அவரால் பெயரெடுக்க முடிந்தது.

(அடித்து ஆடுவோம்)

- யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்