எது வைகுண்டம்..?



இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகி வசூலில் சாதனை படைத்த தெலுங்குப் படம் ‘அலா வைகுந்தபுரம்லோ’. பலமுறை அடித்து துவைத்து காயப்போட்ட ஆள்மாறாட்ட, குடும்ப சென்டிமெண்ட் கதைதான்.
இருந்தாலும் அதில் புதுமை காட்டி நம்மை 165 நிமிடங்களுக்கு எங்கேயும் நகராமல் உட்கார வைத்திருப்பதே இப்படத்தின் வெற்றி.ஒரு நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தவர்கள் வால்மீகியும் ராமச்சந்திராவும். அந்த நிறுவனத்தின் முதலாளியின் மகளைக் காதலித்து திருமணம் செய்து பெரும் பணக்காரராகிவிடுகிறார் ராமச்சந்திரா. ஆனால், வால்மீகியோ அப்படியே ஏழையாகவே இருக்கிறார்.

இருவரது மனைவிகளும் பிரசவத்துக்காக ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இருவருக்குமே ஆண் குழந்தை பிறக்கிறது.
ராமச்சந்திராவின் மனைவிக்குப் பிறந்த குழந்தையோ மூச்சுப் பேச்சு இல்லாமல் இருக்கிறது. குழந்தை இறந்துவிட்டது என்று பதறிப்போகிறார் நர்ஸ்.
இந்த ரகசியம் வால்மீகிக்குத் தெரிய வர, தன் குழந்தையாவது வசதியான வீட்டில் வாழட்டும் என்று குழந்தையை மாற்றிக் கொள்ள நர்ஸிடம் வேண்டுகிறார்.

நர்ஸும் சம்மதித்து குழந்தைகள் மாற்றப்படும்போது, இறந்துபோயிற்று என்று நினைத்த ராமச்சந்திராவின் குழந்தை அழ ஆரம்பிக்கிறது.
வால்மீகியிடம் குழந்தைகளை மாற்றவேண்டாம்; அப்படியே இருக்கட்டும் என்று சண்டைபோடுகிறார் நர்ஸ். ஆனால் வால்மீகியோ, ராமச்சந்திராவின் மீதான பொறாமையால், அவரின் குழந்தை தன்னிடம் கஷ்டப்பட வேண்டும் என்று வலுக்கட்டாயமாக குழந்தையை மாற்றுகிறார். அதைத் தடுக்கும் நர்ஸை மாடியில் இருந்து தள்ளிவிட, அவர் கோமாவுக்குப் போய்விடுகிறார்.

ராமச்சந்திராவின் மகனுக்கு பன்டு என்று விநோதமான பெயரிட்டு, அடிமை போல வளர்க்கிறார். எப்போதும் கடுகடுவென பன்டுவிடம் நடந்துகொள்கிறார். ராமச்சந்திராவின் மீது காட்ட முடியாத வெறுப்பையும் கோபத்தையும் அவரது மகன் மீது காட்டுகிறார். ஆனால், பன்டுவோ திறமைசாலியாக வளர்கிறான். வால்மீகியின் மகன் ராஜுவோ ராமச்சந்திரா வீட்டில் சகல வசதிகளுடன் வெளி உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் கோல்டன் ஸ்பூன் பேபியாகவே வளர்கிறான்.  

குழந்தை மாற்றம் செய்யப்பட்ட ரகசியம் வெளிவராமல் வருடங்கள் ஓடுகின்றன. பன்டுவிற்கு, தான் வேலை செய்யும் நிறுவனத்தின் பாஸ் அம்மு மீது காதல்.  இன்னொரு பக்கம் ராமச்சந்திராவின் மகனுக்கு அம்முவைத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. பிசினஸ் காரணமாக அப்பள நாயுடுவால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ராமச்சந்திராவை பன்டு காப்பாற்றுகிறான்.

அவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் 25 வருடங்களாக கோமாவில் இருக்கும் நர்ஸுக்கு நினைவு திரும்புகிறது. அந்த நர்ஸ் மூலம் பன்டுவிற்கு, தான் யாருடைய மகன் என்ற உண்மை தெரியவருகிறது. இதற்குப் பிறகு கியர் மாற்றி வேகமெடுக்கும் திரைக்கதை க்ளைமேக்ஸில்தான் ப்ரேக் போட்டு நிற்கிறது.

ஸ்டைலிஷான டான்ஸ், ஆக் ஷன் சீக்வென்ஸ் என மனதை அள்ளுகிறார் பன்டுவாக பட்டையைக் கிளப்பியிருக்கும் அல்லு அர்ஜுன். ஜெயராம், தபு, பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் என நட்சத்திரப் பட்டாளங்களுக்கு மத்தியில் நடிப்பில் அசத்தி தனி முத்திரை பதித்திருக்கிறார் வால்மீகியாக நடித்த முரளி சர்மா. த்ரிவிக்ரம் இயக்கிய இப்படம் ‘சன் நெக்ஸ்ட்’டில் காணக்கிடைக்கிறது.