எழுகிறது அயோத்தி ராமர் கோயில்!



அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைதான் சென்ற வார இந்தியாவின் ஹாட் வைரல். இணையதளங்களில் ராமர் கோயில் தொடர்பான உரையாடல்கள் அனல் பறந்தன. மறுபுறம் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நிகழ்வை சேனல்கள் நேரலையில் ஒளிபரப்ப, நீதியரசர்கள் முதல் சாதாரண தொழிலாளர்கள் வரை பல கோடி மக்கள் டிவி முன்பு பக்திப் பெருக்குடன் அமர்ந்திருந்தனர்.

இந்தியா முழுதும் எல்லா மொழி நாளிதழ்களும் ராமர் கோயில் பூமி பூஜை செய்திகளை பிரசுரித்தன. வரலாற்றுத் தருணம் என்று பலராலும் குறிப்பிடப்படும் ராமர் கோயில் தொடர்பான சில தகவல்கள் இங்கே… அயோத்தி ராமர் கோயிலில் அமையவுள்ள மூலவரை ‘ராம் லல்லா’ என்கிறார்கள். குழந்தை ராமர் என்பது இதன் பொருள். குழந்தை வடிவில் இருக்கும் ராமன் கோயில் ஒன்றை எட்டாம் நூற்றாண்டில் விக்கிரமாதித்யன் கட்டியதாக நம்பிக்கை உள்ளது. அதன் அடிப்படையிலேயே இங்கு கோயில் அமைக்கப்படுகிறது.

 மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ேக்ஷத்ரா அறக்கட்டளை, இந்த அடிக்கல் நாட்டும் விழாவுக்கு ஏற்பாடு செய்தது. அத்துடன் மாநில அரசும், அயோத்தி உள்ளாட்சி நிர்வாகமும் ஏற்பாடுகளில் பங்கேற்றன. சரியாக நண்பகல் 12:44 மணிக்கு பிரதமர் மோடி, ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார்.

அப்போது அங்கே திரண்டிருந்த மக்கள் ‘ஹர ஹர மகாதேவ்’ மற்றும் ‘ஜெய் ராம்’ கோஷங்களை எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
பல தசாப்தங்களாக ராமர் சிலை ஒரு டென்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தற்காலிகமாக ஒரு கோயிலில் அந்த சிலை நிறுவப்பட்டது.

 ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு அயோத்தி சாலைகள் அனைத்தும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டன.வீதி முழுவதும் மஞ்சள் மற்றும் காவி வண்ணங்கள் பூசப்பட்டு ஊரே விழாக் கோலம் பூண்டது.அயோத்தி நகரில் உள்ள பல கோயில்களிலும் இடைவிடாது ராம கீர்த்தனைகள் ஒலித்துக்கொண்டிருந்தன.

அயோத்தியில் அமையவுள்ள கோயில் மூன்று அடுக்குகள் கொண்டது. ஐந்து வட்ட வடிவ மண்டபங்களும் ஒரு ஷிகார் எனப்படும் முக்கிய கோபுரமும் கொண்டது. கோயிலை மொத்தம் 360 தூண்கள் தாங்கியிருக்கும்.கோயிலின் உயரம் 161 அடி. படிக்கட்டுகள் பதினாறு அடி உயரம் கொண்டவை.

 வாஸ்து சாஸ்திர அடிப்படையில் உருவாக்கப்படவிருக்கும் இக்கோயில் நகரா பாணி கட்டடக் கலையால் ஆனது. சிற்ப சாஸ்திரங்களும் இந்த பாணியால் ஆனதுதான்.

சந்திரகாந்தபாய் சோம்புரா என்பவர்தான் இதன் தலைமை ஸ்தபதி. குஜராத்தின் அக்ஸார்தம் கோயிலை நிர்மாணித்தவர் இவர்தான். இவரின் பாட்டனார் பிரபாகர்ஜி சோம்புராதான் சோமநாதர் கோயிலை வடிவமைத்தவர்!ராஜஸ்தானின் பான்ஸி மலைகளிலிருந்து இதற்கான கற்கள் பெயர்த்து எடுத்துவரப்படுகின்றன.

 முக்கிய கோயிலைச் சுற்றிலும் நான்கு சிறு கோயில்களும் நிறுவப்படவுள்ளன. விநாயகர், லட்சுமணர், சீதை, அனுமன் ஆகியோருக்கு தனிக் கருவறையோடு ஆலயமும் இதே வளாகத்தில் அமைக்கப்படவுள்ளன. நாடு முழுதும் இருந்து கடந்த முப்பது ஆண்டுகளாக அனுப்பப்பட்ட ‘ராம்’ என்று பல்வேறு மொழிகளில் பொறிக்கப்பட்ட செங்கற்களும் அஸ்திவாரத்தில் பதிக்கப்படவுள்ளன. தங்கம், வெள்ளி செங்கற்கள்கூட இப்படி அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 கோயிலின் பரப்பளவு மட்டுமே பத்து ஏக்கர். எஞ்சிய 57 ஏக்கர் நிலப்பரப்பில் கோயிலுக்காக கடைகள், உணவுக்கூடங்கள், தங்கும் இடங்கள், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன. ராமர் கோயில் என்பது தொடக்கத்தில் ஒரு ஏக்கர் என்பதாகவே இருந்தது. உச்சநீதி மன்ற தீர்ப்புக்குப் பிறகே இத்திட்டம் விரிவாக்கப்பட்டது. திட்டம் பெரிதானதால் கோயில் கட்டட திட்ட மதிப்பும் அதிகரித்துள்ளது.
கோயில் கட்டி முடிக்க நிதி தேவைப்பட்டால் மக்களிடம் க்ரவுட் ஃபண்டிங் முறையில் நன்கொடை பெற்று கோயில் கட்டி முடிக்கப்படும் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ேக்ஷத்ரா செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

1989 முதல் இதுவரை சுமார் ஆறு கோடிப் பேரிடம் இக்கோயில் கட்டுவதற்காக நன்கொடை பெறப்பட்டுள்ளது. அவசியம் எனில் மேலும் பத்து கோடி குடும்பங்களிடம் கோயிலுக்கு நன்கொடை வழங்கச் சொல்லிக் கேட்போம் என்கிறார்கள் இதன் அமைப்பாளர்கள். கோயில் கட்டுமானப் பணிகளில் கொரோனா ஒரு சிறு பின்னடைவை உருவாக்கியிருக்கிறது. ஆனாலும் திட்டமிட்டபடி கோயில் பூமி பூஜை நடைபெற்றதைப் போலவே மூன்று அல்லது மூன்றரை வருடத்தில் இக்கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இந்துக்களின் எட்டு புண்ணிய பூமிகளில் ஒன்று எனப்படும் அயோத்தியில் ராமர் கோயில் அமைவதன் மூலம் அதன் சுற்றுலா முக்கியத்துவம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி மட்டுமல்லாது அதன் சுற்றுப்புறங்களில் இருக்கும் பழம்பெரும் கோயில்களிலும் இனி கூட்டங்கள் அதிகமாகும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் உத்திரப்பிரதேசத்தவர்கள்.

அருகன்