ஒரு கண்ணு அப்பா...இன்னொரு கண்ணு அம்மா..!



நெகிழ்கிறார் பூர்ணசுந்தரி ஐஏஎஸ்

இன்று தமிழகமெங்கும் பிரியமாக உச்சரிக்கும் ஒரு பெயர் பூர்ணசுந்தரி. நடந்து முடிந்த ஐஏஎஸ் தேர்வில் வென்று நன்னம்பிக்கை நாயகியாக வலம் வரும் இவருக்குப் பார்வையில்லை. இந்தியா முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் எழுதிய தேர்வில் 829 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்தனர். அதில் 286வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ள பூர்ணசுந்தரி மதுரை மணி நகரத்தைச் சேர்ந்தவர்.

‘‘அப்பா முருகேசன், அம்மா ஆவுடைதேவி, தம்பி சரவணன். அப்பாவுக்கு மார்க்கெட்டிங் பணியில் ரொம்பக் குறைஞ்ச வருமானம். ‘படிப்பு ஒண்ணுதான் உன்னை ஒசத்தும்’னு சொல்லிச் சொல்லி என்னை வளர்த்தாங்க. பள்ளியில படிக்கிறப்போ டாக்டராகணும், விஞ்ஞானி யாகணும்ங்கிற கனவுதான் எனக்கும் இருந்தது. பத்தாம் வகுப்புல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தப்போ கூட, வக்கீல் ஆவேன்னுதான் பேட்டி கொடுத்தேன்.

கல்லூரிப் படிப்புக்குப் பிறகுதான் அரசு வேலை லட்சியமா மாறுச்சு. அதுவும் இந்த ஐஏஎஸ், அப்பா எனக்கு ஊட்டிய ஆசைன்னு சொல்லலாம்...’’ என்று உற்சாகமாக ஆரம்பித்த பூர்ணசுந்தரி, 10ம் வகுப்பில் 471 மதிப்பெண், 12ம் வகுப்பில் 1092 மதிப்பெண் பெற்ற சாதனை மாணவி. மதுரை பாத்திமா கல்லூரியில், பிஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்தவர்.

‘‘என்னோட 5 வயசுலதான் இரு கண்களிலும் பார்வை பறிபோச்சு. அதுக்கும் முன்னே, குட்டி ஃபிராக் போட்டு பள்ளிக்கு வந்த நாட்கள், பள்ளி வாட்ச்மேன் தாத்தா துவங்கி, பாடம் நடத்தின சித்ரா மிஸ் வரையிலும் ஒவ்வொருவரும் காட்டின பாசக் காட்சிகள் பசுமையாக இன்னைக்கும் நெஞ்சுக்குள்ளே நிறைஞ்சிருக்கு.

தெருக்கள்ல விளையாடித் திரிய வேண்டிய நேரத்துல, ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் பல மணிநேரம் காத்திருந்து, மருந்து ஊத்தி, பரிசோதனை பண்ணி பார்வையைக் கொண்டு வர்றதுக்காக என்னோட பெற்றோரும், டாக்டரும் போராடினாங்க. இழப்பின் வலிக்கு, அந்த நேரங்கள்ல அப்பா சொன்ன நம்பிக்கைக் கதைகள்தான் மருந்து தடவுச்சு...’’ என்றவர், சில நிமிட மவுனத்திற்குப் பிறகு தொடர்ந்தார்.

‘‘பார்வைக் குறைபாடு எனக்கு பெரிய தடையா இருந்ததில்லை. நேர்மறை சிந்தனைகள் என் பெற்றோரிடமிருந்து எனக்கு வந்தது. ஒரு விஷயத்தை உணர்ந்துக்க பார்வை மட்டுமே வழி இல்லை. நிறைய பாதைகள் இருக்கு. அது வழியாகவே பயணிச்சேன். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டு மில்லை, ஒவ்வொருத்தருக்கும் நான் சொல்லிக்கிறது ஒண்ணே ஒண்ணுதான். நம்மை நம்பக்கூடிய முதல் நபராக நாமதான் இருக்கணும். தன்னம்பிக்கையோடு, நம் உழைப்பின்மீது அசைக்க முடியாத ‘தாட்’ இருந்தா, சோர்ந்து போகாத முயற்சியில் நிச்சயம் வெற்றிதான்.

நம்மைச்சுற்றி விதைக்கு தண் ணீர் ஊற்ற பலரும் நிற்பார்கள். நாமும் உயரும் நம்பிக்கையில் நிக்கணும்...’’ என்றவர், தன் பெற்றோர் குறித்து பேசும்போது உணர்ச்சிவசப்படுகிறார். ‘‘ஐந்தாம் வகுப்புலதான் ஸ்பெஷல் டீச்சர் மூலமா பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தைப் படிச்சு, அதன் மூலமா பாடங்களைப் படிக்க ஆரம்பிச்சேன்.

டேப் ரெக்கார்டர்ல பாடத்தை பேசி அப்பாவும், அம்மாவும் ரெக்கார்டு பண்ணித் தந்தாங்க. கல்லூரிக் காலத்துல லேப்டாப் ஒண்ணு வாங்கி, மானிட்டர்ல வர்ற எழுத்தை அப்படியே பேசிக் காட்டுற ‘ஸ்பீக்கிங் சாப்ட்வேர்’ மென்பொருளும், பிறகு செல்போன் பதிவுகளும் பயன் தந்தது.

இதையெல்லாம் கடந்து என்னோட ஒரு கண்ணு அப்பா... மற்றொரு கண்ணு அம்மா! பெண் குழந்தைதானேன்னு இல்லாமல், படிச்சு உயர வழிகாட்டுனாங்க. ஒவ்வொண்ணையும் வாசிச்சுக் காட்டுறதிலும், ரெக்கார்டு பண்ணித் தந்து விளக்குறதிலும் அவங்களை மிஞ்ச முடியாது.
பொதுவா எல்லார் வீட்டுலயும் குழந்தைங்க படிப்பாங்க. பெற்றோர் டீ, காபி போட்டுத் தருவாங்க. ஆனா, எனக்காக எங்க அப்பா, அம்மா நிறையப் படிச்சாங்க...’’ என்றவர் அப்பா இருக்கும் இடத்தை நோக்கி மெலிதாகப் புன்னகைத்தார்.

‘‘அப்பாவின் ஊக்கத்துடன், சிவில் சர்வீஸ் துறையைத் தேர்ந்தெடுக்க கலெக்டர்கள் உதயசந்திரன், சகாயம், ஷில்பா, டி.சி.திருநாவுக்கரசுனு அடுக்கடுக்கா நிறையப்பேரு இன்ஸ்பிரேஷன். ஆங்கில இலக்கியம் படிச்சிருந்தாலும், தமிழ் இலக்கியத்தைத்தான் முக்கிய பாடமா எடுத்தேன். சென்னை சைதாப்பேட்டையில் இருக்கிற ‘மனிதநேயம்’ இலவச விடுதி, சென்னை அடையாறுல இருக்குற அரசின் ‘ஆல் இந்தியா சிவில் சர்வீஸ் கோச்சிங்
சென்டர்’, தமிழ் இலக்கியம் போதித்த சிபிகுமார் மற்றும் ‘சங்கர் அகடமி’, அமைச்சர் வேலுமணியின் ‘அம்மா அகடமி’ன்னு என் வெற்றிக்குப் பின்னால் நிறையப்பேரு இருக்காங்க.

சென்னையைச் சேர்ந்த நாகார்ஜுனா போன்றவங்க முன்வந்து பொருளாதார உதவியோடு, கண்டிப்பா ஜெயிப்பேன்னு நம்பிக்கை விதை விதைச்சாங்க...’’ என்ற பூர்ணசுந்தரி, 2016ல் இருந்து குரூப் தேர்வு, வங்கி போட்டித் தேர்வு, ஐஏஎஸ் பணித் தேர்வு என 20க்கும் அதிகமான போட்டித் தேர்வுகளை எழுதியுள்ளார். பல தேர்வுகள் தோல்வியில் முடிந்தது. ஆனாலும், தன்னம்பிக்கை குறையாத இவர், 4வது முறையாக 2019ல் எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் பெரும் வெற்றியைத் தொட்டுள்ளார்.

2018ல் நடந்த வங்கித்தேர்வில் வெற்றிபெற்று, அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க் வேலையில் இருந்து வருகிறார். இப்போது கிடைத்துள்ள
வெற்றியானது இவருக்கு கூடுதல் உத்வேகம்.‘‘நிதிச்சுமை, சமூக அங்கீகாரம்னு பல நிலையைத் தாண்டித்தான் வந்திருக்கேன். என் குடும்பமும், நண்பர்களும் கொடுத்த ஆதரவை மறக்க முடியாது. கல்வி, ஆரோக்கியம், பெண்கள் முன்னேற்றம் என்ற இந்த மூன்று முக்கிய கொள்கைகளோடு சேவை செய்வேன்.

ஒரு பெண் படிச்சா ஒரு குடும்பம் படிச்சதா சொல்வாங்க. நான் படிச்சு உயர்ந்திருப்பதை என் தெரு, என் சமூகம் கடந்து, ஏன்... மதுரையே... தமிழகமே... என்னைத் தூக்கி வச்சு கொண்டாடுது. அரசுத் திட்டங்களை, சேவைகளை வழங்குற இடத்துல இருக்கும்போது, தேர்வெழுத நான் தந்த முழு உழைப்பைப் போல, மக்கள் உயர்வுக்கான எல்லா வாய்ப்பையும் பயன்படுத்தி, ‘பெஸ்ட் சர்வீசை’ நிச்சயம் கொடுப்பேன்...’’ அழுத்தமாக முடித்தார் வருங்கால கலெக்டர்.

ஒளி விளக்கு!

‘‘எங்க மகள் பூர்ணசுந்தரி, நல்ல பூர்ண கண் பார்வையோடதான் பிறந்தார். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து ரசிச்சு, அந்த பொருளோட நிறத்தையும் சேர்த்து மழலை மொழியில பேசுற சுட்டித்தனத்தை ரொம்பவே ரசிப்போம். ஒண்ணாவது படிக்கிறப்போதான், ‘அம்மா போர்டுல டீச்சர் எழுதிப்போடுறது சரியாத் தெரியலம்மா’னு சொன்னார். கொஞ்சம் கொஞ்சமா பார்வை மங்க ஆரம்பிச்சதுல ரொம்பவே கலங்கிப்போயிட்டோம்.

கண் டாக்டர்ட்ட காட்டினப்போ, ‘இது ஆயிரத்துல ஒருத்தருக்கு வர்ற பார்வை நரம்புச் சுருக்க பாதிப்பு. அறுவை சிகிச்சை செஞ்சு பார்ப்போம்... பார்வை முழுசா திரும்புனா உங்க அதிர்ஷ்டம்...’னு சொல்லிட்டாரு. அறுவை சிகிச்சையும் முடிஞ்சது. ஆனா, முழுப் பார்வையும் போயிருச்சு. அன்னைக்கே எங்க பொண்ணுக்கு நாங்களே பார்வையா இருக்கணும்னு முடிவெடுத்தோம். எங்கே போனாலும் நாங்கதான் கூட்டிட்டுப் போவோம்.

அடிமட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு வளர்ந்தவர் தான் எங்க மகள். தடுமாறி நிக்கிற ஏழை எளியவங்களுக்கு பூர்ணசுந்தரி இப்ப ஒரு விளக்கா வழிகாட்டுகிறார்...’’ உணர்ச்சிப் பெருக்கில் பூர்ணசுந்தரியின் பெற்றோர் தழுதழுக்கிறார்கள்!

செய்தி: செ.அபுதாகிர்

படங்கள்: ஜி.டி.மணிகண்டன்