ரெண்டு படம் இயக்கினேன்... ரெண்டும் வெளியாகலை... ஆனா, என் பையன் டைரக்டரா சக்சஸ் ஆகிட்டான்!
நெகிழ்கிறார் இயக்குநர் விஜயராஜ்
சினிமா, ஆச்சர்யம் நிரம்பியது. நிச்சய வெற்றி என வருபவர்களை நிறுத்தி வேடிக்கை பார்க்கும். யாருக்கு, எப்படி இந்த வெள்ளித் திரையில் இடம் இருக்கிறது என யாராலும் கணிக்க முடியாது. விருப்பத்தோடு சாதிக்க வந்தவர்களை சமயங்களில் எக்கச்சக்கமாக சோதித்திருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் விஜயராஜ் தன் முந்தைய அனுபவங்களை எடுத்துரைக்கிறார்.
 அவரது ‘இதயம் தேடும் உதயம்’ ரிலீஸுக்கு காத்திருந்தது. ‘சித்திரம் பேசுதடி’ இறுதிக் கட்டத்திற்கு வந்து நின்றது.முதல் முறையாக தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார் இயக்குநர் விஜயராஜ். ‘‘வடக்கன்குளத்தில் 10வது வரை படித்தேன். படிப்பில் கவனம் செல்லவில்லை. சினிமா, நாடகத்திற்கான எண்ணமே மேலோங்கியிருந்தது.

சினிமா கதாசிரியர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தால் சேலம் மாடர்ன் தியேட்டர் நோக்கி புறப்பட்டேன். அப்போது கதாசிரியர் என்றால் பேண்ட், ஜிப்பா, கண்ணாடி, ஜோல்னா பை, ஒரு ஃபைல் என இருக்க வேண்டும். அங்கே பிறகு வரச் சொல்லிவிட்டார்கள்.
அங்கிருந்து கதாசிரியர், இயக்குநர் ஆசையில் சென்னைக்கு வந்தேன். இந்த சென்னையே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பல இடங்களுக்கு சென்று வாய்ப்புகளைத் தேடினேன். ஏதாவது அதிசயங்கள் நடக்கும் என நம்பினேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. கொஞ்ச நாளில் எதுவும் முடியாமல் ‘தினத்தந்தி’யில் சேர்ந்தேன். படிப்படியாக உதவி ஆசிரியர் வரைக்கும் வந்து விலகி விட்டேன். ‘ஞானக் கண்’, ‘அக்னி நட்சத்திரம்’ என இரண்டு நாடகங்களைப் போடும்போது விஜிபி-யில் சேர்ந்து விட்டேன். நாடகங்களைப் பார்த்து விட்டு என்னை விஜிபி கல்ச்சுரல் அகாடமியில் தலைவராகப் போட்டார்கள். மவுண்ட் ரோடு விஜிபியில் மேனேஜர் ஆக இருந்தேன். எந்த இடத்திலும் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை மட்டும் போகவில்லை.
பிறகு ஒரு நண்பரைப் பிடித்து ‘இதயம் தேடும் உதயம்’ என்ற படத்தை ஆரம்பித்தேன். சக்ரவர்த்தியும், பத்மபிரியாவும் நடித்தார்கள். உண்மையைச் சொன்னால் எனக்கு ஸ்டார்ட், கட் சொல்லக்கூடத் தெரியாது. கதையைப் பற்றிய நல்ல தீர்மானம் இருந்தது. கேரக்டர்கள் எப்படி கதையில் இடம் பெறவேண்டும் என்பதில் தெளிவிருந்தது. நான் யாரிடமும் உதவியாளராகப் பணிபுரியவில்லை.
ஆரம்பத் தயக்கங்களை களைய எனது ஒளிப்பதிவாளர் நாகப்பா மிகவும் உதவிகரமாக இருந்தார். படம் எல்லாம் முடிந்த பிறகு புரடியூசர் மலேசியாவிற்கு புறப்பட்டுப் போனார். இங்கே எல்லா வேலையும் முடித்து படத்தை தயார் செய்துவிட்டோம். ஆனால், மலேசியாவுக்குப் போன தயாரிப்பாளர் திரும்பவேயில்லை. எப்படி தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.
அதற்குப் பிறகு வாழ்க்கை கடுமையாகிவிட்டது. ஒவ்வொரு தினமும் கடந்துபோவதே சிரமமாகிவிட்டது. விஜிபியில் இருக்கும்போதே திருமணமும் ஆகிவிட்டது. எல்லாவற்றையும் என் மனைவி சகித்துக் கொண்டு இருந்தாள். அடுத்தடுத்து மூன்று ஆண் குழந்தைகள் பிறந்து விட்டார்கள். அவர்களுக்கான செலவு, படிப்பு என்று மேலும் பொருள் தேவை இருந்தது.
பிறகு ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தை புரடியூசரைப் பிடிச்சு ஆரம்பிச்சு இறுதிக் கட்டம் வரை ஷூட் முடிச்சேன். சீதாவை வைத்து மூன்று மணி நேரத்தில் ஒரு பாட்டை எடுத்தேன். குளோசப்களையும் வரிசையாக நம்பர் போட்டு எடுத்துவிட்டேன்.
எடிட்டிங்கில் போய்ப் பார்த்தால் அத்தனை குளோசப்பும் அருமையாக கரெக்டா வந்து நிக்குது. எல்லோரும் ஆச்சரியப்பட்டு போயிட்டாங்க. அங்கேயிருந்தவங்க ‘சாத்தியமில்லாததை விஜயராஜ் பண்ணிட்டாரு’ன்னு பேசிக்கிட்டாங்க. எனக்கு தொழில் நல்லா வந்தது. சீக்கிரமாக எடுக்கத் தெரிந்தது. சரளம் வந்தது. தெளிவாக இருந்தேன். ஆனாலும் காலம் வெல்லவில்லை. ஜெய்சங்கர், முரளி, சுஜாதா, சுமித்ரா,செந்தில், மனோரமான்னு நல்ல நடிகர்கள் இருந்தாங்க. எட்டு பாடல்கள் இன்னும் இருக்கு. படம் தயாரிக்க ரூ.5 லட்சம்தான் ஆனது.
வடபழனியில் லேசா சுத்துகிற ஏவிஎம் உருண்டையை வெளியே நின்னு வேடிக்கை பார்த்தேன். அதே ஏவிஎம்ல உட்கார்ந்து பாடல்கள் போட்டு, செட்ல ஷூட்டிங் பண்ணினேன். நாம் இதுதான்னு ஒரு விஷயத்தில் உள்ளே போய் இறங்கிட்டா விடிவு பிறக்கும்னு நினைக்கிறேன். சினிமாவுக்கு ஆகாத கோபமான குணம் என்கிட்ட இருந்தது.
நடிகர்கள் சொன்ன நேரத்திற்கு வரணும், கேரக்டரில் கவனம் செலுத்தணும்னு உறுதியாக இருந்தேன். இங்கே திறமை இருந்தாலும் சுமுகமாக இருக்கணும். சினிமாவை கொடுக்கல் வாங்கல் மாதிரி சொல்லி வேலை வாங்கணும். நான் கொஞ்சம் எடுத்தெறிஞ்சு பேசினேன். அதனால் சில பேருக்கு பிடிக்காமல் போயிருந்திருக்கலாம்.
நான் 25 புத்தகத்திற்கு மேலே எழுதினேன். நடுவில் சும்மாவே இல்லை. எப்பவும் ஸ்கிரிப்ட், எழுத்து... இந்த வேலைதான் எனக்குப் பிடிக்கும்.
‘இது கவிதை அல்ல விதை’, ‘இது வேரில் பழுத்த பலா’, ‘இது சுடுமணல் சுரந்த நீர்’, ‘ஒரு வழக்கு… துரியோதனனை ஆதரித்து’, ‘மேஜர் ஜீவா’, ‘கர்ணன்’, ‘உனக்காக காத்திருந்தேனே’, ‘சகுனி’, ‘அதிரடிப்படை’, ‘பாஞ்சாலி’, ‘ஆவி துடிக்குதடி’, ‘குந்தியின் குருேக்ஷத்திரம்’, ‘பீஷ்மரின் தேசம்’, ‘மகாபாரதம் ஆறு’ என்பவை நான் எழுதிய புத்தகங்களில் மிகவும் கவனம் பெற்றவை.
துரியோதனன் புத்தகத்தை சிவக்குமார் பார்த்திட்டு ‘அருமையாக இருக்கு. எங்கேயிருந்தையா புறப்பட்டு வந்தாய்’னு கேட்டார். இப்பவும் என்னைக் கூப்பிட்டு பேசிட்டு இருக்கார்.என் மனைவி என்னை இவ்வளவு நெருக்கடியிலும் மனசு நோகாமல் வைத்திருந்தாள்.
பிள்ளைகளை நல்லா படிக்க வச்சு, நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தாள். சினிமா சினிமான்னு திரிந்தவனை ஒரு நாளும் சுடு சொல் சொன்னதில்லை. அவள் எங்களைப் பார்த்துக்கிட்டதை இப்ப நினைச்சாலும் அழுகை வரும். கொடுத்த காசில் எங்களை அணைச்சு பார்த்துக் கொண்டாள். அவளோட அன்பின் பிரமாண்டத்திற்கு முன்னாடி எதுவுமே பெரிசில்லை. இப்ப பசங்களில் ஒருத்தன் என் பேரில் பாதியை வைச்சுக்கிட்டு சினிமாவில் பெரிய ஆளாக இருக்கான். வெற்றியையும் பார்க்கிறான். பெயர் சொல்ற கேமராமேனாக இருக்கான். கவிதை கூட எழுதுறான்! இரண்டாவது மகன் லண்டனில் அமேசான்ல வேலை பார்த்திட்டு, போலந்து நாட்டுப் பொண்ணை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கான். கடைசியா பிறந்தவன் நடிகனாகிறான்.
எதோ சொல்ல நெனச்சு எங்கையோ போகுது. என்னோட கனவு, எண்ணம் எல்லாம் என் மகன் மூலமாக நிறைவேறியிருக்கிறது சந்தோஷமா இருக்கு. ஆனாலும் ரெண்டாவது மகன் கிட்டே, ‘ரூ.25 லட்சம் கொடு, உன் அண்ணன் கேமரா பண்ணட்டும், உன் தம்பியை ஹீரோவா போட்டு படம் எடுக்கிறேன்’னு சொன்னால் சிரிக்கிறான். மனசு வைச்சு கொடுத்தால் உங்களை டைரக்டரா மறுபடியும் சந்திக்கிறேன்!
டைரக் டர் விஜயராஜின் மகன்தான் ‘கோலி சோடா’, ‘கோலி சோடா 2’, ‘பத்து எண்றதுக்குள்ள’ இயக்குநர் விஜய்மில்டன்! தமிழ் சினிமா பெருமைப்படும் ஒளிப்பதிவாளர்! விரைவில் இவர் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை இயக்கப் போகிறார்.
நா.கதிர்வேலன்
|