காதல் காவியம்



காலத்தால் அழியாத காதல் திரைக் காவியம் ‘என்னு நின்டே மொய்தீன்’. எத்தனை முறை பார்த்தாலும் காதலைப் போல திகட்டாத படம்.
‘திரிஷ்யம்’, ‘பிரேமத்’திற்குப் பிறகு உலகளவில் அதிக வசூலைக் குவித்த மூன்றாவது மலையாளப்படம் என இதன் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது ‘டிஸ்னி ஹாட்ஸ்டாரி’ல் இலவசமாகப் பார்க்க கிடைக்கிறது.

கேரளாவின் இயற்கை எழிலைப் பிரதிபலிக்கும் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள முக்கம் என்ற ஊர். அங்கே அறுபதுகளில் நடந்த உண்மைக்கதையை எந்தவித சமரசமும் இல்லாமல் படமாக்கியிருக்கின்றனர். முக்கத்தில் செல்வாக்கான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவன் மொய்தீன். கால்பந்து விளையாட்டில் ஜாம்பவான். சோஷலிச கட்சியில் ஈடுபாடு கொண்ட இளைஞன். ஆனால், அவனது தந்தையோ அக்மார்க் இஸ்லாமியர்.

அதே ஊரில் பாரம்பரியமான இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் காஞ்சனமாலா. கடிதம் வழியாகவும் ரகசிய சந்திப்புகள் வழியாகவும் மொய்தீனுக்கும் காஞ்சனமாலாவுக்கும் இடையில் அரங்கேறிக் கொண்டிருந்த காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வருகிறது.

தந்தையால் மொய்தீன் வீட்டைவிட்டு துரத்தியடிக்கப்படுகிறான். காஞ்சனமாலா வீட்டுக்குள்ளேயே சிறைக்கைதியைப் போல அடைக்கப்படுகிறாள். அவளுக்கு வருகிற மாப்பிள்ளைகளை எல்லாம் நிராகரிப்பதால் அண்ணன்களின் கோபத்துக்கு உள்ளாகி கடுமையாகத் தாக்கப்படுகிறாள். அப்போதும் கூட அவளால் மொய்தீனை மறக்க முடியவில்லை.

தடைகளை மீறி இருவரும் சந்தித்துக்கொண்டு காதலை வளர்க்கின்றனர். கிட்டத்தட்ட 25 வருடங்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்த காஞ்சனமாலாவை மீட்டு மொய்தீன் திருமணம் செய்துகொண்டாரா... ஏன் இந்தப் படம் சிறந்த காதல் படமாக  விமர்சகர்களால் போற்றப்படுகிறது... என்பதை அறிய ஒரு முறையாவது படத்தைப் பாருங்கள்.

வசனங்கள் ஒவ்வொன்றும் காதல் கவிதைகளாக வசீகரிக்கிறது. உதாரணத்துக்கு மொய்தீனுக்கும் காஞ்சனாவுக்கும் இடையிலான காதலைத் தெரிந்த பிறகும் கூட அப்பு என்பவன் ஒருதலையாக காஞ்சனாவைக் காதலிக்கிறான். ஒரு நாள் காஞ்சனாவைப் பெண் பார்க்க வருகிறான்.

அவனிடம், ‘‘ நீ என்னைக் காதலிப்பது தெரியும் அப்பு. ஆனால், நீ என்னைக் காதலிப்பதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக நான் மொய்தீனைக் காதலிக்கிறேன். நான் மொய்தீனைக் காதலிப்பதைக் காட்டிலும் பத்தாயிரம் மடங்கு அதிகமாக அவர் என்னைக் காதலிக்கிறார். நீ என்னைக் கட்டாயப்படுத்தினால் என் பிணத்தைத்தான் கல்யாணம் செய்ய முடியும்...’’ என்கிறாள்.

இந்தப் படத்துக்காக ஏழு வருடங்கள் உழைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.விமல். குறிப்பாக திரைக்கதை எழுத மட்டும் மூன்று வருடங்களாகி இருக்கிறது. இத்தனைக்கும் இவரது முதல் படம் இது. படத்தைப் பார்த்த பிறகு பிருத்விராஜ் மொய்தீனாகவும் பார்வதி காஞ்சனமாலாவாகவுமே மனதில் நிற்பார்கள். அந்தளவுக்கு அசலான நடிப்பு. படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றும் புதிதாக இருக்கிறது.

தொகுப்பு:த.சக்திவேல்