ஆக்ஷன் மசாலா!
‘நெட்பிளிக்ஸி’ல் பத்து கோடிக்கும் அதிகமானோர் பார்த்து வைரலாக்கிய படம், ‘எக்ஸ்ட்ராக்ஷன்’. இந்த வருடத்தின் ஆக்ஷன் தர்பார் என்று இந்த ஹாலிவுட் படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
 தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது. சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் கொடிகட்டிப் பறந்த இந்தியர் மகாஜன். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு ஓவி என்ற ஒரு மகன் இருக்கிறான். சாஜு என்பவரின் பாதுகாப்பில் இருக்கும் ஓவி பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். நண்பர்களுடன் வெளியே செல்லும்போது ஓவி கடத்தப்படுகிறான். மகன் கடத்தப்பட்டதை அறிந்த மகாஜன், சாஜுவிடம் ‘‘மகனைக் காப்பாற்றவில்லை என்றால் உன் குடும்பத்தையே அழித்துவிடுவேன்...’’ என்று மிரட்ட, சாஜு ஓவியைத் தேடிப்போகிறார். தொழில் போட்டி காரணமாக பங்களாதேஷைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் அமீர்தான் ஓவியைக் கடத்தி வைத்திருக்கிறான் என்ற விஷயம் தெரியவருகிறது.
டாக்கா நகரமே அமீரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஓவியை மீட்டு வர இந்த உலகத்திலேயே ஒருவன்தான் இருக்கிறான். அவன், கூலிப்படையைச் சேர்ந்த நாயகன் டெய்லர். இப்படியான சம்பவங்கள் செய்வது டெய்லருக்குப் புதிது இல்லை. ஆனாலும் அமீர் மாதிரியான ஒரு தாதாவிடம் மாட்டிக்கொண்ட ஓவியை மீட்பது அவ்வளவு சுலபமில்லை என்பது டெய்லருக்குத் தெரியும்.
இருந்தாலும் துணிச்சலாக களத்தில் இறங்குகிறான். டாக்காவுக்குள் நுழைந்து அமீரின் ஆட்களை மின்னல் வேகத்தில் அடித்து நொறுக்குகிறான். ஓவியை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு செல்ல முயலும்போது அமீர் விழித்துக் கொள்கிறான். டாக்காவில் உள்ள ஒவ்வொரு துப்பாக்கியின் குறியும் டெய்லரை நோக்கியே காத்திருக்கிறது. நாலாப்புறமும் அமீரின் ஆட்கள். லாக்டவுன் போல நகரமே ஸ்தம்பித்து விடுகிறது. இதுபோக காவல்துறையும் அமீரின் பக்கம். தனியாளான டெய்லர் ஆயிரம் எதிரிகளைக் கடந்து எப்படி ஓவியை வீடு கொண்டு போய்ச் சேர்த்தான்... ஓவியை மீட்க வந்த சாஜு என்ன ஆனான்... என்பதை ஆக்ஷனும் திரில்லருமாக கலந்துகட்டி அட்டகாசம் செய்திருக்கிறார்கள். டாக்காவின் நெருக்கடியான தெருக்களில் நடக்கும் கார் சேஸிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டுகின்றன. கையில் துப்பாக்கி, கத்தியுடன் டெய்லரைத் தேடி வரும் சிறுவர்கள் அதிர வைக்கிறார்கள்.
‘‘நீ எவ்வளவு பெரிய கெட்டவனாகக் கூட இருக்கலாம். ஆனால், உன்னையும் மிஞ்சி ஒருத்தன் இருப்பான்...’’ என்று அமீர் பேசும் வசனங்கள் எல்லாம் பன்ச்.ஜெட் வேகத்தில் செல்லும் திரைக்கதையை எழுதியிருப்பவர் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமி’ன் இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரூஸோ. டெய்லராக தூள் கிளப்பியிருக்கிறார் ‘தோர்’ கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். ஹாலிவுட்டின் முக்கியமான் ஸ்டண்ட்மேன் சாம் ஹார்கிரேவ் இயக்கிய முதல் படம் இது.
|