உலகை உலுக்கிய உயிர்கொல்லி நோய்கள்!



மினி தொடர் 17

ஐந்து கோடிப் பேரை காவு வாங்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ


வரலாற்றில் நிகழ்ந்த கொள்ளை நோய்கள் வரிசையில் மிகக் கொடூரமான கொள்ளை நோய்த் தாக்குதல் என்றால் அது ஸ்பானிஷ் ஃப்ளூ தாக்குதல்தான். 1918 -20 என இரண்டே ஆண்டுகளில் உலகம் முழுதும் ஐம்பது கோடிப் பேரைத் தாக்கியது. இது ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஐந்து கோடிப் பேர் உயிரிழந்தார்கள். நில, தேச வர்த்தமானங்களின்றி ஸ்பானிஷ் ஃப்ளூ பூமிப் பந்து முழுதும் பரவியது.

முதல் உலகப் போர் ஓய்ந்து மானுட சமூகம் சற்றே ஆசுவாசத்தில் இருந்த இரண்டாம் வருடம் ஸ்பானிஷ் ஃப்ளூ உலகைத் தாக்கியது.
பல நாடுகளிலும் துருப்புகள்கூட முழுமையாக விலகவில்லை. பல நாடுகள் போரின் பீதியிலிருந்து வெளியேறவில்லை. மீண்டும் எப்போது வேண்டுமானாலும் இன்னொரு போர் வரலாம் என்ற அச்சத்தில் இராணுவங்கள் இருந்தன.

போர் வந்ததுதான். ஆனால், அது மனிதர்களுக்கு இடையிலான போர் இல்லை! பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்களுடன் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளான நுண்ணுயிர்கள் போரிட்டன.ஸ்பானிஷ் ஃப்ளூ என அழைத்தாலும் இந்தக் கொள்ளை நோய் ஸ்பெயினிலிருந்து பரவியது அல்ல.

உலகப் போரால் பத்திரிகைச் சுதந்திரம் பெரும்பாலான நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், ஃப்ளூ பற்றிய செய்திகளை வெளியிட அனுமதியில்லை.

மறுபுறம் ஸ்பெயின் போரில் பங்கேற்காமல் நடுநிலை வகித்ததால் அங்கு பத்திரிகைகளுக்குக் கட்டுப்பாடு இல்லை. எனவே ஸ்பெயின் தேச பத்திரிகைகளில் மட்டும் ஃப்ளூ பற்றிய செய்திகள் அடிக்கடி வந்தன. இந்தக் காரணத்தாலேயே இது ஸ்பானிஷ் ஃப்ளூ என்று அழைக்கப்பட்டது.
இந்தக் கொள்ளை நோய்க்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் இருந்தது. செனகலில் பிரேசில் ஃப்ளூ எனப்பட்டது. பிரேசிலிலோ ஜெர்மானிய ஃப்ளூ எனப்பட்டது. போலந்து இதனை போல்ஷ்விக் ஃப்ளூ என்றது. போல்ஷ்விக் வீரர்கள் மூலமாக அந்த நோய் பரவியதாக நம்பியதால் இந்தப் பெயர் வந்தது.

ஆனால், ஸ்பானிஷ் ஃப்ளூ என்பதே பொதுவாகச் சொல்லப்பட்ட பெயர். இந்த நோய் எப்படி ஆரம்பித்தது எனப் பல்வேறு கருத்தாக்கங்கள் உள்ளன. அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் பறவைகளிடமிருந்து பன்றிக்குப் பரவிய காய்ச்சல் அங்கு முகாம் அமைத்திருந்த இராணுவ வீரர்களுக்குப் பரவியது. பிறகு, அவர்களிடம் இருந்து உலகம் முழுமைக்கும் பரவியது என்று ஒரு கருத்து உள்ளது.

ஃபிரான்ஸில் இருந்த படைவீரர்களுக்கு, வலசை வந்த பறவைகளிடம் இருந்து தொற்று ஏற்பட்டு பரவியது என்றும் கருதப்படுகிறது.
போரின்போது தொழிலாளர் பற்றாக்குறை நிலவியதால் சீனாவில் இருந்து 94 ஆயிரம் தொழிலாளர்களை இங்கிலாந்து தன் நாட்டிற்கு அழைத்து வந்தது. 1917ல் சீனாவில் சிறிய அளவில் இருந்த பறவைக் காய்ச்சல் அந்தத் தொழிலாளர்கள் மூலமாக ஐரோப்பாவில் பரவியது என்றும் கருதப்படுகிறது.
சாதாரண காய்ச்சலாக ஆரம்பித்த ஒரு நோய், நிமோனியாவாக மாறி நுரையீரலில் நீர்கோர்த்து அதிக பாதிப்பை உண்டாக்கியதை இராணுவ முகாம்களில் இருந்த மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

நெருக்கமான முகாம்களில் வசித்து வந்த இராணுவ வீரர்களுக்கு எளிதில் அந்த நோய் பரவியது. போரின்போது நடைபெற்ற பாரிய இடப்பெயர்வுகளும் இராணுவங்களின் படையெடுப்புகளும், நகர்வுகளும் இந்த நோயை உலகம் முழுவதும் பரப்பின. போர் முடிந்து வீட்டிற்குச் சென்ற வீரர்களிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவியது.

சுவாசப்பாதைத் தொற்றை உருவாக்கும் கிருமிகள் எப்போதுமே கொள்ளை நோய்களாகப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.
இன்றைய கொரோனாவும் கூட இப்படியான ஒரு இன்ஃப்ளூயன்ஸாதான். ஒப்பீட்டளவில் மரணவிகிதம் குறைவு என்பதே இன்றைய ஆறுதல்.
மற்ற நோய்களைப் போல் அல்லாமல் ஸ்பானிஷ் ஃப்ளூ இளவயது திடகாத்திரமான நபர்களையே அதிகம் பலி கொண்டது. வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பே உண்டானது.

இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தக் கொள்ளை நோய் ஏற்படுவதற்கு முன் வந்த சாதாரண ஃப்ளூ காய்ச்சல்களால் குழந்தைகளும் பெரியவர்களும் பாதிக்கப்பட்டு ஃப்ளூ கிருமிக்கு எதிர்ப்பு சக்தி பெற்றிருந்தனர். சாதாரண ப்ளூவால் பாதிக்கப்படாத உடல்நலமிக்க இளைஞர்களை ஸ்பானிஷ் ஃப்ளூ தாக்கி அதிக இறப்பை உண்டாக்கியது என ஒரு கருதுகோள் உள்ளது.

‘சைட்டோகைன்’ என்பது ஒரு இரசாயனம். நோய் தாக்கும்போது உடலில் உற்பத்தியாகும். இந்த சைட்டோகைன்தான் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களை எச்சரித்து நோய்த் தாக்குதலை எதிர்த்துப் போராடத் தூண்டும்.

ஸ்பானிஷ் ஃப்ளூ இந்த சைட்டோகைனை அளவுக்கு அதிகமாகத் தூண்டியதால், வெள்ளை அணுக்கள் நோயுற்ற நபரின் சொந்த உடல் பாகங்களையே தாக்கி மரணத்தை விளைவித்தன என்ற கருதுகோளும் உண்டு. இதனால்தான் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உடைய இளவயதுக்காரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்றும் கருதப்படுகிறது.

ஸ்பானிஷ் ஃப்ளூ மூன்று அலைகளாகத் தாக்கியது. முதல் அலை 1918ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு மறைந்தது. வீரியமிக்க இரண்டாவது அலைதான் கடும் பாதிப்பை நிகழ்த்தியது. இது, 1918ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. மிக அதிக அளவில் இறப்பை ஏற்படுத்தியது இந்த இரண்டாம் தாக்குதல்தான்.

உலகில் இருந்த எந்த அரசாலுமே இந்நோயைக் கட்டுப்படுத்த இயலவில்லை. வலிமைமிக்க அமெரிக்க அரசாங்கமே திணறியது. பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்த இந்தியாவில் சுமார் ஒன்றரைக் கோடிப்பேர் இறந்தனர். பல நாடுகளில் இறந்தவர்களைப் புதைக்கக்கூட ஆட்கள் இல்லை.
அமெரிக்காவில் ஒவ்வொரு வீட்டிலும் இறந்தவர்களின் உடலை துணியில் சுற்றி தினமும் காலையில் வரும் டிரக்கில் போட்டுவிட வேண்டும். அவர்கள் மொத்தமாக அடக்கம் செய்துவிடுவர் என்கிற துயரமான நிலை இருந்தது.

அங்கு பல மாகாணங்களில் திரையரங்குகள் மூடப்பட்டன. பொது இடங்களில் கூட்டம் சேர்வது தடைசெய்யப்பட்டது. கூட்டத்தைத் தவிர்க்க, காலையில் சில கடைகள் மாலையில் சில கடைகள் என ஷிஃப்ட் முறையில் கடைகள் திறக்கப்பட்டன. சில மாகாணங்களில் பொது இடத்தில் இருமுவதும், தும்முவதும் குற்றமாக்கப்பட்டது. ஆயினும் காவலர்கள் இருமல், தும்மல் உடையவர்களை நெருங்கி கைது செய்ய அஞ்சினர்.

அதிக பாதிப்பை உண்டாக்கிய இரண்டாவது அலைக்குப் பிறகு நோய் தன்னால் அடங்கியது. மூன்றாம் அலை பெரிய பாதிப்பை உண்டாக்கவில்லை.
கடுங்குளிர் பிரதேசமான அலாஸ்கா பகுதியில் ஒரு கிராமமே இந்த ஃப்ளூ காய்ச்சலால் இறந்தது. அங்கு புதைக்கப்பட்ட உடல்களில் இருந்து வைரஸ் கிருமியைப் பிரித்தெடுத்து அதன் மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

அந்த ஆய்வில் இருந்து H1N1 இன்புளூயன்சா வைரஸால் ஸ்பானிஷ் ஃப்ளூ உண்டானது என்பதைக் கண்டறிந்தனர். இதே வைரஸ் நோய்தான் பிற்காலத்தில் பறவைக் காய்ச்சலாக பல நாடுகளுக்குப் பரவியது.இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் ஸ்பானிஷ் ஃப்ளூ ஏற்படுத்திய பாதிப்புகள் மிக அதிகம். அப்போதைய மதராஸ் மாகாண அரசு இதனைக் கட்டுப்படுத்த பலவிதமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. ஆனாலும் கொத்து கொத்தாக மரணங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருந்தன.

பிறகு, ஒருவழியாக பருவ மாற்றத்தாலோ என்னவோ தானாகவே அந்தக் கொள்ளைநோய் கட்டுப்பட்டது. இன்று இதற்குத் தடுப்பூசியும் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் ஸ்பானிஷ் ஃப்ளூ ஆபத்தான நோயாகவே கருதப்படுகிறது.

(உயிர்க்கொல்லிகளுக்கு எதிரான போர் தொடரும்)

- இளங்கோ கிருஷ்ணன்