அணையா அடுப்பு - 12



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

வேங்கட ரெட்டியாரின் கருங்குழி இல்லத்தில் 1858ம் ஆண்டு தொடங்கி ஒன்பது ஆண்டுகள் வசித்தார் வள்ளலார்.இராமலிங்கம், வள்ளலாராக தமிழ் பேசும் நானிலமெங்கும் பிரசித்தி பெற ஆரம்பித்த காலக்கட்டம் இதுதான்.குறிப்பாக சுந்தர சுவாமிகளுடனான தர்க்கத்தில் அவர் வென்ற நிகழ்ச்சி அந்நாளில் வெகு பிரபலம்.கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் தமிழிலும் சைவத்திலும் புலமை மிக்கவர்.

அவர் சிதம்பரத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார்.சேதி கருங்குழிக்கு வந்தது.அவரைச் சந்திப்பதற்காக உடனே சிதம்பரத்துக்கு விரைந்தார் வள்ளலார்.
சந்திக்க அனுமதி கேட்டு ஆளும் அனுப்பினார்.“வள்ளலார் என்னை வந்து சந்திப்பதா? நானே வருகிறேன்...” என்று உடனே கிளம்பி வள்ளலார் இருந்த இடத்துக்கே சுவாமிகள் வந்தார்.இருவரும் பரஸ்பரம் நலனை விசாரித்துக்கொண்டு பொதுவான விஷயங்களைப் பேசத் தொடங்கினார்கள்.
ஏதோ ஒரு விஷயத்தில் கருத்து மாறுபாடு வந்தது.

சைவம் குறித்து தனக்குத் தெரியாதது எதுவுமில்லை என்கிற தன்னம்பிக்கையில் இருந்த சுந்தர சுவாமிகள், வள்ளலாரை தர்க்கத்துக்கு அழைத்தார்.
அந்தக் காலத்தில் தர்க்க மன்றங்கள் மிகவும் பிரபலம்.ஒரு விஷயத்தில் இருவேறு கருத்துக் கொண்டவர்கள் கோயில் மண்டபம் போன்ற இடங்களில் எதிரும் புதிருமாக விவாதிப்பார்கள்.குறிப்பிட்ட விஷயத்தில் ஆர்வம் கொண்ட பார்வையாளர்கள் கூடுவார்கள்.

தர்க்கத்தில் யார் வென்றார் என்று தீர்ப்பு சொல்ல நீதிபதிகளும் கூட நியமிக்கப்படுவதுண்டு.நன்கு கற்றறிந்தோர்தான் தர்க்கம் புரிவார்கள் என்பதால் வெற்றி, தோல்வி சுலபமாக கிடைக்காது.மாதக்கணக்கில் கூட தர்க்கம் நீடித்ததுண்டு.இவையே பின்னாளில் பட்டிமன்றக் கலாசாரத்துக்கு அடிகோலியவை.வள்ளலாரும், கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளும் தத்தமது ஆதாரத்துக்கு தேவையான குறிப்புகள் மற்றும் நூல்களோடு தர்க்கப் போர் புரிய அமர்ந்தார்கள்.வள்ளலாருக்கு நேரெதிராக அமர சுந்தரசுவாமி மறுத்தார்.

வாதத்தைப் பொறுத்தவரை எதிரே அமர்ந்து வாதித்தால் தம்முடைய பலம் எதிரிக்குப் போய்விடும் என்பது நம்பிக்கை.இருவரின் வாதங்களும் நிமிடங்களைக் கடந்து, மணித்துளிகளைக் கடந்து இரவும் பகலுமாகத் தொடர ஆரம்பித்தது.இப்படியொரு தர்க்கம் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்டு சிதம்பரத்தில் மட்டுமின்றி சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்தும் மக்கள் வண்டிகட்டி வந்து பார்வையாளர்களாக அமர்ந்தார்கள்.

சுமார் மூன்று நாட்கள் வாதம் நீடித்த நிலையில், ஒருகட்டத்தில் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டார் சுந்தரசுவாமிகள்.
“என் வாதம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. உங்களுக்கு சரிக்கு சமமாகத்தான் வாதாடினேன். நான் எங்கு தவறு செய்தேன்?” என்று, வென்ற வள்ளலாரிடமே சந்தேகம் கேட்டார் சுவாமி.

“சரி. நாம் இருவரும் இடம் மாற்றி அமர்வோம். நான் உங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கிறேன். நீங்கள் என் தரப்பு வாதத்தை எடுத்து வையுங்கள்…” என்று வேண்டுகோள் விடுத்தார் வள்ளலார்.ஏற்கனவே வென்றுவிட்ட வள்ளலாரின் வாதத்தை எடுத்துக் கொண்டு, வள்ளலார் பேசிய அதே அம்சங்களை முன்வைத்து வாதிட ஆரம்பித்தார் சுந்தர சுவாமி.

தன் கருத்துக்கு ஒத்துவராத எதிர்வாதம் என்றாலும், நன்கு பயிற்சி பெற்ற வழக்கறிஞரின் லாவகத்தோடு பேசிப் பேசி மடக்கினார் வள்ளலார்.
இம்முறையும் வள்ளலாருக்கே வெற்றி.அசந்து போனார் சுந்தர சுவாமி.“ஞானத்தின் உறைவிடம் நீங்கள்...” என்று கூறியவாறே ஓடிவந்து வள்ளலாரைக் கட்டியணைத்துக் கொண்டார்.தன் இடுப்பில் துணிப்பையில் மடித்து வைத்திருந்த திருநீறை எடுத்து வள்ளலாரின் நெற்றியில் பூசினார்.
தனக்கும் திருநீறு பூசும்படி வள்ளலாரிடம் கேட்டார்.

வள்ளலார் மறுத்தார்.“வெள்ளையுடை அணிந்தவன், காவி உடை அணிந்தவருக்கு திருநீறு பூசமாட்டேன். அது உலகநியதியும் அல்ல...” என்றார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் வள்ளலாரைக் காணவும், அவரது பேச்சுகளைக் கேட்கவும் கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டார்கள்.
கருங்குழியில் தங்கியிருந்த காலக்கட்டத்தில்தான் தமிழ்மொழியின் மகத்தான சாதனைகளுள் ஒன்றான திருவருட்பாவின் பெரும்பாலான பகுதியை எழுதினார் வள்ளலார்.

பகலிலே மக்களைச் சந்திப்பது, பேசுவது என்றிருந்த அவர் இரவு முழுக்க எழுதிக்கொண்டே இருப்பார்.ஓசையற்ற வேளைகளில்தான் அவரது மனதுக்குள் ஓங்காரம் கேட்கும்.எழுத்தாணியை காகிதத்தில் பதித்தாரெனில் நேரம் காலம் பார்க்காமல் அருவி போல எழுத்துகளைக் கொட்டிக் கொண்டே இருப்பார்.அகல் விளக்கொளி மட்டுமே துணை.வேங்கட ரெட்டியாரின் மனைவி முத்தியாலு அம்மாள், அருகிலிருந்த கிராமத்தில் உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.வள்ளலாருக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்துவிட்டு தகவல் சொன்னார்.

“சுவாமி, உங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து வைத்திருக்கிறேன். காலையில் வந்துவிடுவேன்…”
ஊருக்கு வந்த பின்னர்தான் முத்தியாலு அம்மாளுக்கு, தான் ஒரு விஷயத்தை மறந்துவிட்டது நினைவுக்கு வந்தது.
‘ஆஹா… சுவாமிகள் இரவு முழுக்க எழுதிக் கொண்டிருப்பாரே? அகல் விளக்குக்கு அவ்வப்போது எண்ணெய் ஊற்ற வேண்டுமே? எண்ணெய்ச் சட்டியை எடுத்துவைக்காமல் வந்துவிட்டோமே?’

உறவினர் வீட்டு விசேஷத்தில் நாட்டமில்லாமலேயே கலந்து கொண்டார்.விடிவதற்கு முன்பாகவே ஊருக்குக் கிளம்பி வந்தார்.அந்த விடியல் வேளையிலும் வள்ளலார், எழுதிக்கொண்டே இருந்ததைக் கண்டார்.அகல் விளக்கும் எரிந்து கொண்டே இருந்தது!“சுவாமிகள் மன்னிக்க வேண்டும். எண்ணெய்ச் சட்டியை எடுத்து வைத்துவிட்டுச் செல்ல மறந்து விட்டேன்…”“பரவாயில்லை. இதை ஊற்றினாலும் எரிகிறது…” என்று சொல்லியவாறே அருகிலிருந்த சிறிய பானையைக் காட்டினார்.
“சுவாமீ… அது தண்ணீர்ப் பானை!’’

“அதனாலென்ன? தண்ணீரை ஊற்றினாலும் இந்த விளக்கு எரிகிறது…” என்று சொன்னதோடு இல்லாமல், தண்ணீரை விட்டும் காட்டினார்.
இரவு முழுக்க தண்ணீரிலேயே விளக்கெரிந்த விஷயத்தை முத்தியாலு அம்மாள் சொன்னபோது ஊரே மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டது.
தண்ணீரில் விளக்கெரிந்த இச்சம்பவத்தை மதுரை ஆதீனமாக இருந்த சிதம்பர சுவாமிகள், வள்ளலாரின் முதல் மாணவரான தொழுவூர் வேலாயுத முதலியார் ஆகியோர் அவரவர் எழுதிய கவிதைகள் மூலமாக உலகுக்குச் சொன்னார்கள்.வள்ளலாரே கூட தன் சென்னை நண்பர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்த ஆச்சரியமான விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.

“மெய் விளக்கே விளக்கல்லால் வேறோர்
விளக்கில்லை என்றார் மேலோர்; நானும்
பொய் விளக்கே விளக்கென உட்பொங்கி
வழிகின்றேன் ஒரு புதுமையன்றே
செய் விளக்கும் புகழுடைய சென்னை நகர்
நண்பர்களே செப்பக் கேளீர்
நெய் விளக்கே போன்றொரு தண்ணீர்
விளக்கும் எரிந்தது சந்நிதியின்
முன்னே”

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்