ரோபோட்டிக் ஸ்ட்ரெக்சர் ஆம்புலன்ஸ்!



கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வந்தாச்சு...

இன்று மனித வாழ்வின் அத்தனை அர்த்தங்களையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ் தலை கீழாகப் புரட்டிப் போட்டு அச்சம் கொள்ளச் செய்துள்ளது.தங்களின் உயிருக்குயிரானவர்களை இழந்தவர்கள், உடலைத் தொடவும் முடியாமல், நெருங்கவும் முடியாமல், இறுதிப் பயணத்திலும் பங்கேற்க முடியாமல் கோவிட் வைரஸால் மனித மனம் படும்பாடு வார்த்தைகளால் வடிக்க முடியாதது.  

குடும்பத்தினரும், உறவினர்களும் தூரத்தில் நின்று உடலைப் பார்க்க முடியாமலே கதறுவதும்... தினம் தினம் கொல்லாமல் கொல்கிறது இந்த கொடிய அரக்கன்.கொரேனாவால் இறந்தவர்களது உடல் அடக்கம் மிகப் பெரும் துயரமாக மாறி நிற்க... தொற்று அச்சத்தில், இறந்தவரது உடல்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றுவது, பயத்தால் குழிக்குள் உடலை தூக்கி வீசுவது, ஆள் இல்லாத ஒதுக்குப் புறங்களில் உடல்களை போட்டுவிட்டு வருவது என நாளுக்கு நாள் துயரங்கள் தொடர்கின்றன.  

கொரோனாவால் இறந்தவர்களது உடல் அடக்கம் மிகப் பெரும் துயரமாக மாறி நிற்க... தொற்று அச்சத்தில், இறந்தவரது உடல்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றுவது, பயத்தால் குழிக்குள் உடலை தூக்கி வீசுவது, ஆள் இல்லாத ஒதுக்குப் புறங்களில் உடல்களை போட்டுவிட்டு வருவது என நாளுக்கு நாள் துயரங்கள் தொடர்கின்றன.  

இது காண்பவர் மனதை கலங்கடிக்கிறது. மனிதத் தன்மையற்ற இந்த செயலுக்கு முடிவு கட்டும் எண்ணத்திலும், களப் பணியாளராகச் செயல்படும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் உடல் அடக்கம் செய்யும் மயானப் பணியாளர்களை பாதுகாக்கும் விதமாகவும் சென்னையைச் சேர்ந்த எம்ஆட்டோ (Mauto) மற்றும் ஷாபி (Zafi Robot) ரோபோ நிறுவனம் இணைந்து, இறந்த உடல்களை முழு மரியாதையோடு பாதுகாப்பாக நல்லடக்கம் செய்யும் ரோபோட்டிக் ஸ்ட்ரெக்சரை குறுகிய காலத்தில் உருவாக்கியுள்ளனர்.

புதைப்பதற்காகத் தோண்டப்பட்ட குழிவரை உடலை எடுத்துச் செல்லும் ரோபோட்டிக் ஸ்ட்ரெக்சர், உடலை நேரடியாக குழிக்குள் இறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதாவது, பேட்டரியால் இயங்கும் த்ரீ வீலர் எலெக்ட்ரிக் மினி ஆம்புலன்ஸ் ஒன்றிற்குள் அட்னாமஸ் ரோபோட்டிக் ஸ்ட்ரெக்சர் செட் செய்யப்பட்டுள்ளது.

மினி ஆம்புலன்ஸ் புதைகுழி அருகே சென்று நின்றதும், மனிதர்கள் இறந்தவர் உடலை நெருங்கித் தொட்டுத் தூக்காதவாறு ஸ்ட்ரெக்சர் தானாகவே இறந்த உடலோடு நகர்ந்து குழிவரை சென்று, தயாராகத் தோண்டி வைக்கப்பட்டிருக்கும் குழிக்குள் அப்படியே உடலை இறக்கும்படியாக இந்த ரோபோட்டிக் ஸ்ட்ரெக்சர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இறந்தவரை சிறப்பிக்கும் வகையில் ஸ்ட்ரெக்சரில் செட் செய்யப்பட்டுள்ள மதம் சார்ந்த மந்திரங்கள் ஒலிக்கச் செய்யப்பட்டு, பூக்கள் உடல் மீது தூவப்படும். இதில் ஒரு கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. மயானம்வரை வந்து கலந்துகொள்ள முடியாதவர்கள் தங்கள் உறவினரின் நல்லடக்க இறுதி மரியாதையை நேரலையாகப் பார்க்கலாம்.

‘‘கொரோனா என்கிற கொடிய அரக்கனால் அனைத்துக் கிராமங்களுக்குள்ளும் ஆம்புலன்ஸ்கள் செல்ல வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது. தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் குக்கிராமங்களின் குறுகிய வீதிகளுக்குள்ளும் நுழைந்து, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே எங்கள் நோக்கம்.

கிராமத்தின் சாலைகளிலும் பயணிக்கும் விதமாக பேட்டரியால் இயங்கும் த்ரீ வீலர் எலெக்ட்ரிக் மினி ஆம்புலன்ஸ்கள் எங்களிடம் தயார் நிலையில்  உள்ளன. அத்துடன் இப்போது ரோபோட்டிக் ஸ்ட்ரெக்சரையும் இணைக்கிறோம்.

டெமோ செய்து காண்பிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்காக காத்திருக்கும் எங்கள் தயாரிப்பு, 15 நாட்களில் புழக்கத்திற்கு வருவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது...’’ என்கிறார்கள் எம்ஆட்டோ (Mauto) மற்றும் ஷாபி (Zafi Robot) ரோபோ நிறுவனத்தினர்! சூழல்கள் மாறும்போது எதையும் இழந்து விடாமலிருக்க அதற்கான தீர்வுகளையும் தேடத்தான் வேண்டியிருக்கிறது. மாற்றம் என்பதைத் தவிர அத்தனையும் மாறக் கூடியது. இறப்பு மட்டும் விதிவிலக்கா என்ன?!  

மகேஸ்வரி நாகராஜன்