நியூஸ் நூடுல்ஸ்



ரயில் Boy!

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் அத்வைத் கிருஷ்ணா செய்த காகித ரயில்தான் டுவிட்டரில் ஹாட் டாக்.10 ஏ4 சீட், 33 செய்தித்தாள்கள் மற்றும் பசையைக் கொண்டு இந்த ரயிலை உருவாக்கியிருக்கிறான். அதுவும் மூன்று நாட்களில்.
ரயிலின் புகைப்படம், அதன் செயல்முறையை வீடியோவாக்கி இணையத்தில் பகிர, ஒரே நாளில் பிரபலமாகிவிட்டான் அத்வைத். இந்திய ரயில்வே அமைச்சகமும் சிறுவனைப் பாராட்டியிருப்பது இதில் ஹைலைட்.

காஸ்ட்லி காரில் மாம்பழம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வருபவர் முகம்மது. அவரது லேட்டஸ்ட் ஐடியா பிசினஸில் புது டிரெண்டையே உருவாக்கியிருக்கிறது. ஆம்; அவரது கடையில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் மாம்பழம் வாங்கினால் விலையுயர்ந்த காரான லம்போர்கினியில் டெலிவரி செய்கிறார். அத்துடன் அந்தக் காரில் கொஞ்ச தூரம் வாடிக்கையாளர்கள் பயணம் செய்யவும் ஏற்பாடு செய்திருக்கிறார். இப்போது மாம்பழ ஆர்டர்கள் குவிகின்றன!

லாட்டரி Man!

வாழ்க்கையில் ஒருமுறைதான் அதிர்ஷ்டமடிக்கும் என்பார்கள். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த கிளார்க்கிற்கு இரண்டாம் முறையும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்து வைரலாகிவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு லாட்டரியில் பரிசு விழுந்து மில்லியன் கணக்கான பணத்தை அள்ளினார். சமீபத்தில் அவருக்கு சுரண்டல் லாட்டரியில் 4 மில்லியன் டாலர் பரிசு விழுந்திருக்கிறது. இறந்துபோன தந்தையின் நினைவாக ஒரு நாணயத்தை பல வருடங்களாக வைத்திருந்தார். அந்த நாணயத்தில் லாட்டரியை சுரண்டிய போதுதான் கிளார்க்கிற்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது!

ரசிகர்களான செடிகள்!

கொரோனா வைரஸால் கடுமையான பாதிப்புக்குள்ளான ஒரு நாடு ஸ்பெயின். மூன்று மாத லாக்டவுனுக்குப் பிறகு அங்கே இசை நாடகம் நடக்கும் அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் அமர்ந்து இசையை ரசிக்கலாம்.

கொரோனா பீதியால் யாரும் எட்டிப்பார்க்கவில்லை. அதனால் ரசிகர்கள் அமரும் இருக்கையில் செடிகளை வைத்துள்ளனர். அந்த செடிகளை ரசிகர்கள் போல கருதி இசைக் கலைஞர்கள் முன்னோட்டம் பார்த்திருக்கின்றனர்.

ட்ரோன் லைப்ரரி!

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நூலகராகப் பணிபுரிந்து வருபவர் கெல்லி. ஊரடங்கு காரணமாக மாணவர்களால் நூலகத்துக்கு வர இயலாத நிலை. அதனால் எப்படியாவது மாணவர்களுக்கு வேண்டிய புத்தகத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார் கெல்லி. ட்ரோன் மூலம் புத்தகங்களை டெலிவரி செய்யலாம் என்ற யோசனை அவருக்கு கைகொடுக்க உடனே செயல்படுத்திவிட்டார். உலகிலேயே ட்ரோன் மூலம் நூலகத்திலிருந்து புத்தகங்களை டெலிவரி செய்வது இதுதான் முதல்முறை.

கடலுக்கு மேல் குடில்கள்!

பிரென்ச் பொலினீஸியாவில் சுமார் 12 சதுர மைல்கள் பரப்பளவில் விரிந்திருக்கும் ஒரு குட்டித் தீவு போரா போரா. அரிதான முத்துகளாலும் பவளங்களாலும் சூழ்ந்துள்ள இந்தத் தீவில் தண்ணீருக்கு மேல் அழகழகான குடில்களை அமைத்திருக்கின்றனர். அங்கே தங்கி கடலின் அழகையும் தீவின் வசீகரத்தையும் ரசிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் போரா போராவை நோக்கி படையெடுத்தனர்.

ஓர் இரவு தங்குவதற்கு கட்டணம் 12 ஆயிரம் ரூபாய். இந்தத் தீவிலிருந்து கொண்டு சூரிய உதயம், அஸ்தமனத்தைப் பார்ப்பது தனி அனுபவம் என்று பூரிக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். கொரோனா பீதியால் தீவு இப்போது அமைதியாக இருக்கிறது.

மாஸ்க்... மாஸ்!

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் மாணவர்களுக்குத் தேவையான மாஸ்குகளை மாணவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் உடுப்பியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி சிந்தூரியும் தன் பங்குக்கு மாஸ்குகளைத் தைத்துக் கொடுத்துள்ளார். சிந்தூரிக்கு இடது முழங்கைக்குக் கீழ் கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே போனில் 4 கேமராக்கள்!

இருபதாயிரம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் நல்ல தரமான போன் வேண்டும் என்பவர்களுக்கு குட் சாய்ஸ் ‘ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்’.
6.67 இன்ச்சில் ஃபுல் ஹெச்.டி மெகா டிஸ்பிளே, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 512 ஜிபி வரை ஸ்டோரேஜை நீட்டித்துக்கொள்ளும் வசதி, 5020mAh பேட்டரி திறன், 64 எம்பியில் முன்னணி கேமரா, 8 எம்பியில் அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா, 5 எம்பியில் மேக்ரோ லென்ஸ் கேமரா, 2 எம்பியில் டெப்த் சென்சார் கேமரா என நான்கு பின்புற கேமராக்கள், செல்ஃபிக்குத் தனியாக 32 எம்பியில் ஒரு கேமரா என
அசத்துகிறது இந்த போன். மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. விலை. ரூ.16,499-லிருந்து ஆரம்பம்.

அநாதை யானைகளின் காட்ஃபாதர்!

கென்யாவில் உள்ள ஒரு வறண்ட காடு. நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் முன்னால் செல்ல அவருக்குப் பின்னால் ஐம்பதுக்கும் மேலான யானைகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக செல்கின்றன. சில நொடிகள் ஓடும் இந்தக் காட்சிதான் டுவிட்டரில் செம வைரல். இதிலென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? அந்த யானைகள் எல்லாமே குட்டிகள். பெற்றோர் யாரென்றே தெரியாத அனாதைகள். இவ்வளவு யானைகளைப் பராமரித்து வருபவரின் பெயர் எங்கேயும் வெளிப்படவில்லை.

ஆளில்லா கடையில் விற்பனை ஜோர்!

மிசோராம் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய டவுன் பகுதி செலிங். அங்கே சாலையோரத்தில் உள்ள கடைகள் ரொம்பவே ஸ்பெஷல். காரணம், அந்தக் கடைகளில் பெரும்பாலும் யாருமே இருக்க மாட்டார்கள். ஆம்; ஆளில்லாத கடைகள் அவை. உங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துவிட்டு அருகில் இருக்கும் பெட்டியில் பணத்தைப் போட்டுவிட வேண்டும். அவ்வளவுதான். வாடிக்கையாளர்களும் சரியாக பணத்தைப் பெட்டியில் போட்டுவிடுவதுதான் இதில் ஹைலைட்.

த.சக்திவேல்