நம் உணர்வுக்கு வர்ணம் பூசுவதுதான் ஒளிப்பதிவு!



“எங்க அப்பாவுக்கு துவக்கப்பள்ளியில் ஆசிரியர் பணி. கொல்லிமலை அடிவாரத்தில் எங்கள் கிராமம். ‘டிவி பார்த்தால் பையன் கெட்டுப்
போயிடுவான்னு’ வாங்கல.

இஞ்சினியரிங் படிக்க நினைச்சேன். அதற்கான மார்க் இல்லை. சினிமா பத்தி ஒண்ணுமே அப்பத் தெரியாது. எந்தப் படம் போட்டாலும் உட்கார்ந்து பார்ப்பேன். ஒரு படம் பார்க்கணும் அவ்வளவுதான். அப்பா என்னை சென்னையில் விஸ்காம் சேர்த்தது கூட அது கம்யூட்டர் கோர்ஸ்னு நினைச்சுதான். அப்புறம்தான் சினிமா ஆசை ஈர்த்துக் கொண்டது.

‘பூ’ படத்தில் அக்கம் பக்கம் இருக்குற மெட்டீரியலை வச்சுதான் ஷூட் பண்ணினோம். ரொம்பக் கஷ்டமாக இருந்தது. படம் முடிந்ததும் கிடைத்த மரியாதை வேற ரேன்ச். ஒளிப்பதிவைப் பொறுத்தவரை நமக்கு ஒரு கலை தெரியும்.

டைரக்டருக்கு ஒரு கலை தெரியும். அது இரண்டும் மிக்ஸ் ஆகும்போதுதான், நல்ல சினிமாவா வேறு கலை பிறக்குது...’’ சித்திரமாக பேச ஆரம்பிக்கிறார் ஒளிப்பதிவாளர், இயக்குநர் பி.ஜி.முத்தையா. ‘பூ’. ‘கண்டேன் காதலை’ என இரு வேறு களங்களில் வித்தியாசம் காட்டியவர்.

எப்படி ஒளிப்பதிவுதான்னு தெரிஞ்சு வர்றீங்க?

அப்படி எல்லாம் எந்த திட்டமும் இல்லாமல் வந்தவன் நான். இன்ன வேலைக்கு இன்ன பாடம் எடுத்து படிக்கணும்னு கூடத் தெரியாது. சென்னையில் விஸ்காம் முடிச்சுட்டு ராஜரெத்தினம், ரவிவர்மன், எஸ்.ஆர்.கதிர்னு இவர்களிடம் 5 வருஷம் வேலை பார்த்தேன்.

திரும்பிப் பார்த்தால் அத்தனை வருஷமும் ஒண்ணுமே சாதிக்கலை. உடனே ஊருக்குப் போயி அம்மா மடியில் படுத்துக்கிட்டு அழுதேன். அம்மா என்னை ஆறுதல்படுத்தி, ‘ஒரு தடவைப்போய் பாரு. சரியாப் படலைன்னா அப்படியே திரும்பி வந்திடு. நாங்க பாத்துக்குறோம் உன்னை’ எனத் தட்டிக்கொடுத்து அனுப்புனாங்க.

டைரக்டர் மீரா கதிரவன் எடுத்த, நான் ஒளிப்பதிவு செய்த குறும்படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டர் சசி எனக்கு ‘பூ‘ படம் கொடுத்தார்.
ஒளிப்பதிவைப் பொறுத்தவரை நாம் தனியாக ஒண்ணும் பண்ண முடியாது. இங்கே கனவு காண்பவர் இயக்குநர். அதை நிறைவேற்றுவதுதான் ஒளிப்பதிவாளர்.

இப்பவெல்லாம் எல்லா டைரக்டர்களும் நல்ல லைட்டிங் சென்சோடு வர்றாங்க. எனக்கு இது வேணும், இது வேண்டாம்னு சொல்கிற தெளிவிருக்கு. அதனால் டைரக்டர்களுடன் சிங்க் ஆனால், பிடிச்சதை பிரமாதமா கொண்டுவர முடியும். நான் பாட்டுக்கு வேலை பார்த்துக்கிட்டே இருப்பேன். அடுத்த கட்டம் எல்லாம் தெரியாது. இனி என்னன்னு பார்க்குறதே இல்லை. அடுத்தடுத்து நம்மை காலம் வந்து தூக்கிப் போயிக்கிட்டே இருக்கும்.
‘எனக்கொரு ஏணி கிடச்சா போதும். ஆனால், அந்த ஏணி எங்கே இருக்குதுன்னுதான் தெரியலைன்னு’ முழிச்சுக்கிட்டு இருந்தது ஞாபகம் வரும். என்னைவிடவும் திறமையானவர்களை வெளியே பார்க்கும்போது வெற்றிக்கான ரகசியத்தை புரிஞ்சுக்க முடியலை.

எப்படி இருக்கும் இனிமேல் சினிமா?

சினிமா ரொம்பவே மாறும். கண்ணுக்கு முன்னாடி சடசடன்னு மாற்றங்கள் வந்துக்கிட்டே இருக்கு. இன்னும் ஐந்து ஆறு வருஷத்துக்குள்ள VFX ஸ்டுடியோவோடு படத் தயாரிப்பு நிறுவனம் இருந்தால்தான் நிலைச்சு நிற்க முடியும்னு சொல்றாங்க. எங்கேயும் லொக்கேஷன் போக வேண்டாம். எந்த இடத்தையும், அழகையும், பிரமாண்டத்தையும் அந்த ஸ்டுடியோவில் கொண்டு வந்துடலாம். அதையெல்லாம் பார்க்க நம்பும்படியாகவும் இருக்கும்.

கேமராக்கள் எல்லாம் நவீனத்தின் எல்லையெத் தொட்டு தாண்டியும் நிக்குது. தொழில் நுட்பமா நாம் வேறு இடத்திற்கு போகவேண்டிய நேரம் இது.
எவ்வளவு தொழில் நுட்பம் புதுசுபுதுசா வந்து சேர்ந்தாலும் எல்லாமே நாம் கைகொள்கிற விஷயத்தில்தான் இருக்கு. இருட்டு, வெளிச்சம் இதுலகூட நிறைய வித்தியாசம் இருக்கு.

கோயில் கருவறைக்கு முன்னாடி நின்னு பாருங்க... அந்த இருட்டு முற்றிலும் வேற மாதிரி இருக்கும். நம் உணர்வுக்கு வர்ணம் பூசுறதுதான் ஒளிப்பதிவு. இந்தத் தொழில்ல சொல்லி தெரிஞ்சுக்கிறதவிடவும் அதிகமா பார்த்துத் தெரிஞ்சுக்கலாம். எப்படியாவது நாம சாகசம் பண்ணி அனுபவத்தை கதையோடு கலந்து ஆடியன்ஸ் மனசுக்கு பக்கமா கதையைக் கொண்டு வந்து வச்சுடனும். ஒளிப்பதிவாளனுக்கு அப்படி ஒரு பொறுப்பு இருக்கிறது நிஜம்.

திடீர் என்று தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் மாறிவிட்டீர்கள்…?
அப்பவும் நான் ஒளிப்பதிவை விடலையே! அது என் ஆத்மா. தயாரிப்பில் கொஞ்சம் எனக்கான சுதந்திரம் இருக்கு. வேண்டியதை, விரும்பியதை, நினைச்ச இடத்தில் செய்யலாம். சில முக்கியமான படங்கள் சொந்தத் தயாரிப்புலேயே உருவாகி வந்திருக்கு. சசிக்குமாரின் ‘சுப்ரமணியபுரத்தில்’ அவரே ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர். மற்ற விஷயங்களில் எஸ்.ஆர்.கதிர், அசோக் குமார் நிலைச்சு உறுதுணையா இருந்ததில், அந்தப் படம் இன்னைக்கு வரைக்கும் மைல்கல்.

எம்ஜிஆர், சிவாஜி படங்களில்கூட முக்கியமான படங்கள் அவர்களது சொந்தத் தயாரிப்புலே வந்திருக்கு. தயாரிப்பாளராக ஆனது எதேச்சையான விஷயம். திட்டம்போட்டு நடக்கனும்ங்குறது நம்ம கையிலையா இருக்கு? நமக்கு விதிச்சது இல்லாமல் எதுவும் நடக்காது. இப்ப ‘ராஜா மந்திரி’ தொடங்கி ‘காக்டெயில்’ வரைக்கும் 7 படங்கள் தயாரிப்பில் வந்துட்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் திட்டம் போட்டேன். வந்த பின்னாடி எல்லாமே அன்னன்னைக்கு வந்த விஷயம்தான்.

ஒரு ஒளிப்பதிவாளனாக, இயக்குநராக காற்றுப்போல, ஒளிபோல, யாரையாவது, எங்கேயாவது போய் அடைஞ்சுக்கிட்டே இருக்கணும். எப்படியாவது துளிர்த்துக்கிட்டே இருக்கணும். நொடிக்கு நொடி என்னை புதிப்பிச்சுக்கிட்டு இத்தனை வருடமா இயங்கிக்கிட்டு இருக்கேன். இந்த எல்லாமே வேண்டாம்னு சொல்லி அம்மா மடியில் படுத்து கதறுன பின்னாடி வந்த கருணை! அப்படியே இருந்துட்டு இன்னும் அடுத்த அடியை பதமா எடுத்து வைக்கிறேன்.

வாழ்க்கை எப்படி இருக்கு..?

முன் எப்போதையும்விட கனிவான மனநிலையை அடைஞ்சிருக்கேன். அம்மாவை நான் நல்லா பார்த்துக்கிட்டேன். என்னைவிட்டு அவங்க போனபோது மனம் துடிச்சு அழுதேன். அம்மாவை மறக்க முடியாது. அவரை மறந்தால் என்னை மறந்ததாகப் பொருள்.

இப்ப அப்பாவை என்கூட வச்சு பாதுகாக்கறேன். மனைவி தீபா, குழந்தைகள் விவின், ஆத்மிகா என மூன்று பேரும் என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறார்கள். அதனால் எங்கே சென்றாலும் வீட்டுக்கு வந்துவிடத் துடிக்கிறேன்!

நா.கதிர்வேலன்