உலகை உலுக்கிய உயிர்கொல்லி நோய்கள்!



மினி தொடர் 12

பிளேக்கின் மூன்றாவது வருகை!

பிளேக் (Plague) என்று பொதுவாகச் சொன்னாலும் இதில் மூன்று வகைகள் உள்ளன. பூபோனிக் (Bubonic), செப்டிசெமிக் (Septicemic), நிமோனிம் (Pneumonic) பிளேக்குகள் என்பார்கள். இதில் பூபோனிக் எனப்படும் கொப்புள வீக்க பிளேக்தான் 19ம் நூற்றாண்டு வரை அதிமாக உலகைச் சூறையாடியது.
இந்த பூபோனிக் பிளேக்கால், கால் மூட்டு, கைமூட்டு, அக்குள், கழுத்து போன்ற இடங்களில் வலியும் வீக்கமும் நிறைந்த உருளைக் கிழங்கு அளவுக்கு வட்டமான கொப்புளங்கள் உருவாகும். தாங்க முடியாத வலியும் சீழும், உதிரமும் பெருகும்.

இந்த பூபோனிக் பிளேக் வந்த ஏழே நாட்களில் ஒருவர் தாங்க முடியாத உடல் அவஸ்தைகளோடு மரணத்தைத் தழுவுவார். செப்டிசெமிக் பிளேக் என்பது கால் பாதங்களில் கறுநிறக் கொப்புளங்கள் உருவாவது. இது ஒருவகை ரத்தம் விஷமாகும் பண்புடைய பிளேக்.

இதிலும் நோயாளிக்கு மரண ஆபத்து நிச்சயம் உண்டு. மூன்றாவது வகையான நிமோட்டிக் பிளேக் இன்றைய காலத்தின் கொரோனா போன்றது. ஆனால், அதைவிடக் கொடியது. கொரோனா போலவே இதுவும் நுரையீரலைத் தாக்கிச் சிதைக்கும். பிறகு அங்கிருந்து ஒவ்வொரு உள்ளுறுப்பாக அழிக்கத் தொடங்கும்.

இத்தனை கொடூரமான பிளேக் கொள்ளை நோய்கள் மூன்றுமே வரலாற்றில் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தன என்றாலும் பூபோனிக் பிளேக்தான் நீண்ட நெடுங்காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவிய உயிர்பலிகளை நிகழ்த்திக்கொண்டிருந்தது.
பிளேக்கின் மூன்றாவது வருகையில் நிமோனிக் பிளேக்கும் இருந்தது.

பிளேக் நோயின் பரவலைப் பொதுவாக ஆய்வாளர்கள் மூன்று கட்டமாகப் பிரிப்பார்கள். முதல் பிளேக் பெருந்தொற்று கி.பி.541ம் ஆண்டு கிழக்கு ஐரோப்பியப் பகுதிகள், ஆப்பிரிக்கா உள்ளிட்டப் பகுதிகளையும் மத்திய கிழக்கின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பைஜாண்டிய பேரரசில் நுழைந்தது.
ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கிய இந்த முதல் தாக்குதல் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் இருநூறு வருடங்களுக்கு மேல் வரலாற்றில் நீடித்தது. இதை சென்ற அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்தோம்.

இரண்டாவது பிளேக் பெருங்கொள்ளை நோய் ஐரோப்பாவின் கறுப்பு மரணங்களோடு பதினான்காம் நூற்றாண்டில் தொடங்கியது. கி.பி.1346ல் தொடங்கிய இந்தப் பெருந்தொற்று கி.பி.1353ல் தற்காலிகமாக ஓய்ந்தாலும் இதன் அலைகள் அவ்வப்போது இருந்துகொண்டுதான் இருந்தன.

கிட்டத்தட்ட 19ம் நூற்றாண்டு வரை ஏதேனும் ஒரு ஐரோப்பியப் பிராந்தியத்தில் பிளேக் தீவிரமான உயிர்ப் பலிகளை நிகழ்த்திக்கொண்டேதான் இருந்தது. அதுமட்டும் அல்லாமல் பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க கண்டத்துக்கும் பரவியது.

இந்த இரண்டாவது பிளேக் பெருந்தொற்றால் ஐரோப்பாவில் மட்டும் மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் அழிந்தனர்.
பிளேக்கின் மூன்றாவது வருகை சீனாவில் தொடங்கியது. கி.பி1855ம் ஆண்டு, சீனாவின் க்யுங் வம்ச அரசரான ஸியான்ஃபெங்க் ஆட்சியில் தொடங்கியது.சீனாவில் தொடங்கிய இந்த பேயாட்டம் உலகில் மனிதர்கள் வாழும் எல்லா நிலங்களுக்கும் பரவியது. சீனாவில் மட்டும் சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் இறந்திருப்பார்கள் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

இரண்டாவது பிளேக் பூபோனிக் வகைமை. அது உலகம் முழுதும் சுற்றித் திரிந்த வணிகக் கப்பல்களால், அதில் பயணித்த எலிகளின் உடலிலும், இறந்த எலிகளின் உடலை மொய்த்த ஈக்களின் உடலிலும் தொற்றியிருந்து மனிதர்களைத் தாக்கி அழித்தது. ஆனால், மூன்றாவது பிளேக்கோ நிமோனிக் எனப்படும் நுரையீரலை தாக்கும் இயல்புடையதாகவும் இருந்தது என்பதால், மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவிக்கொண்டிருந்தது.
சீனாவின் யூனான் பகுதியில் ஒரு பெரும் ஏரி உள்ளது. பிளேக்கைப் பரப்பும் பாக்டீரியாவின் தாய்மடி என்றே அதனை வர்ணிக்கிறார்கள். இன்றும் ஆபத்தான அந்தப் பகுதியிலிருந்துதான் அன்று மூன்றாவது பிளேக் பரவியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு அங்கு கிடைக்கும் தாது வளத்துக்காக, குறிப்பாக, தாமிரத்துக்காக இன்று அந்தப் பகுதியையே சீரழித்துவிட்டார்கள் என்ற போதும் இப்போதும் அந்தப் பகுதி பிளேக்கின் விளைநிலம்தான்.

ஹன் அரசு காலத்தில் அந்தப் பகுதி முக்கியமான கேந்திரமாக இருந்தது. 1850ம் ஆண்டிலேயே அங்கு எழுபது லட்சம் பேர் வசித்தார்கள். இப்படி நெருக்கடியாக மக்கள் வசித்தது பிளேக் எளிதாகப் பரவக் காரணமாகிவிட்டது. அந்தப் பகுதியின் மஞ்சள் மார்பு எலிகளின் உடலில் இருந்த பிளேக் நோய்க்கான பாக்டீரியா, வளர்ந்துகொண்டிருந்த அந்த நகரத்தில் ஈக்களின் மூலமாகப் பரவியது.

அந்தப் பகுதியில் வசித்த ஹான் சீனர்களுக்கும் சிறுபான்மையினரான ஹுய் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான போரும் பிளேக்கை மற்ற
பகுதிகளுக்கு எடுத்துச் சென்றது. பந்தாய் கலகம் எனப்படும் இந்த யுத்தம் குவாங்ஸி மற்றும் குவாங்டாங் ஆகிய பகுதிகளைக் கடந்து, முத்துநதிப் படுகைகளை நெருங்கி அதன் வழியே கேண்டான் மற்றும் ஹாங்காங்கில் நுழைந்தது.

வில்லியம் மெக் நெயில் போன்ற ஆய்வாளர்கள் பந்தாய் கலகத்தில் ஈடுபட்ட சீன வீரர்களிடமிருந்துதான் கடற்கரைக்கு இந்த நோய் பரவியது என்கிறார்கள். சீனாவின் உட்பகுதியில் இருந்த பிளேக், விரைவாக கரையை நெருங்க இதுவே காரணம் என்கிறார்கள்.

1840ம் ஆண்டில் சீனப் பகுதிகளில் விளைவிக்கப்பட்ட ஓபியம் என்ற போதைப் பொருளின் வணிகமும் பிளேக் பரவ ஒரு முக்கிய காரணம் எனப்படுகிறது.

கேண்டான் நகரில் இந்தக் கொள்ளை நோய் நுழைந்த ஒரே வாரத்தில் அறுபதாயிரம் பேரைப் பலிவாங்கியது. இங்கிருந்து ஹாங்காங்குச் செல்லும் தினசரி நீர்க்குழாய் வரத்து மூலம் வேகமாக நோய் பரவியது. இரண்டே மாதத்தில் ஒரு லட்சம் பேர் இறந்தார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு ஹாங்காங்கில் ஒரு கொள்ளை நோய் அளவு உயிர்பலியாவது குறைந்து விட்டாலும் இந்த நோய் 1929ம் ஆண்டு வரை ஹாங்காங்கில் ருத்ர தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

இந்தியாவுக்குள் பிளேக் வந்த துயரமான கதையை நாம் இனி பார்க்கப் போகிறோம். இங்கு மட்டும் பல லட்சம் பேரை கொத்துக் கொத்தாக காவு வாங்கியது இக்கொடூர நோய். ஹாங்காங்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்ததுமே சுமார் பத்து லட்சம் பேரைக் கொன்ற இந்தக் கொடிய நோய், அடுத்த முப்பது வருடங்களில் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் பேரைக் காவு வாங்கியது. இதில் பெரும்பகுதி பூபோனிக் பிளேக்தான். மிகச் சிறிய அளவில் நிமோனிக் பிளேக்கும் இருந்தது.

தொடக்கத்தில் இந்தத் தொற்று அந்நாளைய பம்பாய், கல்கத்தா, கராச்சி, புனே ஆகிய நகரங்களில்தான் நுழைந்தது. வணிகக் கப்பல்களே இதனைக் கொண்டுவந்தன. கி.பி1899ம் ஆண்டு அங்கிருந்து நாடு முழுதும் உள்ள ஒவ்வொரு சிறிய குழுக்களுக்கும் பரவத் தொடங்கியது.

இந்தியா முழுதும் பிளேக் பரவினாலும் மேற்கு மற்றும் வட இந்தியாவில்தான் அதன் பாதிப்பு மிக மோசமானதாக இருந்தது. ஓப்பீட்டளவில் தென்னிந்தியாவிலும் கிழக்கு இந்தியப் பகுதிகளிலும் இதன் பாதிப்பு குறைவுதான் என்கிறார்கள்.

அப்போது இருந்த வெள்ளை காலனிய அரசு குவாரண்டைன் எனப்படும் தனிமைப்படுத்துதல், நோயுற்றவர்களுக்கான தனிமை முகாம்கள் ஏற்படுத்துதல், பயணங்களைத் தடை செய்தல், இந்திய பாரம்பரிய மருத்துவர்களோடு இணைந்து வைத்தியம் செய்தல் உட்பட பல்வேறு வகையில் பிளேக்கு எதிராகப் போராடவே செய்தது. ஆனாலும் கொத்துக் கொத்தாக மக்கள் இறப்பதை அதனால் தடுக்க இயலவில்லை.  

(உயிர்கொல்லிகளுக்கு எதிரான போர் தொடரும்)

 - இளங்கோ கிருஷ்ணன்