லவ் ஸ்டோரி-காதல் என்ற ஃபீலிங் இளையராஜாவிடம் இருந்தே புரிந்தது!



‘96’ இயக்குநர் ச.பிரேம்குமார்

ஒரு பூனைக் குட்டி வாயில் நூல் கண்டை கவ்விக் கொண்டு சந்தோசமாக நகர்வதைப்போல் நான் இளையராஜா இசையை பெரும் துணையாகக் கொண்டேன். அவரோ என்னிடம் இசையின் உணர்வில், காதலின் உன்மத்த நிலையை உணரச் செய்துகொண்டே இருந்தார். என் காட்டு வழிப் பயணத்தில் வந்த குயிலின் கீதம் போன்றதே அவரின் பாடல்கள். பல காதல்களுக்கு அவர் எங்கேயோ இருந்துகொண்டு, இசையமைத்துக் கொண்டிருந்தார்.

நான் இப்படி இருக்க, அப்பா இந்திப் பாடல்களில் உருகிக் கரைந்து கொண்டிருப்பார். நெடிய உயரத்தில் அமிதாப் பாடிவரும், ‘சில்சிலா’ படப் பாடல்களுக்கு அவர் அடிமையாகி இருந்தார். காதல் என்ற ஃபீலிங் இளையராஜாவிடம் இருந்தே புரிந்தது. அவர் காதலில் அகழ்ந்து சென்ற மனமே என்னுடையது. அவரின் சில பாடல்கள் நீண்ட உறக்கத்தின் கனவுபோல எனக்குப் படும்.

போதாதென்று இதற்கு நடுவில் ‘தளபதி’ பார்த்தேன். ரஜினி காதல் வயப்பட்டு அந்தக் காதலும் முறியும். அப்படியே அந்தப் பிரிவை ராஜா உயிரைப் பிழிந்து உணர்த்துவார். அவரால் மட்டுமே அது முடியும். பார்த்துக்கொண்டிருந்த தியேட்டரைவிட்டு வெளியே வந்து யாரையாவது பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்லிவிடுவேன் போலிருந்தது.

மேலும் அடுத்து ரஜினியிடம் சொல்லிவிட்டு நீண்ட அமைதியில் அந்தப்பெண் போய் மறையும். நான் சுக்கு நூறாக உடைந்து அழுதுவிட்டேன். எனது கண்ணீரும், புன்னகையும் இளையராஜா இசைக்கான விடைகள்.அப்புறம் சிலரிடம் சின்னதான ஒரு பிரியம் இருந்தது. சிறப்பான நட்பிருந்தது. டிகிரி முடித்ததும் ஒரு பெண் என் மேல் விருப்பப்பட்டு, ‘உங்களுக்கு ஓகேன்னா என் வீட்டில் சொல்றேன்னு’ காதலைப் பரிந்துரைத்தார்.

நான் அப்போது போட்டோஃக்ராபி சினிமாவில் நுழையத் தொடங்கி இருந்தேன். நன்றியுடன் மறுத்த என் முதல் காதல் சில நிமிடங்களில் முடிந்து
விட்டது. அம்மாவிடம் சென்று ‘எனக்கு கல்யாணத்தில் ஆர்வமில்லை... மனிதர்களோடு இருக்கப் பிடிக்கலை... உங்களுக்கு என்னால ஒரு பேரக் குழந்தை வேணும்னா அந்த ஆசைய விட்டுடுங்க’ என்றேன்.

அம்மா ‘உன்ன மாதிரி ஓர் ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்தப் பொண்ணு அவஸ்தைப் படுவதைவிட, நீ தனியாவே இருந்துக்க’ என்றார்கள்.

அம்மாவை சமாதானப்படுத்த நேரமாகும் என நினைத்த எனக்கு அதிர்ச்சி.இந்த சமயம் ரவி கே.சந்திரனிடம் உதவியாளனாகச் சேருகிறேன்.

‘பாய்ஸ்’ படம் பெரிய வாய்ப்பு. ஒரு நாள் ஷூட்டிங் முடிந்து வரும்போது வண்டி பள்ளத்தில் விழுந்து முதுகெலும்பு மூன்று இடத்தில் விலகி விட்டது.
வலியோடு வேலை செய்வது சாத்தியமாக இல்லை. வகைவகையாக டாக்டர்களைப் பார்த்தும் என் நிலை குறித்து கை விரித்தார்கள்.

இந்த நிலையில் என் குரு அல்ஃபோன்ஸ்ராய் அவருடைய படப்பிடிப்பிற்கு உதவியாக இருக்க கேட்டுக்கொண்டார். வெளியூரில் இருந்து படிக்க முடியாத பெண் குழந்தைகளை தன் வீட்டில் வைத்து படிக்க வைக்கிற சேவையை அவர் செய்து கொண்டிருந்தார்.

அப்படி அங்கே போனபோது அதில் இருக்கிற ஒரு பெண், தனலெட்சுமி என்னை அக்கறையோடு விசாரித்தாள். அந்தப் பெண் விசாரிக்கவும் துளிர்க்கிற கண்ணீரை பொறுத்துக் கொண்டு ‘பரவாயில்லை’ என்றேன். அவள் ‘ஒன்றும் கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாகும்’ என்றாள். சொல்லப் போனால் அவை மிகவும் சாதாரண வார்த்தைகள். என்னவோ, எப்படியோ புரியவில்லை... அந்த வார்த்தைகள் என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது.

பிறகு என் நண்பனின் பரிந்துரையில் பார்த்த டாக்டர் சங்கரலிங்கம் என்னை மீட்டெடுக்கிறார். எனக்கு குரு வீட்டில் பார்த்த பெண்ணை பிடிக்கிறது. எங்கேயோ என் மனதின் முடிச்சை அவள் அவிழ்த்திருக்கிறாள்.

அவளிடம் என் காதலைச் சொல்லத் தயாரானேன். அவளை சந்திக்க குரு வீட்டுக்கு போனபோது சரியான மழை. காதலைச் சொல்ல தைரியமில்லை. அப்புறம் என் நண்பர்கள் என் சார்பாகச் சொல்லியிருக்கிறார்கள். அடுத்தநாளில் நான் போனபோது ‘எஸ் அல்லது நோ சொல்லி விடுங்கள்’ என்கிறேன்.

‘உங்களைப் பிடிக்கலைனா உங்க முன்னாடி வந்துருப்பேனா...’ என்கிறாள். புது அத்தியாயம் தொடங்கிவிட்டது. ‘என்னோடு ரெண்டு வருடம் பழகி புரிந்துகொள்ள முயலுங்கள். என்னைப் பிடிக்கவில்லை என்றாள் விலகிக் கொள்ளலாம். ஒன்றும் பிரச்னை இல்லை’ என்கிறேன். ‘அதற்கான அவசியம் ஏற்படாது’ என்கிறாள் அவள்.

அல்ஃபோன்ஸ்ராயின் மனைவிக்கு எங்கள் காதல் தெரிந்து விடுகிறது. சின்னதாக மன வேறுபாடாகி தனலெட்சுமி வெளியே வந்துவிடுகிறாள். என் பொறுப்பை உணர்ந்து அவரை என் நண்பர்கள் துணையோடு பெண்கள் விடுதியில் சேர்க்கிறேன்.

வீராப்பாக பேசிவிட்டு வந்த அம்மாவிடம் என் சித்தி மூலமாக என் காதலைச் சொன்னேன். அவர்களுக்கும் தனலெட்சுமியைப் பிடித்திருந்தது. என் அம்மாவை கருத்தாக கவனித்தாள். பெற்றோர்கள், நண்பர்கள் துணையுடன் நடந்தது எங்கள் திருமணம்.தனலெட்சுமி என்னைத் திருமணம் செய்துகொள்ளும்போதே என் முதல் படத்திற்கான வாய்ப்பையும் சேர்த்துக்கொண்டு வருகிறாள்.

நான் தனிமை விரும்பியாக இருந்தேன். இன்னமும் நாங்கள் இருபது பூனைகளோடுதான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். சிட்டுக் குருவிகள் என்னை நம்பிய கதை இன்னும் விசேஷமானது. தனலெட்சுமி என் ஸ்கிரிப்ட்டுகளை முதலில் வாசிக்கும் பெண். சிறிதளவு கருணைகூட இல்லாமல் விமர்சனம் செய்துவிடுவாள். சினிமா எடிட்டிங் படித்திருப்பதால் அவர் விமர்சனம் பளிச்சென்று இருக்கும்.

முன்பு நண்பன் விஜய் சேதுபதியின் படங்களை விமர்சனம் செய்வது போன்று இப்போது என்னால் செய்ய இயலாது. இப்பொழுது அது நிதானம்கூடி செய்ய வேண்டிய செயல். ‘நன்றாக இருந்ததா ப்ரேம்’ என சேது கேள்வி கேட்ட பின்னால் அவருக்கு அந்தப் படம் எந்த விதத்தில் பிடித்திருந்தது என யோசிக்க வேண்டியதிருக்கும். ஆனால், தனமோ ‘அட நம்ம சேது அண்ணன் படம்தானே’ என உண்மையைப் போட்டு உடைத்துவிடுவாள்.

இப்பொழுது மகள் வேதா எங்கள் குடும்பங்களின் சிறந்த பண்புகளைக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு பயணம் பிடிக்கிறது. புதியவர்களிடம் உரையாட முடிகிறது. என் அப்பாவின் டெக்னிக்கல் அம்சம் அவளிடம் புகுந்திருக்கிறது. எனது குருட்டு, முரட்டுத்தனம் கொஞ்சமாக அவளிடம் இருக்கிறது. பிராணிகளிடம் அன்பு மிகக் கொள்கிறாள்.

ஊரில் என் அம்மாவைத் தேடி பத்து மயில்கள் தினமும் மதிய சாப்பாட்டிற்கு வருகிற மாதிரி வேதாவிடமும் பூனைகளும், நாய்களும் பிரியம் கொள்கின்றன. இவர்களோடு இந்த காதல் வாழ்க்கையும் எனக்கு பிடிக்கிறது. என் நதியோட்டம் இவர்களோடு தடையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்