கொரோனா நாட்கள் - ரேஷனில் இலவச உணவுப் பொருட்கள் வழங்குவதில் குளறுபடி...



இந்தியாவின் பொது விநியோகத் திட்டம் மாற்றப்பட வேண்டும்!

கொரோனா… இந்த நாட்களில் நம் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும் அச்சத்தின் சொற்கள் இவைதான். ஒருபுறம் கொரோனாவால் நம் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற உயிர் பயம். ஊரடங்கு போன்ற நிலை நீடித்தால் நம் பொருளாதார நிலை என்னாகுமோ என்ற கவலை இன்னொருபுறம்.

இந்தியாவின் மக்கள் தொகையில் பல கோடி மக்களுக்கு இந்நிலை என்றால், மறுபுறம் கிட்டதட்ட இதனைவிட இருமடங்கு அதிகமானவர்களின் பிரச்னை இன்று உணவுக்கு என்ன செய்வது என்ற கவலைதான். வேலைக்குப் போனால், கொரோனாவால் ஆபத்து. வேலைக்குப் போகாமல் இருந்தாலோ பசியால் உயிர் போகும் ஆபத்து. இப்படி வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கின்றன பல கோடி உயிர்கள். இதுதான் இன்றைய எதார்த்த இந்தியா.

மாதக்கணக்கில் வேலையின்றி இருந்ததால், பசியால் இறந்தேவி டுவோமோ என்ற பயத்தில் பல்லாயிரம் தொழிலாளர்கள், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்தும், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மேற்கு மாநிலங்களில் இருந்தும், தலைநகரான தில்லியில் இருந்தும் பீகாருக்கும், உத்திரப் பிரதேசத்துக்கும், மத்தியப் பிரதேசத்துக்கும் சாரை சாரையாகச் செல்வதைக் கண்கூடப் பார்த்தோம்.இப்படிப் புலம்பெயரும் தொழிலாளர்கள்தான் இந்தியாவின் மிகப் பெரிய சவால்.

இப்போதும் வளர்ச்சியடையாத மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் வளர்ந்த மாநிலங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் போதிய வேலையும் வருமானமும் இன்றி தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் பசிப்பிணியைப் போக்க வேண்டிய கடன் நம் இந்திய அரசுக்கு உள்ளது.

லாக் டவுன் ஆரம்பித்தபோது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புலம்பெயர் தொழிலாளர் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு இலவச தானியங்கள், பணச் சலுகைகள் தருவதாக அறிவித்தார். பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஒன்றே முக்கால் லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

 
இதில் முதல் கட்டமாக, ஏப்ரல் மாதம் வரை 2.42 லட்சம் டன் தானியங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டன. தொடர்ந்து மேலும் 5.21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்தப் பலன்கள் வழங்கப்பட்டன. இதைத் தவிர புலம் பெயர்ந்தவர்களுக்கு இரு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.இதில் சிக்கல் என்னவென்றால் இப்படிப் புலம் பெயர்ந்தவர்களில் பலருக்கு குடும்ப அட்டை கிடையாது.

கொரோனாவால் அரசு அலுவலகங்கள் முடங்கிக் கிடக்கும் இந்நாட்களில் அவர்களால் இனி போய் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து அதைப் பெற்றுக் கொண்டிருக்கவும் முடியாது. அதுவரை பசி அவர்களை விட்டுவைக்குமா என்றும் தெரியாது.

மறுபுறம் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி குடும்ப அட்டை என்னும் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நம் அரசால் உணவுப் பொருட்கள் வழங்க இயலாது என்ற நிலையில் இந்த உதவிகள் யாருக்குப் போய் சேரும்... உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரணங்கள், உதவிகள் போய்ச் சேருமா... என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், அப்படி வழங்குவதாகச் சொல்லப்பட்ட நிவாரணங்களில் பல அறிவிக்கப்பட்டதோடு சரி. கொரோனாவால் போக்குவரத்து தடைபட்டுக் கிடப்பதால் நாட்டில் பல இடங்களுக்கு இந்த உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நம் பொது வழங்கல் முறைமை என்பது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் புலம் பெயர்ந்து வாழ்பவர்களைப் பொருட்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்பதை இந்தக் கொரோனா தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

நம்மிடம் இருக்கும் பழைய காலாவதியான மக்கள் தொகை பரவல் அடிப்படையிலேயே இந்தத் திட்டங்கள் எல்லாம் வகுக்கப்படுகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆனால், கள நிலவரங்களோ வேறு மாதிரியாக இருக்கின்றன.இந்த ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஏற்பாடுகள் எல்லாம் ஏற்கெனவே பொருளாதார மற்றும் சமூகரீதியாகப் பின் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்படையச் செய்வதாகவே இருக்கிறது என்பதையும் இக்கொரோனா நிவாரணப் பணிகள் நமக்கு உணர்த்தி இருக்கின்றன.

நாம் இதில் பல விஷயங்களில் கோட்டை விடுகிறோம். குறிப்பாக பிராந்திய அளவிலான மக்களின் தேவைகளைக் கணக்கில் எடுப்பதில்லை என்பது ஒரு முக்கியமான பிரச்னை. உதாரணமாக, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் நிலைகளை ஆராய்ந்த ஜோஸ் மொய்ஜ், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கே உரிய சமூக - அரசியல் - பண்பாட்டுப் பின்புலம் உள்ளது. நமது பொது விநியோக அமைப்பு என்பது அதனைக் கருத்தில்கொண்டு உருவாக வேண்டும் என்கிறார்.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சமூகவியல் - பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனும் இதே கருத்தை ஒரு நேர்காணலில் முன்வைத்தார் என்பதைக் கவனிக்க வேண்டும்.பீகாரின் பொது விநியோகத்தில் உள்ள பெரிய சவால், போலி ரேஷன் கார்டுகள்தான். இதை பொது விநியோகத்தில் ஈடுபடும் கடைக்காரர்களே உருவாக்குகிறார்கள். பொது விநியோகம் மூலம் ஒதுக்கப்படும் உணவுப் பொருட்களை தாங்கள் உருவாக்கிய போலி ரேஷன் கார்டுகளுக்கு ஒதுக்கி அதனை அப்படியே சந்தையில் விற்று காசாக்கிக்கொள்கிறார்கள் என்கிறார் ஜோஸ்.

இந்நிலை தமிழ்நாட்டிலும் கணிசமாக உள்ளது. என்றாலும் சரியான பயனாளிகள் கணிசமான அளவில் இங்கு இருப்பதால் பெரிய பிரச்னைகள் உருவாவதில்லை. அப்படியும் கடத்தல் அரிசி, பதுக்கல் அரிசி கைப்பற்றும் செய்திகள் அவ்வப்போது அடிபடவே செய்கின்றன.

கேரளாவில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் அதற்கான பயனாளிகள் உண்டு. அதில் ஏதும் சிக்கல் ஏற்பட்டால் அது உடனடியாக ஒரு மாநிலப் பிரச்னையாக வெடிக்கும் அளவுக்கு அரசியலாகிவிடும்.

இதே போல் பலதரப்பட்ட பொருளாதார அந்தஸ்து உடையவர்களும் ரேஷன் கார்டு வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பலவண்ண ரேஷன் கார்டு இருப்பதைப் போன்ற சூழல் மற்ற மாநிலங்களில் கிடையாது. இதனால், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்குப் போக வேண்டிய பலன்கள் இதர பிரிவினருக்குப் போய்விடும் துயரம் நிகழ்கிறது.

நமது பொது விநியோக முறை மத்திய அரசால் நிர்மாணிக்கப்படுவதாக இருக்கிறது. இதனால் சாராம்சப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்தத் திட்டங்கள் இந்தியா முழுதுக்கும் பொதுவானவையாக அமைக்கப்படுகின்றன.

இதனால், இவை அமலாகும்போது பயனாளர்களைப் போய்ச் சேர்வதில் சிக்கல் உருவாகிறது.நமது பொது விநியோகத் திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய காலம் இது. நம் நாட்டில் பல ஆண்டுகளாகவே உணவு உற்பத்தியில் பற்றாக்குறை இல்லை. அதை உரியவகையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்தான் குளறுபடிகள்.

கடந்த காலங்களில் பல லட்சம் டன் தானியங்கள் அரசின் குடோன்களில் மழையில் நனைந்தும் வெயிலில் வாடியும் கெட்டுப்போனதை யாரும் மறந்திருக்க மாட்டோம். மனிதர்களுக்குப்போக வேண்டிய தானியங்கள் எலிகள் உண்பதும், யாராலும் சீண்டப்படாமல் வீணாவதுமாக இருக்க... மறுபுறம் கோடிக்கணக்கான மக்கள் பசியால் இறப்பார்கள் என்றால் நாம் நடத்துவது நவீன அரசும் அல்ல. இதனை மக்கள் நல அரசு என்றும் சொல்ல இயலாது.

இளங்கோ கிருஷ்ணன்