I CAN'T BREATHEஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை அமெரிக்காவில் உள்ள மினியாபலிஸ் நகரக் காவல்துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் கொன்றுவிட்டனர். ஃப்ளாய்டின் பின்னங்கழுத்தில் முழங்காலை அழுத்தமாக ஊன்றி, ஏழு நிமிடங்களுக்கும் மேலாக அவரை மூச்சுத் திணறச் செய்து, சாகடித்து இருக்கிறார்கள்.

சந்தேகத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்யச் சென்றவர்கள், தங்கள் நிறவெறி சார்ந்த முன்முடிவுகளுக்கு ஓர் உயிரைப் பலி கொடுத்த பிறகே சமாதானமாகி இருக்கிறார்கள். இந்தக் கைது நடவடிக்கையை அங்கிருந்த பொதுமக்களுள் ஒருவர் தன் அலைபேசியில் பதிவு செய்து கொண்டிருப்பதை அறிந்திருந்தும் இந்தக் கொலை பாதகச் செயலைச் செய்து முடிப்பதிலிருந்து அவர்கள் பின்வாங்கவில்லை.

கைது செய்யப்படும்போது ஃப்ளாய்ட் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் அவரைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டே முரட்டுத்தனமாகக் கையாள வேண்டியிருந்தது என்றும் அந்த அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகே உள்ள உணவகத்தின் கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்தபோது, அவர் எந்தவிதமான எதிர்ப்புமில்லாமல் முழுமையாக ஒத்துழைத்திருக்கிறார் எனக் கண்டறிந்து இருக்கிறார்கள்.

அந்தக் காணொளியில் ஏழு நிமிடங்களுக்கும் மேல் அவர் தனது உயிருக்காக மீண்டும் மீண்டும் மன்றாடுகிறார். ‘தன்னால் மூச்சுவிட முடியவில்லை’ எனக் கதறி இறைஞ்சுகிறார். இதனைப் படமெடுத்துக் கொண்டிருந்த நபர், ஃப்ளாய்டின் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதைச் சுட்டிக்காட்டிய பிறகும் கூட அந்தக் காவல் அதிகாரிகள் தங்களது நிறவெறித் தாக்குதலைத் தொடர்ந்தவாறே இருந்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதன் எதிரொலியாக மினியாபலிஸ் நகரம் மட்டுமல்ல... ஒட்டுமொத்த அமெரிக்காவே கொந்தளிப்பில் இருக்கிறது. கோவிட் காலப் பாதுகாப்பு விதிமுறைகளை எல்லாம் மீறி மக்கள் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். தெருக்களில்
ஒன்றுகூடி கோஷம் எழுப்பிய பொதுத்திரள் மீது வழக்கம் போல கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.  

தங்கள் மீதான கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சுக்குப் பிறகு போராட்டக்காரர்கள் பலரும் ஒன்றிணைந்து அந்நகரின் காவல் நிலையத்தைக் கொளுத்தியிருக்கிறார்கள். பல்பொருள் அங்காடியைச் சூறையாடியிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் வேறு கையை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், ‘If there is looting, there will be shooting’ என வீராவேசமாக டுவிட் செய்திருக்கிறார். அது வன்முறையைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது என அந்த டுவிட்டை டுவிட்டர் நிர்வாகம் நீக்கி விட்டது.

கறுப்பின மக்களின் கோபாவேசத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஃப்ளாய்டைக் கொன்ற நான்கு காவல் அதிகாரிகளையும் எஃப்.பி.ஐ விசாரித்து கடுமையாக தண்டிக்கும் என்பதை அவர்கள் நம்பவில்லை. காணொளி ஆதாரம் வெளியாகி பரபரப்பானதால் மட்டுமே அந்த நான்கு காவலதிகாரிகளையும் தற்சமயம் பணி நீக்கம் செய்திருக்கிறார்கள்.

ஆனால், விசாரணை முடியும் வரை அந்த நால்வருக்கும் சம்பளப் பணம் வந்துவிடும். மினியாபலிஸ் நகரத்தின் சட்டப்படி சந்தேகக் குற்றவாளியின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்துவதற்கு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிக்கு அனுமதி உண்டு. ஆனால், குற்றவாளியின் மூச்சுக் குழாயை இறுக்காதவாறு கவனத்துடன் இருக்க வேண்டுமாம். இது எப்படிச் சாத்தியம் என்பது தெரியவில்லை.

‘என்னால் மூச்சுவிட முடியவில்லை...’ எனத் தன் இறுதிக் கணங்களில் ஃப்ளாய்ட் சொன்னது மட்டுமே அவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரே பிரம்மாஸ்திரம். அது மனசாட்சியுள்ளவர்களின் நெஞ்சைப் பிளக்காமல் திரும்பாது!

கோகுல் பிரசாத்