30 காடுகள் இனி தனியாருக்கு சொந்தம்!“நாம் இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டால் எல்லாமே நமக்கு எதிராக மாறிவிடும்...” என்று, Man Vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால், அவரது தலைமையில் இயங்கும் அரசே இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் ஒரு லட்சம் ஹெக்டேர்களுக்கு அதிகமான காடுகள் அழிக்கப்படவும், ஒரு கோடிக்கு மேலான மரங்கள் வெட்டப்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போதாதென்று, நாட்டின் வளர்ச்சி என்ற போர்வையில் தனியாருக்கு 30 காடுகளை சமீபத்தில் தாரை வார்த்துள்ளது மோடி அரசு. கொரோனா பொது முடக்க காலங்களில் கூட தடையில்லாமல் இது நடந்துள்ளது.

“இந்தியாவில் உள்ள காடுகள் தனியார்மயமாவது 90களில் உலகமயமானபோதே ஆரம்பமானது. அந்நேரத்தில் பல்வேறு  பரிந்துரைகள் கார்ப்பரேட்டுகள் நலனுக்காக, உலக வங்கி மூலம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டன. அதில் பல விஷயங்களை முந்தைய அரசுகள் பின்பற்றவில்லை. ஆனால், இப்போதுள்ள அரசு அதைத் துரிதப்படுத்தியுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வன திருத்த சட்டம் கொண்டு வருவார்கள். அதன் படி, 2015ம் ஆண்டிற்கான சிலவற்றை 2018ம் ஆண்டு Draft National Forest Policy என்று அறிவித்தார்கள. இதற்கு கடும் எதிர்ப்புகள் உருவாயின.

2006 வன உரிமைச் சட்டம் காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. இருந்தாலும் பழங்குடி மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி காடுகளிலிருந்து வெளியேற்றும் வேலைகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்வதில் அரசு சுணக்கம் காட்டுகிறது.

அரசே இவ்வாறு இருக்கும் போது வனங்களை தனியாரிடம் கொடுக்கையில் அது எவ்வாறு இருக்குமென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.  
அரசு காடுகளில் உள்ள வளங்களை எடுக்க சுரங்கம் அமைத்தது. அடுத்து மின்சாரத்திற்காக நீர்த் தேக்கங்களை உருவாக்கியது. இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் வசம் கொடுக்க ஆரம்பித்தது. இப்போது ஒட்டுமொத்தமாக அவர்களிடமே கொடுக்க முன் வருகிறது...” என்கிறார் சூழலியல் செயல்பாட்டாளர் மோகன் ராஜ்.

“2014ம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு எதிராக அமைதியான ஒரு யுத்தம் ஆரம்பமாகிவிட்டது...” என்கிறார் ஆவணப்பட இயக்குநரும், சூழலியல் ஆர்வலருமான ஆர்.ஆர்.சீனிவாசன்.

“2006 வன உரிமைச் சட்டம், 2008ல் நடைமுறைக்கு வந்த போது ‘கிராமசபை’ முடிவு செய்யாமல் காட்டிற்குள் புகுந்து எந்தவொரு தொழிற்சாலையும் அமைக்கவோ, கனிமம் எடுக்கவோ முடியாது. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் கிராமசபை முடிவுகளுக்குக் கட்டுப்படாமல் காடுகளை அழிக்க வழி
வகுத்துச் செயல்பட ஆரம்பித்தது. தேசிய காட்டுயிர் அமைப்பின் (National Wildlife Board) தனித்துவமிக்க வல்லுநர்களின் அதிகாரங்களைக் குறைக்கும் செயல்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டது.

இது காடுகளினுள் சாலை போடுவது, காட்டை அழிப்பது போன்றவற்றை சட்டரீதியாகவும் மாற்றியது. நிலக்கரிச் சுரங்க நடைமுறைகளை மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் இல்லாமல் நேரடியாகச் செயல்படுத்த புதிய முறைகளைக் கொண்டு வந்தது.  காடுகளின் தேசிய பூங்காவின் உள்ளே அதைச் சுற்றி, 10 கி.மீட்டருக்குள் எந்தத் தொழிற்சாலையும் வரக்கூடாது என்பது நடைமுறை. ஆனால், நடுவண் சுற்றுச்சூழல் அரசோ 5 கிலோ மீட்டருக்குள்ளேயே தொழிற்சாலைகள் வர அனுமதி கொடுத்து விட்டது.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு இதை மேற்கொள்ளக் காரணம், இந்த நேரத்தில் மக்கள் யாரும் போராட மாட்டார்கள் என்பதுதான். அதனால்தான் பொதுமுடக்கத்தை பயன்படுத்தி மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூலம்  சத்தமில்லாமல் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த 30 பல்லுயிர்க் காடுகளை சுரங்கம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட தனியார் திட்டங்களுக்காக தாரை வார்த்துள்ளது.

இங்குள்ள காடுகள் தமிழகம், இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே பொக்கிஷம். உலகம் முழுவதும் ஒற்றை உயிர்தான். அது அமேசானில், கியூபாவில், அமெரிக்காவில்… தீ பிடித்தாலும் அழித்தாலும் தமிழகத்தையும் பாதிக்கும். இயற்கை அப்படித்தான் தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டுள்ளது. அரசு இதைப் புரிந்துகொள்ளவேண்டும்...’’ என்கிறார் ஆர்.ஆர்.சீனிவாசன்.

அன்னம் அரசு