ரிஸ்க் எடுக்கலைனா, ரிஸ்க் எடுத்தவங்க பின்னாடி நிற்க வேண்டியிருக்கும்!



அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்

ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஒரு பக்கம் வேரூன்றி நிற்கிறார். இன்னொரு பக்கம் நல்ல சினிமாவுக்கான கனவில் மிதக்கிறார். அவரே பல படங்களில் புது வடிவத்தையும், ஸ்டைலையும் ஆரம்பித்துக் கொடுத்து மற்றவர்கள் பின்தொடர விட்டிருக்கிறார். ‘காக்க காக்க’, ‘கஜினி’, ‘பீமா’, ‘இருமுகன்’, ‘இமைக்கா நொடிகள்’ என நீளும் பட்டியல் எல்லாமே பானைச் சோற்றுக்குள் இருக்கும் பருக்கைகள்.

கிரீட்டிங் கார்டு ரசனையோடு அழகழகாகத் திரை பரவும் காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆர்.டி.யோடு நடத்திய உரையாடல் இது.
‘‘அப்பா அம்மா ரெண்டு பேருமே வாத்தியார்கள். பையன்களை எப்பவும் என்கரேஜ் செய்வதில் இவர்களை மிஞ்ச முடியாது. ஐந்தாவது படிக்கும் போது பேன்ட் ஷர்ட் போட்டுகிட்டு ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’னு பாடி நடிக்கிறேன். அப்படியொரு கைதட்டல். அது அப்படியே மனசுல ஓடிக்கிட்டே இருந்தது.

கைதட்டலுக்கும், பாராட்டுக்கும் பெரிய சக்தியிருக்கு. அதுல ஒரு மாயமிருக்கு. அது ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துது. அப்ப எழுதிட்டே இருப்போம். கேசவன், மனோகரன், ராஜசேகர்னு மூன்று நண்பர்களும் சேர்ந்து ‘கேமரா’னு ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பிச்சோம்.
இதுகூட யதேச்சையான பெயர்தான்.

வீட்ல பெயிண்ட் அடிக்கும் போது ஒரு கலர்ல இன்னொரு கலரை அளவா சேர்த்தால் சட்னு வேற ஒரு கலர் வந்து குதிச்சு நிக்கிறதைக் கண்டு ரசிப்பேன். கருப்பு, வெள்ளை, வண்ணங்கள்னு ஒரு குழைவான இடம் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. அந்த வயதில் ஒரு கேமரா கூட வாங்கினதில்லை. மயிலாடுதுறைக்கு வந்த கவிஞர் இளையபாரதியை பார்க்கிறோம். அப்பதான் ‘நீயெல்லாம் சென்னைக்கு வந்தால் சினிமாவை நேரடியாகக் கத்துக்கலாம்.. உதவியாளராகச் சேரலாம், இன்ஸ்டிடியூட்டில் படிக்கலாம்’னு சொல்றார்.

இதெல்லாம் அப்பதான் புரியுது. அப்புறம் சென்னக்கு வந்து படிச்சு, ராஜீவ் மேனன்கிட்ட தொழில் கத்துக்கிட்டு, கெளதம் மேனனோட பயணத்தைத் தொடங்கியாச்சு...” ஆர்வமாகத் தொடர்கிறார் ஆர்.டி.ராஜசேகர்.குறிப்பாக ஒளிப்பதிவில் தேர்ந்து கரையேறியது எப்படி?
ஒளிங்கிற ஒற்றை வார்த்தைதான் என்னை கையைப் பிடித்து சினிமாவுக்குள்ள கூட்டிக்கிட்டு வந்தது. எங்கேயும் எப்போதும் நம்மை ஏதாவது ஒரு ஒளி தொட்டுக்கிட்டே இருக்கு. அப்படி நானும் சினிமாவைத் தொட்டுக்கிட்டு இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.

ஒரு பெரிய யுத்தத்துல இறங்குற முஸ்தீ போடும் வேகத்தோடும் இங்கே சுத்தி வந்திருக்கேன். நல்லவேளையாக என் முயற்சிகள் ஒர்க் அவுட் ஆகாமல் தவிச்சதில்லை. நான் நேசித்த சினிமா என்னைக் கைவிடலை. ஒரு நாள் எனக்கும் கதவு திறந்தது.

இந்த ஸ்க்ரிப்ட் பண்ணலாம்னு எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறீங்க..?
இயக்குநர் அழகுபட ஒரு கதையைப் புடிச்சுட்டார்னா, அவருக்குள்ள ஒரு கரன்ட் ஓடும். அதை அவரோட கண்கள் மின்னுறதை வெச்சே பல சமயங்களில் கண்டுபிடிக்கலாம்.இந்த ஸ்க்ரிப்ட்டில் நம்மால் என்ன செய்ய முடியும், அதற்கான இடங்கள் இருக்கான்னு மனசு தேடிப் பார்க்கும். அப்படி பார்த்து முடிஞ்சதும் இனம் தெரியாத ஓர் உணர்வு என்னை வேறு ஒரு இடத்துக்கு கொண்டு போகும்.

அப்படி நான் உணர்ந்தால், அந்த நிமிஷத்தில் இருந்தே அந்தப் படத்துக்காக உழைக்க ஆரம்பிச்சிடுவேன். எங்கோ கிடைச்ச அனுபவம், கேட்ட செய்தி, மனசுக்குள் வந்த வடிவம்னு கதையோட வந்து சேர்ந்து கலந்திடும்.‘பில்லா 2’வில் டிஜிட்டலுக்கு மாறினீங்க...

போட்டோகிராபியின் ஆரம்ப நிலையில் இருந்து வந்தவன் நான். ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்துட்டு நம்மில் எத்தனை பேர் அதைப் பார்க்க ரெண்டு நாள் தவிச்சு கிடந்திருக்கோம்! திடீர்னு ‘பில்லா 2’வை டிஜிட்டலில் பண்ணச் சொல்றாங்க. அந்த கேமராவை பார்க்கவே அந்நியமா தெரியுது. பழகுற அமைப்பில வேற இல்ல. அஜித், இதில் நீங்க பெரிய வித்யாசம் காட்ட முடியும்னு தீர்மானமா சொன்னார்.

‘நீங்க மட்டும் ரிஸ்க் எடுக்கலைனா, ரிஸ்க் எடுத்தவங்க பின்னாடி நிற்க வேண்டியிருக்கும்’னு எங்கோ சின்ன வயசுல கேட்ட உரையாடல் ஞாபகத்துக்கு வருது. உடனே சரின்னு ஆரம்பிச்சாச்சு. எனக்கு ஒளிப்பதிவில் பெரிய இடத்தைப் பெற்றுக் கொடுத்த படம் அது. இங்கே மாற்றங்களுக்கும் அப்டேட்டுக்கும் தயாரா இருக்கணும். ஆர்வம், திறமை, வெறி, உழைப்புதான் எந்த வெற்றிக்குப் பின்னாலும் காரணமா இருக்க முடியும்.
‘ரிதம்’, ‘கஜினி’, ‘காக்க காக்க’ பாடல்களில்... உங்களின் வேலையை மறக்க முடியாது...

எல்லாம் அந்தந்த டைரக்டர்கள் கொடுக்கிற சுதந்திரம். உத்வேகம். ‘செஞ்சு பாருங்க’ன்னு தட்டிக் கொடுப்பாங்க. பிறகு நமக்கு வேகம் எடுத்திடும்.
வஸந்த் பாடல்களில் அவ்வளவு மெனக்கெடுவார். பத்து வருஷமாவது பாட்டு நிக்கணும்னு சொல்வார். ‘கஜினி’யும் அப்படி அமைஞ்சது. ஒரு பாட்டு இப்படித்தான் வரணும்னு தீர்மானம் ஏ.ஆர்.முருகதாஸ்கிட்ட இருக்கும். பாடல்னா அது மேஜிக் மாதிரி இருக்கணும்னு சொல்வார்.

‘சில்லுனு ஒரு காத’லும் அப்படித்தான். ‘காக்க காக்க’ படத்தப்ப நானும் கெளதம் மேனனும் அப்படி ஓர் அலைவரிசையில் இருந்தோம். எனக்கு அந்த படம் விசிட்டிங் கார்டு மாதிரியே ஆகிப்போச்சு. இப்பவும் எதற்கும் ஈடுகொடுக்க இளமையும் புதுமையுமாக ரெடியாக நிற்கிறேன்.
இந்த வாழ்க்கை உங்களுக்கு உணர்த்தியதென்ன..?

முன்பு போல் யாரும் சாதுவாக இல்லை. இந்தியாதான் இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு. இது நல்ல விஷயம். வருங்காலம் நன்றாக இருக்கும். யாராக இருந்தாலும் நாம் யார்னு முதலில் கண்டுபிடிச்சிடணும். உங்களது சுகம், துக்கம், சொர்க்கம், நரகம் ஆகியவற்றுக்கான விதைகளை உங்களுக்குள்ளேதான் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள்.

கடவுள் பறவைகளுக்கு உணவளிக்கிறார். ஆனால், அவை உணவுக்காகப் பறந்துதான் ஆக வேண்டும். அப்படியே நாமும் உழைத்தே ஆக வேண்டும்.
இந்த வாழ்வைப் பேரன்புடன் கடந்து செல்ல உதவும் மாமனார் மருதுசாமியும், மனைவி சித்திரபாரதியும், குழந்தைகள் சம்யுக்தாவும் சித்தார்த்துமே எனக்கு உறுதுணை. வீட்டிற்கான அத்தனை பொறுப்பையும் ஏற்று அவர்கள் விட்டுக் கொடுத்திருப்பது ஆசீர்வாதம்.

நா.கதிர்வேலன்