லவ் ஸ்டோரி- இது எங்கள் காதல் திருமணத்தின் வெள்ளிவிழா ஆண்டு!இந்த ஆண்டுதான். மே 19 அன்று அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, ‘ஹலோ...’ என ஒரு குரல். அருகாமையில் தட்டி எழுப்புவது என் மனைவி ராஜிதான். கையில் பொட்டலம்.‘‘Happy silver jubilee wedding anniversary my dear...” என்று சொல்லி மகிழ்ச்சிப் புன்னகையுடன் வாழ்த்துக்கள்.
என் காதல் மனைவி என் கையில் பரிசாகக் கொடுத்தது 30 ஆண்டுகளுக்கு முன்பாக நான் அவளுக்கு உருகி உருகி எழுதிய காதல் கடிதங்கள்!
அவ்வளவையும் ஒன்றுவிடாமல் வெகு பத்திரமாக சேகரித்து 25ம் ஆண்டு காதல் பரிசாகக் கொடுத்தாள். நான் அவளுக்கு முதன் முதலாக 27-4-1990ல் இன்லாண்ட் லெட்டரில் எழுதிய கடிதம் முதல் காதலித்த நாட்களில் எழுதிய 100 கடிதங்களின் ஆவணத் தொகுப்பு!

என் கண்கள் நனைந்தன. இப்படி ரகசியமாக ஒன்றுவிடாது சேகரித்து வைத்திருப்பாள் என சத்தியமாகத் தெரியாது. சில லெட்டர்கள் காலேஜ் ஆஸ்பத்திரி ஓபி டோக்கனில் குட்டியாக எழுதியவை!கூடவே பின்னால் இருந்து தள்ளிக் கொண்டு பையன், என்னை வீட்டின் முன்னறைக்கு அழைத்து வர, அந்த நள்ளிரவில் தொலைக்காட்சிப் பெட்டி உயிர் பெறுகிறது.

கொரோனா புண்ணியத்தில், ஜெர்மனியில் மாட்டிக்கொண்ட அங்கு முதுகலை படிக்கும் என் மகள், எங்கெங்கோ இருந்து இணைய வழியில் என் பள்ளி, கல்லூரி நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் வாழ்த்துக்களுடன்!எங்கள் காதல் திருமணத்தின் வெள்ளி விழா ஆண்டு இது! இப்போதும் இனிக்கும் அந்த நாட்கள். அவள் என் கல்லூரியில் உடன் பயின்றவள். முதல் இரண்டு வருடத்தில் ஒரு முறை கூட நான் அவளிடம் பேசியது கிடையாது.

மூன்றாம் வருடம் படிக்கும்போது ஒரு மாத காலம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் தங்கி சுவடியியல் பயிற்சி படிக்க இருவரும் சென்றோம். அப்போதுதான் நான் அவளை நெருங்கி கவனிக்க ஆரம்பித்தது. படிப்பா? எதிர்பாலின ஈர்ப்பா? ஏதோ ஒரு கூடுதல் கரிசனமா?

தெரியவில்லை. ஆனால், நாங்கள் நெருங்கிய  நண்பர்களானோம். தோழமையின் தொடர்ச்சியாக, ‘காதலித்தால் என்ன?’ எனத் தோன்றிவிட்டது. மொட்டுக்கும் மலருக்கும் இடைப்பட்ட கணத்தை பூக்களே அறியாதது போலத்தான் எங்கள் நட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட கணத்தை இப்போதும் அறியவில்லை.  

எங்கள் காதல் எந்த வம்புக்கும் போகாமல், கல்லூரி வளாகத்திலேயே லைப்ரரி, தண்ணீர் ஸ்டாண்டு, நோயாளிகள் வளாகம், இன் பேஷண்டுகள் தங்கும் மருத்துவமனை என தைல வாசத்துடனேயே சுற்றிச் சுற்றி வந்தது. படிக்கிற காலத்தில் ஒரே ஒரு முறைதான் டிவிஎஸ் பிஃப்டியில் பின்னாடி உட்கார வைத்து சென்றிருக்கிறேன்.

என் வகுப்பிலேயே 50 பெண்கள். அப்போதே கவிதை, கதை, ஆட்டம் பாட்டம் என இருந்தாலும் படிப்பில் முதல் இடத்தில் இருப்பேன். அதனால் எல்லா பெண்களிடமும் நல்ல பெயர். கூடவே நல்ல தோழன் என்ற புரிதல். ராஜி மிகவும் அமைதியானவள். அவளுக்கென இருந்த ஓரிரு தோழிகளைத் தவிர யாரிடமும் பேச மாட்டாள். அவளது அமைதி என்னை மிக ஈர்த்த விஷயம்.

ஒரு குக்கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு வந்த முதல் பெண் பட்டதாரி. முதல் முறையாக அவள் வீட்டிற்குச் சென்றபோது தோட்டத்துக்கு நடுவில் இருந்த கீற்று வீடு, அவர்கள் விருந்தோம்பல், குடும்பமே கடுமையாக உழைப்பது எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. இவை அத்தனையுமாகச் சேர்த்து என் மனதில் காதல் வளர்ந்தது. என் மனதில் நான் வளர்த்திருந்த கற்பனை உலகத்தின் பறவையாக அவள் எனக்குத் தெரிந்தாள். அவளின் அமைதியும் தீர்க்கமாக உழைக்கும் பாங்கும் என்னைக் கவர்ந்தன.

திருமண நிலைக்கு வந்தபோது, ‘என்னது சாதி மாறி திருமணமா?’ என அவர்கள் வீட்டில் பொங்கி எழுந்த போதும், நட்பும் உறவும் மருத்துவ சகாக்களும் சொல்லி ஆற்றுப்படுத்தினார்கள். எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ள, கொஞ்சம் சந்தோஷத்துடனும், நிறைய வலிகளுடனும், இன்றைக்கும் ஆற்றுப்படுத்த முடியாத சில துயரங்களுடனும் எங்கள் திருமணம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

பலரும் சொல்வது போல் காதலின் வெற்றி திருமணம் அல்ல. அந்த காதல் கொண்டு அழகுபட வாழ்ந்து காட்டுவதுதான். ‘‘நீங்க சென்னை மருத்துவமனையில் பணி செய்து வளருங்கள்; நான் மேற்படிப்பு படித்துவிட்டு வந்து இணைகின்றேன்...’’ என அன்றைக்கு என்னை முன் நிறுத்தி அவள் பின் நின்று உதவ ஆரம்பிக்காவிட்டால், இன்றைக்கு இவ்வளவு பெரிய உயர்விற்கு நிச்சயம் வந்திருக்க முடியாது.

இந்த 25 வருடத்தில் தினமும் ‘அன்பே ஆருயிரே’ என சொல்லிக்கொள்வதில்லை. ‘நாயே... பேயே...’ என சண்டை கட்டிய சம்பவமும் ஏராளம். ஆனாலும் அடுத்த சில மணி நேரங்களில் விதவிதமான மாயங்களோடு சமாதானத்திற்கு வந்துவிடுவோம். அதில் சுயம் அழிந்த அன்பே இருக்கும்.
பொதிகை மலையில் செண்பகாதேவி அருவிக்கு மேலாக நடக்கையில் ‘‘பாரு... நாம ரெண்டு பேரும் பெரிய சித்தா டாக்டராகி, பனி கொட்டுற ஆல்ப்ஸ் மலையின் சிகரத்துக்கு போவோம். அத்தனை பனியிலும் நமக்கு குளிர் இருக்காது. அங்கேயும் நம் காதல் இருக்கும்...’’ எனச் சொல்லியிருந்தேன்.
இரண்டு வருடங்களுக்கு முன் அப்படி ஆல்ப்ஸ் மலையின் உயர்ந்த  சிகரமான யுங்ப்ரூவுக்கு (-27 டிகிரி) நாங்கள் பயணித்து நின்ற போது பொதிகைக் காதலை நினைவு கூர்ந்தது மறக்க முடியாதது.

சித்த மருத்துவம் என்றால் சற்று இளக்காரமாகவும், கடைசித் தேர்வாகவும் இருந்த காலத்தில்தான் நாங்கள் பயிற்சிக்கு வந்தோம்.
ஒவ்வொரு முறை கொஞ்சம் அவமானப்படுகையிலும், சோர்ந்து நிற்கையிலும், எவ்வித பொருளாதாரப் பின்னணி யும் இல்லாமல் கையறு நிலையில் கைபிசைந்து நிற்கையிலும் எங்களை உசுப்பித் தள்ளிய உந்துசக்தி காதல்தான்.

‘‘ச்சே! நாம் தோற்றால் காதலித்தவர் தோற்றுப்போவார்கள் என ஆகிவிடும். ஜெயிக்கணும்பா...’’ என விடாமல் ஓட வைத்தது காதல்தான்.
சாதி மாறி திருமணம் செய்வதில் பிரச்னை எல்லா ரூபத்திலும் வரும். திருமணங்கள், விருந்துகள், அன்றாட சாப்பாடு, ஆடை, அடையாளம், உறவு, ஊர் என தினம் கடக்கும்.

பணியில், சமூக இறுக்கத்தில், சோர்வுற்று இருக்கையில், காதலின் களிப்புகள் மறைந்து, இப்படியான கேள்விகள் எங்கேனும் எப்போதாகினும் முன் எழுகையில் இருவருக்கும் எரிச்சலும் கோபமும் வரும். நம் சமூகம் வளர்த்த சங்கடமான விஷயங்களை, அழகியலோடு கூடிய பொய்களோடோ நடிப்புகளோடோ கூட கடந்து சென்றுவிடுவோம். அதுவே இன்றைக்கும் சுகதுக்கங்களைக் கடந்து எங்கள் வாழ்க்கைக்கான அழகைத் தந்துகொண்டிருக்கிறது. அதை உணர்ந்து புரிந்து கொள்கிற மனைவி அமைந்ததே எனக்கு பேரானந்தம்.

செய்தி: நா.கதிர்வேலன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்