நியூஸ் நூடுல்ஸ்செல்லப்பிராணிகளின் காதலர்களுக்காக பிரத்யேகமாக கண்டுபிடிக்கப்பட்ட கேமரா இது. 1080 பிக்ஸல் தரத்தில் இரவு பகல் பாராது வீடியோக்களை இது பதிவு செய்யும். 160 டிகிரி வைடு ஆங்கிள் கோணத்தில் உங்களின் செல்ல நாயைக் கண்காணித்து ஸ்மார்ட்போனுக்கு தகவல் அனுப்பும். இதிலிருக்கும் சென்சார் உங்களின் நாய் எப்போது குரைக்கும் என்பதைக் கூட கண்டுபிடித்துச் சொல்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் அழிந்துபோன உயிரினங்களில் முக்கியமானது டாஸ்மேனியா புலி. 1935ம் வருடம் கடைசி டாஸ்மேனியா புலியை வீடியோ பதிவு செய்திருந்தனர். கருப்பு வெள்ளையில் 21 விநாடிகள் ஓடக்கூடியது. சமீபத்தில் நேஷனல் ஃப்லிம் அண்ட் சவுண்ட் ஆர்க்கைவ் ஆஃப் ஆஸ்திரேலியா இந்த வீடியோவை 4k தரத்தில் புதுப்பித்து இணையத்தில் வெளியிட, சில மணி நேரத்தில் லட்சம் பார்வையாளர்களின் மனதைக் கொள்ளையடித்துவிட்டது டாஸ்மேனியா புலி.

கியூபாவைச் சேர்ந்த சுவரோவியக் கலைஞர் யூலியர். சக கலைஞர்களுடன் இணைந்து கியூபாவின் தெருக்களில் உள்ள சுவர்களில் கொரோனா வைரஸின் பாதிப்பை வெளிப்படுத்தும் ஓவியங்களையும், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஓவியங்களையும் வரைந்து வந்தார்.

விளைவு... தெற்கு ஹவானாவில் உள்ள தனது நண்பர் வீட்டின் கொல்லைப்புறத்தில் கொரோனா சார்ந்த சுவரோவியங்களை வைத்து கொரோனோ டவுனையே உருவாக்கிவிட்டார் யூலியர்!

தங்களை மற்றவர்களால் சரியாக அடையாளம் காண முடியவில்லை என்பது மாஸ்க் அணிபவர்களின் கவலை. இதைப் போக்குவதற்காக புது ஐடியாவுடன் களமிறங்கியிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் பினேஷ் பால். ஆம்; வாடிக்கையாளர்களின் முகம் பிரின்ட் செய்யப்பட்ட மாஸ்க்கை உருவாக்கியிருக்கிறார் பினேஷ். இந்த மாஸ்க் அறிமுகம் செய்யப்பட்ட முதல் வாரத்திலேயே 3 ஆயிரம் விற்றுத்தீர்ந்துவிட்டன. 5 ஆயிரம் மாஸ்க்குகள் ஆர்டரில் உள்ளன. இதன் விலை ரூ.60.

மொசைக் கலைஞர் ஜிம் பேஜர் பற்றித்தான் சிகாகோவில் ஹாட் டாக். சாலைகளில் இருக்கும் குழிகளைத் தாமாகவே முன்வந்து அடைக்கிறார் ஜிம்.
அப்படி அடைக்கும்போது கொரோனா சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அந்த இடத்தை மொசைக் கலையின் மூலம் அழகுபடுத்துகிறார்.
இப்படி  ஒவ்வொரு குழியையும் அடைக்க 12 மணி நேரம் அயராது உழைக்கிறார் ஜிம்.


கொரோனா வைரஸுடன் வென்டிலேட்டர் என்ற வார்த்தையும் வெகு பிரபலமாகிவிட்டது. நுரையீரலுக்குத் தேவையான ஆக்சிஜனை உள்வாங்கி தேவையில்லாத கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும் வேலையைச் செய்கிறது இக்கருவி. சுவாசிக்க இயலாத சூழலில் பயன்படுத்தப்படும் வென்டிலேட்டரை மிக மலிவான விலையில் உருவாக்கியிருக்கிறார் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த எஞ்சினியர் ராஸ் ஹன்டர். பயன்படுத்தப்படாத காபி மெஷினில் இருந்து இதை அவர் தயாரித்திருப்பதுதான் ஹைலைட்.

நியூசிலாந்தின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் சுற்றுலாத்துறையின் பங்கு 10 சதவீதம். லாக்டவுனால் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் முதலாளிகளிடம், ‘ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை பார்த்தால் போதும்’ என்பதை பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மற்ற மூன்று நாட்கள் மக்கள் நியூசிலாந்துக்குள் உள்நாட்டுச் சுற்றுலா சென்று நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பது அவரது திட்டம். வாரத்தில் நான்கு நாள் வேலை சீக்கிரம் அங்கே அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஒரு ஏரியில் மீன் பிடித்திருக்கிறான் ஆறு வயதான சிறுவன் நாக்ஸ் ப்ரூவர். அவனது தூண்டிலில் ஒரு காந்தம் உள்ளது. மீன் பிடிக்கும்போது தண்ணீருக்கு அடியில் உள்ள சேறில் மாட்டிக்கொண்ட ஒரு இரும்புப்பெட்டியைக் காந்தம் ஈர்த்துள்ளது. அவன், மீன் மாட்டிவிட்டது என மேலே தூண்டிலை எடுக்க, இரும்புப் பெட்டி மேலே வந்துள்ளது. அதைத் திறந்துபார்த்தால் நகை, செக் புக், கிரெடிட் கார்டுகள்!

ஆச்சர்யம் தாளாமல் சிறுவன் தந்தையிடம் சொல்ல, அவரோ காவல்துறையிடம் அந்தப் பெட்டியை ஒப்படைத்துவிட்டார். விசாரணையில், அந்தப் பெட்டி எட்டு வருடத்துக்கு முன்பு திருடுபோன ஒரு பெண்ணுடையது என்று தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தால் ஹீரோவாகி வைரலாகிவிட்டான் நாக்ஸ்.

உலகின் பல நாடுகளில் லாக்டவுன் முடிந்து மக்கள் வெளியே வர ஆரம்பித்துவிட்டனர். உணவகங்களும் திறந்துவிட்டன. ஆனால், எந்த உணவகமும் முன்பு போல இல்லை. சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதால் மக்கள் அமர்ந்து சாப்பிடும் முறையே மாறிவிட்டது.

இதில் பெரும்பாலானவர்களைக் கவர்ந்தது கண்ணாடி பூத் முறைதான். போன் பூத் போல கண்ணாடி பூத் அமைக்கப்பட்டிருக்கும். அதற்குள் நான்கு பேர் அமர்ந்து சாப்பிடலாம். அந்த நான்குபேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி.

ஒரு பூத்திற்கும் இன்னொரு பூத்திற்கும் இடையில் குறிப்பிட்ட இடைவெளி இருக்கும். ஆம்ஸ்டர்டாம், ரோம் போன்ற நகரங்களில் இந்த கண்ணாடி பூத்திற்கு நல்ல வரவேற்பு.

உலகின் தலைசிறந்த பத்து தீவுகளில் ஒன்று பலவன். பிலிப்பைன்ஸில் வீற்றிருக்கும் இத்தீவை அழகழகான மலைக்குன்றுகள் அலங்கரிக்கின்றன. கடற்கரை, காடு, குகை என்று ஆரம்பம் முதல் இறுதி வரை சொர்க்கம் போல காட்சி தருகிறது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த தீவு பலவன் என்று அடித்துச் சொல்கிறது ‘நேஷனல் ஜியோகிராபிக்’ இதழ். ‘டிராவலர்’ பத்திரிகையின் வாசகர்கள் பலவனை ‘உலகின் மிக அழகான தீவா’கத் தேர்ந்தெடுத்துள்ளனர். இன்று வருடத்துக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் விசிட் அடிக்கும் இடமாக மிளிர்கிறது பலவன்.

தொகுப்பு: த.சக்திவேல்