முதலில் கொரோனா அடுத்து?



கொரோனாவுடன் வாழப்பழகிய நமக்கு வெட்டுக்கிளிகளுடனும் குடும்பம் நடத்தவேண்டி வருமோ என்ற அச்சம்தான் இந்த வாரத்தின் ஹைலைட்.
ஏற்கனவே லாக்டவுனால் முடங்கிப்போன இராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் வெட்டுக்கிளி களின் படையெடுப்பால் சுமார் 3½ லட்சம் ஹெக்டேர் அளவுக்குப் பயிர்கள் நாசமாகியுள்ளன.

பாலைவனங்கள்தான் வெட்டுக்கிளிகளுக்குப் பிடித்த இடம். ஆனால், இந்த முறை இராஜஸ்தானைத் தாண்டி மகாராஷ்டிரா, தில்லி வரை படையெடுத்து பயிர்களை அட்டாக் செய்திருக்கின்றன. இந்நிலையில் வெட்டுக்கிளிகள் தமிழகத்தையும் தாக்குமோ என்ற பீதியில் உறைந்திருக்கின்றனர் நம் விவசாயிகள். இதுதொடர்பான ஆர்வலர்களைச் சந்தித்தோம்.

‘‘வெட்டுக்கிளி படையெடுப்பு ஒன்றும் புதிதானது அல்ல. இந்தியாவில் 8 ஆண்டு இடைவெளியில் இந்த அட்டாக் சாதாரணமாக நிகழும். இது 1800ம் ஆண்டு முதல் தொடர்ந்து நிகழ்கிறது. கடைசியாக 2011ல் நிகழ்ந்தது. ஆனால், அப்போது பெரும் படையெடுப்பும் பாதிப்பும் இல்லை. பெரும் படையெடுப்பு நிகழ்ந்த ஆண்டு 1993...’’ என்று ஆரம்பித்தார் கோவையில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மரம் பெருக்கும் நிறுவனத்தின் பூச்சியியல் அறிவியலாளரான செந்தில்குமார்.  

‘‘இதை பாலைவன வெட்டுக்கிளிகள் என்று அழைக்கின்றனர். நம் நாட்டில் உள்ள கிராஸ்ஹோப்பர் என்னும் பச்சை வெட்டுக்கிளி இனத்தைச் சேர்ந்தது. இவை ஆப்பிரிக்க, அரேபிய நாட்டில் உள்ள பாலைவனங்களில் உருவாகி மற்ற நாடுகளுக்குப் படையெடுக்கின்றன. இந்தப் படையெடுப்புக்கான முக்கிய காரணம் உணவு மற்றும் இனப்பெருக்கம்.இப்படி படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் 2000 மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடியது. எட்டு ஆண்டு இடைவெளியில், சுமார் 2 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக படையெடுக்கும்.

அதாவது இந்த இரண்டு ஆண்டுகளில் 2லிருந்து 150க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான படையெடுப்புகள் இருக்கும். இந்தியாவில் கடந்த ஆண்டே வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு ஆரம்பித்துவிட்டது. இந்த விபரங்களை கள ஆய்வு மற்றும் சேட்டிலைட் படங்கள் மூலம் விவசாயிகளுக்குத் தெரிவித்துள்ளது மத்திய அரசு.  

பயிர் பாதுகாப்புகளை விவசாயிகள் செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் எதிர்பார்ப்பு. ஆனால், ஒரு சதுர கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 15 கோடிக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் பூச்சிநாசினிகளின் மூலமும் சத்தம் எழுப்பியும் அகற்றமுடியாது. இதை எதிர்கொள்வதுதான் அரசுக்கும் விவசாயிகளுக்கும் முன்னிருக்கும்  பெரும் சவால்...’’ என்ற செந்தில்குமார் இந்த பெரும் படையெடுப்பின் தாக்கங்களைப் பற்றியும் விவரித்தார்.

‘‘பொதுவாக இந்திய படையெடுப்பு அறுவடைக்குப் பின்பான ஜூன், ஜூலை மாதங்களில்தான் நிகழும். ஆனால், இந்த வருடம் பருவநிலை மாற்றங்களால் ஆப்பிரிக்க நாடுகளில் சீக்கிரமே மழை வந்து விட்டது. அதனால் ஆப்பிரிக்க பாலைவனங்களில் வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கமும் சீக்கிரமே நிகழ்ந்துவிட்டது. இதனால்தான் இந்தியாவில் ஜனவரி மாதம் முதற்கொண்டு வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து இப்போது பெரும் படையெடுப்பாக நிகழ்கிறது.

இந்தப் படையெடுப்புகள் ஆப்பிரிக்கா, அரேபியப் பாலைவனங்களில் ஆரம்பித்து ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவை வந்தடைகிறது. இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் விவசாயிகளும் விதைத்ததை அறுவடை செய்யமுடியாமல் இருந்தார்கள். அதனால்தான் அறுவடை தொடங்குவதற்கு முன்பாகவே வெட்டுக்கிளிகளுக்குத் தானியங்களைப் பலி கொடுக்கும் அவலம் நிகழ்ந்தது...’’ என்று செந்தில்குமார் முடிக்க, சுற்றுச்சூழல் ஆய்வாளரான சுல்தான் அகமத் இந்த அட்டாக் பற்றி மேலும் விளக்கினார்.

‘‘பாலைவன வெட்டுக்கிளிகள் மண்ணுக்கு அடியில் முட்டையிடும். மண்ணின் உஷ்ணமும், அதில் பெய்யும் மழையின் ஈரப்பதமும் முட்டையிட நல்ல சூழலாக அதற்கு இருக்கிறது.  முட்டை பொரிந்து குஞ்சாக மாற ஒன்றரை முதல் இரண்டு வாரம் பிடிக்கும். குஞ்சுகள் நான்கைந்து தடவைக்கு மேல் தோலை பாம்பு உரிப்பதுபோல உரிக்கும். இந்தக் காலத்தில் குஞ்சுகளின் மூளையில் செரட்டோனின் எனும் ஒருவகை இரசாயனம் சுரக்கும். இந்த வேதியல் மாற்றத்தால் அவற்றின் உடல் வளர்ச்சிக்காக உணவுத் தேவைக்கான நிர்ப்பந்தம் உருவாகும்.

இந்த நேரத்தில் தோலின் நிறமும் பச்சையிலிருந்து மஞ்சளும் கறுப்பும் கலந்த தோற்றத்தைத் தரும். இந்த நிலை ஏற்படும்போது தனித்தனி யாக குஞ்சுகளாக இருக்கும் வெட்டுக்கிளிகள் ஒன்றாக சேர ஆரம்பிக்கும். சேர்ந்த கிளிகள் உணவுத் தேவைக்கும், பின்பு இனவிருத்திக்காகவும் அலையும்.
முதலில் இருக்கும் இடத்தில் தாவித் தாவி உணவை உண்ணும். உணவால் நான்கு அல்லது ஆறு வாரங்களில் இறகுகள் முளைக்கும். இறகுகள் முளைக்க பசியின் தீவிரம் அதிகமாகும். இருக்கும் இடத்தில் உணவு இல்லாவிட்டால் கூட்டமாக உணவு இருக்கும் இடங்களை நோக்கி படையெடுக்கும்.

மனிதன் என்ன எடை என்றாலும் வயிற்றுக்குத் தேவையானதைத்தான் உண்பான். ஆனால், வெட்டுக்கிளிகள் தன் எடைக்குத் தக்க உண்ணும். இது மனிதனுக்கு உணவுப் பஞ்சத்தைக் கொண்டுவரும்...’’ என்று விவரிக்கும் சுல்தான், தமிழகத்தையும் இது தாக்கலாம் என்று எச்சரித்தார்.

‘‘ஆரம்ப காலங்களில் இராஜஸ்தான் பாலைவனங்கள்தான் அவற்றின் உணவு மற்றும் இனவிருத்தி சூழ்நிலைக்கான இடமாக இருந்தது. ஆனால், இன்று இராஜஸ்தானையும் தாண்டி மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம் வரை வந்துவிட்டது. மகாராஷ்டிராவில்கூட நாசம் பண்ணியதாகச் செய்தி. கேரள-தமிழக எல்லையில் படையெடுப்பு இருப்பதாகவும் தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன.

இன்று தில்லியையும் நோட்டம் விடுவதாக  பீதி கிளம்பியுள்ளது. சிலர் தமிழ்நாட்டுக்கு வராது என்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு அவை இதுவரை வராத சரித்திரத்தை வைத்து அப்படிச் சொல்கிறார்கள். அப்படி என்றால் ஏன் மகாராஷ்டிராவுக்கு வந்தது… ஏன் தில்லி நோக்கி படையெடுக்கிறது என்பதை எல்லாம் இவர்கள் யோசிப்பதில்லை.

வெட்டுக்கிளி களுக்குத் தேவை உணவு. அது எங்கு கிடைத்தால் என்ன? அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் பாலைவனம் இல்லாவிடினும் உணவுத் தேவைக்கு பயிரும், இனவிருத்திக்கு பயிர் செய்த மண்ணும், மண்ணுடன் சேரும் காற்றின் ஈரப்பதமும் இருந்தால் அவற்றுக்கு கொண்டாட்டம்தான்...’’ என்கிற சுல்தான், வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுப்பதற்கான பல்வேறு வழிகளையும் பரிந்துரைத்தார்.

‘‘வெட்டுக்கிளிகளைக் கொல்வதற்காக மாலத்தியான் எனும் பூச்சிக்கொல்லியைப் பலகாலமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், கோடிக்கணக்கான கிளிகளை இவற்றைக் கொண்டு முழுமையாக அழிக்கமுடியாது. அத்துடன் இந்தப் பூச்சிக்கொல்லி பயிர்களுக்கும் மனிதனுக்கும் நச்சாக மாறக்கூடியது.
இதற்கு மாற்றாக சிலர் ஒருவகை பூஞ்சைகளை வளர்க்கச் சொல்கிறார்கள். இதை சாப்பிட்டால் வெட்டுக்கிளிகள் சாகலாம் என்று சொல்கிறார்கள். தவிர, 3ஜி என்னும் ஒருவகை பூச்சிக்கொல்லியையும் இயற்கை விவசாய அறிஞர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதாவது ஜிஞ்சர், கார்லிக், க்ரீன் சில்லியின் முதல் எழுத்துக்களைத்தான் இப்படி 3ஜி என்று சொல்கிறார்கள். இவற்றை முறையே இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் என்று சொல்லலாம்.  என் அனுபவத்தில் கொஞ்சம் பெருங்காயத்தையும் கலக்கலாம் என்றும் சொல்வேன். இவற்றை விவசாயிகள் பயிர்களுக்கு தெளிக்கும்போது வெட்டுக்கிளிகள் அந்தப் பயிர்களைச் சாப்பிடுவது தடுக்கப்படும்.

அனுப்குமார் எனும் ஒரு சுற்றுச்சூழல் ஆய்வாளர் போரிக் ஆசிட்டுடன் சோப் கரைசலைச் சேர்த்து தெளிக்கும் முறையையும் சொல்கிறார். இதனால் வெட்டுக்கிளிகள் சாகாது. ஆனால், மயங்கி கீழே விழும். பிறகு இந்த மயங்கிய வெட்டுக்கிளிகளின் குவியலை கோழித் தீவனமாகவும் பயன்
படுத்தலாம் என்பது அவர் ஆலோசனை. வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் வராது என்று அலட்சியமாக இருப்பதைவிட, வரலாம் என
நினை த்து பாதுகாப்பான நடவடிக்கைகளில் இறங்குவதுதான் புத்திசாலித்தனம். அப்படிச் செய்யும் போதுதான் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் நம் நிலத்தை பாலைவனமாக மாற்றக்கூடிய அவலத்திலிருந்து நம்மைக் காப்பாற்றமுடியும்...’’ என்று முடித்தார் சுல்தான் அகமத்.

பைபிளில் வெட்டுக்கிளி

மோசே காலத்தில் எகிப்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க பத்து வாதைகளை கடவுள் ஏவினார் என்றும் அதில் எட்டாவது வாதையாக வெட்டுக்கிளிகளை எகிப்து மீது ஏவியதால் எகிப்தில் மொத்த விளைநிலங்களும் பாழாகிப் போனது என்றும் அதன்பின்னர்தான் எகிப்து மன்னர் இஸ்ரவேல் மக்களை விடுதலை செய்ய மனமிரங்கும் அளவுக்கு பலவீனமாகிப் போனான் என்றும் சொல்கிறது பைபிள்.

எட்டாவது வாதையை உருவாக்கும்படி ஆனது. பெரும் கூட்டமான வெட்டுக்கிளிகள் எகிப்தை நோக்கிப் படையெடுக்கும்படி செய்தார். ஒருபோதும் இப்படி கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகளை எகிப்தியரோ இஸ்ரவேலர்களோ கண்டதில்லை.அந்த தாக்குதலை வர்ணிக்கும் அக்கால எழுத்தாளர்கள் ‘வெட்டுக்கிளிகள் பூமியை மூடின’ என்று எழுதுகிறார்கள்.

கோபல்ல கிராமம் நாவலில் வெட்டுக்கிளி

னி நாயக்கரும் எங்க்கச்சியும் ஓடிவந்து முற்றத்தில் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனார்கள்.அவர்கள் பிரியமாக வைத்து வளர்த்த கறிவேப்பிலைச் செடி மீது இலை தெரியாமல் விட்டில்கள் (வெட்டுக்கிளிகள்) மொய்த்துக் கொண்டிருந்தன.

அவைகளை விட்டில்கள் என்று சொல்வதா அல்லது அதுக்கு வேறு ஏதாவது பெயர் உண்டா என்பது அவர்களுக்குத் தெரியாது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த வளர்ப்புச் செடியில் ஒரு இலைகூட இல்லை!அதில் உட்கார்ந்திருந்த விட்டில் பூச்சியின் நீளம் முக்கால் சாண் ஒருச்சாண் என்றிருந்தது! இதுக்கு முன்னால் அவர்கள் ஆயுளில் இப்படி, இத்தனை பெரிய விட்டிலைப் பார்த்தது கிடையாது; கேள்விப்பட்டதும் கிடையாது.எங்க்கச்சி பயந்துபோய் புருஷனைச் சேர்த்துக் கட்டிக்கொண்டாள்.

என்ன இது! உலகம் அழிவுகாலத்துக்கு வந்துவிட்டதா?

உலகம், பிரளயம் வந்து அழியப்போகும் போது மழை பெய்யுமாம்; நாள் கணக்கில் நிற்காமல் சரமழை பெய்யுமாம். அந்த மழைச்சரத்தின் கனம் யானைத் துதிக்கைத் தண்டி இருக்குமாம். ஆனால் யாரும் விட்டில் பூச்சி வந்து உலகத்தை அழிக்கும் என்று சொல்லலையே?

அவர் மனைவியை உதறிவிட்டு கோபத்தோடு போய் அந்த விட்டில்களை அடித்து விரட்டினார். செழுமையான அந்தச் செடி இருந்த இடத்தில் ஒரு கம்பும் அதில் சில விளாருகளுமே நின்றுகொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.

அவருக்குத் தொண்டையை அடைத்தது. எந்தப் பக்கம் எங்கே திரும்பினாலும் படபடவென்ற சத்தத்துடன் அதே விட்டில்கள்.கோபல்ல கிராமமே ஒரு தேன்கூடு மாதிரியும் இந்த விட்டில்கள் அதில் மொய்க்கும் ஈக்களைப்போலவும் காட்சி தந்தது.கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மனித அபயக்குரல்கள் கர்ண கடூரமாக ஒலிக்க ஆரம்பித்தது.

ஜனங்கள் நெஞ்சிலும் வாயிலும் அறைந்துகொண்டு அழும் கூக்குரல் கேட்டது. காடுகளில், விளைந்த கம்மங் கதிர்களுக்குக் காவலாக பரண்மேல் உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் திகைத்து, இறங்கிவந்து விட்டில்களை விரட்டிப்பார்த்தார்கள்.கம்புகளால் அடித்துப் பார்த்தார்கள். சோ சோ என்று கூப்பாடு போட்டுப்பார்த்தார்கள். கதிர்களை மறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த விட்டில், பிறகு கதிர் காணாமல் விட்டில் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது!

ஒவ்வொரு பயிரின் கீழிருந்து உச்சி வரைக்கும் விட்டில்கள். அவைகள் மேயும் சத்தம் நெறுக் நெறுக் என்று காடெல்லாம் ஒன்றுபோலக் கேட்டது.
எதைக் கொல்லுவது; எப்படிக் கொல்லுவது? விட்டிலைப் பிடித்தால் ரம்பம் போன்ற அதன் பின்னத்தங்கால்களால் உதைத்துக் கையை ரணமாக்கி விடுகிறது.நல்லமனசு திரவத்தி நாயக்கர் அவருடைய புஞ்சையில் காவல் இருந்தார். கதிர் நன்றாக விளைந்திருந்தது. அவருக்கு மட்டுமல்ல, அந்த வருசம் கிராமம் பூராவுமே அப்படி. நாளைக்குக் கதிரைப் பிரக்கணம் என்று நினைத்திருந்தபோது இப்படி ஆகிவிட்டது.

நல்லமனசு நாயக்கர் விட்டில்களை விரட்டிப் பார்த்தார். தன்னை மூடியிருந்த துப்பட்டியை எடுத்து அவைகளை அடித்து அடித்து விரட்டினார். அசையவே இல்லை. அடியினால் பல விட்டில்கள் விழுந்து குற்றுயிராயின. சிலது செத்தன; ஆனால் போகவே இல்லை.

அவ்வளவு பசி அவைகளுக்கு!தன் கண்ணெதிரே தான் சிரமப்பட்டு உண்டுபண்ணிய மகசூல் அழிய எந்த சம்சாரிதான் சம்மதிப்பான்.
பக்கத்துப் புஞ்சைக்காரனைத் துணைக்குக் கூப்பிடலாமென்றால் அங்கேயும் இதே சோகம். நாயக்கர் ஓடி ஓடி அலுத்துப்போனார். வருஷத்துக்கு ஒரு மகசூல்; அடுத்த தை மாசத்தை இனி எப்படிப் பார்க்கிறது? மனுசருக்கு உணவு இல்லை; கால்நடைகளுக்கு கூளம் இல்லை. எல்லாம் முடிந்தது. முடிந்தது எல்லாம்.

‘‘அய்யோ தேவுடா...’’ என்று மண்ணில் விழுந்து அழுதார். கைக்குக் கிடைத்த தின்பண்டத்தை காக்கை பறித்துக்கொண்டு ஓட கீழே விழுந்து புரண்டு அழும் குழந்தை போலிருந்தது.

(நன்றி: 1976ம் ஆண்டு வெளியான கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’)

17ம் நூற்றாண்டில் தமிழகத்தைத் தாக்கிய வெட்டுக்கிளி

ஜே.எச்.நெல்சன் எழுதிய ‘The Political History of Madura Country’ புத்தகத்தில் இந்த நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. மதுரை நாயக்க வம்சத்தின் புகழ்பெற்ற அரசரான திருமலை நாயக்கருக்குப் பிறகு இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்தார். அவருக்கு அடுத்து ஆட்சி செய்தவர் சொக்கநாத நாயக்கர். இவர் மதுரை ராஜ்ஜியத்தை 1659லிருந்து 1682 வரை ஆட்சி செய்தார்.

அதில் 1662ஆம் ஆண்டில் மதுரையில் நடந்த பயங்கரங்களை இப்படி விவரிக்கிறார் ஜே.எச்.நெல்சன்.‘‘1662ம் ஆண்டு மதுரை வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகளை சந்தித்ததால் மக்கள் அச்சத்துடன் இருந்தார்கள். பல குழந்தைகள் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தன. ஓநாய்களும் கரடிகளும் புலிகளும் காட்டை விட்டு வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றித் திரிந்தன.

சில நேரங்களில் இவை தலைநகருக்குள்ளும் கிறிஸ்தவ தேவாலயத்தின் சுற்றுச்சுவருக்கு வெளியிலும் சுற்றித் திரிந்தன. பலர் திடீரென வெளிப்படையான காரணங்கள் ஏதுமின்றி இறந்து போனார்கள். முன்பு அறிந்திராத பல வகையான பூச்சிகள் கூட்டம் கூட்டமாகத் தோன்றி பொறுத்துக்கொள்ள முடியாத துர்நாற்றத்தைப் பரப்பி காற்றை மாசுபடுத்தின. இவை மக்களைக் கடித்து பொறுக்க முடியாத வலியை ஏற்படுத்தின. காலரா பரவியதால் ஒரே குடும்பத்தில் பதினைந்து நாட்களில் ஏழு பேர் இறந்துபோனார்கள்...’’

நாட்டாரியல் வரலாற்றாய்வாளரான அ.கா.பெருமாள், மதுரை, திருவிதாங்கூர் பகுதிகளில் வெட்டுக்கிளி தாக்குதல்கள் இருந்திருக்கின்றன என்கிறார்.
‘‘17ம் நூற்றாண்டின் இறுதியில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த மக்கள், வெட்டுக்கிளி தாக்கியதால், வரியைக் குறைக்க வேண்டுமென மகாராஜாவுக்கு விண்ணப்பம் செய்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.

அதேபோல பில்லுகட்டி நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, அவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்றும், வெட்டுக்கிளி தாக்குதலின்போது கன்னியாகுமரி மாவட்டத்தை நோக்கி நகர்ந்ததாகவும் அவர்கள் கூறினார்கள். இது நடந்தது 18ம் நூற்றாண்டில்...’’ என்ற அ.கா.பெருமாள், இன்னொரு சுவாரஸ்யமான தகவலைச் சொல்கிறார்.அதாவது, இந்த பில்லுகட்டி நாயக்கர் சமூகத்தினர், வெட்டுக்கிளி தாக்குதலைச் சமாளிக்க வயல்களில் பரண்களைக் கட்டி வவ்வால்களை வளர்த்தனராம்!   

டி.ரஞ்சித்