வந்தாச்சு ஃபேஸ் மாஸ்க்!மாஸ்க் அணிந்து கொள்ள விரும்பாதவர்களைக் கூட மாஸ்க் அணியவைத்து அழகு பார்த்துள்ளது முகச்சாயல் மாஸ்க். புதுசுக்கு எப்பவுமே மவுசு போல பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த மாஸ்க்கை வாங்கிச் செல்கிறார்கள். இதை அணிந்துகொண்டால் நீங்கள் யார் என்பதை எளிதில் மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளலாம். மாஸ்க்கால் மறைக்கப்பட்ட முகப்பகுதி மாஸ்க்கின் மேல்புறத்தில் பிரின்ட் செய்யப்பட்டிருப்பது இதன் ஸ்பெஷல்.

இந்த முகச்சாயல் மாஸ்க்கை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் சேலையூரில் எஸ்டிஎம் என்ற புகைப்பட ஸ்டூடியோவை நடத்தி வரும் ஆண்டோ அமல்ராஜ். ‘‘எப்பவுமே வித்தியாசமாக யோசித்து செய்வது வழக்கம். 10 வருடங்களுக்கு முன்பு ஸ்கூல் பசங்க புத்தகங்களில் ஒட்டக்கூடிய லேபிளின் ஓரத்தில் அவர்களது புகைப்படத்தை வைத்துக் கொடுத்தேன். இந்த லேபிளுக்கு தமிழ்நாடு முழுவதுமே நல்ல வரவேற்பு. அதற்கு முன்பு லேபிளின் ஓரத்தில் பறவைகள், விலங்குகள்தான் இருக்கும்.

பிறகு ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில், லஞ்ச் பாக்ஸிலும் போட்டோ பிரிண்ட் செய்து தந்தேன். இப்போது மாஸ்க்...’’ என்று ஆரம்பித்த ஆண்டோ 15 வருடங்களாக ஸ்டூடியோவை நடத்தி வருகிறார்.‘‘திடீர்னு கொரோனா, ஊரடங்குன்னு வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. என்ன செய்வதுன்னு தெரியவில்லை. என்னிடம் இருபது பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சம்பளம் தரணும். கடை வாடகை, வங்கிக்கடன் வேறு. சொல்ல முடியாத மனவேதனையில் இருந்தேன்.

இந்த நேரத்தில்  புகைப்படக்காரர்கள் சங்கத்தில் இருந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட செய்தியைப் படித்ததும் தூக்கி வாரிப்போட்டது. அப்போதுதான் பருத்தியால் ஆன பனியன் துணியில் மாஸ்க் தைத்து மக்கள் பயன்படுத்தலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வந்து என் நெஞ்சில் பாலை வார்த்தது.

முன்பே டி ஷர்ட், காபி மக், தலையணையில் போட்டோ பிரிண்ட் செய்து கொடுத்துள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதே மாதிரி மாஸ்க்கிலும் புதுமை காட்டலாம்னு நினைத்தேன். உடனே ஒரு டி ஷர்ட்டை கத்தரித்து மாஸ்க் போல தைத்து என் போட்டோவையே அச்சிட்டேன். அதை அணிந்துகொண்டு கடை வீதிக்குப் போனேன்.

நிறையபேர் ‘இந்த மாஸ்க் எங்க செய்றாங்க...’னு ஆர்வமாக கேட்டார்கள். போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது. ஒரு நம்பிக்கை பிறந்தது. உற்சாகமாக மாஸ்க் தயாரிப்பில் இறங்கினேன்...’’ என்றவர் இந்த மாஸ்க் உருவாகும் விதத்தை விளக்கினார்.‘‘வாடிக்கையாளரின் புகைப்படத்தை எடுத்து சப்ளிமேஷன் பிரின்டிங் தொழில்நுட்பத்தில் இந்த மாஸ்க்கை வடிவமைக்கிறோம். இரண்டு லேயரில் மாஸ்க் இருக்கும். அதாவது உட்பகுதியில் சுத்தமான காட்டன் துணியை வைத்தும் வெளிப்பகுதியில் மெலிசான துணியை வைத்தும் உருவாக்குகிறோம்.

துணிகளுக்குப் பயன்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட சாயங்களைக் கொண்டுதான் அச்சு வார்க்கிறோம். வாடிக்கையாளரின் தோலின் நிறத்திலேயே மாஸ்க் இருப்பது ஹைலைட். துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது...’’ என்கிற அமல்ராஜ் இந்த மாஸ்க் ஐடியா தோன்றியவுடன் தமிழ்நாடு புகைப்படக் கலைஞர்கள் சங்க வாட்ஸ் அப் குரூப்பில் தெரிவித்துள்ளார். விளைவு... தமிழ்நாடு முழுவதும் உள்ள போட்டோ ஸ்டூடியோக்காரர்கள் இப்போது முகச்சாயல் மாஸ்க்கை செய்யத் தொடங்கியுள்ளனர்.
‘‘முகத்தை பாதியளவு மாஸ்க்கே அடைத்துக்கொள்கிறது. அதனால் அலுவலகம் மற்றும் பல இடங்களில் முகம் தெரியாமல், யார் இவர்... என்ற கேள்வி எழுகிறது.

இந்தப் பிரச்னையை எங்களின் மாஸ்க் தீர்த்து வைக்கும். இதுபோக, நடிகர்களின் மாஸ்க், கார்ட்டூன் மாஸ்க் என விதவிதமாகத் தயாரிக்கிறோம். அவெஞ்சர், ஸ்பைடர்மேன் என்று குழந்தைகள் விரும்புகிற கார்ட்டூன் கதாநாயகர்கள் படத்தை ப்ரின்ட் செய்து தருகிறோம்.
பெண்களில் பலர் அவர்களின் உடைக்குத் தகுந்தது போல அச்சிட்டு வாங்கிச் செல்கிறார்கள். சமீபத்தில் இளைஞர் ஒருவருக்கு மீசை, தாடி என பல கெட்டப்களில் மாஸ்க் செய்து கொடுத்தேன். தினமும் ஒரு மாஸ்க் அணிந்து விதவிதமான மீசை இருப்பது போல அலுவலகத்தில் கெத்து காட்டுகிறார் அவர்.

தவிர, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பல பள்ளிகளுக்கு ஐடி கார்டு பிரின்ட் செய்து தருகிறோம். இந்த வருடம் ஐடி கார்டுடன் மாணவரின் புகைப்படத்தை அச்சிட்ட மாஸ்க் ஒன்றும் தர உள்ளோம். சாதாரண மாஸ்க் அணிந்தால் மாணவர்கள் அனைவருமே ஒரே உருவம் போல இருப்பார்கள். எங்களின் மாஸ்க் அணிவதால் ஆசிரியர்கள் மாணவர்களை அறிந்து பாடம் நடத்த சுலபமாக இருக்கும்.

முடிந்த அளவு மாணவர்களுக்கான மாஸ்க்கை மிகக்குறைந்த விலையில் தரவிருக்கிறோம். இதற்காக  திருப்பூரில் உள்ள பல நிறுவனங்களிடம் தரமான காட்டன் துணியை வாங்க ஆலோசித்து வருகிறோம்.பல போட்டோ ஸ்டூடியோக்காரர்கள் இதுபற்றி விசாரிக்கின்றனர். அவர்களிடம் இருப்பதை வைத்து எப்படி மாஸ்க் செய்யலாம் என்பதைக் கூறி வருகிறேன்.

பொருளாதாரத்தைத் தாண்டி இந்தத் தொழில் சார்ந்த தகவல்களைப் பகிர்வது மகிழ்ச்சியளிக்கிறது. தற்கொலை செய்துகொண்ட சங்க உறுப்பினர்கள் மூவரை நினைத்து இப்போதும் மனம் வருந்துகிறேன். ஆகையால் நள்ளிரவில் அழைப்பு வந்தால் கூட எடுத்துப் பேசுகிறேன்.

ஒருவகையில் இந்த மாஸ்க் பொதுமுடக்கத்தால் முடங்கிய புகைப்படத்தொழிலைப் புதுப்பித்துக் கொடுத்திருக்கிறது. புகைப்படம் எடுத்து, மாஸ்க் செய்ய கட்டணம் 250 ரூபாய். புகைப்படத்தை வாடிக்கையாளர்களே தந்தால் 180 ரூபாய் கட்டணம். குழந்தைகள் படம், கார்ட்டூன் முகக்கவசங்கள், பெண்கள் சுடிதாருக்கு ஏற்ற முகக்கவசங்கள் அதன் அளவைப் பொருத்து விலை மாறும்...’’ என்கிறார் அமல்ராஜ்.

திலீபன் புகழ்