வேதனைப்படும் வேப்பங்குளம் கிராமம்



நீர் மேலாண்மைல சிறந்த கிராமம்னு அரசு விருது கொடுத்துச்சு...இப்ப அதே அரசு எங்க கிராமத்தை பாலைவனமா மாத்துது!

கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்மாவட்ட செய்திகளில் அடிக்கடி அடிபட்ட பெயர், வேப்பங்குளம். ஏனெனில், நீர்மேலாண்மையில் சிறந்த கிராமம் எனப் பெயரெடுத்து, மாவட்ட ஆட்சியர் கையில் விருது பெற்று, விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் கண்டதுதான். இதனால், தமிழக அளவிலும் மற்ற கிராமத்தினரைத் திரும்பிப் பார்க்க வைத்தது இந்தக் கிராமம்.  
 

ஆனால், இன்று அதே கிராமத்தினர், தங்கள் விவசாயம் அழியும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதாக வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர். காரணம், இந்தக் கிராமத்தை ஒட்டி தனியார் நிறுவனம் ஒன்று பிரம்மாண்டமாக அமைத்து வரும் சோலார் பவர் பிளான்ட்! சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே இருக்கும் வேப்பங்குளம் கிராமத்தினரிடம் பிரச்னை பற்றிப் பேசினோம்.
‘‘எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து விவசாயம் பண்றேன். அப்ப, ஆத்து தண்ணீர்லதான் விவசாயம் பண்ணினோம். ஊரை ஒட்டினமாதிரி மணிமுத்தாறுனு ஒரு சிற்றாறு ஓடுது. அதுல வர்ற நீர் கண்மாய்களுக்குப் பாயும். அப்ப எலுமிச்சை, நார்த்தங்காய், தென்னைனு ஊரே பார்க்க பூஞ்சோலை மாதிரி இருக்கும்.

சுமார் நானூறு ஏக்கர்ல விவசாயம் பண்ணினோம். அது ஒரு பொற்காலம். நெல், குதிரைவாலி, கேப்பைனு இரண்டு போகம் விளைஞ்ச மண் இது.
அப்புறம் மழை பொய்த்துப் போச்சு. ஆத்து நீர் அரிதாச்சு. விவசாயமும் லாபகரமாக இல்லாம கடினமாச்சு. கண்மாய்களும், வரத்து கால்வாய்களும் தூர்ந்து போனதால போர்வெல் போட்டு விவசாயம் பண்ணினோம்.

இதனால, கடந்த பத்து வருஷமா விவசாயம் சுருங்கி 75 ஏக்கரா மாறுச்சு. அதனால, நிறைய பேர் ஊரை விட்டு வெளியூர், வெளிநாடுனு வேற வேலைக்குப் போயிட்டாங்க. இப்ப ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் வரத்து கால்வாய்கள சுத்தப்படுத்தி தண்ணீரை கண்மாய்கள்ல சேகரிச்சோம். கண்மாய்களை தூர்வாரி விவசாயத்தை மீட்டெடுத்தோம். இப்ப அந்த பவர் பிளான்ட்காரங்க வரத்துக் கால்வாய்கள எல்லாம் மூடி தரைமட்டமா ஆக்கிட்டாங்க. இதனால, மறுபடியும் தண்ணீர் வத்தி விவசாயம் பண்ண முடியாம நாங்க ஊரைவிட்டுப் போக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு...’’ என வருத்தமாகப் பேசுகிறார் விவசாயி தில்லைநாதன்.

இந்தக் கிராமத்தை மீண்டும் பூஞ்சோலையாக மாற்றிய இளைஞர்களில் ஒருவரான திருச்செல்வம், வேதனையை அடக்கியபடி பேசத் தொடங்கினார். ‘‘கடந்த ரெண்டு வருஷமா எங்க வேப்பங்குளம் கிராமத்துல விவசாயத்தைச் சிறப்பா பண்ணிட்டு வர்றோம். முன்னாடி கண்மாய்களும், வரத்து கால்வாய்களும் தூர்வாராததால் விவசாயம் சுருங்கி இருந்துச்சு. இதுல வரத்துக் கால்வாய்ங்கிறது கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் பாதை. அதாவது, சுற்றியுள்ள காடுகள்ல பெய்கிற மழைநீரை இந்த வரத்துக் கால்வாய் வழியா கண்மாய்க்குக் கொண்டு வருவோம். அங்கிருந்து மடைகள் வழியா விவசாயத்துக்கு நீரைப் பயன்படுத்துவோம்.

இதை சரிசெய்யணும்னு ஊர்ல கலந்து ேபசினோம். அப்ப ஊர் பெரியவங்க மூலம் நான்கு கண்மாய்களுக்கு நீர் தர்ற ஏழு வரத்துக் கால்வாய்களைக் கண்டுபிடிச்சோம். தூர்ந்து போய் கிடந்ததை முன்பு இருந்தது போலவே சரி செய்தோம். இதோடு கண்மாய்களையும் தூர்வாரினோம்.

எங்க வேப்பங்குளம் பஞ்சாயத்துல எட்டு சிறு கிராமங்கள் இருக்கு. ஊர் மக்கள், வெளியூர்ல வேலை செய்கிறவங்க, நண்பர்கள்னு எல்லார்கிட்டயும் மொத்தமா ஐந்து லட்சம் ரூபாய் கலெக்ட் பண்ணி இந்த வேலையை செஞ்சு முடிச்சோம். அப்புறம் பெஞ்ச ரெண்டு மழைக்கு கண்மாய்கள் 60 சதவீதம் நிறைஞ்சது. சுமார் 15 வருஷங்களுக்குப் பிறகு கடந்த 2018ல்தான் மடை திறந்து விவசாயம் பண்ணினோம்.

75 ஏக்கர்ல நடந்த விவசாயம் 250 ஏக்கரா மாறுச்சு. அப்ப சிவகங்கை மாவட்டமே போதிய மழை இல்லாம இருந்துச்சு. ஆனா, நாங்க நீர்மேலாண்மையைக் கையாண்டு விவசாயத்தைச் சிறப்பா செய்தோம். இதைப் பார்த்திட்டு மாவட்ட ஆட்சியர் சிறந்த நீர்மேலாண்மைக்கான விருதை வேப்பங்குளத்துடன் சேர்ந்த எல்லா கிராமங்களுக்கும் கொடுத்தார். மொத்தம் 9 விருதுகள். தவிர, எனக்கு சிறந்த தகவல்தொடர்பு தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான விருதும் கொடுத்தார். இப்படி போயிட்டு இருந்தப்ப இன்னும் ரெண்டு கண்மாய்களுக்கான மராமத்துப் பணிகளைச் செய்ய மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கினார். சுமார் ஒரு லட்சம் பணமும் கொடுத்தார்.

இதனால, 350 ஏக்கரா விவசாயம் விரிஞ்சது. இந்த கண்மாய் நீர் வந்ததும், நிலத்தடி நீர் அதிகரிச்சு போர்வெல்லும் நிறைஞ்சது. விவசாயம் சிறப்பா நடந்ததால நெல் மூட்டைகள் அதிகமாச்சு. ஆனா, வியாபாரிகள் குைறஞ்ச விலைக்கு நெல் மூட்டையைக் கேட்டாங்க. இப்படி கேட்டா விவசாயிகள் இனி எப்படி விவசாயம் செய்ய வருவாங்க? அதனால, ஊர் இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து 300 நெல் மூட்டைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கினோம். அதை பாலீஷ் செய்யப்படாத அரிசியாக மாத்தி விற்கலாம்னு முடிவெடுத்தோம். வேப்பங்குளம் பெயரில் ஒரு அரிசி பிராண்டை உருவாக்கினோம்.

இதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் வேப்பங்குளத்துல சிறப்பு நெல் கொள்முதல் நிலையம் அமைச்சுக் கொடுத்தார். இப்ப வருஷத்துக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் பஞ்சாயத்தா வேப்பங்குளம் மாறியிருக்கு. இதுக்கிடையில, கோடை பயிரா கடலை, உளுந்து, சிறுதானியங்கள் என இரண்டாவது போகத்தையும் கையில் எடுத்திருக்கோம். இனி, அடுத்த ஆண்டு முதல் போகத்தை 400 ஏக்கரா மாத்த இலக்கு வச்சிருக்கோம்.

தவிர, இப்போது ஈட்டும் ஒரு கோடியை ரெண்டு கோடி ரூபாயா உயர்த்தவும் இலக்கு வச்சு உழைக்க தயாராகிட்டு வர்றோம்.
ஆனா, இந்நேரத் துலதான் நீர்பிடிப்புப் பகுதியில் இந்த சோலார் பவர் பிளான்ட்டை அமைக்கிறாங்க. லட்சக்கணக்கில் மின்தகடுகள் பதிக்கப்படுவதால் வெப்பநிலை கூடி எங்க பகுதியில மழைப் பொழிவு குறையவோ அல்லது பொழியாமல் போகவோ வாய்ப்பிருக்கு. இதனால, விவசாயத்தைக் கைவிடக்கூடிய மனநிலைக்கு நாங்க தள்ளப்பட்டு இருக்கோம்...’’ என்கிறார் திருச்செல்வம் வேதனையுடன்!  

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்திருக்கும் வேப்பங்குளம் பஞ்சாயத்துத் தலைவரான சித்ரா கணேசன், ‘‘இங்க 400 ஏக்கர்ல சோலார் பவர் பிளான்ட் அமைக்க கம்பு ஊன்றிட்டு இருக்காங்க. நாங்க எதிர்ப்பு தெரிவிச்சதும் வரத்து கால்வாய்களை அதைவிட இரண்டு அடி கூடுதலா தோண்டிக் கொடுத்திடுறோம்னு சொல்றாங்க. ஆனா, அந்த பிளான்ட்டால 25 கிமீ சுற்றளவுக்கு வெப்பம் அதிகரிக்கும்னு சொல்றாங்க.
தவிர, 1500 அடிக்கு போர்வெல் போடுறாங்க. இதனால, எங்களுக்கு நிலத்தடி நீர் பிரச்னையாகும். இதைச் சொன்னதும் ரோபோ வச்சு பிளான்ட்டை சுத்தம் பண்ணுவோம்னு சொல்றாங்க.

ஆனா, கமுதியில இதேமாதிரி ஒரு பவர் பிளான்ட் இருக்கு. அங்க தண்ணீர் வச்சுதான் கிளீன் பண்றாங்க. கமுதி விளைச்சல் பகுதி கிடையாது. இருந்தும் அங்க அந்த பிளான்ட்தான் குடிநீர் பிரச்னைக்கு காரணம்னு சொல்றாங்க. பொதுவா, இந்த மாதிரி பிளான்ட் எல்லாம் தரிசு நிலத்துலதான் அமைக்கணும். ஆனா, வேப்பங்குளம் இரண்டு போகம் விளைகிற விவசாய கிராமம். இது மத்திய அரசுக்குத் தெரியுமானு தெரியல. சிறந்த நீர்மேலாண்மை விருது கொடுத்த கிராமத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தாங்கனு தெரியல.

கடந்த ஜனவரி மாசம் அந்தக் காட்டுப் பகுதியில இருந்த ைதல மரத்தை வெட்டினாங்க. அப்ப கூட நாங்க வேற தோப்புகள் வரப் போகுதுனுதான் நினைச்சிட்டு இருந்தோம். இன்னைக்கு வரை பஞ்சாயத்துல இந்தக் கம்பெனிதான் ஆரம்பிக்கப் போறோம்; இதெல்லாம் செய்யப் போறோம்னு எந்தத் தகவலும் தெரிவிக்கல. மக்கள்கிட்ட கருத்து கேட்பும் நடத்தல. நானும் அவங்ககிட்ட போய், ‘மக்கள்ட்ட சொல்லிட்டு செய்யுங்க. இதனால எந்த பாதிப்புமில்லனு உத்தரவாதம் கொடுங்க’னு கேட்டேன். ஆனா, இதுவரை அவங்க பதில் சொல்லல.  

மாவட்ட ஆட்சியரும், ‘அவங்க இடம் வாங்கி செய்றாங்க. நாம ஒண்ணும் பண்ணமுடியாது. உங்களுக்கான வரத்துக் கால்வாயை ரெடி பண்ணித் தந்திடுவாங்க’னு சொல்றார். ஆனா, இந்தப் பிளான்ட்டால மழையே பெய்யாதுனு நாங்க பயப்படுறோம். தவிர, நீர்பிடிப்புப் பகுதியை சரிசமமாக்கிட்டதால வரத்துக் கால்வாய்க்கு எப்படி நீர் வரும்? ஆக, வரத்துக் கால்வாயை சரிசெய்கிறதால பிரச்னை தீராது.

இந்தக் கொரோனா காலத்துல வெளிமாநிலத்துல இருந்து ஆட்கள வரவழைச்சு அவசர அவசரமா வேலைகள் செய்றாங்க. இவ்வளவு சீக்கிரமா மின் உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் என்ன? தமிழகத்துல மின்சாரப் பற்றாக்குறையா?

இதப்பத்தி நான் பவர் பிளான்ட் மேலாளர்கிட்ட பேசினேன். ‘கடந்த மூணு மாசமா யாரும் எந்த வேலைக்கும் போகல. அப்ப யாரும் மின்சாரத்தை சாப்பிடல. அரிசிதான் உணவா இருந்துச்சு. பத்து நாட்கள் கூட மின்சாரம் இல்லாம இருக்கலாம். ஆனா, ஒருவேளை பட்டினி கிடக்க முடியுமா? இது விவசாய பூமினு தெரியாதா’னு கேட்டேன்.

அவர், ‘நான் இந்தத் திட்டத்தை முடிச்சிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிருவேன். நீங்க என் மேல கோபப்பட்டு பிரயோசனமில்ல’னு சாதாரணமா சொல்றார். இதுக்கு யார் உரிமையாளர்னு கண்டுபிடிக்கவே முடியல.

எங்களுக்குப் போராட்டம் பண்ண விருப்பமில்ல. ஆனா, எங்களுக்கான நியாயத்தைப் பெற்றுத் தரணும். இந்த பவர் பிளான்ட்டை வேண்டாம்னு சொல்லல. ஆனா, அதை தரிசு நிலத்துல அமைக்கட்டும்...’’ என்கிறார் சித்ரா கணேசன்.   

பேராச்சி கண்ணன்