நான்... - அசந்தா சரத் கமல்!



ஒலிம்பிக் போட்டிக்காக அவ்வளவு பயிற்சிகள் எடுத்துட்டு இருந்தேன். இப்ப கொரோனா காரணமா ஒலிம்பிக்கே தள்ளிப்போயிடுச்சு. சரி, ரொம்ப வருஷங்களாகவே குடும்பத்துக்கு நேரம் செலவிடணும்னு நினைச்சேன். அதுக்கான நேரமா இந்த ஊரடங்கை மாத்திக்கிட்டேன். பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைலதான். பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிலதான் ஸ்கூல். அப்பா, சித்தப்பா ரெண்டு பேருமே டேபிள் டென்னிஸ் கோச். வேலைக்காக ஆந்திராவிலிருந்து சென்னை வந்து செட்டிலானவங்க.

அப்பா டேபிள் டென்னிஸ் கோச் போக வருமான வரித்துறை அலுவலகத்துலயும் வேலை செய்தார். அப்பாவுக்கு ராஜமுந்திரி. அப்பா பேரு ஸ்ரீனிவாச ராவ். அப்பா டேபிள் டென்னிஸ் கோச்சிங்கில் துரோணாச்சாரியார் விருது வாங்கியவர். அம்மா அன்னபூர்ணா, ஹவுஸ்வொய்ஃப். அம்மாவுக்கு சொந்த ஊரு விஜயவாடா. அப்பா நேஷனல் டீமுக்கு கோச்சா இருந்தார். மூணு வயசுலயே டேபிள் டென்னிஸ் என் வாழ்க்கைல நுழைஞ்சிடுச்சு. சைக்கிள் ஸ்டாண்ட்ல நிற்க ஆரம்பிச்ச உடனே அதாவது நான்கு வயதானப்ப டேபிள் டென்னிஸ் கோர்ட்டுகளுக்கு அப்பாவும் சித்தப்பாவும் கூட்டிட்டுப் போகத் தொடங்கிட்டாங்க.

மூணு வயசுல டேபிள் டென்னிஸ் அறிமுகமாகி 4 வயசுல டேபிள் எட்ட ஆரம்பிச்ச உடனே விளையாடவும் ஆரம்பிச்சிட்டேன். 7 - 8 வயது இருக்கறப்ப மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். 12 வயதுக்கு கீழ; 14 வயதுக்கு கீழ; 17 வயதுக்கு கீழ; 19 வயதுக்கு கீழ போட்டிகள்ல பங்கேற்று மாநில அளவுல சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றேன். இதனால 1993, 95, 97 98ம் ஆண்டுகள்ல மாநில அளவில் சாம்பியனாக டாப் ஒன் தரவரிசை சாத்தியப்பட்டது.

பத்தாவது முடிச்ச உடன ரெண்டு சாய்ஸ் என் முன்னாடி இருந்தது. சயின்ஸ் குரூப் எடுத்து இன்ஜினீயரிங் படிப்பது அல்லது காமர்ஸ் எடுத்து டேபிள் டென்னிஸில் தொடர்ந்து புரஃபஷனல் வீரராக விளையாடி சர்வதேச போட்டிகளுக்கு உயர்வது.நான் ரெண்டாவது சாய்ஸை தேர்ந்தெடுத்தேன். 1992 முதல் நேஷனல் லெவல் போட்டிகள்ல விளையாட வாய்ப்பு கிடைச்சது. ஆரம்பத்துல ஒரு மூணு நாலு வருஷங்கள் போட்டில கலந்துப்பேன். போவேன். வருவேன். தோற்பேன்.

2002லதான் போட்டிகள்ல வெற்றி பெற ஆரம்பிச்சேன். இதுக்கிடைல பொருளாதார ரீதியா ரொம்ப சிரமம் வேற. போட்டிக்கான செலவு, பயணச் செலவு, டயட், சாப்பாடு, ஃபிட்னெஸ்க்கான செலவுனு தேசியப் போட்டிகள் எனக்கு எட்டாக் கனியா இருந்தது. ஒரு கட்டத்துல தேசிய அளவிலான போட்டிக்குப் போகணும்னாலே நான் சம்பாதிச்சாதான் முடியும் என்கிற நிலை. அப்பதான் எனக்கு ரயில்வேல ஒரு வேலை கிடைச்சது. அந்
நேரம் லயோலா கல்லூரில பி.காம் முதல் வருஷம் படிச்சுட்டு இருந்தேன். அத்தோடு கல்லூரிக்குப் போய் படிக்கறதை நிறுத்திட்டு தபால் முறைல படிப்பைத் தொடர்ந்தேன்.

2000ல வேலைக்கு சேர்ந்ததும் ஓரளவு நிலமை மாறிச்சு. முதல் தேசிய டேபிள் டென்னிஸ் பயிற்சி கேம்ப்புக்கு செல்லும் வாய்ப்பு, வேலைக்கு சேர்ந்து அதே வருஷம் கிடைச்சது. கோச்சுக்கும் எனக்கும் கூட ஒரு நல்ல நட்பு உண்டாகி போட்டியிலும் நல்லா விளையாடினேன்.

அந்த கேம்ப்லதான் அடுத்து காமன்வெல்த் போட்டிக்கான தேர்வுப் போட்டிகள் நடந்துச்சு. என்னை குழு சப்ஸ்டிடியூட்டாக போட அதிலும் நான் சிறப்பா விளையாடி ரேங்கிங்களுக்கு உயர்ந்தேன். அடுத்த ஒரு வருடம் நான் முதன்மை ஆட்டக்காரனா தேசிய அளவிலேயும் இடம் பிடிச்சேன். 

2004, கோலாலம்பூர்ல நடந்த 16வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டில தங்கப் பதக்கம். டேபிள் டென்னிஸ் போட்டிகள்ல இந்தியா வாங்கிய முதல் சர்வதேச தங்கப் பதக்கம் அதுதான். அங்க தங்கம் வாங்கறப்ப எனக்கு எதுவுமே தெரியலை. நாட்டுக்கு திரும்பியதும்தான் என் சாதனை புரிஞ்சுது. எங்க பார்த்தாலும் செய்தி, மக்கள் வாழ்த்துகள்.

அதே போட்டில ஆண்கள் அணிக்கு கேப்டனா இருந்து அந்தப் போட்டிலயும் விருது வாங்கினோம். எங்களுக்கு முன்பு வரை ஒன்பது வருஷங்கள் இங்கிலாந்து அணிதான் தொடர்ந்து வெற்றி அடைஞ்சிட்டு இருந்தது. அந்த சாதனையை முறியடிச்சோம்.

இந்த சாதனைதான் எனக்கு 2004ம் வருஷம் அர்ஜுனா விருது வாங்கிக் கொடுத்தது. அடுத்து 2006 காமன்வெல்த். ஆஸ்திரேலிய வில்லியம் ஹென்செல் கூட எனக்கு போட்டி. அதுல வெற்றி கிடைச்சு தங்கப்பதக்கம். அடுத்து அதே காமன்வெல்த் போட்டில ஆண்கள் அணி கேப்டனா சிங்கப்பூர் அணியை தோற்கடிச்சு அதிலும் விருது.

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டி, 2008 ஒலிம்பிக், 2016 ஒலிம்பிக்னு வரிசையா போட்டிகள். உலகத் தரவரிசைல 63வது இடத்திலிருந்து 31வது இடத்துக்கு முன்னேறினேன். இதற்கிடையிலே என் தம்பியுடைய கிளாஸ்மேட் பூர்ணி கூட நட்பு. அதுவே காதலாகி 2009ல கல்யாணத்துல முடிஞ்சுது. எனக்கு ரெண்டு பசங்க. மகள் சயாஷாவுக்கு 9 வயது. பையன் தேஜஸுக்கு ரெண்டரை வயசு.

பூர்ணி டேபிள் டென்னிஸ்லாம் அவ்வளவா பார்க்க மாட்டாங்க. அதிலும் நான் விளையாடினா டென்ஷன் ஆகிடுவாங்க. அதனாலயே தவிர்த்திடுவாங்க. என் தம்பிக்குதான் என் காதல் பத்தி முதல்ல தெரியும். தம்பியும் டேபிள் டென்னிஸ் பிளேயர்தான். எனது ஜோடி ஆட்டக்காரர். இப்ப டேபிள் டென்னிஸ் கோச். தேசிய அளவுல விளையாடியிருக்கார். ஒரு போட்டில அவருக்கு தோள்பட்டை எலும்பு கொஞ்சம் நகர்ந்திடுச்சு. அதனால அவரால தொடர்ந்து போட்டிகள்ல விளையாட முடியாமப் போயிடுச்சு. இப்ப ஊரடங்கு நேரத்துல எனக்கு டேபிள் டென்னிஸ் ஜோடி அவர்தான்.

நடக்க இருந்த எல்லா டென்னிஸ் போட்டிகளும் ரத்து. குறிப்பா ஒலிம்பிக் தள்ளிப்போயிடுச்சு. நிறைய டயட், கட்டுப்பாடு, பயிற்சினு முழுமையா ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிட்டு இருந்தேன். நான் மட்டுமில்ல... எல்லா விளையாட்டு வீரர்களும் ஒலிம்பிக் கனவை நினைவாக்க பெரிய அளவுல பயிற்சிகள் செய்திருப்பாங்க. எல்லாமே இந்த ஊரடங்கு காரணமா தள்ளிப் போயிருக்கு.

ஆனாலும் வீட்லயே எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயிற்சி எடுக்கறேன். குழந்தைகள் கூட அதிக நேரம் செலவிடறேன்.நான் வேலை செய்தாதான் என்னால போட்டிக்கே போக முடியும் என்கிற நிலை. அதை உணர்ந்து படிப்பு, வேலை, விளையாட்டுனு மூணையும் சின்சியரா பேலன்ஸ் செய்யறேன்.
கண்டிப்பா வர்ற ஒலிம்புக்குல பதக்கம் வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்!  

செய்தி: ஷாலினி நியூட்டன்