இந்திய - சீன எல்லைப் பிரச்னை ஓர் அலசல்!



கடந்த சில வார காலமாக இந்திய - சீன எல்லைப் பிரச்னை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்த முறை லடாக் பகுதிகளில் உரசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லையோரங்களில் சீனா, சாலை விரிவாக்கங்கள் செய்வது, இராணுவ தளவாடங்களை உருவாக்குவது, ஆயுதம் தாங்கிய வாகனங்களை நிறுத்துவது என்று பதற்றம் ஏற்படுத்தும் காரியங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. இதை இந்தியா கண்டிக்கும்போதெல்லாம் பிரச்னை தீவிரமாகிறது.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு இந்த ஏரியின் அருகே இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் பகுதி லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ளது.

இதற்கு முன்னதாக இரு நாடுகளும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கள் துருப்புகளின் இருப்பை அதிகரித்து வருவதாக செய்தி வந்தது.
அதேபோல், அக்சாய் சீனாவின் கால்வன் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்தின் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்தியா கூறியது. அதன்பிறகு அங்கு தனது இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்தது.

ஆனால், சீனாவோ, கால்வன் பள்ளத்தாக்கு அருகே சட்டவிரோதமாக பாதுகாப்பு தொடர்பான கட்டுமானங்களை இந்தியா செய்துவருவதாக குற்றம் சாட்டுகிறது.இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப பிரதேசம் வழியாக இந்த எல்லைகள் செல்கின்றன.

மேற்குப் பகுதியில் ஜம்மு - காஷ்மீர், மத்தியப் பகுதியில் இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கிழக்குப் பகுதியில் சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் என நீள்கின்றன இந்த எல்லைப் பகுதிகள். இவ்வளவு நீண்ட எல்லைப் பகுதிகள் இருந்தாலும் இரு நாடுகளும் இன்னும் முழுமையாக எல்லைகளை வரையறுக்கவில்லை. பல பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லைத்தகராறு நீடிப்பதே இதற்குக் காரணம்.

இப்போது மேற்குப் பகுதியில் உள்ள அக்சாய் சீனா தனக்குச் சொந்தமானது என இந்தியா கூறுகிறது. 1962ம் ஆண்டு இந்தியாவுடனான போரின்போது, சீனா இந்தப் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்தது.கிழக்குப் பகுதியில் அருணாச்சலப் பிரதேசம் தனக்குச் சொந்தமானது என்று உரிமை கோரும் சீனா, இது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று கூறுகிறது.

திபெத்துக்கும் அருணாச்சலப் பிரதேசத்திற்கும் இடையிலான மக்மோஹன் கோடு தொடர்பான ஒப்பந்தத்தையும் சீனா ஏற்கவில்லை. 1914ல், திபெத் சுதந்திரமான நாடாக இருந்தது. பிறகு, 1950ல், சீனா திபெத்தை முழுவதுமாகக் கைப்பற்றிவிட்டது. எனவே அந்த எல்லைக்கோடு செல்லாது என்கிறது.
இந்த மோதல்கள் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைகள் முடிவு செய்யப்படாமல் தொடர்கிறது.

இருக்கும் நிலையை அப்படியே தக்க வைத்துக்கொள்ள, எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு, அதாவது Line of Control (LOC), என்ற சொல் பயன்படுத்தப்
படுகிறது. ஆனால், இது அரசியல் ரீதியாக அத்தனை தெளிவான சொல் அல்ல. அக்சாய் சீனாவில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதியான கால்வன் பள்ளத்தாக்கு - லடாக் மற்றும் அக்சாய் சீனா இடையே இந்தோ - சீன எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி) சீனாவை இந்தியாவில் இருந்து பிரிக்கிறது. இந்தப் பள்ளத்தாக்கு சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் மற்றும் இந்தியாவின் லடாக் வரை பரவியுள்ளது.

இந்தப் பகுதி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்தப் பகுதியில், பாகிஸ்தான், சீனாவின் ஜின்ஜியாங் மற்றும் லடாக்கின் எல்லைகள் இருக்கின்றன. 1962 போரின் போதுகூட, கால்வன் நதியின் இந்தப் பகுதி போரின் முக்கிய மையமாக இருந்தது.எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்காக இந்தியாவும் சீனாவும் சிறப்பு பிரதிநிதிகளை (எஸ்.ஆர்) நியமித்துள்ளன. இந்த சிறப்பு பிரதிநிதிகள் இதுவரை 20க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்திய - சீன எல்லைத் தகராறுக்கான சிறப்பு பிரதிநிதிகளின் (எஸ்.ஆர்) 22வது கூட்டம் புதுதில்லியில் 2019 டிசம்பர் 21 அன்று நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தலைமையில் இந்திய பிரதிநிதிக் குழு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது.இப்படியான சூழ்நிலையில்தான் லடாக் பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த எல்லையில் சீனா 5,000க்கும் மேற்பட்ட வீரர்களைத் திடீரென குவித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் தனது எல்லையில் வீரர்களை நிறுத்தியது.

பாங்ேகாங் ஏரி, கால்வன் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இரு நாட்டு இராணுவ கமாண்டர்களுக்கும் இடையிலான கீழ்மட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவுகள் எடுக்கப்படவில்லை என்கிறார்கள். இதுவே பதற்றத்துக்கும் இராணுவக் குவிப்புக்கும் காரணம். கொரோனா பிரச்னையால் உலகமே தவித்துக் கொண்டிருக்கும்போது சீனா இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது.

ஏற்கெனவே, கொரோனாவால் உலக நாடுகள் பலவும் சீனாவின் மீது கடுப்பில் இருக்கும் சூழலில் இந்த எல்லைப் பிரச்னையை வழக்கமான ஒன்றாகப் பார்க்க இயலாது என்று கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதற்குத் தகுந்தாற் போலவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டவர்கள் இந்தப் பிரச்னை குறித்து இருவேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.

‘‘இரு நாடுகளும் விரும்பினால், இந்திய - சீன எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்...’’ என்று அமெரிக்க அதிபர் நியாயம் பேச, ‘‘இந்துத்துவ மேலாதிக்கம் கொண்ட மோடி அரசு, தனது கடுமையான விரிவாக்கக் கொள்கைகளாலும், நாஜிக்களின் வாழ்நிலக் கருத்துகளைத் தன்னுடையதாக மாற்றியிருப்பதாலும் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. குடிமக்கள் திருத்தச் சட்டத்தால் பங்களாதேஷுக்கும்; எல்லைத் தகராறுகளால் நேபாளம், சீனா, பாகிஸ்தானுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது...’’ என்று விமர்சித்திருக்கிறார்.

இந்த இரு பேச்சுக்களும் இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏற்கெனவே சீனா அனுப்பி வைத்த பிபிஇ கிட்கள், என்-95 மாஸ்க்குகளில் பெரும்பகுதி தரமற்றவை என்றும் அதற்கான தொகையைத் தர இயலாது என்றும் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கூறியதோடு, சீனாவின் பொறுப்பற்றதனத்தைக் கடுமையாகச் சாடியுள்ளன.

அமெரிக்காவோ, கொரோனா வைரஸ் என்று சொல்லாமல் வூஹான் வைரஸ் என்றே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது. மேலும், கொரோனாவால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு பல மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சீனாவிடம் கோரி வருகின்றன.

இப்படியான சூழலில் இந்தியா - சீனா இடையே எல்லைத் தகராறு உருவாவது நிச்சயம் உலக அரசியலுக்கு நல்லதல்ல.அமெரிக்காவில் விரைவில் வர உள்ள அதிபர் தேர்தலில் வெற்றிபெற கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கலாமா அல்லது வழக்கமாக எல்லா அதிபர்களும் செய்யும் ஒரு பொது எதிரியைக் காட்டி போர் தொடுக்கலாமா என்று டிரம்ப் சிந்தித்துவரும் வேளை இது.

இதுபற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் சீனா மேலும் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் வேலைகளையே செய்து கொண்டிருக்கிறது.
கொரோனா என்னும் கண்ணுக்குத் தெரியாத எதிரியுடனான போரையே தாங்காத மனித குலம், நாடுகள் பங்கேற்கும் இன்னொரு போரைத் தாங்கும் மனநிலையில் இல்லை என்பதே எதார்த்தம்.                          

இளங்கோ கிருஷ்ணன்