தல!sixers story-2



“கிரிக்கெட்டே செத்துப் போச்சி…”

“நடிகை பின்னாடி சுத்துறானுங்க... விளம்பரத்துலே நடிக்கிறானுங்க. ஆடுறதைத் தவிர்த்து மத்த எல்லாத்திலேயும் கவனமா இருக்கானுங்க…”
“அவனுங்க லட்சம் லட்சமா சம்பாதிக்கறானுங்க... நாம லீவு போட்டு மேட்ச் பார்த்தா நமக்கென்ன லாபம்?”“இனிமே யாரு சார் கிரிக்கெட்டெல்லாம் பார்ப்பா?”“கவாஸ்கர், கபில்தேவ், அசாருதீனெல்லாம் இருந்தப்போ எப்படி இருந்துச்சி. தெரியுமா?”2007. மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துவிட்டு வந்த பின்னர் ஒட்டுமொத்த தேசமும் கிரிக்கெட்டையே துறக்க முடிவெடுத்தது.

ஆனால் -அது பிரசவ வைராக்கியம் என்பது பரம்பரை கிரிக்கெட் ரசிகர்கள் ஏற்கனவே அறிந்த ரகசியம்தான்.இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, உலகமகா விரக்தியில் உழன்று கொண்டிருந்த நேரம்.அப்போது உலக கிரிக்கெட்டின் வடிவமே மாறிக்கொண்டிருந்ததை நாம் உணரவில்லை.யெஸ்.1970களில் டெஸ்ட் போட்டிகளுக்கு மவுசு குறைந்தபோது, ஒருநாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு கிரிக்கெட்டுக்கு விறுவிறுப்பு சேர்த்தது அல்லவா?

அதுபோல கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்தகட்ட பாய்ச்சலாக டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2003 வாக்கில் இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்கிடையே டி20 போட்டிகள் நடந்தன. அவற்றுக்கு ரசிகர்களிடம் அபரிமிதமான வரவேற்பு கிடைத்திருந்தது.2005ல் ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் அதிகாரபூர்வமாக ஒரு டி20 போட்டி நடந்தது.இருதரப்பு வீரர்களும் 20 ஓவர் போட்டியை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் ஜாலியாக ஆடினார்கள்.

இதற்கிடையே கிரிக்கெட் ஆடும் பல்வேறு நாடுகளுக்குள்ளும் டி20 வடிவில் உள்ளூர் அணிகள் மோத, சுவாரஸ்யம் காரணமாக இப்போட்டிகளுக்கு மவுசு கூடியது.ஒருநாள் முழுக்க கிரிக்கெட்டுக்கு செலவழிக்காமல் மூன்று, மூன்றரை மணி நேரத்தில் கிடைத்த விறுவிறுப்பு... இந்த வடிவப் போட்டிகளுக்கு ஏகத்துக்கும் மவுசு கூட்டியது.

சர்வதேச வீரர்கள், டி20 போட்டிகளைக் குறித்து பெரிய அபிப்ராயம் இல்லாமல்தான் இருந்தார்கள்.ஆனால் -டி20 போதையின் ருசியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உணர்ந்தது.இதில் கொட்டப்போகும் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை அது வருமுன் கண்டது.
50 ஓவர் உலகக் கோப்பை முடிந்த ஆறே மாதத்தில் டி20 உலகக் கோப்பை என்று ஐசிசி அறிவித்தது.கிரிக்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருந்த ஜாம்பவான் நாடுகள் பலவும், ‘இதெல்லாம் வெட்டி வேலை’ என்று சலித்துக் கொண்டன.

குறிப்பாக 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி தோல்விக்குப் பிறகு வேண்டாவெறுப்பாக கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கோ, ‘இது
வேறயா?’ என்று அச்சமும், அதிருப்தியும் ஏற்பட்டது புரிந்து கொள்ளத்தக்கதுதான்.இருபது ஓவர் மேட்ச்தானே? கத்துக்குட்டி அணிகள் மோதிக் கொள்ளட்டும். நாம் நைசாகக் கழண்டுக்கலாம் என்று இந்தியா உட்பட, சில முக்கியமான நாடுகள் கருதின.ஆனால் -எல்லா பெரிய அணிகளும் கட்டாயம் கலந்துகொண்டே ஆகவேண்டும் என்று ஐசிசி கண்டிப்பு காட்டியது.

அதுநாள் வரை இந்திய அணி ஆடியிருந்த டி20 போட்டி ஒன்றே ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் உலகின் கடவுளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் விளையாடிய ஒரே ஒரு டி20 சர்வதேசப் போட்டியும் அதுதான்.டி20 உலகக் கோப்பை  போட்டியில் விளையாட அன்றைய சீனியர் வீரர்களும் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட், தான் இங்கிலாந்தில் நிறைய கவுண்டி மேட்ச்கள் விளையாட ஒப்புக் கொண்டதை  காரணம் காட்டி தப்பித்துக் கொண்டார்.திராவிட்டுக்கு முன்பு கேப்டனாக இருந்த கங்குலி, கோச் கிரேக் சேப்பலோடு நடந்த மோதலின் காரணமாகவே கேப்டன் பதவியை இழந்தார்.

அந்த காண்டு அவருக்கு இருந்துகொண்டே இருந்தது. எனவே, திராவிட் ஒதுங்கியதுமே ‘மறுபடியும் என்னை கேப்டன்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்திடாதீங்க’ என்கிற லெவலில், ‘நானும் ஆடலைப்பா…’ என்று இரண்டு கைகளையும் தூக்கிவிட்டார்.

‘சிங்கத்தை டெஸ்ட்டு மேட்ச்சுலே உறுமிப் பார்த்திருப்பீங்க... ஒன்டேவிலே வெரட்டி வெரட்டி வேட்டையாடிப் பார்த்திருப்பீங்க… டி20 மாதிரி சப்பை ஏரியாவுக்கெல்லாம் கூப்பிட்டு அசிங்கப்படுத்திடாதீங்கய்யா...’ என்கிற ரேஞ்சில் சச்சினும் நைசாகக் கழன்றுகொண்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அஸ்திவாரங்களாக இருந்த மும்மூர்த்திகளும் கழன்றுகொண்ட நிலையில் டீமை ஒப்பேற்ற வேண்டும்.
தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார் தவித்துப் போனார்.இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருந்த ராகுல் திராவிட்டை தொடர்பு கொண்டார்.
“டி20 எல்லாம் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு. முப்பது வயசுகளைத் தாண்டிட்ட நாங்களெல்லாம் ஒதுங்கி நின்னு அவங்களை ஊக்குவிக்கிறோம்...” என்று டீசண்டாக சொன்னார்.

அப்போதைய ஐசிசி தலைவர் சரத்பவாரும் திராவிட்டிடம் பேசினார். “சச்சினை மறுபடியும் கேப்டன் ஆக்கி, அவர் தலைமையில் யங் டீம் அனுப்புங்க…” என்று ஆலோசனை கூறி நைசாக பந்தை சச்சின் பக்கமாகத் தட்டிவிட்டார் திராவிட்.

ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்து சச்சின் பட்ட பாடுகள் ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்தின் பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணி பட்ட பாடுகளைவிட அதிகம்.அப்போது புனே நகரில் சச்சினின் கோச் ராமகாந்த் அச்ரேகரை கவுரவிக்கும் ஒரு விழா சிறப்பாக நடந்தது.

அந்த விழாவில் சச்சினை சந்தித்து “டி20 உலகக் கோப்பைக்கு நீங்கதான் தலைமை தாங்கணும்...” என்று சரத்பவார் கேட்டுக் கொண்டார்.
நாகரிகமாக மறுத்தார் சச்சின். “நம்ம பாய்ஸை நம்புங்க. அவங்க நல்லா ஆடுவாங்க...” என்றார்.“அப்போன்னா யாரு கேப்டன்?”

மும்மூர்த்திகள் தவிர்த்து கிரிக்கெட்டில் அப்போது அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தவர்கள் அதிரடி மன்னன் வீரேந்தர் சேவக், சிக்ஸர் சுனாமி யுவராஜ் சிங், மேஜிக் ஸ்பின்னர் ஹர்பஜன்சிங் ஆகியோர்.இந்த மூவரில் ஒருவர் பெயரைத்தான் சச்சின் சொல்லுவார் என்று சரத்பவார் எதிர்பார்த்தார்.பளிச்சென்று சச்சின் சொன்ன பெயர், ‘மகேந்திரசிங் தோனி!’

ஒரு விபத்து மாதிரிதான் இந்திய கிரிக்கெட் அணியை அடுத்ததளத்துக்குக் கொண்டு சென்ற ‘தல’ தோனி, கேப்டன் ஆனார்.தேர்வுக்குழுத் தலைவர் வெங்சர்க்கார், அப்போதைய கேப்டன் திராவிட், முந்தைய கேப்டன் கங்குலி ஆகியோரும் சச்சினின் இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்டனர்.

சர்வதேசப் போட்டிகளில் தோனி விளையாட ஆரம்பித்து மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. அப்போது அவரது வயது 26.‘குருவி தலையில் பனங்காய்’ என்கிற எண்ணத்தோடுதான் தோனியின் தலைமையில் தென்னாப்பிரிக்காவுக்கு அணியை அனுப்பி வைத்தார்கள்.

(தூக்கி அடிப்போம்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்