அம்மாவின் பொய்கள்



மே மாதக் கோடை வெயில், 2020.இருநூறு கிலோமீட்டர் நடை, மாநிலம் விட்டு மாநிலம் இடப்பெயர்ச்சி, ரெண்டு பெட்டிகள், மூன்று குழந்தைகள்.
வழிநடைப் பயணத்தில் சந்தித்த, இவளுடைய மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டு இளைஞர்கள் உறுதுணையாயில்லாமல் இருந்தால் இன்னும் அதிகமாக சிரமப்பட்டிருப்பாள்.

அந்த இளைஞர்களிடமும் பெட்டிகளும், பொதிகளும் இருந்தன. இருப்பினும் இவளுடைய பெட்டியொன்றைப் பெற்றுக்கொண்டு அவர்களில் ஒருவன் கூடுதல் சுமையாக சுமந்து கொண்டான்.மற்றவன், இவளுடைய கடைக்குட்டிப் பையனைத் தூக்கித் தன்னுடைய பிடரியில் ரெண்டு பிஞ்சுக்கால்களையும் கழுத்தைச் சுற்றித் தொங்க விட்ட படி அமர வைத்துக்கொண்டான்.

இவளுடைய கிராமத்தைக் கடந்து அந்த ரெண்டு பேரும், மேலும் தொடர்ந்து நடந்து தங்களுடைய கிராமத்தைச் சென்று அடைய வேண்டுமென்றார்கள்.‘‘ஒங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். பாய்சாப்...’’ என்று இவள் நெகிழ்ந்தபோது, ‘‘இறைவனிடம்தான் பிரார்த்திக்கணும் பெஹன்ஜி(தங்கச்சி), இந்த அரசாங்கத்தை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை...’’ என்று விரக்தியடைந்தான் அந்தப் புதிய சகோதரன்.

‘‘எங்க ஊருக்கும் ஒங்க ஊருக்கும் எவ்வளவு தூரம் இருக்கும், பாய்சாப்?’’ என்று இவள் கேட்டதற்கு, இவளுடைய கிராமத்தைக் கடந்து அந்த ரெண்டு பேரும் மேலும் ஒரு இருநூறு கிலோ மீட்டர் நடக்க வேண்டுமென்றார்கள்.‘‘எரநூறு கிலோமீட்டருக்குமேல இன்னுமொரு எரநூறா! எப்டி நடப்பீங்க பாய்சாப்!’’‘‘மூணு குழந்தைங்களோட நீங்க எப்படி நடக்கிறீங்களோ பெஹன்ஜி, அப்டித்தான்! ஒங்க ஊர்ல, ஒங்க வீட்ல குழந்தைகளையும், ஒங்களையும் பத்திரமா சேத்துட்டு நாங்க மேற்கொண்டு ஜாலியா நடக்க ஆரம்பிச்சிருவோம்...’’

‘‘அப்படியெல்லாம் நீங்க ஜாலியா நடக்க அனுமதிக்க முடியாது அண்ணா. என்னோட வீட்டுக்காரரும், மாமனார் - மாமியாரும் ஒங்களை வெளியே விடமாட்டாங்க. எங்களோட தங்கியிருந்து இந்த லாக்டவுன் பிரச்னையெல்லாம் ஒரு முடிவுக்கு வந்த பின்னால, பஸ்கள், ரயில்களெல்லாம் ஓட ஆரம்பிச்ச பின்னாலதான் நீங்க எங்க வீட்ட விட்டு வெளியேற முடியும். அதுக்கு முன்னால நீங்க தப்பிச்சிப்போக நா விடவே மாட்டேன்...’’
இவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த அண்ணன்மாருக்குக் கண்கள் பனித்துவிட்டன.

குட்டிப்பையனைப் பிடரியில் சுமந்துகொண்டிருந்தவன், குழந்தையுடைய பிஞ்சுப் பாதங்களைப் பற்றித் தன்னுடைய ஈரவிழிகளில் மாறி மாறி ஒற்றிக்கொண்டான்.குட்டிப் பயலுக்கு சவாரி செய்ய ஒரு தோள் கிடைத்துவிட்டாலும், ஆறு வயது மகளும், நாலு வயது மகனும் கால் நோக நடக்கத்தான் வேண்டியிருந்தது.

குழந்தைகளுடைய ஸ்லோ மோஷனுக்கு இணையாக, அந்த இளைஞர்களிருவரும் தங்களுடைய வேகத்தைத் தணிக்க வேண்டியிருந்தது.
அவ்வப்போது மரநிழலில் கொஞ்சம் ஓய்வு, எப்போதாவது குட்டித்தூக்கம் என்று கிட்டத்தட்ட இருபது மணி நேரம் நடந்திருந்தார்கள்.
இவளுடைய கைவசமிருந்த சொற்ப பிஸ்கெட் பாக்கெட்டுகள், பிரட் துண்டுகள், தண்ணீர் போத்தல்கள் எல்லாம் காலி. குழந்தைகள் பசிக்கிறது என்றால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

வேறே என்ன செய்வது, இந்த சகோதரர்கள் ஏதாவது வைத்திருப்பார்கள் என்கிற சிந்தனை வந்தபோதே, ஐயையோ, அப்படியெல்லாம் அவர்களிடம் அனுகூலமெடுத்துக் கொள்ளக்கூடாது; தண்ணீருக்காகக்கூட இவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று உறுதிகொள்ள நினைத்தபோது, அந்த உறுதி குலையக்கூடிய சந்தர்ப்பம் அப்போதே வந்து தொலைக்கும் என்று நினைத்திருக்கவில்லை இவள். படு இக்கட்டான சூழ்நிலை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, மேற்கொண்டு சமாளிக்க முடியாத நெருக்கடியில், இவளுக்கு நாலடி முன்னால் நடந்துகொண்டிருந்த சகோதரர்களை, எட்டி நடந்து சமீபித்தாள்.

‘‘பாய்சாப், மன்னிக்கணும், ஒரு தொந்தரவு...’’‘‘என்ன தங்கச்சி?’’‘‘வந்து... ஒரு அவசரம்... எனக்கு பாத்ரூம் போகணும்போல இருக்கு அண்ணா...’’
‘‘பட்டப்பகல்லயா! ஒதுங்க எடமே இல்லையேம்மா! இருட்டுற வரைக்கும் சமாளிக்க முடியாதா?’’
‘‘முடியாது போலிருக்கே அண்ணா, கொஞ்சம் அவசரம். அப்புறம், இன்னுமொரு விஷயம், என்ட்ட தண்ணி இல்ல...’’
‘‘அதுக்கென்ன, எங்கிட்ட ஒரு பாட்டில் இருக்கு...’’

‘‘ஆனா, இது நீங்க குடிக்க வச்சிருக்கீங்களே அண்ணா...’’‘‘அதுக்கென்ன, அவசரத்துக்கு பயன்படுத்திக்கலாம். கடவுள் வேற தண்ணி வழியில கொடுப்பார். கடவுள நம்பித்தானே தங்கச்சி நாமெல்லாரும் நடந்துட்டிருக்கோம்...’’

சகோதரர்கள் ரெண்டு பேரும், குழந்தைகளும், இவளுக்கு முதுகைக் காட்டியபடி மறைத்துக்கொண்டு நிற்க, இவள் அவஸ்தையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள்.தொடர்ந்து நடக்கிறபோது, அந்த ரெண்டு சகோதரர்களில் ஒருவனுடைய கையை நன்றியோடு பற்றிக்கொண்டாள் இவள்.
இப்போது கண்கள் பனிக்க வேண்டியது இவளுடைய முறை. ‘‘ரொம்ப நன்றி அண்ணா. நீங்க ரெண்டு பேரும் இல்லன்னா, கடவுளே, நா எப்டித் தவிச்சிப் போயிருப்பேன்!’’

‘‘இதெல்லாம் ஒரு உதவியா தங்கச்சி! இதுகூட செய்யலன்னா நாங்க ஒங்களோட நடந்து வர்றதுல என்னம்மா பிரயோஜனம்..?’’
‘‘என்னமோ அண்ணா, இந்தக் கடுமையான பிரயாணத்துல நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு வழித்துணையாக் கெடச்சது கடவுளுடைய பெரிய கருணைதான். நா சொன்ன மாதிரி, நீங்க எங்க வீட்ல தங்கியிருந்து, இந்தக் கொரோனா ஒழிஞ்ச பின்னாலதான் ஒங்க ஊருக்குக் கிளம்பணும்...’’
‘‘அதப்பத்தி யோசிப்போம் தங்கச்சி. ஆமா, ஊர்ல ஒங்க வீட்டுக்காரர் இருக்கிறதாச் சொன்னீங்களே, அப்டீன்னா, அவர் ஊர்லதான் வேலை செய்றாரா? நீங்க எப்டி நகரத்துல கொழந்தைங்களோட..?’’

‘‘எல்லாரும் சேர்ந்துதான் இருந்தோம் அண்ணா, அவர் கட்டடத் தொழிலாளி. நானுந்தான். ரெண்டு மாசத்துக்கு முன்னால கால்ல ஒரு பாறை விழுந்து அவருக்குக் காலொடஞ்சி போச்சு. ஓய்வெடுக்க அவர் ஊருக்குப் போய்ட்டார். இங்க, பள்ளிக்கூடத்துல படிச்சிட்டிருக்கிற மகளுக்கு லீவ் விட்டதும் நாங்களெல்லாரும் ஊருக்குப் போற திட்டத்துலதான் இருந்தோம். ஆனா, இப்டிக் கால்நடையாப் போவோம்னு நெனைக்கவே
யில்லை!’’இருள் கவியத் தொடங்கியது. இவர்களோடு நடைப்பயணத்திலிருந்த சில குடும்பங்கள் ஆங்காங்கே அமர்ந்தன. சில குடும்பங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.

பிடரியில் ஆரோகணித்து வந்த குழந்தைச் சிறுவன் அந்தத் தலையின் மேலே தன்னுடைய தலையைச் சாய்த்து உறக்கத்திலி ருந்தான்.
‘‘அம்மா, தூக்கம் வருது...’’ என்றன மூத்த குழந்தைகளிரண்டும், ஒரே குரலில். அம்மாவுக்கு ஆறுதலாயிருந்தது. சந்தோஷமாயுமிருந்தது. ‘அம்மா, பசிக்கிது’ என்று சொல்லாத வரைக்கும் ஆறுதல்தான், சந்தோஷம்தான்!

‘‘அண்ணா, கொஞ்ச நேரம் ஓய்வெடுப்போமா?’’ என்றொரு விண்ணப்பம் வைத்தாள். ‘‘பிள்ளைகளுக்குத் தூக்கம் வருதாம்...’’
‘‘ராத்திரி நேரம், வெயில் இல்லாத நேரம், நடக்க சுகமாயிருக்கும் தங்கச்சி. பிள்ளைகளுடைய தூக்கத்தப் போக்க நா ஒரு மருந்து தர்றேன்...’’
பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை எடுத்து மூத்தவளிடம் கொடுத்தான்.

‘‘தம்பியும் நீயும் பாதிப்பாதி எடுத்துக்கோங்க. பிஸ்கெட்ட தின்னுட்டு தெம்பா நடக்கணும். ஒரு ரெண்டு மணி நேரம் நடப்போம். அப்புறம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு திரும்பவும் நடப்போம். ராத்திரி நடந்தா நாளை வெயில்ல நடக்கறத தவிர்க்கலாம். நாளை பகல் முழுக்க ஒரு மரத்தடியில ஜாலியாப் படுத்துக்கிடக்கலாம்...’’

நடந்தார்கள். பொழுது விடிகிற வரைக்கும் நடந்தார்கள். இதற்கு மேல் முடியாது என்று கால்கள் வேலை நிறுத்தம் அல்லது சாலை நிறுத்தம் செய்கிறவரை நடந்தார்கள்.ஒன்பது மணி போல, வெயிலின் தாக்கம் உக்கிரமடைய ஆரம்பித்தபோது ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தார்கள். தங்களைக் கடந்து நடந்து கொண்டிருந்த குடும்பங்களின் பரிதாபக் காட்சிகளைப் பரிதவிப்போடு பார்த்தபடியிருந்தார்கள்.

ஒரு தாய், சக்கரம் பதித்த சூட்கேஸ் ஒன்றை சாலையில் இழுத்தபடி நடந்துகொண்டிருந்ததைக் காணக்கூடியதாயிருந்தது.அந்தத்தாய் இவர்களைக் கடந்தபோதுதான் கண்களில் பட்டது. அந்த சூட்கேஸை அணைத்துப் பிடித்தபடி அதன்மேலே நித்திரையிலிருந்தது மழலையொன்று.

நிறைமாதக் கர்ப்பிணியான மனைவியை இருகரங்களிலும் ஏந்தியவாறு நடந்துகொண்டிருந்த கணவன், ஒரு நூறடி நடக்கிறவனாகவும், பிறகு ‘சுமை’யை இறக்கி வைத்து ஒரு பத்து நிமிட இளைப்பாறலுக்குப் பிறகு நடையைத் தொடர்கிறவனாகவுமிருந்தான்.

ரெட்டைக்காளை வண்டியொன்று இவர்களைக் கடந்து போனது. வண்டிக்குள்ளே ஒரு குடும்பம் நெருக்கிக் கொண்டு அமர்ந்திருந்தது. குடும்பம்தான் வண்டிக்குள்ளே இருந்தது. குடும்பத் தலைவன் வண்டிக்கு வெளியே இருந்தான். ரெட்டைக்காளை வண்டி என்றாலும் ஒற்றைக்
காளைதான் பணியிலிருந்தது, மற்ற காளைக்கு பதிலாகக் குடும்பத் தலைவன் வண்டியை இழுத்துக்கொண்டிருந்தான்!

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.ஞாயிற்றுக்கிழமையென்றால், ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட நாளாயிருக்கும். ஆனால், இது ஒரு சபிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையாயிருந்தது.மே மாதம் மூணாம் தேதி, கி.பி.2020.மொபைல் ஃபோனில் இந்தி செய்திகள் கேட்டுக்கொண்டிருந்தவன், ‘‘தம்பி, ரெண்டு ஹெலிகாப்டர் இந்த வழியாப் பறக்கும் பாரு, செய்தில சொல்றாங்க...’’ என்று சொல்லிக்கொண்டிருந்தது, இவளுடைய காதுகளில் விழுந்தபோது இவள் உற்சாகமானாள்.

‘‘என்னண்ணா சொல்றீங்க, ஹெலிகாப்டர் வருதா! சாப்பாட்டுப் பொட்டலம் போடுவாங்களாமா!’’‘‘நீங்க ஒண்ணு தங்கச்சி, அப்டித் தப்பெல்லாம் நம்ம அரசாங்கம் செய்யாதும்மா. ஹெலிகாப்டர்ல பறந்துபோயி இந்தியாவுல இருக்கிற எல்லா ஆஸ்பத்திரி மேலேயும் வானத்துலயிருந்து பூ தூவப் போறாங்களாம். அதுக்கு 200 கோடி செலவாம்...’’‘‘அந்த 200 கோடியில, இந்தியால இருக்கிற எல்லா ஏழை ஜனங்களுக்கும் வயிறார சாப்பாடு போடலாமே அண்ணா!’’

இப்படியாக, அண்ணன்- தங்கை உரையாடல்கள் கொஞ்ச நேரம் ஆறுதலாகத் தொடர்ந்து கொண்டிருந்தபோது அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
இவளுடைய நாலு வயது மகன் அந்த வில்லங்கமான வாக்கியத்தை முன்மொழிய, அவனுடைய அக்கா அதை வழிமொழிய, அம்மா அதிர்ந்துபோனாள்.
‘‘அம்மா அம்மா, பசிக்குது அம்மா...’’அம்மாவிடமிருந்து சாதகமான பதிலெதுவும் வராமற்போக, மகள், ஏவுகணையை வேறு திசையில் திருப்பினாள். ‘‘அங்கிள், பசிக்கிது அங்கிள்...’’

அங்கிள் அந்தக் குழந்தையைத் தன்னை நோக்கி இழுத்து அணைத்துக் கொண்டான். அவளைத் தேற்றுவதற்கு, ஏதாவது சொல்லி வைக்க வேண்டுமென்று தோன்றியது.விரக்தியாய்ச் சிரித்தபடி சொன்னான்: ‘‘பாப்பா, வானத்தப் பாத்துக்கிட்டே இரு. கொஞ்ச நேரத்துல ரெண்டு ஹெலிகாப்டர் பறந்து வரும். பறந்து வந்து, வானத்துலயிருந்து ரொட்டி பார்சல் போட்டுட்டுப் போகும். எல்லாம் நம்ம அரசாங்க ஏற்பாடு!’’
‘‘ஹை! நெஜம்மாவா அங்கிள்!’’
‘‘நெஜம்மாத்தானா அம்மா?’’

சிலவே சில மைக்ரோ செகண்டுகள் அம்மா தயங்கினாள்.
பிறகு, தன்னுடைய முதல் பொய்யை அவிழ்த்து வைத்தாள்:
‘‘ம்! நெஜம்மாத்தான்.’’‘‘டேய் தம்பி, வானத்துல ஹெலிகாப்டர் வருமாண்டா, ரொட்டி போடுவாங்களாம்டா!’’
‘‘தண்ணி?’’‘‘தண்ணி பாட்டிலும் போடுவாங்க...’’குழந்தைகள் ரெண்டு பேரும், பசியாறுவது பற்றிய குதூகலக் கற்பனைகளில் இருந்தபோது, வானப்பரப்பில் ஓர் அரவரம் உற்பத்தியாகி, இவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது.

நிஜமாகவே ரெண்டு ஹெலிகாப்டர்கள், வானப் பரப்பில்!புளகாங்கிதப்பட்டு, குழந்தைகள் ரெண்டு பேரும் வானத்தை நோக்கிக் கைதட்டினார்கள். அக்காவும், அண்ணனும் கை தட்டுவதைக் கண்ட குட்டிப் பையனும் குதூகலித்துக் கை தட்டினான்.இவர்கள் கை தட்டி ஓய்வதற்கு முன்னால் அந்த ஹெலிகாப்டர்கள் இரண்டும் இவர்களுடைய பார்வை எல்லையைக் கடந்து மறைந்தன.

‘‘அம்மா, என்னம்மா ரொட்டி ஒண்ணும் வானத்துலயிருந்து போடல?’’ என்று ஏமாற்றத்தோடு கேள்வியெழுப்பிய மகளை மேலும் ஏமாற்றுவதற்கு, அம்மா அடுத்த பொய்யைத் தயார் நிலையில் வைத்திருந்தாள்.‘‘அது தெக்குப் பக்கமாய் பறந்து போயி, அந்தக் கடேசிலயிருந்து ஆரம்பிக்கும். அப்டியே பறந்து, திரும்பி வரும்போது இந்தப் பக்கமா வரும். அப்பதான் நமக்கெல்லாம் போடுவாங்க...’’
‘‘திரும்பி வர எவ்வளவு நேரம் ஆகும்மா?’’

‘‘ஒரு மணி நேரம் ஆகும்...’’
‘‘அப்ப ரொம்பப் பசிக்குமே அம்மா!’’‘‘ஒரு மணி நேரந்தானே, அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் படுங்க. ராத்திரி சரியாத்தூக்கமில்லேல்ல, இப்ப  தூங்குங்க...’’பிள்ளைகள் இரண்டு பேரும் தரையில் படுத்துவிட்டார்கள். குட்டிப் பையனையும் அவர்களருகே இவள் கிடத்தினாள். கலவரத்தோடு அண்ணன்மாரை நோக்கினாள். ‘‘இதுங்க எந்திரிச்சவொடன பசிக்குரல் கொடுக்குமே!’’

‘‘இதுங்க பசிக்குரல்தானே கொடுக்கும்? நம்ம வவுறு பசிக்கு ஒப்பாரியே வச்சிட்டிருக்கு தங்கச்சி! கடவுள நம்பித்தானே நாம நடந்துட்டிருக்கோம். கடவுள்ட்டயே சாப்பாட்டுக்கொரு அப்ளிகேஷன் போட்டு வெப்போம்...’’அண்ணனுடைய நம்பிக்கை இவளுக்கொரு தெம்பைத் தந்தாலும், கூடவே சின்னதாக ஒரு சந்தேகமும் இருக்கத்தான் செய்தது. ஆனால், அப்படியெல்லாம் சந்தேகங் கொள்ள அவசியமேயில்லைெயன்று வலியுறுத்துகிற மாதிரி, கனிவான குரலொன்று இவள் மேலே இறங்கியது.

‘‘பேட்டி(மகளே)!’’
இவள் தலையை உயர்த்தி, அந்தக் குரலுக்குரியவரை நோக்கினாள். கண்ணியமான தோற்றத்திலிருந்த பெரியவரொருவர், கையில் சில உணவுப் பொட்டலங்களோடு நின்றிருந்தார். அருகிலேயே அவருடைய ஸ்கூட்டர், உணவுப் பொட்டலங்கள்  நிரம்பி வழிய.
‘‘நீங்க எத்தனை பேர் இருக்கீங்க மகளே?’’

கடவுள், ஒரு தேவதூதன் மூலமாக இப்படிக்கூட மின்னல் வேகத்தில் ஓர் உதவியை அனுப்பி வைப்பாரா என்று இவள் வாயடைத்திருந்த வினாடியில், அண்ணன் ஒருவன் வாயைத் திறந்தான்.‘‘ஐயா, நாங்க மூணு முழு டிக்கட், ரெண்டு அரை டிக்கட், ஒரு கால் டிக்கட்...’’
‘‘இந்தாங்க, ரொட்டியும் சால்னாவும் இருக்கு. ரெண்டு நேரத்துக்கு வச்சிக்கிருங்க. தண்ணி பாட்டில் ஆறு போதுமா?’’
‘‘போதும் ஐயா. நீங்க சாப்ட்டீங்களா ஐயா?’’

‘‘நா நோம்பு மகனே... இது ரம்ஜான் மாசம்...’’
‘‘ஓ மறந்துட்டேன் மௌலானா... மன்னிக்கணும்... ரொம்ப நன்றி மௌலானா...’’
‘‘பஹூத் ஷுக்ரியா மௌலானா...’’‘‘பஹூத் ஷுக்ரியா மௌலானா...’’‘‘இறைவனுக்கு ஷுக்ரியா சொல்லு, மகளே. ஒங்களுக்காக நா துஆ செய்றேன். இறைவன் ஒங்களோட இருப்பான். ஹூதா ஹாஃபிஸ்...’’கண்கள் பனிக்க வேண்டியது. இப்போது, இந்த மூவருடைய முறையுமாயிருந்தது.

‘‘கண்ணத் தொடச்சிக்கிட்டு கொழந்தைங்கள எழுப்பி விடுங்க தங்கச்சி...’’ என்று அண்ணனொருவன் உசுப்பி விடவுந்தான் இவளுக்குப் பிள்ளைகளுடைய பசி நினைவுக்கு வந்தது.அம்மா எழுப்பி விட்டதும், ‘‘அம்மா ஹெலிகாப்டர் திரும்பி வந்துச்சாம்மா, ரொட்டி, தண்ணி எல்லாம் போட்டுட்டுப் போச்சாம்மா?’’ என்று பரபரப்பான குழந்தைகளுக்குத் தன்னுடைய அடுத்த பொய்யை பதிலாய்த் தந்தாள் அம்மா.
‘‘ஆமா பிள்ளைகளா... ஹெலிகாப்டர் அதோ தூரத்துல போகுது...’’ என்று அந்த தேவதூதன் போன திசையை நோக்கிக் கரங்குவித்தாள் அம்மா.

வீட்டுக்குள் சன்னி

பத்து நாட்களுக்கு முன் சன்னிலியோனுக்கு ஹேப்பி பர்த் டே. மும்பையிலும் லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே சிம்பிளாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அத்துடன், மூன்று குழந்தைகளுக்கு அம்மாவான சன்னி, தனது ஃபிட்னஸ் முறையையும் கிரியேட்டிவ்வாக செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஸ்ட்ரோலரில் குழந்தையை வைத்துக்கொண்டு, வீட்டுக்கு வெளியே உள்ள இடத்தில் வாக்கிங், ரன்னிங் என ஒர்க் அவுட்களை செய்து வருகிறார்.

அறைக்குள் ஸ்குவாஷ்

தமிழில் நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் ரைசா. பெங்களூருவில் உள்ள வீட்டில் லாக்டவுன் ஆனவர், ‘‘எப்பவுமே எனக்கு சும்மா இருக்க பிடிக்காது. இப்ப வீட்டை விட்டு எங்கும் போக முடியாமப் போச்சு. வீட்டுல என் அறையை ஸ்குவாஷ் மைதானமாக்கி, அங்கேயே விளையாடிட்டு இருக்கேன்...’’ என்கிறார் சிரிப்பு மின்ன!

நம்ம வீட்டுப் பொண்ணு

‘நம்ம வீட்டுப்பிள்ளை’ அனு இமானுவேலின் அப்பா, தங்கச்சன் இமானுவேல், மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு, கமல், ஜீத்து ஜோசப் என எல்லாமே டாப் இயக்குநரின் படங்களைத் தயாரித்தவர். அப்படியிருந்தும் அனுவுக்கு புரொடக்‌ஷன் பக்கம் விருப்பமில்லையாம்!

ஏ.ஏ.ஹெச். கே.கோரி