சென்னை குருவை இயக்கும் ஆஸ்திரேலிய சீடன்!



‘‘ஆஸ்திரேலியால வேலைல இருந்தேன். ஆனா, என் கனவு சினிமாதான். எப்படியாவது கௌதம்மேனன் சார்கிட்ட அசிஸ்டெண்ட் ஆக விரும்பி அவருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதினேன். அந்த லட்டர்ஸ் அவர் கைக்கு கிடைக்குமானு கூட யோசிக்கல. ஒரு நம்பிக்கைல அனுப்பினேன். என் ஃப்ரெண்ட்ஸ்கிட்டயும் இதை ஷேர் பண்ணினேன்.

ஷாக் ஆகிட்டாங்க. ‘கௌதமா? அவரா..? பெரிய இடத்து சிபாரிசு இருந்தாதான் அசிஸ்டெண்ட்டா சேர்த்துப்பார்’னு உதட்டைப் பிதுக்கினாங்க.

இந்தியாவுக்கு வரவேண்டிய சூழல் எதிர்பாராதவிதமா அமைஞ்சது. கெளதம் சாரை போய் பார்த்தேன். கொஞ்ச நேரம் என்கிட்ட பேசினார். எடை போடறார்னே பின்னாடி தான் தெரிஞ்சுது.
பேசி முடிச்சதும் அசிஸ்டெண்ட்டா சேரச் சொல்லிட்டார்...’’ நெகிழும் மனு ஆனந்த், தான் இயக்கும் முதல் படத்தில் தன் குருநாதரையே நடிக்க வைத்திருக்கிறார். ஆம். விஷ்ணுவிஷால், மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தில் கெளதம் மேனனுக்கு முக்கியமான ரோல். மஞ்சிமா, ரெபா, ரைசானு படத்துல மூணு ஹீரோயின்ஸ்...?

கலர்ஃபுல்லான காம்பினேஷன்தான். ஆனா, படத்துல அப்படி காம்பினேஷன் கிடையாது. இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். சென்னை திருவல்லிக்கேணில வசிக்கற ஓர் இஸ்லாமிய இளைஞன் சந்திக்கும் பிரச்னைகள்தான் படம். அவனுக்கு என்ன பிரச்னை? எப்படி அதில் சிக்கினான்? அவன் மீண்டு வந்தானா... என்பதெல்லாம் திரைக்கதை. நாட்டுல நடக்கற விஷயங்கள வச்சு, உண்மைச் சம்பவங்களின் இன்ஸ்பிரேஷன்ல பண்ணின கதை இது.
நான், இயக்குநர் ஆக முடிவு பண்ணினதும், விஷ்ணு விஷாலுக்குதான் கதைகள் ரெடி பண்ணினேன். அவர்கிட்ட ரெண்டு கதைகள் சொன்னேன். அதில் அவருக்கு இந்த ‘எஃப்.ஐ.ஆர்.’ ரொம்ப பிடிச்சிருந்தது.

படத்துல மஞ்சிமா மோகன், ரைசா, ‘பிகில்’ ரெபா மோனிகானு மூணு ஹீரோயின்ஸ் இருந்தாலும், வழக்கமான ஹீரோ - ஹீரோயின் படமா இது இருக்காது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கேரக்டர்ல வர்றாங்க. அவங்கவங்களுக்கான முக்கியத்துவம் இருக்கும். இவங்க தவிர படத்துல தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிறைய பேர் உண்டு. இயக்குநர்கள் கௌதம்மேனன் சார், ஆர்.என்.ஆர்.மனோகர், கௌரவ் நாராயணன் இவங்களும் நடிச்சிருக்காங்க.
டெக்னிக்கல் டீமும் ஸ்டிராங்கா அமைஞ்சிடுச்சு. பி.சி.ராம் சார்கிட்ட நீண்ட காலம் அசோசியேட்டா இருந்த அருள் வின்சென்ட்  ஒளிப்பதிவு பண்றார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘பளசா 1978’க்கு அவர்தான் கேமரா.

சில வருஷங்களுக்கு முன்னால ஒரு வெப்சீரீஸ் பண்ணினேன். அதுக்கு இசையமைச்சவர் அஷ்வத். அவரே இந்தப் படத்துக்கும் மியூசிக் பண்ணியிருக்கார். ‘நளனும் நந்தினி’யும் உள்பட சில படங்களுக்கு இசையமைச்சவர் அவர். நான் எப்போ கதைகள் ரெடி பண்ணினாலும் உடனே அஷ்வத்கிட்ட விவாதிப்பேன். எங்களுக்குள்ள அப்படி ஒரு வேவ்லெங்க்த் உண்டு.

அப்புறம், ‘ஆதித்ய வர்மா’ படத்தின் கலை இயக்குநர் இந்துலாலின் ஆர்ட் அட்டகாசமா வந்திருக்கு. சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைச்சிருக்கார். கௌதம் சார் படங்களுக்கு எல்லாம் அவர்தான் ஸ்டண்ட் அமைச்சிருப்பார். சில்வா சாரோட ஏழு வருஷ நட்பினாலேயே, அவரையும் எங்க டீமுக்குள் அழைச்சிட்டு வந்துட்டோம்.

விஷ்ணு விஷாலே படத்தை தயாரிச்சிருக்கார்..?

ஆமா. அப்படி ஒரு சூழல் அமைஞ்சிடுச்சு. விஷ்ணு சாருக்கு ஸ்டோரி சென்ஸ் அதிகம். அவரோட படங்கள்ல எப்பவுமே கதை மெயினா இருக்கும். அவரோட நடிக்கறவங்க அத்தனை பேரின் கேரக்டர்களுக்குமே முக்கியத்துவம் கொடுப்பார். இதெல்லாம் உங்களுக்கும் தெரிஞ்ச விஷயம்தான்.
இந்தப் படம் தொடங்கும்போது வேறொருத்தர்தான் தயாரிப்பாளரா இருந்தார். சில சூழல்களால அவர் விலகிட்டார். இந்தக் கதை மீதிருந்த நம்பிக்கையால விஷ்ணுவே முன் வந்து தயாரிச்சிருக்கார்.

அவர் ஒரு டைரக்டர் ஆர்ட்டிஸ்ட். சீனுக்கு என்ன தேவை... எவ்ளோ மீட்டர் இருக்கணும்... எல்லாம் தெரிஞ்சவர். எத்தனை டேக் போனாலும், சளைக்காமல் ஒர்க் பண்ணுவார்.

தமிழ்ல நல்லா பேசறீங்களே..?

நன்றி! என் பூர்வீகம் சென்னைதான். இங்க நிறைய படங்கள் பார்த்ததால சினிமா ஆசை வந்துடுச்சு. மெல்போர்ன்ல படிச்சிட்டு, அங்கயே நல்ல வேலைல இருந்தேன். ஈவினிங் காலேஜ்ல ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் முடிச்சிட்டு டாகுமெண்ட்ரீஸ் டைரக்ட் பண்ணினேன்.
என்னோட டாகுமெண்ட்ரிக்கு அந்த நாட்டுல இண்டஸ்ட்ரி அவார்டும் கிடைச்சது. அந்த ஊக்குவிப்புதான், படம் பண்ணலாம்னு எனக்குள் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துச்சு.

கௌதம்மேனன் ஹேப்பிதானா..?

நிச்சயமா! ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்து அவர்கிட்ட அசிஸ்டெண்ட் சான்ஸ் கேட்டப்ப, ‘நீங்க ஃபாரீன்ல நல்ல வேலைல இருக்கீங்க. அதை உதறிட்டு சினிமாவை தேடி வர்றீங்க. ரிஸ்க் எடுக்கறீங்க... யோசிங்க’னு சொன்னார். என் முடிவில் நான் உறுதியா இருந்தபிறகே அவர் என்னை சேர்த்துக்கிட்டார். ‘நீதானே என் பொன்வசந்தம்’ல கடைசி உதவியாளரானேன். அப்புறம், ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ வரை ஒர்க் பண்ணிட்டேன்.

இந்தப் படத்துல அவரை நடிக்கக் கேட்டப்ப சந்தோஷமா முன்வந்தார். முதல் நாள் அவரை ‘ஆக்‌ஷன்’ சொல்லும்போது கொஞ்சம் படபடப்பு இருந்தது. எனக்கு சினிமா கத்துக் கொடுத்த குருகிட்டேயே ஆக்‌ஷன் சொன்னது சிலிர்க்கும் மூவ்மெண்ட்.

வெளிநாட்டில் நான் ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படிச்சிருந்தாலும் பிராக்டிகலா சினிமாவை தெரிஞ்சுக்கிட்டது அவர்கிட்டதான். இந்தப் படத்தை 45 நாட்கள்ல முடிக்கறதுக்கும் அவர்தான் காரணம்!                    

மை.பாரதிராஜா