அணைய அடுப்பு-2



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

வாழையடி வாழை

‘வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன்
அன்றோ?’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் வள்ளலார்.

தமிழில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ‘வாழையடி வாழை’ என்கிற அருமையான சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவரே அவர்தான்.
தனக்கென்று யாதொரு  சிறப்புமில்லை என்கிற அவையடக்கம் அவருக்கு இருந்ததையே தன் சுய அறிமுகம் மூலமாக அவர் வெளிப்படுத்துகிறார்.
எனினும் -வள்ளலார் வந்த திருக்கூட்ட மரபு என்பது மக்களை நெறிப்படுத்த வந்த மகான்களின் மரபு.

திருவள்ளுவர், திருமூலர், பட்டினத்தார், தாயுமானவர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள் என்று தமிழ் அறிவுலகம் உலகமெல்லாம் ஒளிபரப்பி வாழ்ந்த மரபில் வந்தவர் வள்ளலார்.‘இறைவன் வருவிக்க உற்றேன்’ என்று அவர் பாடுவதின் பொருள் என்ன?
தானாக இவ்வுலகில் பிறக்கவில்லை, இறைவனால் வருவிக்கப்பட்டார் என்பதே.

இன்றைய கடலூர் மாவட்டம். அன்றைய தென்னாற்காடு மாவட்டம்.சிதம்பரம் நகரத்துக்கு வடமேற்கே சுமார் பத்து மைல் தொலைவில் மருதூர் என்கிற சிற்றூர்.அந்த ஊரின் கணக்கராக இராமையா பிள்ளை என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.கருணீகர் சமூகம். சைவ வேளாளர் சமூகத்தின் ஒரு கிளை இச்சமூகம்.கருணீகர்கள் பொதுவாக ஊர்க்கணக்கு, கோயில் கணக்கு பார்ப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள்.

ஊரின் கணக்கு வழக்குகள் பார்ப்பது மட்டுமின்றி, கிராமத்துக் குழந்தைகளுக்கு எழுத்தறிவு கற்பிக்கும் சேவையையும் கூடுதலாகச் செய்து கொண்டிருந்தார் இராமையா.சின்னம்மாள் இவரது மனைவி.சின்னம்மாளின் சொந்த ஊர் சின்னகாவனம். அந்தக் காலத்தில் பழைய செங்கல்பட்டு மாவட்டம். இப்போது திருவள்ளூர் மாவட்டம்.பொன்னேரி நகரத்துக்கு அருகில் இருக்கிறது இந்த ஊர்.சின்னம்மாள், இராமையா பிள்ளைக்கு ஆறாவது மனைவி.

சாதாரண கணக்குப்பிள்ளைக்கு ஏன் இத்தனை மனைவியர் என்கிற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.இராமையா பிள்ளையின் மனைவிகள் சொல்லி வைத்தது போல ஒருவர் பின் ஒருவராக நோயுற்று இறந்தார்கள்.யாருக்கும் புத்திர பாக்கியமும் இல்லை.தன்னோடு தன் குலம் முடிந்து விடக் கூடாது என்பதற்காகவே ஆறாவதாக சின்னம்மாளை மணம் புரிந்தார்.இருவருக்கும் வயது வித்தியாசம் மிகவும் அதிகம்.அதுநாள்வரை
இராமையாவுக்குக் கிட்டாமல் போன புத்திர பாக்கியம் சின்னம்மாவால் கிடைத்தது.முதல் குழந்தை சபாபதி.தொடர்ந்து சுந்தரம் என்கிற பெண்பிள்ளை.

மூன்றாவதாக பரசுராமன்.நான்காவதாகவும் ஒரு பெண் பிள்ளை; பெயர் உண்ணாமுலை.இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என்று மனைவியோடு இன்பமாக இல்வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார் இராமையா பிள்ளை.

ஒருநாள் -“தாயே..!” என்று வாசல் பக்கமாக சப்தம் கேட்டது.வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், உள்ளே அடுப்பங்கரையில் சமைத்துக் கொண்டிருந்த சின்னம்மாளிடம் சென்று யாரோ வந்திருப்பதாகக் கூறினார்கள்.சின்னம்மாள் வந்து பார்த்த போது, சிவனடியார் ஒருவர் சோர்ந்த முகத்துடன் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

அவரை வணங்கி ஆசீர்வாதம் பெற்ற சின்னம்மாள், “சாமீ, முதல்ல சாப்பிடணும்...” என்று வீட்டுக்குள் அழைத்தார்.சிவனடியார் கை, கால் கழுவி சாப்பிட அமர்ந்தார்.பெரும் பசியோடு இருந்தார் போல.கணவருக்கும், குழந்தைகளுக்கும் சமைத்து வைத்திருந்த அத்தனை உணவையும் சிவனடியாருக்கு படைத்தார்.போதும், போதுமெனும் அளவுக்கு சாப்பிட்டவரின் வயிறு குளிர்ந்தது.

“நிலக்கணக்கு பார்க்கப் போயிருக்காரு. இதோ அவரு வந்துடுவாரு. இருந்து சாமிகள் ஆசீர்வாதம் செஞ்சுட்டு போகணும்...” என்று இறைஞ்சினார் சின்னம்மாள்.“நான் காண வந்தது உன்னைத்தான் தாயே. உன்னிடம் சொல்ல எனக்கொரு சேதி இருக்கிறது…” என்று பீடிகை போட்டார்
சிவனடியார்.

அவர் முகத்தையே ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார் சின்னம்மாள்.தான், கொண்டுவந்திருந்த கமண்டலத்திலிருந்து கொஞ்சம் நீரெடுத்து, சின்னம்மாள் மீது தெளித்தார்.இடுப்பில் கட்டியிருந்த பையிலிருந்து திருநீறு எடுத்துப் பூசினார்.“தாயே! நீ என் வயிற்றுப்பசி போக்கினாய். உன் வயிற்றில் பிறப்பவன் உலகத்தின் பசியையே போக்குவான்…”சிவனடியாரின் ஆசியில் சின்னம்மாளின் வயிறு குளிர்ந்தது. வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

கரு உருவாகும் முன்பே தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் சின்னம்மாள்.சிவனடியார் மெதுவாக வாசல் வந்தார்.
வாசல்வரை அவரை வழியனுப்ப சின்னம்மாளும் பின்தொடர்ந்தார்.வாசலில் சிவனடியாரைக் காணவில்லை.மாறாக, அவருடைய கணவர் இராமையா வந்து கொண்டிருந்தார்.சிவனடியார் வந்ததையும், அவர் சொன்னதையும் சொன்னார்.‘ஒரு மகானை உபசரிக்கும் வாய்ப்பு பெறாமல் போனேனே!’  என்று வருந்தினார் இராமையா.

கணக்குப்பிள்ளை வீட்டுக்கு சிவனடியார் வந்ததும், வாழ்த்தியதும் ஊர்ப்பேச்சு ஆனது.தங்கள் வீட்டுக்கும் அதே சிவனடியாரை எழுந்தருள வைக்க ஊர்ப்பிரமுகர்கள் சுற்றுப்பட்டு எட்டு ஊரும் தேடினார்கள்.எங்கும் கிடைக்கவில்லை.சிலபேர் இதை அற்புதமென்றும், சிலபேர் யதேச்சையாக நடந்தது என்றும் பேசினார்கள்.

வந்தவர் சிவனடியார் அல்ல; அந்த சிவனேதான் என்று வயதில் மூத்தவர்கள் சிலர் அடித்துச் சொன்னார்கள்.சிவனடியார் வாக்களித்தபடியே, அடுத்த மாதமே சின்னம்மாள் மீண்டும் கர்ப்பமானார்.அவர் வயிற்றில் பிறக்கப்போகும் அருட்பிரகாச அற்புதத்தை ஊரே எதிர்பார்த்தது.1823, அக்டோபர் 5.இராமையா- சின்னம்மாள் தம்பதியினருக்கு ஐந்தாவது குழந்தையாக வள்ளலார் பிறந்தார்.மருதூரில் இருந்து சிதம்பரத்துக்குச் செல்லும் சாலையில் பின்னலூர் என்றொரு ஊர்.

அந்த ஊரில் இராமலிங்கேஸ்வரருக்கு கோயில் உண்டு.இராமையா பிள்ளை, அந்த சுவாமியின் பெயரையே புதியதாகப் பிறந்த தன் மகனுக்கு சூட்டினார்.சிவனடியார் கூறிய தெய்வாம்சம் அக்குழந்தைக்கு இருப்பதை அடுத்த சில நாட்களிலேயே அவர்கள் அறிந்து கொண்டனர்.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்