காஸ்ட்யூம் டிசைனிங் to ஆக்ட்டிங்!



சமீபத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் செம தில்லாலங்கடி பேபியாக ஸ்கோர் செய்தவர் நிரஞ்சனி அகத்தியன். ‘காதல் கோட்டை’ இயக்குநர் அகத்தியனின் மகள் + ‘சிகரம் தொடு’வில் இருந்து ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ வரை பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராகக் கலக்கியவர். இப்போது நடிப்பிலும் இறங்கி, ‘அட!’ சொல்ல வைத்திருக்கிறார் நிரஞ்சனி.

‘‘இவ்ளோ பாராட்டுகள் வரும்னு எதிர்பார்க்கல. இண்டஸ்ட்ரியில் அத்தனை பேருக்கும் என்னை ஒரு டிசைனராதான் தெரியும். இப்ப, ‘நீ நல்லா நடிச்சிருக்கே’னு சொல்லி பாராட்டறாங்க. சிவகார்த்திகேயன் சாரிலிருந்து பலரும் போன் செய்து என்கரேஜ் பண்ணினாங்க. அதுவும் சிவா சார், ‘என்னம்மா, அப்போ இனிமே என் படங்களுக்கு நீங்க காஸ்ட்யூம் பண்ணமாட்டீங்களா... எனக்கு டிரெஸ் வாங்கிக் கொடுத்து இனிமே கைட் பண்ண மாட்டீங்களா...’னு கலாய்ச்சார்.

அப்பாவுக்கும் அக்காக்களுக்கும் செம சந்தோஷம். படத்துல நான் கமிட் ஆனதும் என்னோட ரோல் பத்தி வீட்ல சொல்லலை. படம் பார்க்கும்போது
சஸ்பென்ஸ் இருக்காதுனு நெனச்சேன். இப்ப வீட்ல படம் பார்த்துட்டாங்க. முழுப்படமும் நான் டிராவல் ஆனதைப் பார்த்து, சந்தோஷமாகிட்டாங்க. இப்படி ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் தேசிங் பெரியசாமி சாருக்கு கிரேட் தேங்க்ஸ்...’’ சந்தோஷத்தில் நிரம்பித் ததும்புகிறார் நிரஞ்சனி.

எப்படி இருக்குது நடிப்பு அனுபவம்..?
சூப்பரா! பலருக்கு நடிப்பு ஒரு கனவு... எனக்கு அது ஈசியா கிடைச்சிருக்கு. இந்த சான்ஸை சின்ஸியரா எடுத்து உழைக்க விரும்பறேன். எங்க அப்பா, தான் சினிமாவுக்கு வந்த போராட்டத்தைப் பத்தி சொல்லியிருக்கார். இப்ப அவர் வாரிசுகளான நாங்க அத்தனை பேரும் இண்டஸ்ட்ரில இருக்கறதைப் பார்த்து பூரிக்கிறார்.காஸ்ட்யூமரா ஒர்க் பண்றப்ப பெருசா அங்கீகாரம் கிடைக்காது. பீரியட் ஃபிலிம் மாதிரி படங்கள்ல ஒர்க் பண்ணும் போதுதான் காஸ்ட்யூம் ஒர்க் பேசப்படும். ‘காவியத்தலைவன்’ல அப்படி பெயர் கிடைச்சது.

ஆனா, இப்ப நடிகையானதால எல்லாருக்கும் என்னைத் தெரியுது. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தலாம்னு முடிவெடுத்திருக்கேன்.
டிசைனிங்ல ஆர்வம் வந்தது எப்படி?சின்ன வயசிலிருந்தே நல்லா ஸ்கெட்ச் பண்ணு வேன். முதன்முதல்ல ‘கற்றது களவு’ படத்துக்குதான் காஸ்ட்யூம் ஹெல்ப் பண்ணப் போனேன். அக்கா விஜயலட்சுமியும், கிருஷ்ணாவும் நடிச்ச முதல் படம் அது. அப்புறம் காஸ்ட்யூம் டிசைனர் நளினி ராம் மேம்கிட்ட அசிஸ்டன்ட் ஆனேன்.

அப்படி ஒர்க் பண்ணும் போதுதான் ‘சிகரம் தொடு’வில் ஆஃபர் வந்தது. ஒர்க் பண்ணினேன். அப்படியே ‘காவியத்தலைவன்’, ‘வாயைமூடி பேசவும்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘கதகளி’, ‘கபாலி’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’னு ஒர்க் பண்ணினேன். என்ன சொல்றார் துல்கர் சல்மான்..?‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ல நான் பயமில்லாமல் நல்லா நடிச்சிருக்கேன்னா, அதுக்கு துல்கர் சாரும் ஒரு காரணம். அவர் அவ்வளவு டவுன் டு எர்த் பர்சன். என்னையும், அவரோட ஃப்ரெண்டா நடிச்ச ரக்‌ஷனையும் என்கரேஜ் பண்ணிட்டே இருந்தார்.

இயக்குநர் தேசிங் பெரியசாமி சார் நடிக்க கேட்டப்ப தயங்கினேன். அவர்தான் கம்பல் பண்ணி நடிக்க வச்சார். படத்துல நான் பைக் ஓட்டுற மாதிரி சீன். நிஜமாவே ஷூட்ல நான் பைக் ஓட்டினதைப் பார்த்து யூனிட்ல ஆச்சர்யப்பட்டாங்க!

மை.பாரதிராஜா