நான்... சித்ராலயா கோபு



சான்ஸ் கேட்டு யார்கிட்டயும் நான் போனதில்ல. அப்படிப் போய் நிற்கிறதும் எனக்கு பிடிக்காது. பணத்து மேல பெரிய ஆசை கிடையாது. அதனாலதான் இன்னைக்கும் நல்ல பெயருடன் வாழ்ந்துட்டு இருக்கேன். அப்பா வைத்த பெயர் சடகோபன். இப்ப 88 வயசு ஆச்சு. 1931 ஜூன் 30ம் தேதி சென்னைலதான் பிறந்தேன். படிச்சதெல்லாம் செங்கல்பட்டு புனித ஜோசப் ஹை ஸ்கூல்ல.

டைரக்டர் ஸ்ரீதர் ஆரம்பிச்ச நிறுவனம்தான் சித்ராலயா. அதுல நான் ஒரு 10% பார்ட்னராக இருந்திருக்கேன். அந்த நிறுவனத்தின் பெயர் எனக்கு அடைமொழியா இருக்கு. சின்ன வயசுல இருந்து ஒரே ஸ்கூல். ஸ்ரீதர் எனக்கு பால்ய சினேகிதன். நாங்க ரெண்டு பேருமே செங்கல்பட்டுலதான் படிச்சு வளர்ந்தோம்.

எங்களுக்கு மட்டுமில்ல... பல திரையுலக ஜாம்பவான்களுக்கு அந்த ஸ்கூல்தான் ஏற்றம் கொடுத்திருக்கு. நாசர், மியூசிக் டைரக்டர் தேவா, கலைஞருக்கு முந்தைய சீனியரான வசனகர்த்தா இளங்கோவன்... இப்படி பலரும் அந்தப் பள்ளில படிச்சவங்கதான்.அப்பா ஸ்கூல் வாத்தியார். அப்பாவுடைய ஸ்டூடன்ட்தான் இளங்கோவன். ஸ்ரீதரும் அப்பாவுக்கு மாணவர்தான். அப்பா துரைசாமி, அம்மா செல்லம்மா. ஆனா, நான் வளர்ந்ததெல்லாம் அத்தை கமலம்மா கிட்டதான். அழகப்பா செட்டியார் கல்லூரில காலேஜ் படிப்பு.

இந்த வேளைல ஸ்ரீதர் நாடகங்கள் எழுதிட்டு இருந்தார். அவர் எழுதி ரொம்ப பிரபலம் ஆகி அதிகம் வரவேற்பு பெற்ற நாடகம்தான் ‘ரத்த பாசம்’. டிகேஎஸ் பிரதர்ஸ் நாடகக் கம்பெனி மூலமா இந்த நாடகத்தை போட்டாங்க. நாடகங்களைத் தொடர்ந்து ஜூபிடர் பிக்சர்ஸ் கம்பெனி தயாரிச்ச படங்களுக்கு கதை, வசனம்னு ஸ்ரீதர் முன்னேறினார். ‘ரத்தபாசம்’, ‘மாமன் மகள்’, ‘எங்க வீட்டு மகாலட்சுமி’, ‘மாதர் குல  மாணிக்கம்’... எல்லாம் ஸ்ரீதர் கதை, திரைக்கதை, வசனம் எழுதினதுதான். அப்புறம் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து ‘உத்தமபுத்திரன்’, ‘அமரதீபம்’ படங்களை எழுதி தயாரிக்க ஆரம்பிச்சுட்டார்.

என் டிராக் எப்படி இருந்துச்சுன்னா... நானும் அகஸ்தியரும் நண்பர்களா சில காமெடி நாடகங்கள் எல்லாம் போட்டுட்டு இருந்தோம். ஊர் ஊராப் போய் மிமிக்ரி நிகழ்ச்சி எல்லாம் செய்துட்டு இருந்தோம்.நட்பு ரீதியா எங்களைப் பார்க்க தர் அப்பப்ப வந்துட்டுப் போவார். நாடகமெல்லாம் எனக்கு சைடு வேலைதான். முழுநேரமா ஒரு தனியார் இம்போர்ட் மற்றும் எக்ஸ்போர்ட் கம்பெனில நல்ல வேலைல இருந்தேன்.

இந்த நேரத்துல ‘அடுத்த படத்தை நீயே இயக்கலாமே’னு ‘வீனஸ் பிக்சர்ஸ்’ குழுவுல இருந்து ஸ்ரீதர்கிட்ட கேட்டாங்க. அப்படி அவர் இயக்கிய முதல் படம் ‘கல்யாணப் பரிசு’. அந்தப் படத்துக்காகத்தான் என்னிடம் வந்தார் ஸ்ரீதர். ‘இந்த கம்பெனி வேலையெல்லாம் வேண்டாம். நீ என்கூட வந்துருடா’னு கூப்பிட்டார். எனக்கு விருப்பமே இல்ல. ஆனா, வலுக்கட்டாயமா ஸ்ரீதர் இழுத்துட்டு வந்தார். எனக்குத் தெரிஞ்சு திரையுலக வரலாற்றிலேயே இவ்வளவு சுலபமா சினிமா வாய்ப்பு கிடைச்சு, அங்கீகாரம் கிடைச்ச ஆள் நானாதான் இருப்பேன்!

என் காமெடி மேல ஸ்ரீதருக்கு அப்படியொரு நம்பிக்கை. அதனாலேயே என்னை அவருக்கு உதவியாளரா சேர்த்துக்கிட்டார். அந்த நேரம் ஜெமினி கணேசன் மிகப் பெரிய ஹீரோ. படமும் பெரிய பட்ஜெட். ஜெமினி கணேசன், நாகேஸ்வரராவ், சரோஜாதேவி, தங்கவேலு, விஜயகுமாரினு அந்த நேரத்தில் பெரிய நடிகர்களா இருந்தவங்க எல்லாரும் நடிச்சாங்க.

எனக்கு முதல் படம். இயக்குநரா ஸ்ரீதருக்கும், கதாநாயகியா சரோஜாதேவிக்கும் கூட ‘கல்யாணப் பரிசு’தான் முதல் படம். அந்தப் படத்தில் காமெடி போர்ஷன்ஸை மட்டும் நான் எழுதினேன். ஸ்ரீதர்கிட்ட உதவியாளரா சேர்ந்தாலும் ஓர் இடத்தில் கூட என்னை அவர் தன் அசிஸ்டன்ட்னு சொன்னதே கிடையாது. பெரிய பெரிய நடிகர்கள் கிட்ட கூட என்னை நண்பன்னுதான் அறிமுகப்படுத்துவார். ஸ்ரீதர் கொடுத்த இந்த மரியாதைதான் என் முழு சினிமா காலத்துக்கும் உதவியா இருந்துச்சு. ‘கோபு ஒரு எழுத்தாளர்...

ஸ்ரீதருக்கு நண்பன்...’ இப்படித்தான் என் பெயர் பரவிச்சு. அந்த நன்றியை நான் என்னைக்கும் மறந்ததே இல்லை. அந்தப் படத்துல சடகோபன் என்கிற பெயரில்தான் எழுதினேன். படம் செம ஹிட். முதல் படத்திலேயே ஸ்ரீதருக்கு தெலுங்கு, இந்தி ரீமேக் செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைச்சது. தெலுங்கில் நாகேஸ்வரராவ் நடிக்க ‘பெல்லி கணுகா’, இந்தியில ராஜ்குமார் நடிக்க ‘நஸ்ரானா’ என்கிற பெயர்ல ரிலீஸ் ஆனது. ‘சம்மணம்’ என்கிற பேர்ல சசிகுமார் டைரக்‌ஷன்ல மலையாளத்துலயும் ரீமேக் ஆச்சு.

இதைப் பார்த்துட்டு தர் பங்குதாரரா இருந்த ‘வீனஸ் பிக்சர்ஸ்’, அவர்கிட்ட ஒரு கண்டிஷன் போட்டாங்க. ‘நீங்க வெளிப் படங்கள் எதுவும் செய்யக்
கூடாது... வீனஸ் பிக்சர்ஸ் கூட மட்டும்தான் வேலை செய்யணும்...’னு.இதில் ஸ்ரீதருக்கு விருப்பமில்லை. ‘நாமளே ஏன் சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்கக் கூடாது’ன்னு முடிவெடுத்தார். அப்படி தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒண்ணா சேர்ந்து உருவாக்கின நிறுவனம்தான் ‘சித்ராலயா’.

ஸ்ரீதர், கேமராமேன் ஏ.வின்சன்ட், அவர் உதவியாளர் பிரியன் சுந்தரம், ஸ்டில் போட்டோகிராஃபர் அருணாச்சலம், இப்படி தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லாருமா சேர்ந்து ‘சித்ராலயா’வை நிறுவினோம். முழுமையான தொழில்நுட்ப நிறுவனமா சித்ராலயா இருந்துச்சு. அவரவர் பங்குக்கு 10 சதவீத பணமும் போட்டோம். அந்த நிறுவனம் எடுத்த முதல் படம்தான் ‘தேன்நிலவு’. அந்தப்பட வெற்றியெல்லாம் வார்த்தைகளால் சொல்ல முடியாது.

ஸ்ரீதருக்கு ரிஸ்க் எடுக்கறதுன்னா பிடிக்கும். அப்படி அவர் எடுத்த ரிஸ்க்தான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. அந்தப் படத்தில்தான் என் பெயர் கோபுவாக மாறிச்சு.

எனக்கு அது ரெண்டாவது படம். மேலும் நான் எழுதினது கூட ஒருசில காமெடி போர்ஷன்ஸ்தான். இருந்தாலும் எங்கயும் ஸ்ரீதர் அந்த அங்கீகாரத்தை விட்டுக் கொடுத்ததே இல்லை. ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், எம்ஜிஆர்... இவங்க மூணு பேரும் மிகப்பெரும் ஜாம்பவான்கள். இதில் ஜெமினி கணேசன் டாப். அவருடைய சம்பளமும் கூட ஜாஸ்தி. பின்னர்தான் சிவாஜி, எம்ஜிஆர் ரெண்டு பேரும் உயர்ந்தாங்க.

இவங்க படங்களுக்கு மத்தில சவாலா எடுத்துக்கிட்டு முழுமையா புது நடிகர்களை வெச்சு எடுத்த படம்தான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. படம் முழுக்க ஒரு ஹாஸ்பிட்டலில் நடக்கும். அந்த நேரத்துல கொஞ்சம் சர்ச்சையான கதைக்களமும் கூட. திருமணமான பெண்... அவளின் முன்னாள் காதலன். இந்த சப்ஜெக்ட் எல்லாம் பேசவே அப்ப யோசிக்கணும்.

படம் முடிஞ்சது. படத்தை வாங்க யாருமே முன்வரலை. ஹீரோ ஹீரோயின் எல்லாருமே புதுமுகம். எப்படி விலை போகும்? ‘நாமளே ரிலீஸ் செய்யலாம்’னு முடிவு செய்தோம். சொன்னா நம்பமாட்டீங்க... படத்துக்கு அப்படி ஒரு வரவேற்பு! குடியரசு தின சிறப்பா வெளியாகி ‘சொன்னது நீதானா...’,‘ எங்கிருந்தாலும் வாழ்க...’ பாடல்கள் எல்லாம் சேர்ந்து படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு. சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது... ஸ்ரீதருக்கு பிரசிடென்ட் அவார்டு கிடைச்சது.

அடுத்தடுத்து இந்தப் படத்தை ‘தில் ஏக் மந்திர்’னு இந்திலயும்; ‘ஓ மனமே மந்திரம்’ என்கிற பெயர்ல தெலுங்கிலும் ஸ்ரீதர் ரீமேக் செய்தார்.

இதன் அடுத்த தொடர்ச்சியா திரும்ப புதுமுகங்கள் சகிதமா முழு காமெடிப் படமா வெளியானதுதான் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படம் பத்தி நான் சொல்லணுமா என்ன?! இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதினேன். படம் மெகா ஹிட்டானதும் வெளி கம்பெனிகள்ல இருந்து என்னை எழுதக் கேட்டாங்க.

ஸ்ரீதர்கிட்ட கேட்டப்ப யோசிக்காம ‘கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்திக்கோ’னு சொன்னார்.  அப்படித்தான் சி.வி.ராஜேந்திரன் நட்பு கிடைத்தது. அவர்கூட முதல் படம் ‘நில் கவனி காதலி’. ஜெய்சங்கர் ஹீரோ. தொடர்ந்து ஏகப்பட்ட படங்களுக்கு எழுதினேன்.

இதே நேரம் ஸ்ரீதரும், சிவாஜி கணேசனும் சேர்ந்து ஒரு நட்சத்திர நாடகம் போடணும்னு முடிவு செய்தாங்க. இந்தியா - பாகிஸ்தான் போருக்கு நிதி திரட்டுவதுதான் அந்த நாடகத்தின் நோக்கம். ரெண்டு நாட்கள்ல கதை கேட்டாங்க. சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயலலிதா, சௌகார் ஜானகினு பெரும் நடிகர்கள் பட்டாளம் சேர்ந்து அந்த நாடகத்தில் நடிச்சாங்க. ஒரு பெரிய ஸ்டார் நாடகமாக அமைஞ்சது.

நாடகங்கள் உருவாக்கத்தில் சிவாஜி கணேசன் திறமைசாலி. அதனாலயே இந்த நாடகத்தை நீங்களே பொறுப்பெடுத்து பண்ணுங்கன்னு நானும், தரும் அவர்கிட்ட ஒப்படைச்சோம். எட்டு மாவட்டங்கள்ல அந்த நாடகத்தைப் போட்டோம். ஹிட்டாச்சு.உடனே சிவாஜி என்னைக் கூப்பிட்டு ‘இதைப் படமா எடுத்தாலும் வெற்றி ஆகும். இதன் ரைட்ஸை யார்கிட்டயும் கொடுக்காத... நாமளே படமா எடுப்போம்’னு சொன்னார்.

வெறுமனே முக்கால் மணி நேரம் மட்டுமே எழுதின கதை... இதை எப்படி படமா எடுத்தா ஓடும்னு எனக்குள்ள ஒரு கேள்வி. ஆனா, சிவாஜி கணேசன் அதில் உறுதியாக இருந்தார். சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் படமாவும் எடுத்தோம். அதுதான் ‘கலாட்டா கல்யாணம்’. சிவாஜி கணிச்ச மாதிரியே படமும் பெரிய ஹிட். இந்தப் படத்துக்கு கதை, வசனம், திரைக்கதை நான் எழுதினேன்.

இந்த ‘கலாட்டா கல்யாணம்’ வெற்றிதான் சினிமாவிலிருந்து நாடகப் பக்கம் என்னை திசை திருப்பிச்சு. ஒரு நாடகக் கம்பெனிக்கு சில நாடகங்களும் எழுதிக் கொடுத்து வெற்றிகரமா சில நாடகங்கள் போட்டோம். அப்படி நான் எழுதின நாடகங்கள்தான் பின்னால நானே இயக்கி ‘வீட்டுக்கு வீடு’, ‘காசேதான் கடவுளடா’னு படங்களா ரிலீஸ் ஆச்சு. என்னை இயக்குநரா உயர்த்தினது ஏவி மெய்யப்பச் செட்டியார். என் நாடகங்களைப் பார்க்க வந்தவர், ‘நீயே ஏன் இந்த நாடகங்களை படமா இயக்கக் கூடாது’னு கேட்டு என்னை டைரக்டராக்கினார்.  

பலரும் எனக்கு கொடுத்த முதல் அட்வைஸ்... சென்டிமென்ட் கதை வசனம் பக்கம் மட்டும் போயிடாதே என்பதுதான். ‘காமெடி உனக்கு நல்லா வருது... காமெடி எழுத இங்க ஆட்களும் குறைவு... அதை மட்டும் விட்டுடாதே’னு சொன்னாங்க.அதை சின்சியரா கடைப்பிடிச்சு ‘உத்தரவின்றி உள்ளே வா’, ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ வரை திரைக்கதை, வசனம் எழுதினேன். ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ மிகப்பெரிய வெற்றியடைஞ்சு விருதுகள் எல்லாம் அள்ளிச்சு.

என் மனைவி கமலா. அவங்களுக்கும் சென்னைதான். திருவல்லிக்கேணில வீடு. நல்லா படிச்சவங்க. அவங்களும் ஓர் எழுத்தாளர்தான். ‘கமலா சடகோபன்’ என்கிற பெயர்ல நிறைய கதைகள் எழுதியிருக்காங்க. அவங்க எழுதின ‘கதவு’ நாவல் தமிழின் முக்கியமான நாவல்கள்ல ஒண்ணா இப்பவும் கொண்டாடப்படுது. அவங்க நாவல்கள் தவிர நாடகங்களும் எழுதி இருக்காங்க.

எங்களுக்கு மொத்தம் நாலு பசங்க. மூத்தவர் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனில வேலை பார்த்து இப்ப ரிட்டையர்டு ஆகிட்டார். என் இரண்டாவது பையன் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ்ல மானேஜிங் எடிட்டரா இருக்கார். இவரும் இப்ப ‘காலச்சக்கரம் நரசிம்மா’ என்கிற பெயர்ல நாவல்கள் எழுதிட்டு இருக்கார்.

‘முதல்ல படிப்பு... அப்புறம் நல்ல வேலை... அதுக்குப் பிறகு உங்க ஆசை எதுவோ அதைச் செய்யுங்க...’ இதுதான் என் பசங்களுக்கு நான் சொன்ன ஒரே அட்வைஸ். என் மூணாவது பையன்ஸ்ரீ ராம், ஒய்.ஜி.மகேந்திரன் நாடகங்களுக்கு எழுதறார். சுரேஷ் கிருஷ்ணா தயாரிச்ச சீரியல்களுக்கு டயலாக் எழுதியிருக்கார். நாலாவது பையன் தர், ஐடி பக்கம் போயிட்டார்.

எல்லா பசங்களும் திருமணமாகி சந்தோஷமா இருக்காங்க. பேரன், பேத்தி எல்லாம் தலையெடுத்துட்டாங்க. ஒரு பேரன் கவுதம் வாசுதேவ் மேனன்கிட்டயும், ஒரு பேத்தி ராதாமோகன்கிட்டயும் அசிஸ்டெண்ட்டா இருக்காங்க. இன்னொரு பேரன் பிரபல சேனல்ல நல்ல போஸ்ட்டிங்குல இருக்கார்.  நானும் சரி... என் குடும்பமும் சரி... பணம்தான் பிரதானம்னு நினைச்சதே இல்லை. எந்த வேலையா இருந்தாலும் நேர்மையா உழைக்கணும்... இதை மட்டுமே குறிக்கோளா வைச்சு வாழ்ந்தோம்; வாழ்றோம்.

சீக்கிரமா பணம் சம்பாதிக்கணும்னு சினிமாவுக்கு வராம, நின்னு நிதானமா ஆடணும்கிற எண்ணத்தோட உழைப்பையும் திறமையையும் கொடுத்தா கண்டிப்பா அதுக்கு பலன் கிடைக்கும்!  

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்