முகம் மறுமுகம்-இயற்கை விவசாயத்தில் அசத்தும் விஜி சந்திரசேகர்



கே.பாலசந்தரின் ‘தில்லுமுல்லு’வில் ரஜினியின் தங்கையாக திரைப் பயணத்தை ஆரம்பித்தவர் விஜி சந்திரசேகர். தொடர்ந்து ‘கிழக்குச் சீமையிலே’, ‘இந்திரா’, ‘பார்த்தாலே பரவசம்’ என பல படங்களில் கேரக்டரில் ஸ்கோர் செய்தார்.

அதன்பிறகு பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தவர் சுபயோக சுபதினத்தில் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘பந்தம்’, ‘அலைகள்’, ‘அண்ணாமலை’, ‘கோலங்கள்’, ‘அழகி’, ‘பெண்’ ஆகிய மெகா தொடர்கள் மூலம் இல்லத்தரசிகளின் மனங்களைக் கவர்ந்தார்.

சமீபத்திய ‘ஆரோகணம்’, ‘ஹவுஸ் ஓனர்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ படங்களிலும், ‘குயின்’ வெப்சீரிஸிலும் நடிப்பில் மிரட்டினார். விஷயம் அதுவல்ல. நடிகர்களில் செந்தில், பசுபதி, கிஷோர், பிரகாஷ்ராஜ் போல நடிகைகளில் இயற்கை விவசாயத்தை பெரிதும் நேசிப்பவர் விஜி சந்திரசேகர்!

மகாபலிபுரம் அருகே உள்ள தனது பண்ணைத் தோட்டத்தில் உள்ள வயலில் டிராக்டரில் உழுவது இவருக்குப் பிடித்த விஷயம்! அறுவடைக்குத் தயாராக இருக்கிறது கருப்பு கவுனி நெற்பயிர்கள். தவிர காய்கறி, சில பழ வகைகளும் காய்த்து பூத்துக் குலுங்கி வரவேற்கின்றன.

‘‘இந்த கருப்பு கவுனி அரிசி கேன்சரை குணப்படுத்தும். நம்ம எல்லார் உடம்பிலும் கேன்சர் செல்ஸ் இருக்கு. அது ட்ரிக்கர் ஆனா கேன்சராகிடும். அந்த கேன்சர் செல்களை தூங்க வைக்கிற சக்தி கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு.

அதான் இந்த முறை இந்த ரக அரிசியை விளைவிச்சிருக்கோம். போனமுறை சீரக சம்பா போட்டிருந்தோம். அது தீபாவளி டைம்ல விளைஞ்சது. ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் தீபாவளி பரிசா சீரக சம்பா கொடுத்தனுப்பினோம்.

இந்தப் பண்ணை தவிர வீட்டு மொட்டை மாடிலயும் காய்கறிகள் போட்டிருக்கேன். வீணாகும் பொருட்களைக் கொண்டு அந்த தோட்டம் அமைச்சேன். உதாரணமா கார் டயர்களைத் தூக்கி வெளியே வீசாம அதுல கீரைகள் பயிரிட்டேன். பார்க்க அழகா இருந்துச்சு. விளைச்சலும் அமோகம். மாடித் தரையும் வீணாகாம இருக்கு...’’ வேளாண் பேராசிரியரைப் போல பாயிண்ட்டுகளை அடுக்குகிற விஜி, இன்னும்
எனர்ஜியாகிறார்:  

‘‘பல வருஷங்களா இயற்கை விவசாயம் பண்ணிட்டிருக்கோம். எங்க தோப்புல வந்து இயற்கை காத்துல கொஞ்ச நேரம் நின்னாலே மனசும் உடம்பும் லேசாகிடும். சுத்தமான காத்தை சுவாசிப்பது இன்றைய சூழல்ல பெரிய விஷயமாகிடுச்சே! விவசாயத்துல ஆர்வம் இருக்கறதால, விவசாயிகள்கிட்ட மதிப்பும் மரியாதையுமா இருப்பேன். எங்க ஏரியானு இல்ல, ஷூட்டிங் போற இடங்கள்ல கூட விவசாயிகளைப் பார்த்தா, நாட்டு நடப்புகள உரிமையா பேச ஆரம்பிச்சிடுவேன்.

எங்க வீட்டு சமையலுக்கு ஆகும்னு நினைச்சு சின்னதா எங்க ஆர்கானிக் ஃபார்ம்ல தோட்டம் போட்டோம். வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளினு சீசனுக்கான காய்கறி, பழங்கள்தான் பயிரிட்டோம். வீட்டுத் தேவைக்குப் போக அதிகமா விளையவே அதை நட்பு வட்டத்துக்கு கொடுக்க ஆரம்பிச்சேன். பூர்ணிமா பாக்யராஜ் மேம், ராதிகா அக்கா, மனோபாலா சார்னு பலருக்கும் கொடுத்து அனுப்புவேன்.

இவங்களுக்கும் கொடுத்தது போக மீதம் இருந்தா அதை ஆர்கானிக் கடைகளுக்கு சப்ளை பண்ணுவேன். படப்பிடிப்பு இல்லைனா வயலுக்கு வந்துடுவேன். சின்னச் சின்ன வேலைகள் பண்ணப் பிடிக்கும். என்ன... இப்ப சமீபமா படப்பிடிப்புல பிசியாகிட்டேன். ரெண்டு மூணு மாசமா தோட்டம் பக்கமே வர முடியல. அதை நினைச்சா வருத்தமா இருக்கு...’’ நெற்கதிர்களை வருடியபடியே சொல்லும் விஜிக்கு சிறு வயது முதலே இயற்கைச் சூழல்கள் பிடிக்குமாம்.

‘‘சுற்றுச்சூழலுக்கும், இயற்கை உணவிற்கும் நம்ம வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்துக்கும் தொடர்பிருக்கு. உடம்புல நோய்கள் ஏற்படுறதுல ஆரம்பிச்சு அன்றைக்கான மனநிலை வரை அத்தனைக்கும் நாம் உண்ணும் உணவுகள்தான் காரணமா இருக்கு. சுருக்கமா சொல்லணும்னா ஆரோக்கியமான உணவுகள்தான் ஆரோக்கியமான மனிதர்களை உருவாக்கும்.

இதை அனுபவபூர்வமா உணர்ந்ததால eat healthy, live healthy என்பதை குறிக்கோளா வைச்சிருக்கேன். நம்ம முன்னோர்கள் ஆரோக்கியத்தோட நீண்ட நாட்கள் வாழ்ந்ததுக்கு காரணமே அவங்க சமையல் அறைதான். ஒவ்வொரு சமையற்கட்டுமே ஒரு ஃபார்மஸி மாதிரிதான். அஞ்சறைப் பெட்டிக்குள்ளயே அவ்வளவு மருத்துவ குணமிக்க பொருட்கள் இருக்கு. உணவே மருந்துனு அதை வச்சே சொல்லலாம். நோய் வருமுன் காப்பதே என் பாலிசி. இது சாப்பிட்டா இந்த நோய் வரும்... அது சாப்பிட்டா அந்த நோய் வரும்னு தெரிஞ்சே சாப்பிட்டுட்டு சிரமப்படக் கூடாது.

ஃபாஸ்ட் ஃபுட் தப்புனு எல்லாருக்கும் தெரியும். ஆனா, அங்க போய்த்தான் சாப்பிடறோம். அப்புறம் டாக்டரைத் தேடி ஓடறோம்.
வீட்ல நாலே நாலு தொட்டில ஒரு வெண்டைக்காய், ஒரு கத்தரி, ஒரு தக்காளினு செடிகளை வைங்க. நம்ப மாட்டீங்க... மாசத்துல பாதி நாள் வெளிய காய்கறி வாங்கவே மாட்டீங்க. அந்தளவுக்கு விளையும்.

காலைல எழுந்து குளிக்கறது, பல் தேய்க்கறது மாதிரி செடிக்கும் கொஞ்சம் தண்ணி ஊத்தினா போதும். அதுபாட்டுக்கு வளரும்.
இப்ப மாடில வெங்காயம் போட்டிருக்கேன். காலைல ஐந்தரைக்கு எழுந்து செடிகளுக்கு தண்ணி ஊத்திட்டு வருவேன். வேலை செய்ய ஆட்கள் இருக்காங்க. ஆனாலும் நம்ம குழந்தையை நாம குளிப்பாட்டுறது மாதிரி ஒரு திருப்தி. சந்தோஷம். You know... its a beautiful thing in life...’’ மகிழ்ந்தவரின் பேச்சு, சினிமா பக்கம் தாவியது.

‘‘நான் ‘தில்லுமுல்லு’ பண்ணும் போது குழந்தை நட்சத்திரம். அப்புறம் 15 வருஷங்கள் ஃபீல்டுல இருந்து காணாமப் போயிட்டேன். அவ்ளோ ஏன்... சோஷியல் மீடியால கூட இல்லாத காலங்களும் உண்டு. மறுபடியும் 1990ல சினிமா, சீரியல் பக்கம் வந்தேன். அதுவும் முழுமூச்சா ஒர்க் பண்ணியிருக்க மாட்டேன். மாசத்துல 8 - 10 நாட்கள்தான் ஒர்க் பண்ணி யிருப்பேன். மத்த நாட்கள்ல வீடு, கணவர், குழந்தைகள், தோட்டம்னுதான் இருப்பேன்.

இதுவரை 34 படங்கள்ல நடிச்சிருக்கேன். அது அது அந்தந்த டைம்ல நடக்கணும்னு விரும்புறவ நான். ஸ்கூல் படிக்கும் போது ஸ்கூல், காலேஜ் வயசுல காலேஜ், கல்யாண வயசுல கல்யாணம்னு எல்லாமே சரியான டைம்ல பண்ணினேன். என் வாழ்க்கைல எந்த பஸ்சையும் நான் மிஸ் பண்ணாம பயணப்பட்டிருக்கேன்னு நினைக்கறேன்.

‘அழகி’ சீரியலுக்குப் பிறகு சின்னத்திரை வேணாம்னு நினைச்சிருந்தேன். ராதிகா அக்கா கேட்டதால, ‘சந்திரகுமாரி’க்குள்ள வந்தேன். இப்பவும் சீரியல் ஆஃபர்ஸ் வந்துட்டிருக்கு. ஒருவேளை சீரியல்ல டைட்டில் ரோல் மாதிரி கதைகள் அமைஞ்சு, நான் கமிட் ஆனா அதன்பிறகு எவ்வளவு பெரிய படமா இருந்தாலும் அதுல நடிக்க மாட்டேன். ஏன்னா, ஒரு நேரத்துல ஒண்ணுல கவனம் செலுத்தினா போதும்னு நினைக்கறேன். அதனாலதான் ‘அழகி’ல நடிச்ச அஞ்சரை வருஷங்களும் எந்தப் படத்திலும் நான் நடிக்கலை.

Like to travel in one boat. இதுதான் என் பாலிசி. ஒரே நேரத்துல எல்லாத்துலயும் கால் வச்சா, நம்ம அமைதி போயிடும். மனசுல அமைதி இருந்தா எந்த நோயும் நம்மை நெருங்காதுனு நம்பறேன். இப்ப ‘மருத’, ‘போடா முண்டம்’, ‘பிளான் பண்ணிப் பண்ணணும்’, ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ படங்கள்ல நடிச்சிருக்கேன். எல்லாமே மே, ஜூனுக்குள் ரிலீஸ் ஆகிடும்...’’  என்ற விஜி, தன் செல்ல மகள் லவ்லின் குறித்து பேசும்போதே மலர்ந்தார்:

‘‘லவ்லின் ஸ்கூல் படிக்கும் போதே சினிமாவில் நடிக்க விரும்பினாங்க. அவங்க அப்பாதான், ‘குழந்தைகளுக்கு நாம கொடுக்கற அழியாத சொத்தே படிப்புதான். குறிப்பா பெண் குழந்தைகளுக்கு படிப்புதான் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்’னு சொல்லி அவளை படிப்புல கவனம் செலுத்த வச்சார். இப்ப லவ்லின் சைக்காலஜி படிச்சிருக்காங்க. மேற்கொண்டும் படிப்பாங்க. ‘ஹவுஸ் ஓனர்’ படத்துல நடிச்சிருந்தாங்க. இப்ப நான் நடிச்சிட்டிருக்கற ‘மருத’ படத்துல என் பொண்ணாவே நடிச்சிருக்காங்க.

இதுக்கு அப்புறம் ஒரு பெரிய படம் பண்றாங்க. என்னை மாதிரி அவங்களும் செலக்ட் பண்ணி நடிக்கறதை பார்க்கவே சந்தோஷமா இருக்கு.
சினிமால தொடர்ந்து நீடிக்கணும்னா, நல்ல ஸ்கிரிப்ட் அமையணும். நடிப்புங்கறது விளையாட்டு கிடையாது. டைம் பாஸ் பண்ண சினிமா இண்டஸ்ட்ரிக்கு வரக்கூடாது. ரொம்பவும் டெடிகேட்டடா, ரோல் மாடலா இருக்கணும்னு அவங்ககிட்ட அட்வைஸ் பண்ணினேன். பொறுமையா கேட்டு, சீரியஸாகவே ஒர்க் பண்றாங்க. என்னை மாதிரியே இயற்கை விவசாயத்துல லவ்லினுக்கும் ஆர்வம் இருக்கு...’’ புன்னகைக்கிறார் விஜி.  

மை.பாரதிராஜா