நாலு சனம் கைதட்டுறதையும் நல்லாயிருக்குனு சொல்றதையும் காதாரக் கேட்க அவ்வளவு சொகம்யா!



நெகிழ்கிறார் முதல்முறையாக டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் கூத்துக் கலைஞர்

கூத்துக்கலையை உயர்த்திப் பிடிக்கும் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு கூத்துக் கலைஞருக்கு டாக்டர் பட்டம் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை. இதை அளித்ததின் மூலம் தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் பெருமையடைகிறது.

வழிவழியாகப் பற்றி வந்த பாரம்பரியத்தை யாதொரு குந்தகமும் ஏற்படாமல் நாளுக்கு நாள் கலையை மென்மேலும் முன்னுக்குக் கொண்டு வந்தவர் சம்பந்தன். அவரின் வற்றாத குரல் வளமும் வாகான உடல் மொழியும், வேண்டிய அடவசைவுகளும், பாவங்களும், எடுத்துக் கொள்ளும் சிரத்தைகளும் பிரசித்தி பெற்றவை.

உலகம் முழுமையும் சுற்றி வந்து கூத்தின் ஆட்டப்பரப்புக்கு மனமுவந்து கையளிப்பு செய்தவரை வந்தனம் செய்துவிட்டு பேச்சைத் தொடங்கினோம்.
என்ன விதத்தில் இந்த விருது உங்களைச் சந்தோஷப்படுத்துகிறது?

முன்னாடி எங்க தாத்தா, பூட்டன் காலத்துல ரொம்ப துயரங்கள் இருந்தது நிஜம். இப்ப அதுல பெரும்படி குறைஞ்சிருக்கு. நாங்க வேஷம் போட்டுட்டா ராசாதான். அதில் எதையும் குறைச்சுப் பாக்குறது கிடையாது. இந்தக் கூத்துல அத்துப்படியா கரை கண்டவன் எவனுமில்ல. எல்லாம் கண்ட மாதிரி பாவனைதான்.
அப்படியே வேஷம் கட்டிட்டா, உள்ளே குதிக்கணும். அலங்காரத்தை பூர்த்தியா படிச்சித் தேறணும். அப்படி ஓர் ஆளு இருந்தாலும் கூத்த புதுமையா ஆட முடியாது. கருத்தா கவனிச்சு, சுத்தமாகத் தொழில் செஞ்சிக்கிட்டே வந்தா எந்தப் பொருளை கழிக்கிறது, எந்தப் பொருளை சேர்க்கறதுனு நெட்டு நிக்கும்.

தப்பா வித்தியாசமா பண்ணினா, அன்னநடை கத்துக்கப் போயி தன் நடையும் மறந்தாப்ல ஆயிரும். பாத்து, பாத்து பதனமா செய்ய வேண்டிய காரியமிது. முன்னோர்கள் கஷ்டப்பட்டாலும், தொடர்ந்து இப்போது ஆறாவது தலைமுறை வரை வந்திருக்கிறீர்கள். இப்படி உங்களைக் கொண்டு வந்து சேர்க்கிற விஷயம் என்ன..?

விருப்பத்துல ஒரு காரியம் செஞ்சா அதுல கொஞ்சமும் வருத்தமோ, பாரமோ தெரியாது. எங்க அப்பா என்னை கூத்துப்பக்கமே விடலை. என்னை மெட்ராஸ் பக்கம் தொரத்தி விடணும்னு இருந்தாரு. நம்ம கஷ்டம் நம்மோட போகட்டும்னு இருந்திருக்கலாம். எனக்கு எட்டாவதுக்கு மேல படிப்புல புத்தி போகலை. என் செட் பசங்களோட கூத்துல அப்பாவுக்கு தெரியாம ஆடிக்கிட்டு இருந்தேன். ஒருநாள் வரவேண்டிய ஆளு வராமல் போக, அத நிரப்ப வந்து உட்கார்ந்திட்டேன்.

அப்போ கூட வேண்டா வெறுப்பா சேர்த்துக்கிட்டாரு. ஆனா, என்ன மாயமோ தெரியலை, கலை வந்தது. கூத்தா
டிட்டு வந்தா அம்மா, ‘பய எப்படி ஆடினான்’னு கேட்டா, ‘பண்ணாரு… போ’னு கத்திட்டுப் போயிடுவார். அப்புறம் அவர் புகழும்படியா வந்து சேர்ந்துட்டேன். ஒரு வேசத்தை செய்யும்போது நாலு சனம் கைதட்டறதையும் அலங்காரம் நல்லாயிருக்குனு சொல்றதையும் காதாரக் கேட்க அவ்வளவு சொகம்யா! அதோட, ஆட்டக்காரனுக்கு வவுத்துக்கு கஞ்சியில்லன்னாலும் வாய்ச்சொல் தேவையாயிருக்குதே!

டிவி, சினிமா வந்த பின்னாடி ரொம்ப நலிஞ்சிபோய் இப்பதான் கொஞ்சம் எழுந்திருச்சு உட்கார்ந்தோம். வேசம் கட்டிட்டா அப்படியே துடியா ஆட்டம் போடணும். கத்தியே சலிக்கணும். சாரீரம் கொஞ்சம் மங்கும். ரத்தம் சுண்டுற வரைக்கும் ஆடலாம். என்னோட அடுத்த பரம்பரை மருமகனும், மகளுமா வந்தாச்சு. கூத்துக்கலையை சாக விடமாட்டோம்யா!புதியதாக இப்போது பரிசோதனை பண்ணுகிறீர்கள் போல… முன்னாடியெல்லாம் ராமாயணம், மகாபாரதம்தான். மனுச இனம் புராணங்களில்தான் தொடங்குது. கதை சொல்றதுல தொடங்காத நாகரீகம் எதுவுமில்ல.

புராணம்தான் கதை சொல்றதோட தொடக்கம். புராணம்ங்கிறது தனிக்கதையில்ல. அது கதைகளோட மாபெரும் விருட்சம். இப்ப நாங்க பாஞ்சாலி சபதம் நடத்தினோம். உலகத்துல கூத்துல மட்டும்தான் இயல், இசை, நாடகம்னு மூணும் சேர்ந்திருக்கு. ப்ரெக்ட்டின் ‘வெள்ளை வட்டம்’னு ஒரு நாடகம் போட்டோம். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின், ‘பெரிய வயதுடைய வயோதிக மனிதன்’னு நாடகம் போட்டோம். கரு எங்கே கிடைச்சாலும் எடுத்துக்க வேண்டியதுதான்.

ஒரு மழைநாள்ல ஒரு மனுஷன் யாருன்னே தெரியாம வந்து கெடக்கிறான். அவன் பேரு, ஊரு, மொழி, அடையாளம்னு ஒண்ணும் தெரியாது. எல்லோரும் பார்க்க வர்றாங்க. அவரைப் பார்க்க வர்ற சனங்கள ஒழுங்குபடுத்த சுவத்தைக் கட்டி, பணம் வசூலிச்சு என்னென்னமோ நடக்குது. கதை அப்படிப்போகும். வெளிநாடுகள்ல போட்டோம். அப்படி ரசிக்கிறாங்க. உலகம் பூரா போயி கூத்துகட்டினாலும் இங்கே வந்து ஏழை சனங்ககிட்டே கூத்தாடுவது ரொம்பவும் மனசுக்கு இதமானது தம்பி.

நீங்கள்தான் உங்கள் பரம்பரையில் கூத்துக்கு பள்ளிக்கூடம் அமைத்திருக்கிறீர்கள்...அது எங்க அப்பாவோட ஆசை. அப்பா எவ்வளவோ முயற்சி பண்ணியும் முடியலை. ஆனா, என் தலைமுறையில பண்ணிட்டேன். 2007ல பள்ளிக்கூடம் ஆரம்பிச்சு, நடந்திட்டு இருக்கு. அதையே முழு வாழ்க்கையா எடுத்துக்க படிச்சவங்க பயப்படுறாங்க. ஆனா கிராமத்துல கத்துக்கிறாங்க. கோயில்கள் இருக்கிறவரைக்கும், வழிபாடுகள் நடக்கிறவரைக்கும் இந்தக் கூத்து நடக்கும்.

தரமான தொழிலாளினு பெயர் எடுத்தா, நாம அழுதா சனம் நம்மோட சேர்ந்து அழும்; சிரிச்சா சேர்ந்து சிரிக்கும். இப்படி டூட்டி செஞ்சாதான் நடிப்பும், கூத்தும் நிக்கும்!