கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள் -54
பக்தனுக்காக பகவானிடமே கோபித்துக்கொண்ட திருமகள்!
‘‘தாத்தா..! பாட்டி..!’’ சத்தமிட்டபடியே நாகராஜனின் வீட்டுக்குள் நுழைந்தான் எதிர்வீட்டு கண்ணன். புத்தகம் படித்துக்கொண்டிருந்த நாகராஜன் அதை மடித்து சோஃபாவில் வைத்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘வாடா கண்ணா! என்ன... ஸ்கூல் முடிஞ்சதும் நேரா இங்க ஓடி வந்துட்ட... என்ன விஷயம்?’’பேச்சரவம் கேட்டு சமைய லறையில் இருந்து தன் கைகளைத் துடைத்தபடியே வந்தாள் ஆனந்தி. கண்ணனைப் பார்த்துப் புன்னகைத்தவள், தன் பங்குக்கு ‘‘வாடா கண்ணா...’’ என வரவேற்றாள்.
‘‘கண்ணாக்கு கொறிக்க ஏதாவது கொண்டு வா... பசியோட இருப்பான்...’’ மனைவியைப் பார்த்துச் சொன்னார் நாகராஜன்.‘‘இதோ...’’ என்றபடி உள்ளே சென்ற ஆனந்தி, அடுத்த சில நொடிகளில் ஸ்நாக்ஸ் அயிட்டங்களுடன் வந்தாள். கண்ணனிடம் ஒரு தட்டையும் நாகராஜனிடம் மற்றொரு தட்டையும் கொடுத்துவிட்டு சேரில் அமர்ந்தாள்.‘‘சொல்லு கண்ணா... என்ன விஷயம்..? இவ்வளவு வேகமா வந்திருக்க...’’ முறுக்கை உடைத்து வாயில் போட்டபடியே நாகராஜன் கேட்டார்.
‘‘அதுவா தாத்தா...’’ இழுத்த கண்ணன், ஜாங்கிரியை உடைத்து தன் வாயில் போட்டுக் கொண்டான். ‘‘என் ஃப்ரெண்ட் சுரேஷ் இருக்கான்ல...’’ ‘‘யாரு..? போன சண்டே உன் வீட்டுக்கு வந்து கேரம் ஆடினானே... அவனா..?’’ ஆனந்தி கேட்டாள்.‘‘ஆமா பாட்டி... இன்னிக்கி அவன் ஹோம் ஒர்க் பண்ணாம வந்துட்டான்... மிஸ் அவனை கண்டபடி திட்டிட்டா... அழுது கிட்டே இருந்தான்...’’‘‘ம்...’’ நாகராஜன் கேட்டுக் கொண்டிருப்பதற்கு அடையாளமாக உம் கொட்டினார்.
‘‘மெல்ல அவன்கிட்ட ‘ஏன்டா ஹோம் ஒர்க் பண்ணலை’னு கேட்டேன்... ‘வீட்ல ஒரே பிரச்னை... எந்நேரமும் சண்டையும் சச்சரவுமா இருக்குடா’னு சொன்னான்...’’நாகராஜனும் ஆனந்தியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். கண்ணன் அதை கவனிக்காமல் தொடர்ந்தான். ‘‘அவங்கப்பா நிறைய கடன் வாங்கியிருக்காராம்... கடங்காரங்க வீட்டுக்கு வந்து சத்தம் போடறாங்களாம்... அதுபோக அவங்க வீட்டுக்கு எதிரிங்க...’’‘‘எதிரிங்களா..?’’ நாகராஜன் இடைமறித்தார்.
‘‘அப்படித்தான் சொன்னான் தாத்தா... எனிமிஸ் அதிகமாம்... அவங்க தொல்லை கொடுத்துக்கிட்டே இருக்காங்களாம்... சின்னச் சின்ன நல்ல காரியங்கள் கூட வீட்ல நடக்க மாட்டேங்குதாம்... சொத்துக்காக அவன் சித்தப்பாவும் அத்தையும் கேஸ் போட்டிருக்காங்களாம்...’’ ‘‘சுரேஷ் இப்படிச் சொன்னதும் உனக்கு தாத்தா ஞாபகம் வந்திருக்குமே...’’ கண்ணனை அணைத்தபடி ஆனந்தி கேட்டாள்.
வெட்கத்துடன் ஆம் என தலையசைத்தான் கண்ணன். ‘‘அன்னிக்கி தாத்தா எனக்கு திருமங்கை ஆழ்வார் பாசுரம் சொல்லிக் கொடுத்தப்ப ‘வந்து எம் உள்ளம் புகுந்த சிந்தனைக்கு இனியாய்’னு ஒரு வரியை சொன்னார். கூடவே நாகப்பட்டினம் திருவாலி லட்சுமி நரசிம்மர் பத்தியும் விளக்கினார்... சுரேஷ் என்கிட்ட தன் கஷ்டத்தை சொன்னப்ப அதுதான் நினைவுக்கு வந்தது... உடனே அந்தக் கோயில் பத்தியும் அந்த நரசிம்மர் பத்தியும் சொல்லி அவனை வேண்டிக்க சொன்னேன்!’’
‘‘தாத்தா கூட பழகிப் பழகி அவரை மாதிரியே நீயும் கஷ்டங்களுக்கு கோயில் சொல்ல ஆரம்பிச்சுட்டியா..?’’ மகிழ்ச்சியை மறைத்தபடி ஆனந்தி கேட்டாள்.கண்ணனை பெருமையுடன் பார்த்தார் நாகராஜன்.‘‘ஆமா கண்ணா... தாத்தா உங்கிட்ட எப்ப அந்த நரசிம்மர் பத்தி சொன்னார்... அவரைப் பத்தி எனக்கு இதுவரை எதுவும் தெரியாதே..?’’
புருவங்களை உயர்த்தியபடி தன் மனைவியை பார்த்தார் நாகராஜன். கண்ணன் எந்தளவுக்கு, தான் சொன்னதை எல்லாம் உள்வாங்கி இருக்கிறான் என்று பரிசோதிக்கிறாள்! நல்லது... இந்த டெஸ்ட்டில் கண்ணன் பாஸாவானா..?‘‘அட... உங்களுக்கு தெரியாதா பாட்டி...’’ என்றபடி உற்சாகத்துடன் கண்ணன் சொல்லத் தொடங்கினான்...அன்று வானம் தெளிந்து காணப்பட்டது. சூரியன் மிதமாக ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தான். பலவிதமான பறவைகள் வானத்தில் பறந்தபடி இருந்தன.
அந்தப் பறவைகளுக்கு நடுவே ஒரு பாவையும் பறந்து சென்று கொண்டிருந்தாள்! இளஞ்சிவப்பு நிறத்தில் கொடி போல இருந்த அவளது தேகம், வானில் பறக்கும் பவளக் கொடியோ என்று காண்பவரை கலங்க வைத்தது. அங்கங்களில் சூடியிருந்த தங்க ஆபரணங்கள் அவளது அங்க காந்தியின் முன் தோற்றுப்போய், மந்தமான ஒளியை வீசிக் கொண்டிருந்தது. அழகான நான்கு கரங்கள் அவளுக்கு. அதில் மேலிரு கரங் களில் தாமரை மலரைத் தாங்கிக் கொண்டிருந்தாள். அது கொடி போன்ற அவளது தேகத்தில் பூத்துவிட்ட பூவோ என்று தோன்றச் செய்தது.
அபாரமான கருணை வீசும் மதி வதனம் அந்தப் பாவைக்கு. ஆனால், இன்று கருணையோடு லேசாக கடுகடுப்பும் கூடிவிட்டது. அந்தக் கடுகடுப்பு இயற்கையாக சிவந்திருக்கும் அவளது முகத்தை மேலும் சிவப்பேறச் செய்து மேலும் அவளது அழகைக் கூட்டியது. அவள் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது அவளது காதில் தேனாக பாய்ந்தது அந்த வேத மந்திரம்: ‘‘ஈஸ்வரீகும் சர்வ பூதானாம் தாமி.... யம்...’’
சட்டென சிறகடிப்பதை நிறுத்தி வானத்தில் இருந்தபடியே குரலுக்குரியவரை தேடத் தொடங்கினாள். தான், ஒரு வில்வ வனத்தின் மீது பறந்துகொண்டிருப்பது அப்போதுதான் அந்தப் பெண்ணுக்குப் புரிந்தது. திருமாலின் திருமார்பில் நிரந்தர வாசம் செய்யும் அவளை, ‘ஈஸ்வரீகும் சர்வ பூதானாம்’ - அதாவது அகில புவனங்களின் ஒரே தலைவி என்று அழைத்தது யார் என்று தேட ஆரம்பித்தாள்! அவள் புவனங்களின் தலைவி என்றால் அவளது கணவன், உலகின் தலைவனல்லவா..? ஆம். ‘பதிம் விஷ்வஸ்ய’ என்று வேதம் திருமாலை உலகின் தலைவன் என்கிறது! இருவரையும் துதிக்கும்போது வேதம், சொன்னதையே மீண்டும் சொல்கிறது.
அப்படி சொல்லும் பொருளும் போல மாயனோடு இரண்டறக் கலந்தவள், இன்று அந்த மாலவனிடம் கோபித்துக் கொண்டு வந்திருக்கிறாள்! மாலவனை நீங்கி வந்த சமயத்தில் இருவருக்குள்ளும் இருக்கும் பந்தத்தை சொல்லும் வேத மந்திரம் காதில் விழுந்து, அவளது பிரிவாற்றாமையையும் கோபத்தையும் மேலும் அதிகரிக்கச் செய்தது! கீழே ஆராய்ந்தவளின் தாமரைக் கண்களில் அந்த ராஜ கோபுரம் பட்டது. ‘என்னை நினைவிருக்கிறதா உனக்கு?’ என்று அந்த ராஜ கோபுரம் கேட்பது போல இருந்தது.
அந்தக் கேள்விக்கு பதிலைத் தேட ஆரம்பித்தது அம்பிகையின் மனம். சில யுகங்களுக்கு முன்னே நடந்த சம்பவத்துக்கு அவளது மனம் சென்றது... ‘‘அம்மா! ஜெகன்மாதா! இந்தப் பொல்லாத சிங்கத்தின் தொல்லை பெரும் தொல்லையாக இருக்கிறது! மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, ஹிரண்யகசிபுவின் தொல்லை ஒழிந்தாலும், நரசிம்மத்தின் கோபம் அடங்கவில்லையே தாயே... ஹிரண்யனின் கொடுங்கோல் ஆட்சியே தேவலை என்பது போல் நரசிம்மரின் கோபம் எங்களை வாட்டி வதைக்கிறது! அம்மா... சற்றே எங்களுக்கு தயை செய்யக் கூடாதா?’’ ஓலமிட்டபடியே மகாலட்சுமியிடம் ஓடி வந்தார்கள் தேவர்களும் முனிவர்களும் மற்றவர்களும்.
பல நாட்களாக தனது பக்தனைக் கொடுமைப்படுத்திய இரண்யன் மீதிருந்த கோபமே இப்போது வெடித்துச் சிதறுகிறது என்பதை மாலவனின் உள்ளம் கவர்ந்த அவள் அறிய மாட்டாளா என்ன..? ஆனால், வெடித்துச் சிதறும் கோபத்தால் இப்படி அண்ட சராசரமே நடுங்கும்போது, அதை ஈன்ற தாயாக அவள், ஏதாவது செய்ய வேண்டும் என்பதும் அவளுக்குப் புரிந்தது.
மெல்ல அனைவரையும் தன் அருள் கண்ணால் நோக்கினாள். அவர்கள் அனைவரும் தங்களது துன்பம் நொடியில் தீர்ந்தது போல உணர்ந்தார்கள். அவர்கள் அனைவரும் அன்னையின் கருணை விழி நோக்கு தந்த ஆனந்தத்தில் திளைத்திருக்க... அவள் அந்த முரட்டுச் சிங்கத்தை நோக்கிச் சென்றாள். சீராக ஒலிக்கும் அவளது கால் சலங்கைகள் அவள் சற்றும் அஞ்சாமல் ராஜ நடை போடுவதை மேளமிட்டுச் சொல்லியது.
அந்த பொல்லாத நரசிங்கத்தின் அருகில் சென்றவள் அநாயாசமாக அதன் மடியில் ஏறி அமர்ந்தாள். யார் இவ்வளவு தைரியமாக நம் மடி மீது ஏறி அமர்வது என்று அறிய அவள் பக்கம் திரும்பிய மாயவன், கருணை பொங்கும் அவளது கண்களை நேருக்கு நேர் நோக்கினான். அவளது கருணை என்னும் கடலில், மாலவனின் கோபம் என்னும் கப்பல் மூழ்கிப் போனது. அடுத்த கணம் அடியவரைக் காக்கும் யோக நரசிம்மனாக மாறிவிட்டார்! அதற்கு அத்தாட்சியாக மடி மீது அமர்ந்த தன்னவளை ஆதரவாக அணைத்துக் கொண்டார்!
உக்ர நரசிம்மன், லட்சுமி நரசிம்மனாக மாறிய பின் என்ன பயம்? பயந்து ஒதுங்கி நின்ற அத்தனை பேரும் அருகில் வந்து அவரைச் சேவித்து, குறை தீர்ந்து நிறைவு பெற்றார்கள்! திருமகளை ஆலிங்கனம் செய்து கொண்ட இடம் ஆதலால் அந்த இடத்துக்கு திருவாலி என்ற பெயர் வந்தது!
முரட்டுச் சிங்கத்தை மங்கையாகிய, தான் அடக்கிய சாகசத்தை நினைவுபடுத்திய ராஜ கோபுரத்துக்கு நன்றிகள் பல சொன்னாள். தான், அடக்கிய அந்த முரட்டு சிங்கம் இன்றும் அந்தக் கோயிலின் உள்ளேதான் இருக்கிறது என்பதையும் அவள் உணர்ந்தாள்.
அப்போது மீண்டும் கணீர் குரலில் வேத மந்திரம் ஒலித்தது: ‘‘ஆதித்ய வர்னே தப... வனஸ் பதிஸ் தவ விருஷோத வில்வ:’’இந்த வரிகள் அடுத்து அவள் செய்ய வேண்டிய காரியங்களை அவளுக்கு உணர்த்தியது. ‘அன்று ஒரு நாள் வில்வ மரத்தின் அடியில் தவம் கிடந்தவளே’ என்று அந்த வாக்கியத்துக்கு பொருள்.
பல யுகங்களின் முன்னே நடந்த சம்பவத்தை நினைவு கூரும் வேத வசனம் அது. அதைக் கேட்டதும் பல வருடங்களுக்கு முன் வில்வத்தின் அடியில், தான் தவம் செய்ததைப் போல் மீண்டும் செய்தால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது.
அந்த எண்ணத்தை ஆமோதித்தது அவளது மனது. சரி... இங்கு யாருடைய அரவணைப்பில் பிறந்து வளர்வது என்று அடுத்த கேள் வியை அவளது மனம் கேட்டது. வேதம் சொல்லி மாதவனையும் தன்னையும் வணங்கும் இந்த முனிவரிடமே வளர்ந்தால் என்ன? நொடியில் சிந்தையில் பளீரிட்டது ஒரு யோசனை. சரியாக அந்த சமயம் பார்த்து அம்பிகையின் கண்களில் பட்டார் ஒரு வில்வ மரத்தின் அடியில் ஆனந்தமாகத் தவம் செய்து கொண்டிருந்த அந்த முனிவர்.
அவர் பல வருடங்களாக இந்த திருவாலி நரசிம்மனே கதி என்று தவமிருக்கும் புண்ணியர். ஊனை வருத்தி உள்ளொளி பெருக்கும் மகான். பூர்ண மகரிஷி என்பது அவரது திருநாமம். அப்படிப்பட்டவரின் மகளாகப் பிறந்தால் என்ன? இப்படிச் செய்தால்தான் அந்த மாயவனுக்கு தகுந்த பாடம் கற்பிக்க முடியும்! தீர்மானித்தாள் பெருமாட்டி!எல்லாம் சரி... எதற்காக மாயவனை அவள் பிரிந்து வந்திருக்கிறாள்?
(கஷ்டங்கள் தீரும்)
ஜி.மகேஷ்
ஓவியம்: ஸ்யாம்
|