ஜிப்ஸி
இந்தியா முழுக்க சுற்றித்திரியும் தேசாந்திரியின் வாழ்க்கையாக புதிய தளத்தில் விரியும் திரைக்கதையே ‘ஜிப்ஸி’.எளிய மனிதர்களின் பிரியங்களை அதிகாரமும், மதமும், கலவரங்களும் எப்படிக் குதறிப்போடுகின்றன என்பதையும், நம்மைச்சுற்றி மதத்தின் பெயரால் நடக்கும் அத்தனை பித்தலாட்டங்களையும் போகிற போக்கில் போட்டுத் தாக்கியதற்காகவே இயக்குநர் ராஜுமுருகனுக்கு கைகுலுக்கல்கள் !
காஷ்மீரில் பிறந்து, பெற்றோர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறக்க, பக்கத்திலிருந்த குதிரைக்காரனால் வளர்க்கப்படும் ஜீவா, அங்கிருந்து ஊர் ஊராக பயணம் செய்கையில் எளிய மனிதர்களோடு தங்கி, கம்யூனிஸ்ட் தோழர்களோடு சிநேகம் கொள்கிறார். அவரின் நாடோடிப் பயணத்தில் நாகூர் வருகிறார். அங்கு ஒரு இஸ்லாமிய பெண்ணுடன் பரஸ்பர காதல் வர, வடநாட்டுக்கு தப்பிச்சென்று, திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். குழந்தை பிறக்கும் சமயத்தில் மதக் கலவரம் தொடங்க, திசைக்கு ஒருவராக பிரிகிறார்கள். மறுபடியும் இணைய முடிந்ததா என்பதே மீதிக் கதை. வாழ்க்கைக்கு மதமோ, சாதியோ தேவையில்லை. ஒருமித்த அன்பு இருந்தாலே போதுமானது. அதை உயர்த்திப் பிடிக்கிறவர்கள், அதனால் கிடைக்கும் அதிகாரத்தையே விரும்புகிறார்கள் என்பதே படத்தின் ஒன்லைன்.
சமீபத்திய தேசிய அரசியல் மாற்றத்திற்குப் பிறகு நாடு எவ்விதமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதை அடிநாதமாகக் கொண்டு ஆரம்பிக்கிறது படம். போராட்ட வடிவங்கள் தொடங்கி, கடந்து போகிற மனிதர்கள் வரை எல்லாவற்றிலும் யாரையோ, எதையோ நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதில் தெரியும் துணிச்சலே படத்தின் ஆச்சர்யம். வடமாநில கலவரங்களின் பின்னணியில் இருப்பவர்களை அடையாளம் காட்டி, போகிற போக்கில் துகிலுரிந்து செல்கிறது திரைக்கதை.
நாடோடியாக, பெரும் காதலனாக ஜீவா தோற்றத்திலும், நல்ல உடல் மொழியிலும், சிறக்கிறார். நடாஷாவிடம் காதலில் விழும்போதும், பாடகனாகவும், அறச்சீற்றத்திலும் கொதிக்க வைத்து கலங்கடிக்கிறார்.அறிமுக நாயகி நடாஷா… அபாரம்! ஜீவாவை மனதிற்குள் கொண்டு வருவது, அவருடன் வாழ்க்கையைத் தொடங்கும்போது, பிரச்னைகளின் ஆற்றாமையில் பொங்குவது... என மின்னுகிறார். தந்தையாக லால் ஜோஷ் இயல்பு. மை.பா. நாராயணன், சன்னி வயன், சுஷிலா ராமன் போன்றவர்கள் சின்னச் சின்ன ரோல்களிலும் பர்ஃபெக்ட் பாத்திரப்படைப்பு.
திருவிழாவிற்கு குதிரை வித்தை காட்ட வந்தவனை நம்பி அந்தப் பெண்ணால் எப்படி அத்தனை சீக்கிரம் வாழ்க்கையை இணைத்துக்கொள்ள முடிகிறது? மிக மெதுவாக நகருகிறது பின்பகுதி. சமயங்களில் பிரச்சார பாணி நேரடியாக தலை தூக்குவதைத் தவிர்த்திருக்கலாம்.
செல்வகுமாரின் கேமரா இந்தியாவின் ஊடாக பயணம் செய்து அழகியலோடு உறவாடுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் ‘வெண்புறா’ பாடல், டி.எம்.கிருஷ்ணாவின் கம்பீரக் குரலில் தமிழும் இசையுமாக மனம் வெல்கிறது. கனமான பின்புலம், வணிகக் காரணங்களுக்காக சமரசம் செய்துகொள்ளாத விதத்தை பாராட்டலாம்.
குங்குமம் விமர்சனக் குழு
|