சைக்கோ
காதலியைக் கடத்திச் சென்றவனைக் கண்டுபிடிக்கப் புறப்படும் காதலனின் கதையே ‘சைக்கோ’.கோவையில் பெண்கள் அடுத்தடுத்து கடத்தப்பட்டு குரூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். கொலையாளி காவல்துறைக்கு போக்குக் காட்டுகிறான். அதே நேரம் பண்பலை வானொலியில் பணியாற்றும் அதிதியிடம் பார்வையற்ற இளைஞரான உதயநிதி காதல் கொள்கிறார். உதயநிதியின் மேலுள்ள காதல் கசிந்துருகி அதிதி அவரைச் சந்திக்க முற்படுகிறார்.
அப்பொழுது அதிதி கடத்தப்பட... உதயநிதி, முன்னாள் போலீஸ் அதிகாரி நித்யா மேனன் துணையோடு அவரை மீட்கப் புறப்படுகிறார். அவர் கொலையாளியை எப்படி நெருங்கினார், கொலையாளியின் இறுதி முடிவு என்ன என்பதே படம்.மிஷ்கினின் தனித்துவ இயக்கத்தில், அதிரடி ஓட்டத்தில் படம் ஆரம்பமாகிறது. தொடக்க நிமிடங்களிலேயே படத்தைத் தொடங்கி பிரதான பாத்திரங்களை ‘நச் நச்’சென அறிமுகப்படுத்தி ஐந்தாவது நிமிடத்திலேயே படத்துக்குள் நம்மை இழுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
அதிகம் பேசாமல் தன் வழக்கமான அத்தனை மேனரிசங்களையும் உதிர்த்துவிட்டு... இது புதிய உதயநிதி. ஒரு பாடகராக, இசைக் கலைஞராக உருவெடுக்கிற இடங்களில் உயர்ந்த அமைதியில் நல்ல மெல்லிய இருப்பு. காமெடியாய் பார்த்து ரசித்தவர்களுக்கு, இறுக்கமும் காதலும், நெகிழ்வும், துடிப்புமாக நல்ல நடிப்பு. அந்த நெடிய உயரத்தில் கொலைக்களத்துக்கு போயும் வெட்டுப்படாமல் பிழைத்திருக்கும் அதிதி. பிஞ்சு உடம்பு நடு நடுங்க அழுக்கு சுவரின் ஓரத்தில் அஞ்சி நடுங்கும் போதெல்லாம் நமக்கும் அதே நடுக்கம்.
சதா ஆத்திரமும் எரிச்சலும் முன்கோபமுமாக, அதே நேரத்தில் மனித நேயமாக நடந்துகொள்ளும் முன்னாள் போலீஸ் அதிகாரி நித்யா மேனன்… எதிர்பாராது இதயத்திலிருந்து பெருகும் சினேகத்தை அருமையாக வெளிப்படுத்துகிறார்.யாரப்பா அந்த ராஜ்குமார்! அத்தனை தலைகளையும் வெட்டியெடுத்துக் கொல்லும் சைக்கோ பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சமயங்களில் பாய்ச்சலாக வந்து கொலை க்கு தயாராகும் ஆயத்தக் கணங்களில் நம் உள் நரம்பில் நடுக்கம் வரவைக்கிறார். உணர்ச்சி காட்டாத முகத்தில் வெறித்தனத்தின் துல்லியம்.
ராம், சிங்கம் புலி, பவா செல்லத்துரை என உடல்மொழியில் கவர்கிறார்கள். இனிமேல் ஏ.எம் ராஜாவின் பாடலை வழக்கம்போல் கேட்க முடியுமா நாம்?இருட்டு உலகம், அதிர்ச்சி கணங்கள், புரிந்துகொள்ள முடியாத இடங்கள் என எல்லா தடைகளையும் ஒளிப்பதிவாளர்கள் தன்வீர் மீர் - பி.சி.ராம் அருமையாகக் கடக்கின்றனர். படத்தின் ஆன்மாவைச் சுமந்திருக்கிறார் இளையராஜா. ‘உன்னை நெனச்சி நெனச்சி...’ பாடல் தேவ கானம். கபிலனின் களங்கமில்லாத வரிகளை சித் ராம் உச்சம் தொட பாடுகிறார்.
ஆயினும் இத்தனை ரத்தக் களரி ஏன்? குற்றமும் உக்கிரமும் உச்சமான சைக்கோவை மன்னித்து விடுவது நம்மால் இயலுமா! உங்களின் பார்வையில் குரூரங்கள் இரண்டாம் பட்சம்தானா! ஒரு கட்டத்தில் காவல்துறையின் பணிகள் நின்றுவிடுகிறதே ஏன்? மிஷ்கின், இளையராஜா, தன்வீர் மீர், உதயநிதி... என நால்வரும் இந்த ‘சைக்கோ’வின் பலம்.
குங்குமம் விமர்சனக் குழு
|